”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”

Spread the love

 

ப.கண்ணன்சேகர்

ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம்
ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம்
நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது
நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது
மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே
முறையாக பேசினால் முரண்படாது உலகமே
வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர்
வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய் பேசினர்!

நேற்றுவரை எதிரியும் இன்றுமுதல் நண்பனே
நெருக்கடியின் கூட்டணியால் நொஞ்சானும் கொம்பனே
தூற்றலும் தோழமையும் தொடர்வதா ஆரோக்கியம்
தோற்றாலும் வைத்திடு தொலைந்திடாத வைராக்கியம்
போற்றலுக்கு உரியது பொன்னான மக்களாட்சி
பொதுமக்கள் நலனையே பேசவேண்டும் மனசாட்சி!
ஏற்றதொரு பதவிக்கு இரவுபகல் பாடுபடு
எளியோரின் உயர்வுக்கு என்றுமே தோளைக்கொடு!

பேரறிஞர் பெருந்தலைவர் பேச்சியினைக் கற்றிடு
பிறர்போற்றும் கக்கனையும் பின்பற்றி நடந்திடு
பாராட்டு புகழென்று பதவியில் மயங்காதே
பணிவான சேவகனாய் பணியாற்ற தயங்காதே
வேராக வளர்ந்திடும் உன்வாக்கு நிலவரம்
வேண்டும்போது வருவதால் விளைவதோ கலவரம்!
சீரான சேவைக்கு சிறப்பான வெற்றிதான்
செல்வாக்கு கூடிவரும்  உன்னையே சுற்றிதான்!

-ப.கண்ணன்சேகர், திமிரி

Series Navigationதொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –