வெளிநாட்டு ஊழியர்கள்

Spread the love

பிறந்த மண்ணின்

பெருமையை

வளரும் மண்ணில்

காட்டும்

பிடுங்கி நடப்பட்ட

நாற்றுக்கள்

இவர்கள்

 

தனக்கு மட்டுமின்றி

எல்லார்க்குமாய்ச்

சேர்க்கும் தேனீக்கள்

இவர்கள்

 

எங்கிருந்தோ

அள்ளிவந்து – நீரை

இங்கு வந்து பொழியும்

மேகங்கள்

இவர்கள்

 

யாதும் ஊரே

யாவரும் கேளிர் என்ற

பூங்குன்றனாரை

பொய்யாக்காதோர்

இவர்கள்

 

குளம், ஏரி, நதி, கடல்

பெயர்கள்தான் வேறு

தண்ணீராக

இவர்கள்

 

ஒட்டுக் கன்றுகளில்தான்

உயர்ந்த கனிகளும்

உயர்ந்த பூக்களும்

ஒட்ட வந்தவர்கள்

இவர்கள்.

 

தினமும் சேரும்

கழிவுகளை

தினமும் அகற்றும

தினமழை

இவர்கள்

 

திட்டங்களான

நம் புள்ளிகளில்

கோலங்கள் செய்வது

இவர்கள்

 

துளிர்க்கும்

துளிர்களெல்லாம்

வணங்குவது மரங்களை

வாழ்த்துவதோ

இவர்களை

 

மற்ற நாடுகளை

அன்று அன்னாந்து

பார்த்தோம்

இன்று குனிந்து

பார்க்கிறோம்

நம்மை

உயர்த்திப் பிடித்த

ஒரு கோடிக் கரங்களில்

வேர்க் கரங்கள்

இவர்கள்

 

தீப்பொறி நம்மிடம்

விளக்குகளாக

விரிந்து கிடப்பவர்கள்

இவர்கள்

 

ஓவியங்கள்

செய்தோம் நாம்

வண்ணங்களாக

வந்தவர்கள்

இவர்கள்

 

காவியங்கள்

வடித்தோம்

எழுத்துக்களாக

வந்தவர்கள்

இவர்கள்

 

வெந்த உணவுகள்

பந்தியில்

வரிசைகளில் நாம்

வேகவைத்த நெருப்பு

இவர்கள்

 

‘சகதி’

ஒரு புள்ளியால்

‘சக்தி’ யானது

புள்ளியாய் வந்தவர்கள்

இவர்கள்

 

அமீதாம்மாள்

Series Navigationமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்வாழ்க நீ