உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 21 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன.

மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஷஷஇலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்|| என்கிறார்.

இந்தியாவின் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியை அ. சவ்தா உம்மாள் மனதை விட்டும் நகர மறுக்கின்றன இவரது கவிதைகள் என்ற தலைப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இவரது கவிதைகள் மென்மையும், அழகும் கைகுலுக்கி நின்று கவிதைக்கு அழகிய பரிமாணத்தைத் தருகின்றன. மனித காலடிச் சுவடுகளை, தான் அறிந்த வகையில் பதிவு செய்கிறான் கவிஞன். காதலைப் போல் சுகம் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? காதலைப் போல் வலியைத் தரக்கூடிய விஷயம் உலகில் உண்டா? இல்லை என்று ஓராயிரம் கவிஞர்களின் பதில் ஓங்கி ஒலிக்கிறது. ரபீக்கின் கவிதைகள் மரங்களிலிருந்து பூக்கள் உதிர்ந்து நம் மேல் விழும் சுகத்தையும், கடற்கரையில் கால் புதைந்து நிற்கும் சுகத்தையும், தென்றல் முகத்தில் வருடும் சுகத்தையும் தந்து நிற்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் மனிதனுக்கு ஏற்படுவது நியதி. ஆனால் காதலில் ஏற்படும் துன்பம்தான் மிகவும் வருந்தத்தக்க விடயம் எனும்படி காதல் புனிதமாக இருக்கிறது. விரக்தியும், ஏமாற்றமும் அழுகையும் இணைந்த உருக்கமான வரிகள் இவை. பக்கம் (10)

அழுகை எனக்கொன்றும் புதிதல்ல
சிறு வயது முதலே விதிக்கப்பட்டது..
நீ வந்து கொஞ்சம்
அதிகப்படுத்தியிருக்கிறாய்
அவ்வளவுதான்

காதலிப்பவர்கள் பலர். ஆனால் அதே காதலில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. காதலர்கள் விரும்பினாலும் காலம் சிலரை இணைய விடுவதில்லை. அதை தனது வரிகளினூடாக பக்கம் (15) இல் கவிஞர் கூறுகின்றார் இப்படி

காதல் ஓர் எளிமையான பாடம்தான்.
ஆனால் பலபேர்
அதில் தோற்றுப் போகிறார்கள்

பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ அல்லது காதலர்களுக்கிடையிலான மனக்கசப்பினாலோ காதல் மரணித்துவிடும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன. காதலில் துயருற்ற ஒரு காதலனின் புலம்பல் இது. பக்கம் (18)

காதலும் செருப்பும்
ஒன்று போலத்தான்.
சில சமயங்களில் இப்படித்தான்
இடைநடுவே அறுந்துவிடுகிறது.

தான் நேசிக்கம் பெண்ணின் காதல் தனக்கு கிடைக்காவிட்டால் என்ன? இதோ அவளுடனே நடந்து கொண்டிருக்கிறேனே என்ற அங்கலாய்ப்பில் ஒற்றைக் காதலின் தவிப்பாக பக்கம் (30)

உன் இதயத்தில் எனக்கு
இடம் இல்லையென்றால் என்ன
நீ நடக்கும் பாதையில்
நானும் நடக்கிறேனே அது போதாதா?

காதலியின் நினைவுகளில் இருந்து மையைத் தொட்டுக் கவிதை புனைகிறான் காதலன். அது தெரியாமல் பலர் மைகொண்ட போனாவை பரிசாக வழங்குகின்றனர். அதனால் வந்த இன்னொரு கவிதை இது பக்கம் (38)

நினைவுப் பரிசாக
ரசிகர்கள் பேனாக்களைத் தருகிறார்கள்.
அவர்களுக்குத் தெரியாது
உன் நினைவுகளில்
மை தொட்டுக் கொண்டுதான்
நான் கவிதைகளை எழுதுகிறேன் என்று.

காதலின் வலி, காதல் தந்த சந்தோஷம், காதலின் பிரிவு என்று பலதரப்பட்ட காதல் மழையில் நனைந்து பார்க்க நீங்களும் இந்த நூலைப் படித்துப் பாருங்கள். கவிஞர் எஸ். ரபீக்கிற்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – உனக்கான பாடல் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் – எஸ். ரபீக்
வெளியீடு – சரா பதிப்பகம்
விலை – 200/=

Series Navigationம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *