யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”

This entry is part 8 of 51 in the series 3 ஜூலை 2011

திரைப்படத்தின் பின்னணி இசையெனும் இளையராஜாவின் கோட்டையில் தானும் ஜெயித்துக்கொடி நாட்டியிருக்கிறார் யுவன் ” ஆரண்ய காண்டத்தில்”, யுவனின் பின்னணி இசைக்கெனவே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தோணுமளவுக்கு.

சண்டைக்காட்சிகள் , மற்றும் ஆக்ஷ்ன் த்ரில்லர் வரிசையில் இளையராஜாவுக்கு ஒரு “உதயம்” படத்தில் ரகுவரன் தோன்றும் காட்சிகளில் வந்த பின்னணி இசை என்றும் மறக்க இயலாதது ,மற்றும் பழஸிராஜாவில் மம்மூட்டி கைகளில் இரும்புப்பட்டா’வைச்சுற்றிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் சுழலும்போது மட்டும் காற்றை கிழிக்கும் இடம், பின் அந்த அடியை/வெட்டை வாங்கியவர்களின் இயல்பான சப்தம் என வேறொரு பின்னணி இசையுமின்றி அமைத்திருக்கும் காட்சிகள் என குறிப்பாக சொல்லிக்காட்டக்கூடிய இடங்கள் என்றால் யுவனுக்கு இந்த ஆரண்ய காண்டம். அவர் முன்னர் செய்த விஷயங்களைத்தாண்டி வெகு தூரம் பயணித்திருக்கிறார்.க்ரைம் த்ரில்லர் பில்லா’விலும் இது போன்ற பின்னணி இசை அமையவில்லை.பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபடியால் அங்கு பின்னணி பற்றி அதிகம் சிலாகிக்க முடியவில்லை.16 படத்திலும் யுவனின் அந்த மலைப்பாங்கான கிராமீயப்பின்னணி இசை இன்னும் மனதிற்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

ஆ.கா.வில் அவசியமான இடங்களில் அமைதியும் , தேவையான இடங்களில் பின்னணியில் பாத்திரங்களைச்சுற்றி நிகழும் இயல்பான சத்தங்களும், பின்னர் கதைக்கும் , பாத்திரங்களின் மனநிலையைப்பிரதிபலிக்கவுமாக இசைக்கோவைகளாகப் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார் யுவன் என்னும் புதிய ‘இளைய’ ராஜா.

படத்தின் நெடுகிலும் ஓங்கி ஒலிக்கும் மாதா கோயிலின் மணியோசை நடு நெஞ்சை அதிரவைத்து வலுவாக காயப்படுத்துகிறது.படத்தில் இசை மௌனித்துப்போய் அமைதியான இடங்கள் ஏதோ நடக்கப்போகிறது என வெகுவாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.எங்கு இசை அவசியமில்லை
என்று தீர்மானிப்பவனே நல்ல இசைக்கலைஞன்.!

பசுபதி,கொடுக்காப்புளி,அவனது அப்பா, சிங்கப்பெருமாள்,சப்பை மற்றும் அந்தப்பெண் சுப்பு எனப்பல கதாபாத்திரங்கள் இருந்தபோதும் , அவற்றுக்கென தனி இசைக்கோவைகள் என வைத்துக்கொள்ளாமல் , கதை ஓட்டத்துக்கேற்றவாறு இசை நகர்ந்து செல்கிறது , மேலும் இவ்வாறான இசைப்பயணம் நமக்குப்புதிது,தீம் ம்யூஸிக் என்ற கட்டுப்பாட்டிலிருந்து வெகு தூரம் பயணிக்கும், யாராலும் அருகில் கூட நெருங்க முடியாத ,புதிய இசை.

கொடுக்காப்புளி மற்றும் அவனது அப்பாவின் காட்சிகளில் பியானோவின் தாள கதியில் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவை , ராஜாவின் “ஹவ் டு நேம் இட்”டை சிறிது ஞாபகப்படுத்தியபோதும் நம்மை ஒன்றிப்போகச்செய்கிறது,சேவல் சண்டைக்கான இசைக்கோவை , சில நாட்களுக்கு முன் அதே கருத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தின் இசையை வெகு எளிதாக கடந்து செல்கிறது.

மேலும் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் வந்த இசைக்கோவைகள் இங்கே..!

ஐ வில் ஹைட் இட் ( I Will Hide It )

அந்தசிறுவன் கஞ்சாவை ஒளித்துவைக்கச்செல்லும் காட்சிப்பின்னணியில் ஒலிக்கும் இசைக்கோவை அற்புதமான புல்லாங்குழலுடன் , ஜமைக்கா பீட்ஸும் பேங்கோஸுமாக தொடர்ந்து ஒலிக்க கேட்பதற்கு கோலாகலமாயிருக்கிறது நமக்கு.சிறு பிள்ளைத்தனமான துள்ளலும் நம்மையறியாமல் ஏற்படும் வாய் நிறைய மகிழ்ச்சியுமாகக் கொண்டாட வைக்கும் இசைக்கோவை அது.மால்குடி டேஸுக்குப்பின் மறந்து போன புல்லாங்குழல் இசை வெகு நாளுக்கு மறக்காது மனதிற்குள்ளேயே சுற்றிச்சுழன்று கொண்டேதானிருக்கும்

தி வார் ( The War )

கஜேந்திரன் கேங்குக்கும் பசுபதிக்குமிடையேயான இறுதிச்சண்டைக்காட்சியில் ஒலிக்கும் , கத்திகளின் விஷ்க் ஒலி,ரத்தம் பீரிடும் சத்தம் என காட்சிக்கு உரித்தான இசைமட்டுமே ஒலிக்க , இது நாள் வரை பிற திரைப்படங்களில் நாம் கேட்ட சண்டைக்காட்சி இசை எங்கு போனது என வியப்புக்குள்ளாக்குவது சகஜம்.அதன் பின்னணியில் காட்சி நகர நகர, பியானோவின் அமுத்தலான சப்தமும், கிட்டாரின் அதிர்வுமான இசைக்கோவை நம்மைக் காட்சியோடு ஒன்ற வைக்கின்றது, நாம் இதுவரை கேட்டிராத அலைவரிசையில்.

ஃப்ளெமெங்கோ ஃபைட் ( Flamenco Fight )

பசுபதியும் , கஜபதியும் , கஞ்சாப்பொட்டலத்தை கை மாற்றிக்கொள்ள வரும் இடத்தில் ஒலிக்கும் ஃப்ளெமெங்கோ இசைக்கோவை நமக்கு பரிச்சயமானது தான்.ஸ்பானிஷ் பின்னணியில் , அவர்களின் இசைப்பாணியுடன் கூடிய நடனத்திற்கான இசைத்தொகுப்பு.சற்றேறக்குறைய டேப் டான்ஸ் போன்றதொரு வகையை சார்ந்தது எனலாம் (கேட்பதற்கு).டைட்டானிக் படத்தில் லியோ’வும் , கேத்’தும் கப்பலின் கீழ்த்தளத்தில் ஆடும் இசை நினைவிருந்தால் இது நமக்குப்பரிச்சயமானதே. ஸ்பானிஷ் கிட்டாருடன் , அக்கார்டியனும் சேர்ந்து ஒலிக்க கேட்பவரை நடனமாட வைக்கும் இசைக்கோவை.பின்னர் நடக்கப்போகும் சண்டைக்கு அடித்தளம் ஏற்படுத்திக்கொடுக்கும் இசை. சண்டையும் நடனம் தானா.?!

திங்ஸ் ஆர் செட் இன் மோஷன் ( Things are set in Motion )

பசுபதி போலீஸில் பிடிபட்டு ஜீப்பில் ஏறிச்செல்லும் காட்சிக்கென உள்ள இசைக்கோவை.கிட்டாரின் விள்ளலுடன்
ஆரம்பிக்கும் இசை.பியானோவிற்கு இத்தனை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி உள்ளதென நிரூபிக்கப்பட்ட இசைக்கோவை.பியானோ தொடர்ந்து மணி போல ஒலிக்க, பின் வயலினும் , ட்ரம்ஸுமாக ஒலிக்கும் இசைக்கோவை ஐயா, யுவன் இவ்வளவு நாளாக எங்கு வைத்திருந்தீர் எனக்கேட்க வைக்கும் இசை அது !!!

இப்படி பல காட்சிகளுக்கு ,தனிப்பட்ட ,நாம் இது வரை தமிழ்ப்படங்களில் கேட்டிராத , மனதை லயிக்க
வைக்கும் இசைக்கோவைகளுடன் நம்மையும் சேர்த்து நகர்கிறது படம்.தனியாக பாடல்கள் என எதற்கும்
கதையில் வாய்ப்பில்லாததால் இப்படி சிறு சிறு இடங்களில் தமக்கென உள்ள இடங்களை சரியாகப்பயன்படுத்திக்கொண்டு உலகத்தரத்தை நமக்கென கொண்டு வந்திருக்கிறார் யுவன், பருத்தி வீரனில் விட்டதை ஆ.கா.வில் கண்டிப்பாகப்பிடிக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் …!

திரைப்படத்தின் பின்னணி இசை ஒலிப்பேழையாக வெளியிடப்பட்டது தமிழ்த்திரையுகில் இளையராஜாவுக்கென மட்டுமே,,,அதன் பிறகு யுவனுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.இந்த ஆ.கா, படத்தின் பின்னணி இசை ஒலிப்பேழையாக வெளிவரப்போகிறது !!

படத்தின் மையக்கருவை முழுதும் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப இசையமைப்பது என்பது இளைய ராஜாவுக்கு மட்டுமே வாயத்த ஒன்று நானறிந்தவரை.எனினும் இசையில் பல படிகளை வெகு சுலபமாக ஏறிக்கொண்டிருக்கும் யுவனுக்கு இது ஒரு மணி மகுடம்.

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
author

சின்னப்பயல்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *