ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

Spread the love

பள்ளிக்குச் செல்லும் முதல் நாள்

 

கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும்

அந்தக் குழந்தையின் முகம்

மெல்ல மேலெழுந்து தெரிகிறது

 

பல நாட்கள்

பள்ளிக்குச் செல்வதுபோல்

பாவனை காட்டிய ஆர்வம்

இப்போது வடிந்துவிட்டது

 

புதிய உடைகள்

அவனை

மகிழ்ச்சி அடையாமல் செய்தது

இதுதான் முதல் முறை

 

கனமில்லாப் பள்ளிப் பைகூட

அவன் தோளை வலுவாக அழுத்தியது

இதுவரை

சுமக்காத பாரம் தண்டிக்கிறது

 

அம்மாவின் பாதுகாப்பை

முதன்முதலாக அவன்

இவ்வளவு மூர்க்கமாய் வெறுத்தில்லை

 

ஆட்டோவில் அமர்ந்து

அம்மாவைப் பார்த்தான்

கண்ணீர்த் திரையில்

அம்மா முகம் மெல்ல மறைகிறது…

 

எந்தக் காலத்திலும்

சில குழந்தைகளுக்கு

முதல் நாள் பள்ளி செல்லுதல்

தண்டனையாகவே இருக்கிறது.

 

………..

 

இழந்து திரிபவர்கள் !

 

அந்த அபாண்டத்தின்

கொடிய வேர்கள்

அந்த நான்கு வயதுக் குழந்தையின்

மென்மையான இதயத்தில்

இறங்கி

ரத்தம் உறிஞ்சுகின்றன

 

சொற்களின் கனம்

மலையாய் அழுத்த

அவன் ஆன்மா அழுகிறது

 

அவன் பிறந்த அன்று

அவன் அப்பா இறந்து

மூன்று மாதங்கள் ஓடிவிட்டன

 

இந்த நிலைக்குப் பழி

அந்தக் குழந்தையின் மீது

கட்டாயமாகச் சுமத்தப்படுகிறது

 

வீட்டுக்கு வருபவர்கள்

” அப்பனை முழுங்கிட்டிப்

பொறந்திருக்கு … ” என்கிறார்கள்

அவன் நிமிர்ந்து நிற்கக் காலம்

அபாண்டத்தைக் கரைக்கட்டும்

 

படித்த மனிதர்கள்கூட

இதயம் இழந்து

ஏன் இப்படித் திரிகிறார்கள் ?

 

 

Series Navigationபுத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1தொடுவானம் 172. புது இல்லம்