வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்

This entry is part 17 of 46 in the series 5 ஜூன் 2011

ப.இரமேஷ்

தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழில் காவியங்கள் தோன்றுவது என்பது மிகவும் அருகிப்போன நிலையிலேயே உள்ளது.  அதுவும் மரபுக்கவிதையில் காவியம் படைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.

 

மரபுக்கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் பெருமளவு குறைந்துள்ளது.  அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் தமிழ்மொழியில் ஆழ்ந்த அறிவும் யாப்பிலக்கணப் புலமையும் மரபுக்கவிதை எழுதுவதற்கு இன்றியமையாதனவாக விளங்குகின்றன.  யாப்பிலக்கணப் புலமைப்பெற்ற தமிழ் அறிஞர்கள் கூட இன்றைக்கு மரபுக்கவிதை புனைவதில் ஈடுபாடு காட்டுவதில்லை.  ஏனென்றால், கவிதை என்பது புதுக்கவிதையாகவும் ஹைக்கூ ஆகவும் வளர்ச்சிப் பெற்ற நிலையில், இவற்றின் தாக்கத்தால் மக்களிடம் மரபுக் கவிதையின் செல்வாக்குச் சற்றுச் சரிந்த நிலையிலேயே உள்ளது.  இதிலிருந்து வேறுபட்டவராக வாய்மை நாதன் அவர்கள் தனக்கே உரிய பாங்கில் மரபுக் கவிதையில் “கப்பலுக்கொரு காவியம்” படைத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.  ஏற்கனவே அவர் எழுதிய நேதாஜி காவியம் மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் பேசப்பட்ட ஒரு காவியமாக விளங்குகிறது.

 

இலக்கிய இன்பத்தை எந்த ஒரு காவியம் அளிக்கின்றதோ அது வெகு மக்களிடம் எளிதில் சென்றடையும் அந்த வகையில் வாய்மை நாதனின் கப்பலுக்கொரு காவியம் திகழ்கிறது.  இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தபோது இந்திய நாடு விடுதலை பெற தன்னலம் துறந்து நாட்டிற்குத் தன்னை அர்பணித்த வீரர்களுள் வ.உ.சி அவர்களும் ஒருவர்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆணி வேரான வெள்ளை வணிகருடைய “பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றினைத் தோற்றுவித்துக் கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்புப் பெயர்பெற்ற வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதுதான் காப்பியத்தின் நோக்கமாகக் இருந்தாலும், அதன் ஊடாக இன்றைய சமூகத்தைப்பற்றியும் சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் தலைமுறை தலைமுறையாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் சார்ந்த செய்திகளையும், அன்றாட வாழ்வியலையும் பதிவு செய்திருப்பது மிகவும் சிறப்பானதொரு காவியமாக விளங்குவதற்கு அடிப்படையாக அமைகிறது.

 

தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகிற நூலாகச் சிலப்பதிகாரம் விளங்குவதைப் போல இக்காவியமும், நெல்லைப்பகுதி மக்களின் பண்பாட்டுக், கூறுகளை, இலக்கியச் சுவையோடு வெளிப்படுத்தும் பாங்கைக் காணமுடிகிறது.

 

குறிஞ்சி முதல் ஐந்நிலமும் குலவும் பூமி

குவியலாய்ப் பருத்தி விளைகின்ற பூமி” (க.கா. பக்.13)

…………………

என்ற வரிகளில் நெல்லை பூமியின் சிறப்பையும் அங்குள்ள மக்கள் தன்னலமற்று உழைக்கக்கூடிய பாட்டாளி வர்க்கமாக விளங்குவதையும் குறிப்பிடுகிறார்.  மேலும் அங்கே நடைபெறக்கூடியத் தொழில்களான பதநீர் இறக்குதல், வெல்லம் காய்ச்சுதல், முத்துக் குளித்தல், உப்பளத்தொழில், மீன் பிடித்தல், பீடி சுற்றுதல் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீக்குச்சி அடுக்குதல் தறிகளில் துணி நெய்தல், பாய் முடைதல் முதலானவற்றை

 

தேரி மணற் குன்றுகளே நிலவியற்கைச்

சீதனங்கள்! பனையேறி பதநீர் தந்தால்” (க.கா. ப.14)

…………………

கடலுக்குள் உடலழுத்திக் குளிப்பார் முத்து

கரையேறும் நீரழுத்தி எடுப்பார் உப்பு!” (க.கா. ப.15)

…………………

என்ற பாடலடிகள் மூலம் தனக்கே உரிய இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்தியிருப்பது படிப்போரை இன்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துள்ளன. சமுதாயப் பழக்கவழக்கங்களையும் காலம் காலமாய் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கைச் சார்ந்த செய்திகளை வாய்மைநாதன் கீழ்கண்டவாறு பதிவு செய்திருப்பது மிகவும் சிறப்பாக விளங்குகிறது.

 

பெத்தாச்சி முனியசாமிக்கு மாடன்

பீடத்து ஐயனார் மாகாளிக்கு

ஒத்துழைப்பாய்ப் பொங்கலிட்டு ஆடு கோழி

உயிர்ப்பலியும் கொடுப்பார்கள்” (க.கா. ப.18)

என்று நமது சம்பிரதாய சடங்குகளை குறிப்பிடுகிறார்.

கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,

 

அம்மை கண்டால் அயலார்கள் வாரார்; வேம்பின்

அருங்கொத்தைக் கூரையிலே செருகி வைப்பார்;

தம்மிலிருக்கன்குடியாள் மாரியாத்தாள்,

தனி விளையாட்டாடுவதாய் அச்சம் கொள்வார்

சும்மாவா? அவளுக்கு மொட்டை போட்டுச்

சுடுந்தீச்சட்டியை எடுப்போம் ; பொங்கல் வைப்போம்

வெம்மைதணி என வேண்டுவார்கள்! காளி

விளையாட்டு வாந்தி பேதியே என்பார்கள்” (க.கா. ப.19)

என்று கூறுகிறார் பெண்ணுக்குப் பேய்பிடித்தல் என்ற மூடநம்பிக்கையை குறிப்பிடும்பொழுது

 

ஆளான பெண்ணுக்கு ஆட்டம் வந்தால்

அது பேயின் ஆட்டமெனக் கோடங்கிக்குத்

தூளாக மணல் பறக்கும் அழைப்பு அந்நாளில்

துட்டு வரும் அவனுக்கு!” (க.கா. ப.19)

என்று குறிப்பிடுகிறார் பெண்களிடத்தில் செவ்வாய்ப்பிள்ளையார் சாமி கும்பிடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது, அதை

ஆடியிலும் தையிலுமே செவ்வாய் நாளில்

ஆண்கள் கண் படாமற்பெண் நோன்பு காப்பாள்!

கூடிடுவார் ஔவையார் சாமியுள்ள

கூரையின் கீழ் இரவு முற்றும் மோதகத்தைத்

தேடியிட்ட தேங்காய் வாழைப்பழத்தைச்

சேர்த்து வைத்துக் கும்பிடுவார்! அப்பண்டங்கள்

கோடியிலும் ஒரு துகளை ஆண் உண்ணற்குக்

கொடார்! கொடுத்தால் ஆடவன் கண்குருடாய்ப் போமாம்! (க.கா. ப.20)

 

என்று குறிப்பிடுகிறார் இதன் மூலம் அவர் சமுதாயத்தில் இருக்கின்ற சடங்குகள், மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை போன்றவற்றை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

ஏழை மக்களின் நிலைப்பற்றியும் அவர்களுக்குள்ளே நிறைந்திருக்கிற பண்பாடு பற்றியும்,

 

கலயத்தில் கஞ்சி செல்லும் வயல்வேலைக்கு!

கருக்கலிலே உழப்போனால் விளக்கு வைத்துத்

தலையதனில் துணி சுற்றி வீடு மீள்வார்

தம் இடையில் கோவணந்தான் இருக்க ஆற்றல்

நிலையங்கள்! (க.கா. ப.19)

 

என்று ஏழை விவசாயிகளுக்கு மிஞ்சுவதெல்லாம் கடைசியில் கோவணந்தான் என்று சமுதாயத்தில் ஏழைகளின் நிலைமையை விளக்கியுள்ளார்.

 

மூத்தோருக்குக் கிளையோர் காட்டும்

நெடும்பணிவு! உறவு முறைக் கோடுபோட்ட

நிலை அவர்கள் முன்னிருகண் இமையைப்போல

நிலம் விளையும் பண்பாடு உழவு போல” (க.கா. ப.19)

என்று பண்பாட்டினை உழவுத் தொழிலுக்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.

பெண் உரிமை, பெண் கல்வி, பெண் விடுதலை, குழந்தைத் திருமணங்கள் பற்றி

 

பெண்ணுரிமை சமமாக வேண்டும்; கல்வி

பெண்களுக்குக் கண்ணாக வேண்டும், தங்கள்

மண்ணாள உரிமைகளைப் பெறுவதற்கு

மங்கையர்கள் போராடவேண்டும்; கொண்டான்

உண்ணுகிற இலைமிச்சம் உண்ணச் செய்யும்

ஒரு வழக்கைப் புறங்காலால் எற்ற வேண்டும்

பண்ணுகிற உயிர்ப்பலிகள் தெய்வத்தின் முன் பாவமது தவிர்த்திடுக” (க.கா. ப.210)

 

என்று வ.உ.சி குறிப்பிடுவதாக கூறுகிறார்.

 

ஐந்தாறு வயதுள்ள பெண் ஆணுக்குள்

அறிவற்றார் திருணமங்கள் செய்வார், இந்தச்

சந்தைக்குள் விதவைகளாய் மழலை கூடத்

தண்டிக்கப்படுகிறதிவ் வழக்கம் கொல்வீர்” (க.கா. ப210)

 

என்ற வரிகள் குழந்தைத் திருமணம், இளம் விதவைப் பற்றியும் குறிப்பிட்டு இவை சமுதாயத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று அன்றைய நிலை குறித்து வ.உ.சி எடுத்துரைத்த பாங்கைக் குறிப்பிடுகிறார்.  உயர்ந்த சாதியினர் மட்டுமே கோயிலுக்குள் சென்று சாமியை வணங்க முடியும் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்கு வெளியில் இருந்து சாமியைக் கும்பிடும் நிலை அந்தக் காலத்தில் இருந்தது.  அந்த நிலையை மாற்ற கோவில் அனைவருக்கும் சொந்தமானது என்பதை

 

கோவில் சொந்தமே அனைவருக்கும் வழிபாட்டிற்கு”

என்று வ.உ.சி குறிப்பிடுவதாக வாய்மைநாதன் குறிப்பிடுகிறார்.  இதன் மூலம் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று சாதி பாகுபாடு ஒழிய வேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காவியங்களில் இல்லறத்திற்குரிய முக்கியத்துவம் அளித்திருப்தைக் காண்கிறோம் அதேபோல் கப்பலுக்கொரு காவியத்தில் வ.உ.சியின் திருமணம் பற்றிய செய்திகளை விளக்குமிடத்து இல்லறம் பற்றி ஒரு தனி பாகத்தை ஏற்படுத்தி சிறப்பித்துள்ளார்.

அத்தகைய திருமணத்தைநடத்தி வைக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் பெற்றோர்களுக்குத்தான் உண்டு.  வ.உ.சிதம்பரனாருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவர் தந்தை பெண் தேடி அலைந்ததை,

 

மிஞ்சியணி ஒரு பெண்ணைத் தேடுதற்கு

மிதியடிகள் புதிதாக இழைத்தலைந்து

நெஞ்சுவைத்த கனவுகட்கு வடிவம் கூட்ட

நெடியசிந்தனையோடு நடந்தார் தந்தை” (க.கா. ப.34)

இன்றைக்குப் பெண் பார்க்கும் படலம் என்பது அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஒரு சவாலாகத்தான் உள்ளது ஏனென்றால், எதிர்பார்க்கும் தகுதியுள்ள பெண்ணைத் தேடித்தேடியே பல ஆயிரங்களையும் நேரத்தையும் செலவழிக்கும் நிலைப்பாடு உள்ளது.  இதே போக்கு அன்று வ.உ.சியின் திருமணத்திற்காக அவரது தந்தை பெண் தேடித் தேடி அலைந்து தன் காலில் உள்ள செருப்பு தேய்ந்து போனதாக மேற்கண்ட பாடல் வரியில் குறிப்பிடுகிறார். . மேலும் திருச்செந்தூரில் இருக்கும் வள்ளியம்மையை வ.உ.சிக்குத் திருமணம் செய்து வைக்க பெண்பார்த்து, நிச்சயம் செய்த நிகழ்வையும் தொடர்ச்சியாக வருகின்ற பாடலில் வெளிப்படுத்துகிறார்.

 

புதுவானில் முழுநிலவு எழுந்தாற் போலும்

பொய்கையில் செந்தாமரையே மலர்ந்தாற்போலும்” (க.கா. ப.35)

………………………………

என்ற அடிகளில் பெண்ணுக்கே உரிய இலக்கணத்தோடு வள்ளியம்மை காட்சியளித்தார் என்பதை இலக்கிய நயத்துடன் வெளிப்படுத்தியிருப்பது நமக்கு சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே” என்று கண்ணகியின் அழகையும், சிறப்பையும் கூறுவதை ஒத்துள்ளமையை அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணத்திற்காகப் பூம்புகார் நகரே விழாக்கோலம் பூண்டதாகக் இளங்கோவடிகள் கூறுகிறார் இங்கே வாய்மை நாதன் அவர்கள்,

பந்தலுக் கால்நட்டார் தெருவடைத்துப்

பார்பபவர் கண் பூக்குமாறு அழகு செய்தார்

சொந்தங்கள் அனைத்திற்கம் பாக்கு வைத்தார்…..” (க.கா. ப.36)

என்ற வரிகளில் வ.உ.சி திருமணத்திற்காகத் தெருவெல்லாம் அடைத்துப்பந்தல் இட்டதையும் சொந்தப்பந்தங்களைப் பாக்கு வைத்து அழைத்ததையும் குறிப்பிடுகிறார்.  முதல் நாளே வந்திருந்து மணவிழாவை ஏற்பாடு செய்து சிறப்பித்த விதத்தையும் பாத்திரங்கள் ஆள் மட்ட உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் வெளிப்படுத்துகிறார்.

 

ஒன்றிவிட்ட ஆண் பெண்ணின் உறவைப்போல

உலகத்தில் எது பெரிது? சிறிதே வானம்” (க.கா. ப.42)

 

ஆண் பெண் உறவே இவ்வுலகத்தில் பெரியதாக மதிக்கத் தக்கது, என்பதை, ஆண்பெண் உறவுக்கு முன்னால் பெரியதாகக் காட்சியளிக்கும் வானம் கூட சிறியதுதான் என்கிறார்.  மனித உறவுகளே சமூகத்தை இணைக்கும் பாலமாக விளங்குகிறது.  மனித நேயப்பண்புகள் வளர இத்தகைய ஆண் பெண் உறவு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறார்.

ஒட்டபிடாரம் எனும் ஊரில் பிறந்து வழக்கறிஞராகவும் தூத்துக்குடியில் தொழற்சங்கத் தலைவராகவும் தேசப்பற்று நிறைந்த விடுதலைப் போரட்ட வீரராகவும் விளங்கியவர் வ.உ.சிதம்பரானர். அவரது வாழ்க்கை வரலாற்றின் ஊடாகத் தன்னுடைய சமூகப் பார்வைகளையும், சிந்தனையையும், சமுதாயத்தில் நிலவுகின்ற சாதிய சடங்குகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் வழிமுறைகளையும் கவிதை நடையில் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

 

 

ப. இரமேஷ்,

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

2/124, சந்தைமேட்டுத் தெரு,

சிங்கப்பெருமாள் கோயில்,

செங்கல்பட்டு வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 204.

செல் : 9841385899

 

Series Navigationபொய்க்கால் காதலி!எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
author

ப.இரமேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *