முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் தி.ஜா என்ற தி.ஜானகிராமன் ஆவார். பாலுணர்வால் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடியவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்ற பட்டவர்த்தனமான உண்மையைத் தமது படைப்புகளில் உளவியல் அடிப்படையில் அணுகி அதனை உளவியல் நிபுணரைப் போன்று சற்றும் வரம்பினை மீறாது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இலக்கியமாக வார்த்தெடுத்தவர் தி.ஜானகிராமன். பிறர் கூறத் தயங்கிய நிகழ்வுகளை எல்லாம் தடம் மாறாது விரசமின்றி புதினங்களாகவும், சிறுகதைகளாகவும் படைத்த பெருமை தி.ஜானகிராமன் அவர்களையே சாரும்.
இத்தகைய சிறப்பிற்குரிய தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவக்குடி என்னும் சிற்றூரில் தியாகராஜ சாஸ்திரிகளின் மகனாக 1921-ஆம் ஆண்டு ஜூன்18-ஆம் தேதி பிறந்தார். அவருடைய தந்தையார் மிகச்சிறந்த சொற்பொழிவாளராவார். தி.ஜானகிராமனின் குடும்பம், பழமைப்பிடிப்புள்ள பொருளாதார வசதிகொண்ட குடும்பமாகும்.
தி.ஜா. பிறந்த ஆறாவது மாதத்திலேயே அவருடைய குடும்பம் கும்பகோணத்துக்குக்குடிபெயர்ந்தது. இரண்டாண்டுகள் மட்டும் அங்கிருந்துவிட்டு பின்னர் தி.ஜா.வின் வாழ்வுதஞ்சைக்கு மாற்றலானது. தஞ்சாவூர் புனிதபீட்டர் தொடக்கப் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரி பள்ளியிலும் தொடக்கக்கல்வி கற்ற அவர்,உயர்நிலைக் கல்வியை கல்யாணசுந்தரம்உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.
பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பும் (இன்டர் மீடியட்), பி.ஏ.வும் படித்த அவர், எல்.டி. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தி.ஜா.வுக்கு, கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. தமிழ்,ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் தி.ஜா. கும்பகோணம் ஆங்கிலப் பேராசிரியர் சீதாராமையர் மூலம் ஆங்கில இலக்கியங்களை அறிந்தவர், கல்லூரிப் படிப்பை முடித்து, பணிக்குச் செல்லாமல் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.
கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருக்குச் சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கி இருந்தது. கும்பகோணத்தில் பெசண்ட் தெருவில் 1936-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற நேரு பேசிய கூட்டத்தில் கலந்துகொள்ள கல்லூரியில் இசைவுபெறாத விடுப்பு எடுத்தமைக்கு தி.ஜா. எட்டணா அபராதம் கட்டினார். அந்த அபராதத்தை எதிர்த்து கல்லூரியில் வேலை நிறுத்தமும் நடந்தது. இவருடைய செம்பருத்தி, மோகமுள் ஆகிய நாவல்களில் சுதந்திர தாகம், அந்நியத்துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைக்காணமுடியும்.
தந்தையோடு புராண இசைச் சொற்பொழிவுக்குச் சென்றதோடு அவருக்குப் பின்பாட்டுப் பாடியதால் தி.ஜானகிராமன் தமது இளம் பருவத்திலேயே இசையறிவு வாய்க்கப் பெற்றிருந்தார்.உமையாள்புரம் சாமிநாதையர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயர் ஆகியோரைஇசைத்துறை ஆசிரியர்களாகக் கொண்டிருந்தார்.
1943-44- ஆண்டில் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றினார். பின்னர் சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்தார். அதன்பிறகு, 1945-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தகுத்தாலம் மற்றும் அய்யம்பேட்டை பள்ளிகளிலும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், 1954 –ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிய தி.ஜானகிராமன் தில்லி வானொலி நிலையத்தில்1968-ஆம் ஆண்டு முதல் 1974-ஆம் ஆண்டு வரைஉதவித் தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று, 1974-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டுவரை தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ்,மலேசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். சமையற்கலையிலும்வல்லுநராகத் திகழ்ந்த தி.ஜா., இசை, நாட்டியம்,சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார். ஓய்வு பெற்று சென்னையில் வசித்தபோது “கணையாழி” இதழின்பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
தி.ஜானகிராமன் எழுதிய 85 சிறுகதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோகமுள்,அமிர்தம், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம்,மலர்மஞ்சம், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே,செம்பருத்தி ஆகிய நாவல்களும்; பிடிகருணை,மனிதாபிமானம், யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி,அடி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், எருமைப் பொங்கல், கமலம், கொட்டுமேளம், சிவஞானம் முதலிய சிறுகதைகளும்; நாலுவேலி நிலம்,வடிவேல் வாத்தியார் ஆகிய நாடகங்களும்; உதய சூரியன், (ஜப்பான் பயண நூல்), அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை), கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை), நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாகப் பயணம்) ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம் மற்றும் இசைக்கலை பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தி.ஜா. சிறந்த இசை விமர்சகரும்கூட.
தி.ஜா., மொழிபெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். அறிவியல்துறை சார்ந்து, என்.டச் எழுதிய “அணு எங்கள் ஊழியன்; ஜார்ஜ் காமோ எழுதிய “பூமி என்னும் கிரகம்’ ஆகிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும், நோபல் பரிசுபெற்ற கிரேசியா டெலடாவின் அன்னை,டெல்மேஜரின் “கிரிஸ்கா’ ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். இவை தவிர, வில்லியம் ஃபாக்னரின் “12′ எனும் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுதியும், பார் லாகர்க்விஸ்ட் எழுதிய “ட்வார்ப்’எனும் நாவலும் தி.ஜா.வால் “குள்ளன்’ எனஎழுதப்பட்டு அச்சேறாமல் இருக்கின்றன.
தி.ஜா.வின் “அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் மரப்பசு,மோகமுள், அம்மா வந்தாள் ஆகியவை மலையாளமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோகமுள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. “சக்திவைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தி.ஜா. என்றாலே அவருடைய நாவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டதால் அவரைச் சிறந்தநாவலாசிரியராகக் கருதுவதே வழக்கமாகிவிட்டது. ஆனால், தி.ஜா.வின் எழுத்தழகும் ஆழ்மனமும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான் என்று துணிந்து கூறலாம்.
தி.ஜானகிராமன் தனது பாத்திரப் படைப்புகளுக்கு உளவியல் காரணங்களை எடுத்துக்கூறி, தாம் உலவ விட்ட விதவிதமான மனிதர்களின்பால் படிப்பவரின் பரிவைப் பொழியும்படிச் செய்த மிகச்சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார் என்பது நோக்கத்தக்கது. தி.ஜா. அவர்கள் எல்லோரையும் தம் எழுத்திலும், வாழ்க்கையிலும்நேசித்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.’தினமணிக்கதிர்’ பத்திரிகையில் “கேரக்டர்கள்” என்று தி.ஜா. தாம் சந்தித்த மனிதர்களை அழகுபடச் சித்தரித்து எழுதிய கட்டுரைகள் மிகப் புகழ் பெற்றவையாகும். இவருக்குப் பின்னால் எழுத வந்து, புகழடைந்த பெயர் சொல்லக் கூடிய சில எழுத்தாள்ர்கள், அப்பொழுது தி.ஜா.வைத் தங்கள் முன்னோடி என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைந்தனர்.
தி.ஜா.வின் எல்லா கதைகளிலுமே மனிதநேயம் அடி இழையாக ஓடுவதைக் காணலாம்.பெரும்பாலான நாவல்கள் தஞ்சை மாவட்ட வட்டார வழக்கை அடிப்படையாக வைத்து எழுந்தவை ஆகும். தி.ஜானகிராமன் தமது கதைகளில் நகரங்களில் நடைபெறும் சம்பவங்களையும் கிராமத்தோடு இணைத்துக் காட்டுவதைக் காணமுடியும். அத்துடன்அவருடைய பாத்திரப்படைப்புகள் அனைத்தும் அவர் நேரில் கண்டவர்களே ஆவர். தி.ஜா.வின் எழுத்தைப் படித்து ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்கள்தாம் அதிகம். பாலியல் உணர்வுகளை குறிப்பாகப் பெண்களை ஒளிவு மறைவு இல்லாமல் அவர் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. “அம்மா வந்தாள்’ எனும் நாவல் எழுதியதற்காக அவர், அவரது ஜாதியிலிருந்தேநீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்கெல்லாம் அவர் கவலைப்படாது, அவற்றிற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், என் கடன் எழுத்துப்பணியே என்றிருந்தார்.
பணி ஓய்விற்குப் பின் சென்னையில் எழுத்துப்பணியைப் புனிதமாகவும் கடமையாகவும் கருதி வாழ்ந்த மனிதநேயமிக்க தி.ஜானகிராமனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம், பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது முழு உண்மையே” என்ற க.நா.சுப்பிரமணியம் கூற்றிற்கேற்ப தி.ஜானகிராமனின் நினைவுகளும் அவர்தம் இலக்கியப் பணியும் தமிழறிஞர்களின் இதயங்களில் என்றும் நிறைந்திருக்கும்.
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்