வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை

இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர்.

பல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை.

இனி இவருடைய கைத்தலம் பற்றி கவிதைத் தொகுப்பு பற்றிக் காணலாம். திருமணம் ஆனதும் தொடங்குகிறது கவிதை. கணவன் மனைவியின் சமையலைப் புகழும் கவிதை
ஆவக்காய் அதிகம் பிடிக்கும்
பாவக்காய் அளவாய்ப் பிடிக்கும்
கோவைக்காய் கொஞ்சம் பிடிக்கும்
கொத்தவரங்காய் கடிக்கப் பிடிக்கும்

அவள்
சமையலில் எல்லாமே
இனித்தது.

இருவருக்குள்ளும் இன்னும் முதலுறவு முகிழ்க்கவில்லை. அதன் முன்னே மனைவியைக் காதலிக்கும் கணவனாய்

கல்லூரி
மலராய்
பூத்தபோது
கன்னி யாரும் வரவில்லை
கவிதை எழுதித் தரவில்லை
கண்ணில் யாரும் படவில்லை
மறுபடி நான்
கல்லூரி மாணவனாய்
காலூன்றிக் காதலித்தேன்

திருமணமான பெண்ணை
திருமதியான உன்னை

என்றும்.

தொட்டுத் தூக்கிய தொல்காப்பியமே !
கட்டியணைக்கத் தூண்டும் கம்பன் கற்பனையே !
சொட்டுச் சொட்டாய் சிந்தும் சூளாமணியே !
தட்டித் தட்டிப் பார்க்கும் சிலம்பின் சிற்பமே !
வெட்டி வெட்டி எடுக்கும் என் வேதமே !

.. இன்னும்

எத்தனை பாகங்களாகப்
படிப்பேன் உன்னை
என் அர்த்தமுள்ள இந்துமதமே !

என்றும் பாமாலை சூட்டுகிறார். திரைஇசைப் பாடல்கள், குறும்படப் பாடல்கள் எழுதி உள்ளமையால் எதுகையும் மோனையும் சந்தத்தோடு வருகின்றன.

மனைவி பெண்பார்க்கும்போது ஒரு உணவகத்தில் கணவனாகப் போகிறவனை சந்தித்ததைக் கவிதையாக இப்படிச் சொல்கிறாரள்.

பார்த்துப் பார்த்து நீ
பருகிய பழச்சாறு
என்னிடம் சொன்னது
பைத்யக்காரி
அவன் குடித்தது
உன் இதழ்சாறு என்று.

மேலும் இருமணம் ஒன்றினாலும் திருமணத்துக்குமுன் நிகழ்ந்த ஒரு அதிர்வான நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அவள் கூறுகிறாள் இப்படி

முகத்துக்கு அரிதாரம் பூசலாம்
மனதுக்கு ?
உறவுகளிடம் உண்மை மறைக்கலாம்
உணர்வுகளிடம் ?
நிஜங்களை நினைக்காமல் இருக்கலாம்
நினைவுகளை ?

அந்தப் பாழிடத்தில் சேர நினைத்ததை நினைவுகூறும் அவள் அங்கே இருந்தவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறாள்.

எரிகின்ற வயிற்றுக்காய்
சரிகின்ற மாராப்புகள்..

தேச விடுமுறை நாட்கள் கூட
தேக விடுமுறை நாட்கள் அல்ல.

தன்னைப் பற்றிக் கூறுமிடத்து

கல்கத்தா காளிமீது சத்தியம்
கற்பு களங்கப்படவில்லை
கனவு கலைக்கப்படவில்லை
கண்ணிமை கரைபடவில்லை.

இதைக் கேட்கும் கணவன் மொழிவது

தூக்க மாத்திரைகளுக்கே
தூங்க வைக்கும்
சக்தி உள்ளதென்றால்
என் காதலுக்கு
எழுப்பிவிடும்
சக்தி இல்லையா

இந்த
காதல்
வாத்சல்யம்
ஜென்ம
சாபல்யமாகத்
தொடரும்.

ஒரு சிறுகதையைக் கவிதை வடிவில் படித்தது போலிருக்கிறது. இவரது அழகான சொல்லாடலுக்காகவே இக்கவிதை நூலை வாசிக்கலாம்.

ஆசிரியர் . வே. பத்மாவதி
நூல் :- கைத்தலம் பற்றி
பதிப்பகம். தமிழ் அலை
விலை ரூ . 50.

Series Navigationதமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்புஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்