சே.ரா.கோபாலனின் “ மை “

This entry is part 2 of 28 in the series 29 ஏப்ரல் 2012

கத்தரி வெயிலின் கொடுமையைக் கொஞ்சம் நீக்கும், கடல் காற்றை அனுபவித் திருக்கிறீர்களா? அப்படி ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது “ மை” படம். ஒரு பொட்டலம் சோறு கிடைக்குமா என்று ஏங்கும் ராப்பிச்சையை, உள்ளே அழைத்து விருந்து படைக்கப்பட்டால், எப்படி உணருவான்? அப்படி உணர்ந்திருப்பான், படம் பார்த்த பதினைந்து ரசிகர்களில் ஒவ்வொருவனும்!

சுனாமி சுப்பு என்கிற சுப்பிரமணி, பானுமதி, இருவரும் பால்ய வயது நண்பர்கள். பானு படித்து, சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறாள். சமூகம் சார்ந்த விசயங்கள் மட்டுமே அவளது சேனலில் நிகழ்ச்சிகள். சுனாமி சுப்பு, தந்தை, தாய் ஆகியோரை, பதினைந்து வயதுக்குள்ளேயே இழந்து, ஆளுங்கட்சியின் அடிப்பொடி யாக மாறி, பிரதம பேச்சாளர் வரும்வரை கூட்டத்தை இருத்தி வைக்கும் உதிரி பேச் சாளனாக உருவெடுக்கிறான். வழி தவறிப் போன பால்ய தோழனைத் திருத்தி, மேயராக்கும் பானு எனச் சாதாரணக் கதை. அசாதாரணம் படம் எடுத்த விதத்தில்.

ஆரம்பக்காட்சியிலேயே ஆரம்பமாகிவிடுகிறது ஆர்ப்பாட்டம். சுனாமி சுப்புவுக்கு செம பில்டப்! “ அவர் பேசினா எரிமலை வெடிக்கும்” கூட்டத்தில் ஆண்கள் எல்லாம் உள் ளாடைகளோட இருக்கிறார்கள். புதியவர் கேட்கிறார்: “ ஏங்க?” “ எரிமலை வெடிச்சா வேட்டி பத்திக்கும்ல.. அதான்” நம்பாமல் வேட்டியுடன் உட்காரும் புதியவரின் வேட்டியை வந்தவர்களே பத்த வைத்து விடுகிறார்கள். கடைசியில் பிரியாணி பொட்டலத்துக்கு வந்த கூட்டம் என்று முடியும்போது செம சிரிப்பு!
பொதுக்கூட்டம் இல்லாதபோது செலவுக்கு சில்லறைத் திருட்டுகள் செய்யும் சுப்பு திருடுபவை: கிரில் கேட், மோட்டார், நாய்க்குட்டி, பால் பாக்கெட்.. அதைச் சந்தையில் விற்கும்போது, திருட்டுக் கொடுத்தவரே சுப்புவிடம் கெஞ்சி 4000 ரூபாய்க்கு வாங்கிப் போவது இன்னொரு சூப்பர் சீன். { “ உலகத்திலேயே சொந்த கேட்டை விலை கொடுத்து வாங்கியவன் நானாத்தான் இருக்கும்!” }
இன்னொரு அப்ளாஸ் காட்சி. கவுன்சிலர் தேர்தலுக்கு குடிசைக் குடிமகனுக்கு பணம் கொடுக்கும் காட்சி. மனைவி: ராத்திரி 12 மணியாச்சுங்க.. தூங்க வாங்க! கணவன்: இருடி.. இப்ப வந்துருவாங்க. முக்காடு போட்டு வரும் ஒரு கட்சி ஆட்கள்: எத்தனை பேர்? மூணு. நானு, என் சம்சாரம், எங்கம்மா. ஓட்டு போடும்வரை தாங்குமா? தாங்கும்.. தாங்கும்.. (அம்மா படுக்கையிலிருந்து) இப்படியே இரண்டு மூன்று கட்சிகளின் ஆட்கள் பணம் தர, தேர்தல் அன்று காருடன் வரும் கட்சி ஆட்களைப் பாடாய்ப்படுத்துகிறார் குடிமகன். “ ஒக்காருங்க.. சாப்ட்டு வர்றேன். வெயிட் பண்ணுங்க வெத்தல போட்டுட்டு வர்றேன்..” வெற்றிலை போட்டு, படுத்துத் தூங்கி, ஏசி காரில் போவதற்குள் அவர் ஓட்டை யாரோ போட்டுவிடுகிறார்கள்.
சுனாமி சுப்புவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு கூட்டம் திரள்கிறது. காரணம்? ‘என்னை வெற்றி பெற வைத்தால் 5 வருடங்களுக்கு உங்கள் கிரில் கேட், மோட்டார், நாய்க்குட்டி பத்திரமாக இருக்கும்’ என்கிற பிட் நோட்டீஸ் வாக்குறுதி!
இதற்கு நேரெதிர் பானுமதி பாத்திரம். சமூக அக்கறையுள்ள, மனநிலை பாதிக்கப்பட்ட, தெருநாய்களால் கடிக்கப்பட்ட ஒருவரை மீட்டு, வைத்தியம் பார்த்து, 15 நாள் சுப்புவிடம் ஒப்படைக்கும் சூப்பர் பெண் பாத்திரம். சுப்புவைக் கல்யாணம் செய்த முதல் இரவில், பாலுக்குப் பதில் கர்ம வீரர் காமராஜைப் பற்றிய புத்தகம், வெள்ளைப் பலகையில் spoken English பற்றிய பாடம் என்று அமர்க்களமாக கணவனைக் கரையேற்றும் புதுமைப்பெண்.
நாயகன் விஷ்ணுப்பிரியன் சில படங்களில் தலைகாட்டியவர் போல பரிச்சய முகமாகத் தெரிகிறார். இயல்பான நடிப்பு. ‘பசங்க’ விமல் தம்பி போல் இருப்பதும், அவரை விட தெளிவான குரலில் பேசுவதும் கூடுதல் ப்ளஸ். பானுமதியும் புதுமுகம். ஆனால் அசத்துகிறார்.
கோபாலனின் திரைக்கதையில் அனாவசியச் சுற்றல்கள் இல்லை. பெரிய கேமராக் கோணங்கள் இல்லாத இயக்கம். வழக்கு மொழியில், நகைச்சுவையுடன் கூடிய எளிய வசனங்கள். வரவேற்பு நிச்சயம் இருக்கும் இவருக்கு.
இசை கண்ணன். சாதாரணக் குத்துப் பாட்டுகூட இவருக்கு இனிமையாகப் போடத்தெரிகிறது. அடுத்த ஹாரீஸ் இவராகலாம். வாழ்த்துக்கள்.
வில்லன் ஜெயப்பிரகாஷ், எதிர்ப்பவர்களைத் தன் செங்கல் சூளையில் வைத்து எரிப்பவர். சுப்புவை, தோழனை வைத்தே கவிழ்ப்பதும், சரியான நேரத்தில் தோழன் சுப்புவுடன் கைகோர்ப்பதும், இருவரும் சேர்ந்து வில்லனைப் போட்டுத்தள்ளி, அவன் சூளையிலேயே அவனை எரிப்பதும் சூப்பர் ஸ்டார் மெட்டீரியல். மனநிலை குன்றிய வராக வரும் ( வஸந்த் விஜய்?) நடிகர் அப்படியே வாழ்ந்திருக்கிறார். சபாஷ்! இன்னும் பானுவின் அப்பா, சுப்புவின் நண்பர்கள் என யாரும் சோடை போகவில்லை.
மைக் மோகனுக்கு புவர் மேன்ஸ் கமல் என்றொரு பெயர். விஷ்ணு புவர் மேன்ஸ் விமல். நிச்சயம் மேலே வருவார்.
#

கொசுறு

விருகம்பாக்கம் அன்னை கருமாரியில், பார்லே சேல்ஸ் ப்ரோமோஷன் வேனில், தமிழ்நாடு முழுவதும் சுற்றும் ஓட்டுனர் வேலு என்னருகில் இருந்தார். படம் முழுக்க    “ என்ன சார் இவ்வளவு நல்லா இருக்கு.. கூட்டமே இல்ல!.. பையன் சூப்பரா நடிக்கிறான் சார்.. பொண்ணும் நல்லா நடிக்குது.. எப்படியிருக்குமோன்னு வந்தேன். நல்லாருக்கு சார் “ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

6.30 க்கு தியேட்டரில் என்னோடு சேர்த்து இரண்டு பேர். “ பத்து பேர்கூட வரலைன்னா படம் போடமாட்டாங்க.. 10 ரூபா மேலே கொடுத்து டிக்கெட்டைத் திருப்பி வாங்கிடுவாங்க “ என்று ஜோக்கடித்தேன். நல்லவேளை படம் ஆரம்பிப்பதற்குள் 15 பேர் சேர்ந்து விட்டார்கள்.

#

Series Navigationரங்கராட்டினம்தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *