வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

 

யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது.

சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் இல்லாமல் போய் விடுகிறது. சிறுபத்திரிக்கைப்பணியில் ஆரம்பித்தது பெரும் பத்திரிக்கைப் பணியாகி விட்டது. கவிதையைக் கைவிடுவது சற்றே சிரமமானது. அடைமொழியை சுலபமாக கை விட்டு விடமுடியாது. அதனால் கவிதை  உடனான உறவை தவிர்க்க இயலாமல் வைத்துக் கொண்டே இருக்கிறார். அது இத்தொகுப்பில் தொடர்கிறது.கிணற்று பாறையிடுக்கில் கசியும் நீராய் இருந்து கொண்டே இருக்கிறது.

 

காலை நடைபாதை பயணம் பலருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறது. புன்னகையை உதிர்க்க வைக்கிறது.  பலமுகங்களை அறிமுகப்படுத்துகிறது.   பழைய முகங்களுடன் பரிச்சயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கச் செய்கிறது.  அதையே கவிதையிலும் செய்யச் செய்கிறது.

நகரம் பற்றி அதிகம் பிரஸ்தாபித்துக் கொண்டே இருக்கிறவர் அமிர்தம் சூரியா.            நகரப் பட்சிகளின் காலையை விவரிப்பவர் ( 140 )புலியாய் நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் பயம் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.(5 ) மனிதன் யார் என்று சகமனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் . கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்க இயலவில்லை என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் ( 42 ) நகரங்களை விட்டு ஓடிப் போகிற பாதத் தடங்களைப் பற்றியும் பேசுகிறார். பூட்டிய கிராம வீட்டின் கொல்லைப்புற டிரங் பெட்டியைத் தேடும் ஆசையும் இருக்கிறது.நகரம் அவரை பயமுறுத்துவதை அவரின் சிறுகதைகளிலும் காணலாம். இந்தக்  கண்டடைதலுக்குக் காரணமாக வாழ்வைத் துழாவுதல் இக்கவிதைகளில் இருக்கிறது. சுருக்குப் பையில் – கடைசி ஒற்றைக் கொட்டைப் – பாக்கைத் தேடும்- பாட்டியின் விரல்களைப் போல்(28) . தருக்கத்தை மீறி சொல்லவும் இவருக்கு நிறையவே இருக்கிறது.மாயையின் பல அடவுகள் இவருக்கு விசித்திரம் காட்டுவதைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

 

கவிதை பற்றிய இவரின் முன் மொழிதல்களைக்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  மானுட மன இருளறையில் தேங்கிக் கிடக்கிறது குளமாய் / இறைத்தேன் வீதியில் பிசுபிசுத்த்து விரலில் வரியின் காயம் ./புன்னகையினுடே தெறித்தது பரண் இடிக்கும் சூட்சுமத்தின் பிம்பமும் அதனூடாக கூட்டமும் கூவலும் மாய தரிசனமாய்/ நமக்குத் தெரியாமல் நமக்குள் பசித்த காகமும் வெடித்த மதிலும்- விதைக்குப் பதிலாய்- முளைக்கத் தெரிந்த முற்றிய  வார்த்தைகள் / இயக்கும்-இயங்கும் வாழ்வை- மனதின் கதியில் காற்று- காற்றுமாதேவி தரிசனம் தொடர்கிறது யாதுமாகி.

 

    மரணம்  மாயையா. இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையில் தள்ளாடுகிறது இந்த மாயைத்தனம். மாயை குறித்து பேசும்  நிர்பந்தம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை ஒப்புக்கொண்டு  வாழ்வை நிஜமாகவேக் கொண்டு நகர்ந்து  விடுவதை இக்கவிதைகள்  கோடிடுகின்றன.

 பூனை குறித்துச் சொல்லப்படுகிறதில் பூனைதான் என்று சொல்லப்படுவதில்லை. மனிதர்களின் தேவைகளைக் குறியீடாக்கிக் கொண்டே போவது போல் பல குறீடுகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறியீடுகள் மூலமான சுய விசாரணை இக்கவிதைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேவதேவனுக்கு அருகாமையில் இவர் இருப்பதாய் ஜெய மோகன் சொல்கிறார்.  ஆனால் இயல்பு ஒழுங்காய் இக்கவிதைகள் செல்லாமல் தடைபடுவது அதற்கு எதிராக இருக்கிறது. வடமொழிச் சொற்களின் மீதான காமமும், தலைப்பிடப்படுவதில் இருக்கும் வலிந்த தன்மையும் தேவதேவனிடம் இருக்காது. உரையாடல்களுக்கான நிறைய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இக்கவிதைகளில் பல  உரையாடல் தளத்திலேயே  கட்டமைக்கப்பட்டிருப்பது வாசகனுடனான உரையாடலை எளிமைப்படுத்தியிருக்கிறது.

  ( ரூ 100 , அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )

 

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *