ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 18 மே 2014

உதயகுமாரி கிருஷ்ணன்

அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட தயாராக இருந்தாள்.பெருமளவு தோலை எலும்பு விழுங்கியிருந்தது.எலும்புகள் துருத்திக்கொண்டு சற்றே அதிகப்படியாய் குழி விழுந்த கன்னங்களோடு இருந்த அவளைப் பார்க்கையில் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மத்தியில் கிடத்தப்பட்ட மனித எலும்புக்கூட்டுக்கு கைலி,இரவிக்கை போர்த்தி விட்டது போலிருந்தாள்.சிண்டரெல்லாவுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும்போதும் பயம் எள்ளளவும் குன்றாமல்தான் இருந்தது.
“கொஞ்சநேரம் பாட்டி கூடவே இரு வந்துடறேன்,” சிண்டரெல்லாவின் அம்மா கேழ்வரகு கூழ் படிந்திருந்த கரண்டியோடு வந்து சொல்லிவிட்டுப் போனாள்.பாட்டிக்குக் கொஞ்சநாளாகவே கேழ்வரகு கூழ்தான் மூன்று வேளையும் உணவாகிறது.படுத்த நிலையிலேயே அவள் குடிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது என்பதைத் தாண்டி கூழ் கொடுத்து பாட்டியை மீண்டும் நடமாட வைத்துவிடலாம் என்ற அம்மாவின் நம்பிக்கையும் அதற்குக் காரணம்.ஏற்கனவே ஒரு தடவை இப்படி படுத்த படுக்கையாக இருந்த ஹிட்லர் பாட்டி தினமும் கேழ்வரகு கூழ் குடித்துதான் பழையபடி தெம்பாக எழுந்தாள்.
சிண்டரெல்லாவின் பார்வை மீண்டும் ஹிட்லர் பாட்டியின் மீது நிலைத்தது.திடீரென்று ஹிட்லர் பாட்டியின் உடலில் சிறு அசைவு தெரிந்தது.சரேலென்று ஒருக்களித்துப் பார்த்தவள் கண்களைத் திறந்து சிண்டரெல்லாவை ஒருகணம் முறைத்துப் பார்த்தாள்.அவள் முகம் கோபமாய் மாறியது.சட்டென்று எழுந்து அமர்ந்தவள் தலையணைக்கு அடியிலிருந்த முதுகு சொறியும் குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றாள். அதிர்ச்சி மாறாத நிலையில் இருந்த சிண்டரெல்லா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு,வேகமாய் ஓடி, மாடிப்படிகளைத் தாண்டி, தன் அறைக்குள் நுழைந்தபோது அவளின் வயது குறைந்து பெதும்பையாக மாறியிருந்தாள்.ஹிட்லர் பாட்டியும் ஐம்பத்தைந்து வயது பெண்மணியாய் சற்றே ‘இளமையாய்’ மாறியிருந்தாள்.சிண்டரெல்லாவைத் தொடர்ந்து ஓடி வந்தவள் அறை வாசலுக்கு வெளியே கையில் முதுகு சொறியும் குச்சியோடு நின்றிருப்பதை சிண்டரெல்லாவால் சாவித் துவாரத்தின் வழியாக நன்கு பார்க்க முடிந்தது. ஹிட்லர் பாட்டி எப்படியாவது உள்ளே நுழைந்துவிடுவாள்.அதற்குள் அறைக்குள்ளிருந்து தப்பிக்கவேண்டும்.
சிண்டரெல்லாவின் பார்வை அறையின் சன்னல் பக்கம் போனது.சன்னல் அருகே சென்றவள் இரண்டு கண்ணாடித் துண்டுகளைச் சத்தமின்றி கழற்றினாள்.பின் வெளியே எகிறி குதித்தவள் நஞ்சுட்டான் பூ மரத்தினருகே இருந்த வெள்ளை நிற ‘ஜப்பான்’ செருப்பை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு தன் அப்பாவைத் தேடி ஓட ஆரம்பித்தாள்.நாயுடு தாத்தாவின் வெற்றிலைக் கொல்லை,ஆயக்கொட்டகையைத் தாண்டிதான் தோட்டத்து அலுவலகமும்,அதனையொட்டி ரப்பர் பால் நிறுக்குமிடமும் இருந்தது.மதியம் ஒரு மணிக்கு சிண்டரெல்லாவின் அப்பா அங்குதான் இருப்பார்.அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் போதும்.ஹிட்லர் பாட்டியால் ஒன்றும் செய்யமுடியாது. சிண்டரெல்லா, நாயுடு தாத்தாவின் வெற்றிலைக் கொல்லையை அடைந்தபோது,பச்சைநிற, ஒற்றைச் சக்கர தள்ளுவண்டியில் குப்பைகளைச் சுமந்து கொண்டு வந்த ரங்கன் தாத்தா அவளை வழிமறித்து தன் வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார்.தோட்டத்தில் இருந்த சிறு பிள்ளைகளுக்கெல்லாம் அவர்தான் பூச்சாண்டி.சவரம் செய்யப்பட்டு, முள்மாதிரி தாடையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெள்ளைத் தாடியும்,சிவப்பேறிய கண்களுமாய் இருக்கும் அவரைப் பார்த்தாலே குழந்தைகள் மிரண்டு அழுதுவிடும்.சிண்டரெல்லாவும் சில வேளைகளில் அவரைப் பார்த்து பதுங்கியிருக்கிறாள்.ஆனால் இன்று ஹிட்லர் பாட்டியிடமிருந்து தப்பிக்கவேண்டும் என்பதே அவளது பிரதான முயற்சியாக இருந்ததால் ரங்கன் தாத்தாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவரைக் கடந்து ஓடினாள். அதற்குள் ஹிட்லர் பாட்டியின் சிரிப்புச் சத்தம் முதுகுக்கு அருகில் கேட்கவே,தன் ஓட்டத்தை அதிகப்படுத்தினாள்.
ஆயக்கொட்டகையைத் தாண்டி ஓடினாள்.பின்னால் துரத்திக்கொண்டே வந்த பாட்டியின் குரலோ,ஆயம்மாவுக்குப் பயந்து அழுதுக்கொண்டிருந்த குழந்தைகளின் அழுகையோ எதுவுமே காதில் விழாத தூரத்திற்கு ஓடிவிட்டிருந்தாள். ஒரு மணிக்கெல்லாம் அப்பா ரப்பர் பாலையும்,ஒட்டுப்பாலையும் ஏற்றிக்கொண்டு சிவப்பு நிற தலையும்,கபில நிற உடலும் கொண்ட கனவுந்தில் தாப்பா பட்டணத்திற்குப் புறப்பட்டுவிடுவார்.அதற்குள் அப்பாவைப் பிடித்தாக வேண்டும். சிண்டரெல்லா சிவப்புத் தலை கனவுந்து நிற்குமிடத்தை ஐந்தே நிமிடங்களில் அடைந்துவிட்டிருந்தாள்.எனினும் அவள் ஓட்டம் பயனற்றுதான் போனது.மழை பெய்ததால் தோட்டப்பாட்டாளிகள் கிடைத்த பாலை மட்டும் சுமந்து கொண்டு வந்துவிட, அப்பாவும் சீக்கிரமாக ரப்பர் பாலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டிருந்தார்.கனவுந்து போன பாதையை ஏமாற்றத்தோடு நோக்கினாள் சிண்டரெல்லா.அவளின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டிருந்தது.முதல் முறையாக மழையைச் சபித்தாள்.
அவள் அப்பாவைத் தேடி இங்கு இப்படி ஓடிவந்தது இது முதன்முறையல்ல. ஹிட்லர் பாட்டிக்கு சிண்டரெல்லாவைக் கண்டாலே பிடிக்காது.வீட்டு வேலைகளை சிண்டரெல்லா சரியாக செய்யவில்லை என்றால் கூட முதுகு சொறியும் குச்சியை எடுத்து வந்து விளாசிவிடுவாள்.ஒரு முழம் அளவிற்கு நீளமாய் நுனியில் ஐந்து விரல்கள் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த முதுகு சொறியும் குச்சியை முதுகு சொறிகிறாளோ இல்லையோ சிண்டரெல்லாவை அடித்தே உடைத்துவிடுவாள் ஹிட்லர் பாட்டி.அப்படி உடைந்து போன குச்சியில் அடிக்கும்போது வலி இன்னும் கூடுதலாக இருக்கும்.அந்த அடிக்கு பயந்து போய் அப்பாவைத் தேடி ஓடிவந்துவிடுவாள்.அப்பா அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு,”யாரும் பிள்ளையை அடிக்காதீங்க” என்று சொல்லிவிட்டு சிண்டரெல்லாவின் தலையை வருடிக்கொடுத்துவிட்டுப் போவார்.அந்தமாதிரி சமயங்களில் ஹிட்லர் பாட்டி அவளை அடிக்கமாட்டார்.பின்னொருநாள் சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது சேர்த்து வைத்து அடிப்பாள் என்றபோதிலும் அந்தக் கணத்தில் தப்பித்தால் போதும் என்று இருக்கும் சிண்டரெல்லாவுக்கு.
வழக்கமாக இங்கு வந்து அப்பாவுக்காக காத்திருக்கும் பொழுதுகளில் அப்பா தன் வேலையை முடித்துக்கொண்டு வரும்வரை சிண்டரெல்லா கனவுந்துகள் நிற்குமிடத்திற்கு அருகே இருந்த, ஆலமரத்தோடு இணைந்து வளர்ந்திருந்த அரசமரத்துக்கடியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருப்பாள்.மரத்திலிருந்து கொட்டும் இலைகளை ஓடி ஓடி பிடிப்பதை ஒரு விளையாட்டாக கொண்டிருப்பாள்.ஆனால் இப்போது அரசமரத்தடிக்குப் போனால் ஹிட்லர் பாட்டியின் கையில் மாட்டிக்கொள்வது திண்ணமென்று தெரிந்ததால் அப்பா வரும்வரை பாட்டியின் கண்களுக்குத் தெரியாமல் அங்கேயே எங்காவது ஒளிந்து கொள்ள எண்ணினாள்.சுற்றும் முற்றும் பார்த்தவள் தோட்டத்து அலுவலகத்தை ஒட்டியிருந்த வெள்ளை நிற நஞ்சுட்டான் பூ மரத்தின் மேல் ஏறி பச்சைப்புழு இல்லாத பக்கமாய்ப் பார்த்து ஒரு கிளையில் அமர்ந்து கொண்டாள். மரக்கிளையில் இருந்து பார்வையைத் தாழ்த்தி கீழ் நோக்கினாள்.பாட்டியின் பிம்பம் எங்கும் தென்படவில்லை.போய்விட்டாளோ?நிச்சயம் அம்மாவிடம் வத்தி வைப்பாள். ஏற்கனவே ‘சார்டின் கறியால் நடந்த சண்டையால் முடப்பந்தாட்டம் ஆடிவிட்ட அம்மா இவள் மீது இன்னமும் கோபமாகத்தான் இருப்பாள்.
முன்தினம் நடந்த அந்தச் சம்பவம் அவள் நினைவில் வந்து போனது.அம்மா சாரதி தாத்தா கடையில் கடன் சொல்லிவிட்டு ‘சார்டின்’ மீன் வாங்கி வந்து கறி சமைத்திருந்தாள்.சிண்டரெல்லா ஆசையாய் அம்மாவை ஊட்ட சொன்னாள்.ஏற்கனவே சரியாக சாப்பிடாமல் சோற்றைக் கொண்டு போய் பக்கத்து வீட்டு நாய்க்குக் கொட்டிவிட்டாளே என்று கோபமாய் இருந்த அம்மா ஊட்ட மறுக்கவே,பாட்டியும் ஒத்து ஊத,அப்போது பார்த்து அங்கு வந்த அப்பா,அம்மாவை ஏசிவிட்டார். “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை மூட்டிவிடற வயசா?” பாட்டி தூபம் போடவே,அம்மா தன் கையில் வைத்திருந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கோபமாய்த் தள்ளிவிட்டாள்.அது முடப்பந்தாட்டம் கணக்கில் சற்று தூரத்தில் இருந்த மூன்று வெள்ளிக் குவளைகளையும் அடித்து தரையில் வீழ்த்தியது. அப்பா இல்லாமல் வீட்டுக்குப் போய் இன்னொருமுறை அம்மாவின் முடப்பந்து ஆட்டத்தைக் காணும் தைரியம் அவளுக்கு இல்லை.காத்திருந்தாள்.
கொஞ்சநேரம் ஆனது.காற்று வீசியதும் பக்கத்துக் கிளையிலிருந்த இலைகள் அவள் உட்கார்ந்திருந்த கிளையை நெருங்கி வர,ஒரு பச்சைப்புழு தன் முட்டைக்கண்களை உருட்டியபடி அவளைச் சமீபித்து வந்தது.பயத்தால் அலறிக் கத்தினாள் சிண்டரெல்லா. சிண்டரெல்லாவைப் பொருத்தவரையில் இந்த உலகத்தில் அவளைப் பயமுறுத்தக்கூடியது இரண்டே விசயங்கள்தான்.ஒன்று ஹிட்லர் பாட்டி,இன்னொன்று பச்சைப்புழு.இதற்குமேல் மரத்தின்மேல் இருப்பது ஆபத்து என்று நினைத்தவள் பூப்போட்ட பாவாடையை ஒரு கையால் பிடித்தபடி மரத்திலிருந்து அவசர அவசரமாக இறங்கினாள்.அவளுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் சிவப்புத் தலை கனவுந்து ரப்பர் பாலை நிறுக்குமிடத்தில் நின்றிருந்தது. ஏகப்பட்ட சந்தோசத்தோடு அதை நோக்கி ஓடியவள் உள்ளே அப்பா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.ரப்பர்பால் நிறுக்குமிடத்தில் இருப்பாரோ என திரும்பியவள் அங்கே ஹிட்லர் பாட்டி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
ஹிட்லர் பாட்டி கடகடவென சிரித்தாள்;சிரித்துக்கொண்டிருக்கும்போதே பாட்டியின் உடம்பு மாறியது.சிண்டரெல்லாவும் இருபத்தோரு வயது அரிவையாய் மாறிப்போனாள். “உன் அப்பாவைத் தேடிக்கொண்டா இங்கு வந்தாய்?உன் அப்பா இறந்து நான்கு நாள்களாகிவிட்டன சிண்டரெல்லா,சாம்பலின் ஒரு பகுதியை இந்தத் தோட்டக்காட்டில்தான் தூவினார்கள், மறந்துவிட்டாயா? அங்கே பார்,” ஹிட்லர் பாட்டி சுட்டிக்காட்டிய இடத்தை நடுங்கும் இதயத்தோடு நோக்கினாள் சிண்டரெல்லா.மண்ணோடு கலந்திருந்த சாம்பலின் மத்தியில் முழுமையாய் வேகாத இருதயம்.அப்படியெனில் அது நிச்சயம் அப்பாவினுடைய சாம்பல்தான்.அவள்தான் பார்த்தாளே?இடுகாட்டில் சாம்பல் அள்ளியபோது இருதயம் சரியாக வேகவில்லை என்றுதானே பேசிக்கொண்டார்கள். “உன் அப்பா இனி உன்னைக் காக்க வரமாட்டார் முட்டாள் பெண்ணே,” ஹிட்லர் பாட்டியின் குரலில் மமதை நிறைந்திருந்தது.
“இல்லை!இல்லை!” கத்திக்கொண்டே ஓடினாள் சிண்டரெல்லா.தன்னைவிட்டு அப்பா வேறு எங்கும் போய்விடமாட்டார்.இந்த ரப்பர் தோட்டத்தைவிட்டும் அவரால் வேறு எங்கும் போய்விட முடியாது.அப்பாவின் பிரதிபிம்பம் இங்கேதான் எங்காவது இருக்கும்.அது எங்காவது தென்படுமா என ஓடினாள்.அப்பா வேலை செய்த ரப்பர் காட்டை நோக்கி ஓடினாள்.ரப்பர்காட்டை அடைந்தபோது அவளின் வயது கால் சதமாய் மாறியிருந்தது.அங்கே அப்பாவைப் போன்றே எந்த ரப்பர் மரங்களையும் காணவில்லை.ஏமாற்றத்தோடு மீண்டும் அந்தச் சிவப்புத் தலை கனவுந்து நின்றிருந்த இடத்திற்கு ஓடி வந்தாள். அந்தச் சிவப்புத் தலை கனவுந்து துருப்பிடித்துப் போய் பெரும்பகுதி மண்ணில் புதைந்திருந்தது.சற்று முன்னர் அவள் ஏறி அமர்ந்திருந்த பூ மரங்கள் முழங்காலுக்கு மேல் வெட்டப்பட்டு மடிந்து போயிருந்தன.அப்பாவின் சாம்பலும் காணாமல் போயிருந்தது. இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்ததில் சிண்டரெல்லாவுக்கு மேல்மூச்சு வாங்கியது.தன் கால்முட்டியில் கைவைத்து தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டிருந்த வேளையில், ”சிண்டரெல்லா,என் செல்லமே” என்ற குரல் வாஞ்சையுடன் கேட்டது.நிமிர்ந்தாள்.
எதிரில் சற்று தூரத்தில் அவளுடைய பிரியன் நின்றிருந்தான். “நான் இருக்கிறேன் உன்னை ஹிட்லர் பாட்டியிடமிருந்து காப்பாற்ற என் கண்ணே” என்று மிக மிக மென்மையாய் சொன்னான்.ஒரு கணம் பிரியனிடத்தில் அப்பாவைக் கண்டாள். சற்றே நிம்மதியோடு பிரியனை நோக்கி நடந்தாள்.அதற்குள் பிரியனுக்கு அறவே பிடிக்காத ரதிதேவி இருவருக்கும் குறுக்கே வந்து நின்றாள். “பிரியன் என் நண்பன்,உனக்கு அவன்மீது உரிமையில்லை” ரதிதேவி அதிகாரத் தோரணையில் அதட்டினாள்.சிண்டரெல்லா சற்றே குழம்பி நின்றாள். பிரியன் அவளை கைநீட்டி அழைத்தான்.”ரதிதேவியை நம்பாதே சிண்டரெல்லா,அவள் என் மீது மோகம் கொண்டு அலைகிறாள்,நீ வா,அவள் உன்னைக் காயப்படுத்த ஒருபோதும் நான் விடமாட்டேன்” பிரியனின் வார்த்தைகளில் நிம்மதியடைந்த சிண்டரெல்லா ஓடிப்போய் பிரியனின் கைகளில் தஞ்சம் அடைந்தாள்.அவனை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டாள்.
பிரியன் சிண்டரெல்லாவைத் துளியும் காமம் இன்றி அணைத்தான்.மறுகணம் சிண்டரெல்லாவின் முதுகில் சுருக்கென்ற வலி பரவிட, நிமிர்ந்து பிரியனைப் பார்த்தாள்.பிரியனின் கையில் கூர்மையான கத்தி இருந்தது. அதற்குள் ரதிதேவி தோழமையுடன் பிரியனை நெருங்கிவிட்டிருந்தாள்.சிண்டரெல்லாவைப் பார்த்து எகத்தாளமாய்ச் சிரித்தாள்.சிண்டரெல்லாவுக்கு அதிகம் வலித்தது.ரதிதேவியின் முன் தன்னை அவமானமாய் உணர்ந்தாள்.ரதிதேவி பிரியனின் தோள் மீது உரிமையாய்க் கையைப் போட்டாள்.அதை அனுமதித்தபடி அவளுடன் இணைந்து நடக்கலானான் பிரியன். சிண்டரெல்லாவுக்கு அதிகம் வலித்தது.குழந்தையைப் போன்று அவளை அன்பால் குளிப்பாட்டிய பிரியன் முதுகில் குத்திய காயத்தின் வலியைத் தாங்கி கொள்ள இயலாமல் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.வேறெங்கும் ஓடுவதற்கு அவளிடத்தில் தெம்பில்லாமல் போனது.
“சிண்டரெல்லா!ஏமாளிப் பெண்ணே!நீ அன்பினால் சபிக்கப்பட்டவள்,உன் அப்பாவும் இனி வரப்போவதில்லை,அந்தப் பிரியனும் இனி வரப்போவதில்லை,இனி உன்னை என்னிடமிருந்து யாரும் காப்பாற்ற முடியாது” கடகடவென சிரித்தாள் ஹிட்லர் பாட்டி. சிண்டரெல்லாவுக்குத் தன் நிலை புரிந்து போனது.ஹிட்லர் பாட்டி சொன்னதுபோல அவளை இனி ஹிட்லர் பாட்டியிடமிருந்து காப்பாற்ற யாருமே இல்லை.அவள் அன்பினால் சபிக்கப்பட்டவள்தான்.அப்பாவுக்கு மட்டும்தான் அவள் தேவதை,ஹிட்லர் பாட்டிக்கோ,பிரியனுக்கோ,ரதிதேவிக்கோ அல்ல. இதற்கு மேல் ஓட வழியிருந்தாலும் யாரைத் தேடி ஓடுவது?தோல்வியை ஒப்புக்கொண்டு ஹிட்லர் பாட்டியின் முதுகு சொறியும் குச்சியின் முன் அடங்கி போவதைத் தவிர வேறு வழியில்லை.முதுகில் குத்தப்பட்ட காயத்தோடு மனவலியும்,ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள,அவள் உடைந்துபோய் அழ ஆரம்பித்தாள்.அவளுடன் சேர்ந்து வேறு யாரோ ஒரு பெண்ணின் அழுகைச் சத்தமும் கேட்டது.இவள் அழுவதை நிறுத்தியபின்பும் அந்த இன்னொரு பெண்ணின் அழுகை நிற்கவில்லை.
நிமிடங்கள் கரைந்தன.ஹிட்லர் பாட்டியின் முதுகு சொறியும் குச்சி இன்னுமா தன் மீது படவில்லை?தன்னோடு சேர்ந்து அழுதவள் யார்?கேள்விகள் துளைக்க,தலையை நிமிர்த்திப் பார்த்தபோது மீண்டும் பழையபடி பாட்டியின் அறைக்குள் இருந்தாள். இப்போது அந்த அறைக்குள் சிண்டரெல்லா,ஹிட்லர் பாட்டி தவிர அவளின் உறவுக்கார பெண்ணொருத்தியும் இருந்தாள்.அவள்தான் அழுது கொண்டிருந்தாள்.சிண்டரெல்லா ஹிட்லர் பாட்டியைப் பார்த்தாள். அவளிடத்தில் மெல்லிய அசைவு தெரிந்தது. “ஒருக்களித்துப் படுத்து விடுவாளோ?” அதற்கு மேல் சிண்டரெல்லாவால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.ஒரே ஓட்டமாய் ஓடி,மாடிப்படிகளைத் தாவிக் கடந்து,தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.அந்த அறையின் சன்னல் கண்ணாடிகள் வெகு சுலபத்தில் கழற்றமுடியாதபடி இரும்புக் கம்பி சட்டகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தன.

ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *