ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“நியாய யுத்தம் என்று ஒன்று இருக்கிறதா ? ஆயுதங்களும் குண்டுகளும் சாமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலவச் செய்யுமா ? மரணத் தொழிற்சாலைகள் மூலமே மனித வாழ்வு செழிக்க வேண்டுமா ? நான் யுத்தத்தின் மீது போர் தொடுக்கிறேன்.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)
“வறுமையைப் பற்றி எழும் அச்சமே உன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறாய். அதனால் கிடைக்கும் வெகுமதி உன்னால் உண்ண முடியுமே தவிர வாழ இயலாது.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (On Poverty)
“என் படைப்பு முறை நேர்மையானவற்றைச் சொல்ல மிகச் சிரமப்படுவது, பிறகு அவற்றை மிகச் சீரிய முறையில் எளிதாய்ச் சொல்ல முயல்வது.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :
ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
+++++++++++++++++++++
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழிவில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
+++++++++++++++++++++
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிடமிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இந்தப் பிரச்சனையே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
+++++++++++++++++++++
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா•ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள். 2. ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா•ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப்பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ•பன் அண்டர்ஷா•ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷா•ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
மற்றும் பலர்.
************************
+++++++++++++++++++++
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வில்டன் வளைத் தெருவில் உள்ள மேடம் பிரிட்னியின் இல்லம்.
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : பகற் பொழுது.
அரங்க அமைப்பு : வரவேற்பு அறையில் சோபாக்கள், மேஜை, நாற்காலிகள் காணப் படுகின்றன. மேடம் பிரிட்னி பகட்டான ஆடை அணிந்திருக்கிறாள். மேஜையில் ஏதோ எழுதிக் கொண்டி ருக்கிறாள். மேடம் நவ யுக நாகரீக மேற்குடி மாது. சுவரில் வண்ண எழில் ஓவியங்கள் தொங்குகின்றன. அவளது மகன் ஸ்டீ•பன் கையில் ஒரு நாளிதழோடு குனிந்து நாணமுடன் உள்ளே வருகிறான். சோபாவில் அமர்ந்து நாளிதழைப் புரட்டுகிறான். தாய் தன் கவனத்துக்கு மகனைத் திருப்புகிறாள்.
++++++++++++++++++++
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
அங்கம் -1 பாகம் -3
(முதலாம் அங்கம்)
ஸ்டீ•பன்: அன்னையே ! எனக்கு அவமானமாய் இருக்கிறது இதைக் கேட்டவுடன் ! மறைந்து போன தாழ்மை உணர்ச்சிகள் மீண்டும் தலை தூக்குகின்றன ! இதை உங்களோடு உரையாடுவதில் வேதனைப் படுகிறது என்மனம் !
மேடம் பிரிட்னி: (வருத்தமோடு) ஆம் எனக்கும் இது இனிய பேச்சில்லை ! உன் தந்தை செய்தது இடைத்தட்டு வகுப்பினர் (Middle Class People) பழக்கத்தில் உள்ளது. ஸ்டீ•பன் ! நம்மைச் சுற்றிலும் தீயவர் பலர் வசிக்கிறார். நாம் உயர்ந்த வகுப்பினர் (Upper Class) தெரிந்து கொள் ! நாம் தீயவரோடு உறவாடும் நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். நமது சுயமதிப்புக்குப் பங்கம் நேரக் கூடாது ! உன்னை உன் தந்தை தன் மகனாய் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதைக் கேட்டு நீ வருந்துகிறாயா ?
ஸ்டீ•பன்: அம்மா ! என்னை நீங்கள் முதிர்ச்சி வாலிபனாய் எண்ணுவதே மகிழ்ச்சி அளிக்குது எனக்கு ! தந்தை என்னைப் புறக்கணித்தால் என்ன செய்ய முடியும் என்னால் ? என்னை அப்பா முதலில் இப்போது அடையாளம் காண்பாரா என்பதே சந்தேகம் !
மேடம் பிரிட்னி: நான் எப்போதும் என் மக்களை வயது வந்த வாலிபப் பிள்ளைகளாய்க் கருதுகிறேன். அவரை என் துணைவராய், எனக்கு இணையவராய் நினைப்பேன் ! அவருக்குச் சம உரிமை அளிப்பேன். நான் அனுமதி தருவதை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இல்லை என்றால், உங்கள் விருப்பப்படிச் செய்ய நான் உரிமை அளிப்பவள். தெரிந்து கொள்.
ஸ்டீ•பன்: உங்கள் உரிமை அளிப்பு எனக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது ! பிள்ளைகளாகிய நாங்கள் ஒரு பூரணத் தாயின் வயிற்றில் பிறந்தவர் ! குறைகள் நிரம்பிய வாலிபப் பிள்ளைகள் ! தொழில் வணிகத்தில் நமக்குத் தந்தை என்ன அநீதிகள் இழைத்துள்ளார் என்பதைச் சற்று விளக்கிச் சொல்லுங்கள். மகனில்லை என்று என்னைப் புறக்கணித்து வேறோர் ஆண்மகனைச் சுவிகாரப் பிள்ளையாய் ஏன் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் ? மேடம் பிரிட்னி: வேறோர் மகனென்று நான் சொல்ல வில்லை ! சுவிகாரப் பிள்ளை என்று நான் சொல்ல வில்லை. அப்படிக் கனவிலும் நடக்காது. விளக்கமாய்ச் சொல்கிறேன் கேள் ! இந்த அண்டர்ஷா•ப்டு குடும்ப விதியே தனி ! அவரது பரம்பரை எடுப்புப் பிள்ளையான புனித ஆன்ரூ அண்டர்ஷா•ப்டைச் சேர்ந்தவர் ! அந்த வரலாறு பல தலைமுறைக்கு முன்பு நிகழ்ந்தது. அந்த எடுப்புப் பிள்ளையை ஓர் ஆயுத உற்பத்தியாளர் தத்தெடுத்தார். வாலிபன் ஆகிய பிறகு அந்த தத்தெடுப்பு மகன் ஆயுத உற்பத்திச் சாலைக்கு அதிபன் ஆனான். அந்தப் பரம்பரையைப் பின்பற்றி ஆயுத உற்பத்தி அதிபர் அடுத்தோர் எடுப்புப் பிள்ளையை எடுத்து வளர்த்தார். அவ்விதமே அடுத்தடுத்து எடுப்பார் பிள்ளைகளே ஆயுத உற்பத்திச் சாலையை மேற்பார்த்தன ! அந்த முறைப்பாட்டில் ஆன்ரூ அண்டர்ஷா•ப்டு தேர்ந்தெடுக்கும் எடுப்புப் பிள்ளையே ஆயுத உற்பத்திச் சாலைக்கு அதிபனாய் ஆக்கப் பட்டது !
ஸ்டீ•பன்: அப்படியானால் அவர் யாவரும் முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லையா ? திருமணத் தம்பதிகளுக்கு ஆண்மகவே சட்டப்படிப் பிறக்க வில்லையா ?
மேடம் பிரிட்னி: பிறந்தன ஆனால் புறக்கணிக்கப் பட்டன ! உன் தந்தைபோல் மணம் புரிந்து கொண்டவரும் இருந்திருக்கிறார். செல்வத்தில் புரண்டு அவரது பிள்ளைகட்கு நிரம்ப சொத்து சுகத்தை எழுதி வைத்திருக்கிறார். ஆனால் எப்போதும் அவரெல்லாம் எடுப்புப் பிள்ளையைத் தத்தெடுத்து அவருக்குப் பயிற்சி அளித்து தமது வணிகத் தொழிலில் ஈடுபடுத்தினார். அது சம்பந்தமாக எப்போதும் வீட்டில் அவருக்கும் மனைவிக்கும் சண்டைகள் நிகழ்ந்தன. உன் தந்தையும் அப்படித் தத்தெடுத்து வளர்க்கப் பட்டவரே ! தனது ஆயுதத் தொழிற்சாலைக்கும் அப்படி ஓர் தத்துப் பிள்ளையைக் கொண்டு வரப் போவதாய் நான் கேள்விப் பட்டேன் ! அதுதான் என்னை உறுத்துகிறது. அறிவுள்ள வாலிப மகன் நீயிருக்கும் போது வேறோர் ஆண்மகன் ஆயுதச் சாலைக்கு அதிபனாய் இருப்பதா ? அது உனக்குச் செய்யும் வஞ்சம் ! எனக்குச் செய்யும் துரோகம் ! ஆனால் நானதில் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவரது இடைநிலை வகுப்பு மனைவியருக்குப் பிறக்கும் ஆண்மகன் ஒருவேளை மூடனாய் இருந்திருக்கலாம் ! ஆனால் நான் உயர் வகுப்பு மாது ! எனக்குப் பிறந்த வாலிப மகன் வல்லவன், அறிவில் சிறந்தவன் ! உதாசீனம் செய்யத் தகுதியற்றுப் போன ஆண்மகன் அல்லன்.
ஸ்டீ•பன்: அம்மா ! எனக்குப் பீரங்கித் தொழிற்சாலையை மேற்பார்க்கும் திறமையும் இல்லை ! எப்படி இயக்குவது என்ற எந்த அனுபவமும் எனக்கில்லை.
மேடம் பிரிட்னி: அறிவில்லாமல் பேசாதே ! எதையும் கற்றுக் கொள்ளலாம். பிறக்கும் போதே யாரும் தளபதியாகப் பிறப்பதில்லை. ஏன் ? நீ அனுபவமுள்ள மேற்பார்வையாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். மன உறுதிதான் தேவை ! நான்தான் தொழிற் சாலைத் தலைவன் என்ற தற்பெருமை உள்ளத்தில் உயிர்த்தெழ வேண்டும் !
ஸ்டீ•பன்: அந்த மன உறுதி எனக்கில்லை அம்மா ! மேலும் என்மீது தந்தைக்கு உயர்ந்த மதிப்பு உள்ளதாகத் தெரியவில்லை !
மேடம் பிரிட்னி: இந்தச் சப்பைக்கட்டை என்னிடம் விரிக்காதே ! நீ இன்னும் சிறுவனாகவே இருக்கிறாய் ! வயது வந்தாலும் நீ முதிர்ச்சி அடைய வில்லை ! உன்னை எப்படிக் கூன் விழாத நேர் மனிதனாய் நிமிர்த்துவ தென்று எனக்குத் தெரியவில்லை. நீ வேலையில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். வெளிப் பயிற்சியோ, அனுபவமோ பெறும்வரை ஆயுதத் தொழிற்சாலை உனக்காகக் காத்திருக்காது ! நீதான் முன்னே சென்று தொழிற்சாலை இடத்தைப் பிடிக்க முழு மூச்சாய் முயல வேண்டும் !
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(D) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
******************** S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 1, 2011)
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்