வேழப்பத்து 14-17

வேழப்பத்து—14

”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா?

அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல  சின்னச் சின்ன காயி இருக்கற மாமரத்தோட தளிர் இலையில பட்டு அசையச் செய்யும்டி; அதெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவன்டி அவன்; அவன் என்னை உட்டுட்டுடுப் போனது கொடுமைதாண்டி; ஆனா அவன் மார்புதாண்டி இனிமையான பனி போலக் குளிர்ச்சியைக் கொடுக்கும்; அதுதாண்டி எனக்குத் தூக்கத்தையும் கொடுக்கும்” னுசொல்றா”.

வேழம் தொடறதால மாந்தளிரு அசையும்; அதுபோல அவன் மார்பை அவங்கள்ளாம் தொடறாங்களே! எனக்கு மனசு பொறுக்கலியேன்றது மறைச்சு சொல்றாங்க.

”கொடிப்பூ வேழம் தீண்டி அயல

வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும்

மணித்துறை ஊரன் மார்பே

பனித்துயில் செய்யும் இன்சா யற்றே”

=====================================================================================

வேழப்பத்து—15

”மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழை

புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்

வேழம் மூதூர் ஊரன்

ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே”

”ஏண்டி அவன்தான் அவளை உட்டுட்டு ஒன் கூடவே வந்திருக்கான்; இப்பவும் ஏன் என்னவோ போல ஒரு மாதிரியாயிருக்க?” ன்னு தோழி கேக்கறா.

அதுக்கு அவ, “போடி; மணலை அலைச்சுக்கிட்டுப் போற தண்ணியில தழை கட்டிக்கிட்டுக் குளிக்கற பொண்ணுங்களுக்கு நாணல்ன்ற வேழம் துணையாயிருக்கற ஊரைச் சேர்ந்தவன்டி அவன்; இங்க வந்ததால நம்ம ஊர்க்காரன்தான்; ஆனா அங்க போயிட்டு வர பழக்கம் இருக்கறதால இங்க சரியாப் பழகல; அதால நம்ம ஊர்க்காரன் இல்லடி” ன்னு  பதில் சொல்றா.

இதுல தழைன்னு வர்றது இளமையான பொண்ணுங்க கட்டிக்கற ஆடையாம்; ஆம்பல், நெய்தல், ஞாழல் போல இருக்கறதுலேந்து தழை, பூவெல்லாம் எடுத்து அதைக் கட்டுவாங்களாம். பொண்ணுங்க குளிக்கறது வெளியே தெரியாம  நாணல்லாம் மறச்சுகிட்டுத் துணையாய் இருக்குமாம்.

அந்த வேழம்றது குளிக்கற பொண்ணுங்களுக்குத் துணையாயிருந்து ஒதவி செய்யற மாதிரி அவனும் மத்த பொண்ணுங்களுக்கு ஒதவுவான்றது மறைவா சொல்லப்படுதாம்.

வேழப்பத்து—16

”ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்

சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்

பூக்கஞல் ஊரனை உள்ளிப்

பூப்போல் உன்கண் பொன்போர்த் தனவே”

”அவன் வரவே இல்ல; ஆனா அவன் வருவான்னு நம்பி இவ கண்ணெல்லாம் பசலை பூத்துச்சே! இனிமேட்டு அவன் வந்துதான் இவகிட்டே என்னா வாரிக்கப்போறான்?” ன்னு தோழி பொல்ம்புற பாட்டுங்க இது.

இன்னும் அவன் ஊரைப்பத்தி அவ சொல்றாங்க; ”அவன் ஊர்ல இருக்கற வேலைக்காரப் பொண்ணுங்கள்ளாம் அஞ்சனம்னு ஒண்ணை வாசனைக்காகப் பூசிக்குவாங்க; அது கெடாம இருக்க இந்த வேழம்ற நாணலோட தண்டிலதான் அதை வைப்பாங்களாம். அந்த வேழத்துல ஒசரமா பூவெல்லாம் இருக்குமாம்;”      அதாவது அஞ்சனம் கெட்டுப்போகாம வைக்கறதுக்கு வேழம் ஒதவுதுல்ல; அதேபோல அங்க இருக்கற அவங்கள்ளாம் அழகு கெடாதபடிக்கு அவன் அங்கதான் ஒதவுவான்.

 

 

 

வேழப்பத்து—17

 

”புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ

விசும்பாடு குருகில் தோன்றும் ஊரன்

புதுவோர் மேவலன் ஆகலின்

வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே”

”ஏண்டி பெரிசா கவலைப்படறே? இந்த ஆம்பளங்களுக்கே அப்பப்ப அங்க போயிட்டு வர்றது வழக்கம்தானே’ ன்னு தோழி சொல்றா; அதுக்குப் பதிலா அவ சொல்ற பாட்டுங்க இது.

புதன்னா புதர்னு பொருளுங்க; விசும்பாடுன்னா ஆகாசமுங்க;

”அவன் ஊர்ல இருக்கற வேழம்ற நாணலோட பூவெல்லாம் ஆகாசத்துல பறக்கற குருகு போல இருக்கும்டி; தெனம் புதுசா ஒன்னப் பாத்துட்டா அங்க போறவன்டி அவன்; இது தெரியாம எம்மனசு அடிச்சுகுதுடி; என்று அவ தன் தோழிகிட்ட சொல்றா;

வேழத்தோட பூ எப்படி ஒசரப் பறக்குற குருகு போல இருக்குதோ அதுபோல அவங்கள்ளாம் குடும்பப் பொண்ணு போல இருப்பாங்கன்னு மறைவாச் சொல்ற பாட்டுங்க இது

 

வேழப்பத்து—18

”இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலமருங் கழனி ஊரன்

பொருந்துமலர் அன்னஎன் கண்ணழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே”

 

அவகிட்ட தோழி வந்து “ஏண்டி, ஒன்ன உட்டுட்டு அங்க போனவன் திரும்பி வரலாமான்னு கேக்கறான்”னு சொல்றா. அதுக்கு அவ சொல்ற பதில்தான் இந்தப் பாட்டு.

செருந்தின்னா ஒருவகைக் கோரைங்க; தலைவி சொல்றா. “அவன் ஊர்ல செருந்தின்ற கோரையோட கூடிக்கிட்டு இந்த வேழம்ற நாணல் கரும்பு போலக் காத்துல சுத்திச் சுத்தி அசையும்; இங்க பாருடி, என்ன உட்டுட்டு எங்கியும் போக மாட்டேன்னு சொன்னவன் இப்ப பூப்போல இருக்கற என் கண்ண அழ உட்டுட்டுப் போயிட்டான்; நீ என்னடி அவனுக்காகக் கேக்கற”

வேழம் கோரையோட கூடிக் கரும்பு போல அசையுமாம்; அதுபோல அந்தமாதிரிப் பொண்ணுங்கள்ளாம் அவங்க தோழிங்களோட கூடி குடும்பப் பொண்ணு போல இருப்பாங்களாம். இதைத்தான் மறைவா சொல்லுது இந்தப் பாட்டு.

==============================================================================

 

 

 

வேழப்பத்து—19

 

”எக்கர் மாத்துப் புதுப்பூம் பெருஞ்சினை

புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழும் தண்பொழில்

வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்

ஊரன் ஆகலின் கலங்கி

மாரி மலரில் கண்பனி உருமே”

இந்தப் பாட்டுல எக்கர்னு சொன்னா தண்ணி அடிச்சுக்கிட்டு வந்த மணல் உண்டாக்கிய எடங்க; அத்துனா கொம்புங்க; பெருஞ்சினை புணர்ந்தோர்னா கல்லாணம் ஆன பொண்ணுங்க; உளைன்றது வேழத்தோட பூவுங்க; சீக்கும்னா அழிக்கும்.

இப்பப் பாட்டுக்குப் பொருளைப் பாக்கலாம். தோழி கேக்கறா, “ ஏண்டி, முன்னெல்லாம் ரொம்ப நாள் அவன் ஒன்னை உட்டுட்டுப் போயிருக்கான்ல; அப்பல்லாம் சும்மா இருந்த; இப்ப கொஞ்ச நாள்தான் அந்த எடத்துக்குப் போயிருக்கான். அதுக்கே இவ்ளோ கவலைப்படறயே?

அதுக்குப் பதிலா அவ சொல்றா; ”முன்னெல்லாம் வெளியூர் போய்ட்டாண்டி; இப்ப ஊர்ல இருந்துக்கிட்டே வராம இருக்கானேன்னுதான் வருத்தமாயிருக்குடி”.

பாட்டுக்கு நேரடிப்பொருள் இதுதாங்க; ”தண்ணி கொண்டு வந்த மணல்ல மாமரம் ஒண்ணு இருக்கு; அந்த மரத்தில பூக்களோட இருக்கற மாங்கொம்பும் இருக்கு; அது எங்க இருக்கு தெரியுமா? கல்லாணம் ஆன பொண்ணுங்களோட வாசனை வர்ற தோப்பில இருக்கு; அது வேழத்தோட வெள்ளையான பூக்களோட மேல பட்டு அழிக்குதுடி; அதெல்லாம் இருக்கற  ஊரைச் சேர்ந்தவன்டி அவன்; அவங்க கிட்ட போயி மழையில நனையற கொவளைப் பூப்போல என் கண்ணெல்லாம் ஆக்கிட்டாண்டி” ன்னு அவ சொல்றா.

வேழத்துப் பூவை எப்படி மாங்கொம்பு அழிக்குதோ அதுபோல என்னோட இன்பமெல்லாம் அவங்க அழிக்கறாங்கன்றதான் மறைபொருளுங்க.

 

வேழப்பத்து—20

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்

காம்புகன்[டு] அன்ன தூம்புடை வேழத்துத்

துறைநணி ஊரனை உள்ளிஎன்

இறையே எல்வளை நெகிழ்பு ஓடும்மே

அவன் எவ்ளோ கொடுமை செஞ்சாலும் சரிடி; ஆனா அவனோட தெறமையை மறக்கக் கூடாதுடி”ன்னு தோழி சொல்றா.

அதுக்கு அவ சொல்றா, “அவன் ஊர் எப்படி இருக்கும் தெரியுமாடி; ஆறு கால்களோடையும், அழகான சிறகோடையும் இருக்கற தும்பி போயி பல நூறு இதழ் எல்லாம் இருக்கற தாமரைப் பூவுல போயி முட்டை இடுது. மூங்கில் போல இருக்கற வேழம் அதுமேல பட்டு அந்த முட்டைகளை எல்லாம் அழிக்குதுடி; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் அவன்; அவனை நெனச்சு இதோ பாருடி;  என் வளையெல்லாம் கழலுதடி”

இந்தப் பாட்டுலதான் அவ தன்னோட புள்ளயைப் பத்திச் சொல்றாங்க; தாமரைப்பூவுல இருக்கற தும்பியோட சினைதான் அவ புள்ள; அதை வேழம் அழிக்கற மாதிரி எங்கிட்ட எம்புள்ள இருக்கறதையும் அந்தப் பொண்ணுங்க பிரிச்சுவாங்கடின்னு அவ மறைவாச் சொல்றாங்க;

=======================================================================

Series Navigationஇரண்டு கேரளப் பாடல்கள்தளர்வு நியதி