வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.

This entry is part 10 of 18 in the series 23 ஏப்ரல் 2017

 

சுமதியின் வீட்டில் நடுக்கூடம். நுழை வாயில் கதவைத் தட்டிய பிறகு கிஷன் தாஸ் உள்ளே வருகிறார். சுமதியும் ஜெயராமனும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவருக்கு மாலை வணக்கம் சொல்லுகிறார்கள்.

“வாருங்கள், சர், வாருங்கள்! உட்காருங்கள்!” என்று ஜெயராமன் உபசரிக்கிறார். ஒரு நாற்காலியில் அமர்ந்ததன் பின் சுமதியை நோக்கி அன்புடன் புன்னகை புரிந்தவாறு தாம் கொண்டுவந்துள்ள சோழா ஓட்டலின் இனிப்புப் பொட்டலத்தைக் கிஷன் தாஸ் அவளிடம் தருகிறார்.

“நன்றி, மாமா!” என்று கூறிவிட்டு அதை வாங்கி ஒரு முக்காலியில் வைத்ததன் பின் சுமதி உட்கார, ஜெயராமானும் ஒரு நாற்காலியில் உட்காருகிறார்.

“சொல்லுங்கள், சர்! முக்கியமான ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது என்றீர்களே!”

ஜெயராமன் இவ்வாறு வினவியதும், கிஷன் தாஸ் சில நொடிகள் போல் தயக்கத்துடன் ஏதோ யோசித்தவாறு தம் கைவிரல்களைக் கோப்பதும் பிரிப்பதுமாய் இருந்ததன் பின் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஜெயராமனை நோக்குகிறார்: “மிஸ்டர் ஜெயராமன்!  நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!”

“அதுதான் தெரியுமே!”

“சுமதி கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

அதிர்ச்சியுறும் ஜெயராமன் கண்ணிமைக்காமல் அவரை நோக்குகிறார். அப்போது சுமதியின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது. அடுக்களையிலிருந்து வெளிப்படும் ஜானகியைப் பார்த்து அவள் எதுவும் பேசவேண்டாம் என்று ஜெயராமன் விழிகளை மலர்த்தி உணர்த்த, அவள் அரை மனத்துடன் அங்கிருந்து நீங்குகிறாள். எனினும் அடுக்களை முன்னடியில் நின்றவாறே ஒற்றுக்கேட்க முனைகிறாள்.

“என்ன, மிஸ்டர் ஜெயராமன்? ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்? அதிர்ச்சியாய் இருக்கிறதா?” என்று கிஷன் தாஸ் புன்சிரிப்புடன் கேட்கிறார்.

“ஆமாம். இப்படி ஒரு நிபந்தனையை நான் உங்களிட மிருந்து எதிர்பார்க்கவில்லைதான்!”

“ஆனால் இதில் வியப்போ அதிர்ச்சியோ அடைய என்ன இருக்கிறது, மிஸ்டர் ஜெயராமன்? கணவனின் மதத்தில் மனைவி இருப்பது என்பது சரிதானே?” என்று வினவும் கிஷன் தாசின் குரலில் வெளிப்படையான கண்டிப்புத் தெரிகிறது. அவரது ஆராயும் பார்வை சுமதியின் மீது விழுகிறது.

சுமதி, “குறுக்கே பேசுவதற்காக மன்னியுங்கள், மாமா!” என்று குறுக்கிடும் அவளை நோக்கி அன்புடன் புன்னகை செய்து, “சொல்லு, என் அன்பான பெண்ணே! உன் அப்பா மதமாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், என் விருப்பத்தை ஏற்பதற்கு உனக்கு முழுச் சுதந்திரம் உண்டு, சுமதி!” என்கிறார்.                     சிரிக்கும் சுமதி, “மிகவும் வாய்ச்சாலகத்துடன் பேசுகிறீர்கள், மாமா! ஆனால் நான் வேறு மாதிரி நினைக்கிறேன்!” என்று கூறவும், கிஷன் தாஸ் திகைத்துப் போய் அவளைப் பார்க்கிறார்.

“என் பதிலால் நீங்கள் திகைத்திருப்பதாய்த் தோன்றுகிறது. உங்கள் திகைப்புச் சரிதான், மாமா!  நான் மதம் மாறுவதற்கு என் அப்பாவே சம்மதித்தாலும், நான் அதற்கு உடன்படுவதாய் இல்லை!”   – கடைசி வாக்கியம் கண்டிப்புடன் ஒலிக்கிறது.

“என் அன்பான பெண்ணே! உன் வருங்கால மாமனாருடன் நீ இந்த அளவுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் பாணியில் கண்டிப்பாய்ப் பேசக் கூடாது!”

“நான் என் உண்மையான எண்ணத்தை நாணயமாய் வெளியிடுகிறேன், மாமா. மதம் மாறுவதாய்த் திருமணத்துக்கு முன்னால் நான் மிக எளிதாய் வாக்களிக்க முடியும்தான். ஆனால், மனத்தளவில் நான் ஒரு ஹிந்துவாக இருக்கலாமே! உங்கள் யேசு கிறிஸ்துவை வணங்குவதற்குப் பதில் நான் மனத்துள் எங்கள் கிருஷ்ணனை வணங்கலாமல்லவா! நான் யாரை வணங்குகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?  தவிர, எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவளாய் என்னை நான் கருதிக்கொள்ளுவதில்லை! அதாவது, ஒரு ஹிந்து என்கிற நினைப்பு எனக்குக் கிடையாது. நான் ஒரு மனிதப் பிறவி என்கிற நினைப்பு மட்டுமே எனக்கு உள்ளது!”

புன்னகையைத் தோற்றுவித்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “இது  பாராட்டத்தக்க ஒரு மனப்பான்மைதான்! பரந்த மனப்போக்கும்தான்! அதனால், கிறிஸ்தவப் பெண்ணாக ஆவது உனக்கு மிகவும் எளிதானதே! ஹிந்துக் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும், உன்னை நீ ஒரு ஹிந்துவாய்க் கருதுவதில்லை என்கிறாய். எனவே கிறிஸ்தவப் பெண்ணாக ஆனதன் பிறகும் உன்னால் அப்படி ஒரு பற்றற்ற நிலையில் இருக்க முடியுமே!” என்கிறார்.

தானும் புன்னகை செய்யும் சுமதி, “மீண்டும் வாய்ச்சாலகத்துடன் பேசுகிறீர்கள், மாமா! நான் பிறந்த மதத்திலேயே எனக்கு நம்பிக்கை இல்லாத போது, இன்னொரு மதத்துக்கு நான் மாறுவது என்பதே அபத்தமானதில்லையா? அதை எப்படி ஏற்க முடியும்?” என்கிறாள்.

திகைத்துப் போகும் கிஷன் தாஸ் அதிருப்தியுடன் அவளைப் பார்க்கிறார். அவளது வாக்குவாதப் பேச்சும், அதில் ஒலிக்கும் கண்டிப்பும்

அவருக்குப் பிடிக்கவில்லை. தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்குறைவான கூரிய பார்வையை அவர் ஜெயராமனின் மீது செலுத்துகிறார்.

தர்ம சங்கடத்துடன் தம் கைகளைப் பிசைந்தபடி, ஜெயராமன், “உன் வருங்கால மாமனாரிடம் இப்படி யெல்லாம் மரியாதை யில்லாமல் நீ பேசுவது சரியில்லை, சுமதி!” என்று மகளைக் கண்டிக்கிறார்.

ஆனால், சுமதியோ, “நான் மரியாதைக் குறைவாக என்ன அப்பா பேசிவிட்டேன்? ஒளிவுமறைவு இல்லாமல் என் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அவ்வளவுதானே? சுற்றிவளைத்துப் போலியாய்ப் பேசுவதெல்லாம் எனது இயல்பு இல்லையே, அப்பா! அது உங்களுக்கே தெரியுமே!” என்றதன் பின், கிஷன் தாசை நோக்கி, “மாமா! என் மனப்போக்கை நான் உங்களுக்காக மாற்றிக்கொண்டு ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக என்னால் மதம் மாறச் சம்மதிக்க முடியும்தான்.  ஆனால், நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால், தொடக்கத்திலிருந்தே இந்தக் கல்யாணத்துக்கு ஆட்சேபித்து வரும் என் அம்மாவின் உணர்வுகளையும் நான் மதிக்க வேண்டுமல்லவா! கிறிஸ்துவ மதத்துக்கு மாறி அவரை மேலும் புண்படுத்த என்னால் முடியாது.  நீ பிரகாஷை மணந்துகொண்டால் நான் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று அவர் அடிக்கடி என்னை அச்சுறுத்திய வண்ணம் இருக்கிறார். நீங்கள் விதிக்கும் இந்த நிபந்தனையை நான் ஏற்று மதம் மாறினால், அவர் அப்படியே நொறுங்கிப் போய் விடுவார். … இந்த மனிதர்கள் ஏன் தான்  தங்கள் மதத்தின் மீது இப்படி ஒரு பற்றுக்கொள்ளுகிறார்களோ, எனக்குப் புரியவே இல்லை – மதம் என்பது ஏதோ தங்களின் உடம்பில் ஒட்டியுள்ள ஓர் உறுப்பு என்பது போல!” என்று நீளமாய்ப் பேசி அங்கலாய்க்கிறாள்.

தமது எரிச்சலை அடக்கிக்கொள்ளும் கிஷன் தாஸ்,  “அப்படியானால், மதத்தில் நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிறாயா?” என்று வினவுகிறார்.

“சேச்சே! இல்லை, இல்லை!  நான் அப்படி நினைக்கவே இல்லை. மனிதர்களை நல்ல தன்மைகள் கொண்ட உயர்ந்த ஆன்மாக்களாக மாற்றுவதற்காகவே மதங்கள் ஏற்பட்டன என்பதை நான் அறிவேன். நான் பிறருடைய மத உணர்வுகளை மதிப்பவள்தான்.  எனவேதான், என் அம்மாவின் ஆட்சேபணையைச் சொல்லி நான் பிரகாஷை ஹிந்துவாக மதம் மாறச் சொல்லாமல் இருக்கிறேன். அப்படி ஒரு வேண்டுகோளை நான் பிரகாஷுக்கு இதுவரை வைக்கவே இல்லையே!”

அடுக்களை நுழைவாயில் அருகே நின்று அவர்களின் பேச்சைக் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கும் ஜானகி சுமதியின் வலுவான வாதத்தைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்து போகிறாள். ‘இந்தக் கல்யாணம் நடக்கப் போவதில்லை’ என்றும் நம்புகிறாள்.

“அதனால்தான் இந்தக் கல்யாணம் கூடாது என்று நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்! இது போல் தன் வருங்கால மாமனாருடன் வாக்குவாதம் செய்யும் ஒரு பெண் கல்யாணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டுக்குப் போனால் அங்கே அவள் நிம்மதியாக வாழ மாட்டாள்… இந்தக் கல்யாணப்பேச்சை நிறுத்திவிடுவதே உத்தமம்….” என்று அடுக்களை வாசலில் இருந்து இரைந்த குரலில் பொதுவாகக் கூறும் ஜானகி, பிறகு, கிஷன் தாசை நோக்கி, “அய்யா! இது சரிப்பட்டு வராது என்று நீங்கள் உங்கள் மகனுக்கும் எடுத்துச் சொல்லி இதை நிறுத்தப் பாருங்கள்! என் மகளின் கல்யாணம் ஒரு சர்ச்சில் நடப்பதைப்பற்றி என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை!” என்கிறாள்.

“ஜானகி! இந்த விஷயத்தில் நீ மூக்கை நுழைக்கக் கூடாதென்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்!” என்று ஜெயராமன் சினத்துடன் கத்துகிறார்.

“வேண்டாம், வேண்டாம், மிஸ்டர் ஜெயராமன்! அவரைக் கோபிக்காதீர்கள். என்ன இருந்தாலும், அவர் சுமதியின் தாயார். இந்த விஷயத்தில் தலையிட்டுப் பேசும் உரிமை அவருக்கும் உண்டு. உண்மையில், அவருக்குத்தான் இதில் அதிக உரிமை உள்ளது!” என்று கிஷன் தாஸ் இடைமறிக்கிறார்.

“ஆனாலும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது, மாமா!” என்று சுமதி புன்னகையுடன் குறுக்கிடுகிறாள்.

“என்ன தீர்வு?”

“எங்கள் கல்யாணம் ஹிந்து முறைப்படி நடப்பதற்கு நீங்கள் அனுமதித்தால், என் அம்மா அதனால் மகிழ்ச்சி யடையாவிட்டாலும், அதிக வருத்தம் இல்லாமலாவது இருப்பார். அந்த ஓர் அற்ப மகிழ்ச்சியையாவது என் அம்மாவுக்குக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், உங்கள் வீட்டுக்கு வந்த பிறகு, உங்கள் மகிழ்ச்சிக்காக நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடுகிறேன். இது ஒன்றுதான் அதற்குத் தீர்வு. தயவு செய்து இந்த எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்!”

சுமதியின் திருமணம் அந்தக் கிறிஸ்தவ இளைஞனோடு நடக்க இனி வாய்ப்பில்லை என்று எண்ணி நிம்மதி அடைந்திருந்ததால் ஜானகியின் முகத்தில் தோன்றியிருந்த புன்னகை சுமதியின் நியாயமான வேண்டுகோளுக்கு அவர் ஒப்புக்கொண்டுவிடக்கூடும் எனும் ஊகத்தால் உடனே மறைந்து விடுகிறது.

அவள் அஞ்சியபடியே கிஷன் தாஸ் பெருங்குரலில் சிரித்துவிட்டு, “நீ மிகவும் கெட்டிக்காரப் பெண், சுமதி! உன் விருப்பத்தை நான் ஏற்கிறேன்.  நீ சட்டம் படித்திருந்தால் மிகச் சிறந்த வக்கீல் ஆகியிருப்பாய், பெண்ணே!” என்கிறார்.

சிவந்துவிட்ட முகத்துடன், சுமதி, “நன்றி, மாமா, மிகவும்  நன்றி!” என்கிறாள்.

பின்னர் அவள் அடுக்களைக்குப் போய் ஓர் ஏனத்தில் எலுமிச்சைச் சாறும் மூன்று கோப்பைகளும் எடுத்து வருகிறாள். கிஷன் தாசிடமும் ஜெயராமனிடமும் இரண்டு கோப்பைகளில் அதை ஊற்றிக் கொடுத்துவிட்டுத் தானும் ஒன்றுடன் நாற்காலியில் அமர்ந்துகொள்ளுகிறாள். மூவரும் மவுனாய் அதைப் பருகுகிறார்கள்.

குடித்து முடித்த பின் எழுந்துகொள்ளும் கிஷன் தாஸ், “அப்படியானால், நான் கிளம்பட்டுமா?” என்கிறார்.

ஜெயராமனும் சுமதியும் எழுந்து சென்று அவரை வழியனுப்பிய பின் கூடத்துக்குத் திரும்புகின்றனர். பிறகு இருவரும் அடக்க மாட்டாமல் சிரிக்கின்றனர். ஜானகியின் முகம் கடுகடுவென்று இருக்கிறது.

ஜெயராமன், “நீ மிகவும் துணிச்சல்காரிதான். இருந்தாலும் உன் வருங்கால மாமனாருடன் பேசும்போது இவ்வளவு கடுமை கூடாது, சுமதி!” என்கிறார்.

சுமதி பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்கிறாள். சில கணங்களுக்குப் பிறகு, “மிஸ்டர் கிஷன் தாசைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அப்பா?” என்று ஜெயராமனிடம் வினவுகிறாள்.

“ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய், சுமதி?”

“குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. அவர் கெட்டவரா, நல்லவரா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அவரைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?”

“அடிப்படையில் நல்ல மனிதர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், பெரும் பணக்காரராக இருப்பதால் நம்மோடு சம்பந்தம் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை. ஏதேனும் காரணம் கண்டுபிடித்து எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்!”

“அதேதான், அப்பா! அதனால்தான் ஒன்று மாற்றி இன்னொன்று என்று புதிது புதிதாய் நொண்டிச் சாக்குகளை அடுக்குகிறார்!”

“தில்லிக்குப் போய்ச் சேர்ந்ததும் மேலும் யோசித்து அவர் இன்னும் வேறு ஏதேனும் வம்பு செய்யக்கூடும்!”

“அதையேதான், அப்பா, நானும் சொல்ல நினைத்தேன்.”

“பெரிய மனசுக்காரர்கள் ஒரே மாதிரி நினைப்பார்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் அல்லவா?”

“அதே போல், சின்ன மனசுக்காரர்களும் ஒரே மாதிரி நினைப்பார்கள்! இப்படி ஒருவர்க்கொருவர் பெருமை பேசிக்கொள்ளுவதை நிறுத்திவிட்டு அப்பாவும் பெண்ணும் இந்தச் சம்பந்தத்தை மறு பரிசீலனை செய்வதுதான் சரி.                                             அந்தக் கிஷன் தாஸ் வீட்டில் சுமதி நிம்மதியான வாழ்க்கை நடத்துவாள் என்று எனக்குத் தோன்றவில்லை! பெரிய மனசுக்காரர் மாதிரி அந்த ஆள் வேஷம் போடுகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில் சுமதி தன் குடும்பத்துக்கு ஏற்றவள் இல்லை என்பதே அவரது அபிப்பிராயம்!”

“அதைப்பற்றி யெல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும் சுமதி அதைச் சமாளித்து விடுவாள். இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்காக இல்லாத பொல்லாத காரணத்தை யெல்லாம் நீயும் கண்டுபிடித்துக் கொண்டிருக்காதே!”

”நான் ஏன் கண்டுபிடிக்க வேண்டும்? அதை அந்த மனிதரே பார்த்துக்கொள்ளுவார். உங்கள் பெண்ணைப் போலவே அவரும் கெட்டிக்கார ஆசாமிதான்! அவருக்கும் உங்கள் பெண்ணுக்குமிடையே பெரும் சண்டைதான் மூளப் போகிறது! பார்த்துக்கொண்டே இருங்கள்!”

“அந்த மனிதர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்! நீ வேறு அவர் பாணியில் நடக்காதே!  சுமதியின் மகிழ்ச்சி ஒன்றுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்!”

“நான் மட்டும் அப்படி நினைக்கவில்லை என்பது போல் இதென்ன பேச்சு?”

“சரி, சரி! மறுபடியும் எனக்காக நீங்கள் இருவரும் சண்டை போட வேண்டாம்!” என்று  சுமதி குறுக்கிடுகிறாள்.

ஜானகி முகத்தை உம் என்று வைத்தபடி அடுக்களையிலிருந்து உணவு வகைகளை எடுத்து வந்து மேஜை மீது பரப்புகிறாள். பின்னர் யாவரும் சாப்பிடத் தயாராகிறார்கள்.

 

… ஒரு வாரம் கழித்து ஒரு நாள். சுமதியின் வீட்டுச் சுவர்க் கடிகாரம் இரவு ஏழு மணி ஆவதைக் காட்டுகிறது. ஜானகி ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு வார இதழின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறாள். சுமதி இன்னும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி யிருக்க வில்லை. தமது வழக்கத்துக்கிணங்க, ஜெயராமன் மாலைச் செய்திக்காகத் தொலைக்காட்சியை இயக்குகிறார்…

செய்தி வாசிக்கப்படுகிறது: “தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் சொந்தக் காரர் என்கிற புகாருக்கு ஆட்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரான அன்புவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாய்த் தாக்கிப் பேசினார்கள். விடிவெள்ளி நாளிதழில் சுமதி எனும் பத்திரிகையாளர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி பள்ளிக்குச் சென்று பயில வேண்டிய சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் பங்குதார்களில் தான் ஒருவன் அல்லன் என்று திரு அன்பு வாதாடினார். குழந்தைத் தொழிலாளிகளைப் பணியில் வைத்துள்ள குற்றவாளி என்று தன்னைத் தவறாய்க் குறிப்பிட்டுள்ள அந்த இதழின் மீது தாம் விரைவில் வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் அறிவித்தார்….”

அப்போது தொலைபேசியின் மணி அடிக்கவே, ஜெயராமன் எழுந்து போய்ப் பேசுகிறார்: “ஹல்லோ!… ஆமாம். நான் ஜெயராமன்தான் பேசுகிறேன். ஆமாம். சுமதி என் மகள்தான். …. என்ன! தாக்கப்பட்டிருக்கிறாளா! மோசமான தாக்குதலா?…. நல்ல வேளை. …. எந்த மருத்துவமனை?….மிக்க நன்றி…. நான் அரை மணிக்குள் வந்து விடுவேன்… உங்களால் அங்கு நான் வரும் வரை இருக்க முடியுமா?  மிக்க நன்றி, சர்… நான் இதோ இப்போதே கிளம்புகிறேன்…”

அவரது பதற்றம் நிறைந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஜானகி வார இதழைக் கீழே போட்டுவிட்டு, “யார் அது தொலைபேசியில்? சுமதிக்கு என்ன வாயிற்று?” என்று பதறும் குரலில் கேட்டபடி எழுகிறாள்.

கண் கலங்கியவாறு, “சுமதி வீட்டுக்கு வரும் வழியில் யாரோ அவளைத் தாக்கியிருக்கிறார்கள். நல்ல வேளையாக, இப்போது தொலைபேசியில் தகவல் தெரிவித்த ஆள் அப்போது அங்கே தற்செயலாய்த் தம் காரில் வந்திருக்கிறார். அவர் கவனித்துவிட்டதைப் பார்த்ததும் அந்தப் போக்கிரிகள் தங்கள் காரில் ஏறிக்கொண்டு ஓடி விட்டார்களாம்…நாம் உடனே கிளம்பியாகவேண்டும். நம்மிடம் இருக்கும் பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டும்…” என்று ஜெயராமன் கவலை தோய்ந்த குரலில் கூறுகிறார்.

அடுத்த கணமே தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்க மறந்தவர்களாய் இருவரும் வீட்டில் இருந்த பணத்தையெல்லாம் வாரிக்கொண்டு கிளம்புகிறார்கள்.

jothigirija@live.com

 

 

Series Navigationதற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *