வேண்டாமே அது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 18 in the series 23 ஏப்ரல் 2017

parotta 

மீனா தேவராஜன்

மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான். வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து உண்ணத்தொடங்கினர். மாறியத் உலகம் உணவு உட்கொள்ளும் முறைகளும் மாறின. சுவைக்கு அடிமையான மனிதன் ஆரோக்கியம் பற்றி அறவே மறந்தான் என்பதே உண்மை. நா ருசிக்கு முதலிடம் அளித்த மனிதன் எவற்றையெல்லாம் உண்கிறான் என்று அறிந்துகொண்டால் வியப்பைவிட வேதனையே மிஞ்சும்.

 

மைதா என்ற மாவு இக்கால மனங்கவர் உணவு. அது எதிலிருந்து கிடைக்கிறது? தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு. கோதுமைத் தானியத்தை அரைத்துச் சலித்தால் வீணாகும் மாவு. இவைதான் மைதா. அதாவது மைய்ய அரைத்தமாவு மைதா.

முதலில் இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது, தெரியுமா? சுவரொட்டிகள் ஒட்டத்தான் முதலில் இது பயன்படுத்தப்பட்டது. இந்த மாவைத் தண்ணீருடன் கஞ்சியாகக் காய்ச்சினால் நல்ல பசை கிடைக்கும். இதனை சுவரொட்டிகள் பயன்படுத்தினர்.

பின் இந்த மாவை கேக், பிரெட், ரொட்டி பரோட்டா , நூடுல்ஸ் ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தினர். இவற்றில் ரொட்டி பரோட்டா நம்மை அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் எண்ணிப்பாருங்கள் இது மைதாப் பசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை உண்டால் இது செரிமானமாக பல நாள்களாகும். மேலும் குடலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையது .மேலும் மைதாவை உண்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. இதில் எள்ளளவும் நார் சத்து இல்லாததால் மலச்சிக்கலும் உண்டாகும். பிரெட் உண்பவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படுவது உண்டு.

நூல்டுல்ஸ் அதிகமாக சிறுவர்களால் விரும்பப்படும் ஓர் உணவு. இதுவும் மைதாவினால் தயாரிக்கப்படுவதே. இதுவும் மாவுச்சத்து மட்டும் கொண்டது.

மைதாவின் நிறம் வெள்ளை வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் அது வெளுக்க ஒரு வேதியல் பொருள் சேர்க்கப்படுவதுதான். துணி வெளுக்க குளோரின் ஊற்றுவது போல் மைதா மாவு வெளுக்க இராசயனப் பொருள் (பென்சோயில் பெராக்சைடு)  சேர்க்கப்படுகிறது. அது நம் வயிற்றையும் வெளுத்து அரித்துவிடும் தன்மையது. நாளடைவில் குடலில் அல்சர் நோய் ஏற்படக்கூடும் என்ற மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

மாவுப்பொருள்கள் எளிதில் செரிமானமாகிவிடும். அதனால் தான் நார் சத்து நிறைந்த பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்றும் அவை தெரிவிக்கின்றன. நார் சத்து நிறை உணவுகள் மெல்ல செரிமானம் ஆவதால் நீண்ட நேரம் நமக்குப் பசிக்காது.  அதனால்தான் உடைத்த தானியங்களையும் நார் சத்து நிறைந்த காய் பழங்களையும் உண்பது நன்று.

வெள்ளை அரிசி, வெள்ளைச்சீனி, வெள்ளை மாவு மூன்றும் நம்மை விரைவில் கொள்ளும் மும்மலங்கள்.

காந்தியடிகள் கூறிய தீட்டாத அரிசியும் வேர்கடலையும் வெல்லமும் நன்றே! மைதாவில் செய்யப்படும் பரோட்டா உங்களை புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை.

Series Navigationபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *