எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா

This entry is part 23 of 38 in the series 10 ஜூலை 2011

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலில் இரண்டு பத்திரிகைகள் வந்தன. ஒன்று நான் சந்தா கட்டியது; மற்றது நான் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டது.
முதலாவது இதழின் ஆசிரியர் நல்ல கவிஞர். தமிழில் புலமை மிக்கவர். தமிழ் மீது கொண்ட பற்றினால் ஒரு மரபிலக்கிய சிற்றிதழைப் பத்தாண்டுகளுக்கு மேலாக பொருள் இழப்புடன் நடத்தி வருபவர். அந்தக் காலத்து ‘செந்தமிழ்ச் செல்வி’ போல தரமான மரபுக் கவிதைளும், இலக்கியக் கட்டுரைகளும் கொண்ட பத்திரிகை அது. ஆனால் புதிய நவீனக் கூறுகள் ஏதுமின்றி, அரைத்த மாவையே அரைத்தபடி பழம் பாதையில் நடை போட்டு வந்தது. எனவே அலுத்துப்போய் நிறுத்தி விட இருந்தேன். இதுவரை இரு முறை நிறுத்தி முக தாட்சண்யம் கருதி அவரது வேண்டுகோளால் புதுப்பித்து வந்தேன். இப்போது ‘சந்தா முடிந்து விட்டது. புதுப்பித்து உதவுங்கள்’ என்ற நறுக்குச் சீட்டுடன் இதழ் வந்திருந்தது.
இரண்டாவது இதழ் நல்ல கட்டமைப்புடன் கூடியது. முன்னதைப்போல் ‘நியூஸ் பிரிண்டி’ல் இல்லாமல், பால் வெள்ளைத் தாளில், தெளிவான அச்சில் புகைப்படங்களுடன், வழவழப்பான கெட்டி அட்டையுடன் 25.ரூ விலை கொண்டது. அதன் ஆசிரியர் பிரபல மூத்த எழுத்தாளர். பத்திகை அனுபவம் மிக்கவர். ஆனால் இதுவும் பஞ்சாங்கம் தான். முன்னது தட்டுச்சுற்று வேட்டி, அங்கவஸ்திரம் போட்ட தமிழாசிரியர் என்றால் – பின்னது பேன்ட், ஸ்லாக் போட்ட தமிழாசிரியர். உடையில் தான் நவீனம்; உள்ளத்தில் அதே தான். இதுவுமே ஆசிரியரின் தட்ட முடியாத வேண்டுகோளால் இரண்டிரண்டு ஆண்டுக்கான சந்தாவாக இரு முறை புதுப்பித்து, இப்போது சந்தா முடிந்துதும் தொடராமல் நிறுத்தி விட்டதால், இரண்டு நினைவூட்டுகள் வந்திருந்தன. இம்முறை, இனி தாட்சண்யம் கருதி நஷ்டப்படுவதில்லை என்று தீர்மானமாக இருந்தேன். இப்போது மாத இதழாக மாறி இருந்த நிலையில் சமீபத்திய இதழுடன், எனது இலக்கிய ரசனை, நட்பு, படைப்பாக்கம், எல்லாவற்றையும் நினைவூட்டி, ‘வேலைப் பளுவால் புதுப்பிக்காது விட்டிருக்கலாம், புதிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆதரிக்கவும்’ எனக் கேட்டு தனிக் கடிதமே இணக்கப் பட்டிருந்தது.  என் கடந்தகால சந்தா அனுபவங்களின் கசப்பில் இந்த இரண்டு வேண்டுகோள் களையும் கிடப்பில் போட்டேன்.
ஏறக்குறைய 50 ஆண்டுளுக்கு மேலாக சிற்றிழ்களோடு தொடர்பு கொண்டிருப் பவன் நான். 1957ல் பணியில் சேர்ந்தது முதல், பார்வைக்கு வந்த எல்லா சிற்றிதழ் களுக்கும் சந்தா கட்டி வருபவன். சரஸ்வதியில் தொடங்கி தீபம், கணையாழி, கசடதபற, நடை…… என்று இன்றைய காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து வரை எல்லா இதழ்களுக்கும் தொடக்கம் முதலே சந்தா கட்டிப் பெற்று, முதல் இதழ் முதல் பத்திரப்படுத்தி வருபவன். இதனால் நல்ல படைப்புகளையும், தரமான படைப்பாளி களையும் அறிந்து ரசித்து வருவதுடன், எல்லா சிற்றிதழ்களையும் ஆதரித்து ஊக்கு விக்கும் திருப்தியும் கிடைத்தது. என்றாலும், கொஞ்சம் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதையும் சொல்ல வேண்டும்.
‘சரஸ்வதி’ இதழை விஜயபாஸ்கரன் அவர்கள் மிகுந்த சிரமங்களுடனேயே நடத்தினார். முதல் நான்கைந்து ஆண்டுகள் அதன் இலக்கியத்தரம் கருதியும், அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்க பலம் காரணமாயும் ஆதரவு பெருகி, விற்பனையிலும் சாதனை படைத்தது. பிறகு பொருளாதார நெருக்கடியாலும், இயக்க ஆதரவின்மை யாலும் தள்ளாட ஆரம்பித்தது. விட்டு விட்டு வெளியாவதும், இரண்டு மூன்று இதழ்கள் சேர்த்து ஒரே இதழாக வருவதுமாய் ஊசலாடியது. ஆனால் சந்தா மட்டும் ஆண்டு முடிந்ததும் இதழ் கணக்கிடாமல் மாதக் கணக்கிட்டு சந்தாவைப் புதுப்பிக்கக் கேட்டபோது அதிருப்தி ஏற்பட்டது. இப்படி நிறைய சிறு பத்திரிகைகள் சந்தா விஷயத்தில் வாசகரை அதிருப்திக்கு ஆளாக்கி ஆதரவை அப்போது இழந்தன.
ஆனால் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா அவர்கள் மட்டும் இது விஷயத்தில் கறாராக இருந்தார். ‘எழுத்து’ நின்று போய், ‘பார்வை’, ‘விருந்து’ போன்ற நூல் பிரசுர முயற்சிகளில் ஈடுபட்ட போது, எஞ்சியிருந்த சந்தாவை புதிய இதழ்களில் ஈடுகட்டி, தனது நாணயத்தை வாசகரிடையே தக்க வைத்துக் கொண்டார். பல சிற்றிதழ்கள்  ஒரே இதழுடன் நின்று போனாலும் இப்படி நடந்து கொள்ள முடியாததால், புதிய  அற்பாயுசு இதழ்களை ஆதரிக்கத் தயக்கம் ஏற்பட்டது. எல்லோரும் செல்லப்பா  அவர்களைப் போல் தனது சொத்தை எல்லாம் இப்படி இலக்கிய வேட்ககைக்குப்  பலி தர முடியாதுதான்!
சிற்றிதழ்களிலும் இழப்பைப் பொருட்படுத்தாது, சொல்லப்போனால் அதை  எதிர் பார்த்தே இலட்சிய வெறியுடன் ‘கசடதபற’ போன்று சுய திருப்திக்காக  நடத்தப்படுபவையும் உண்டுதான். தன்னை ‘விலையிலாக் கவிமடல்’ என்று  பிரகடனப்படுத்திக் கொண்டு ‘வானம்பாடி’ இதழை, பேராசிரியர் போன்ற  வசதியான பதவிகளில் இருந்துகொண்டு இலட்சிய தாகத்துடன் இலவசமாக  இதழ்களை வழங்கி சாதனை படைத்தவர்களும் இருக்கிறார்கள். ‘நடை’ என்ற  இதழுக்கு நல்ல சந்தா ஆதரவு இருந்தும் காலம் தவறாமல் வெளியிட முடிந்தும்,  தரமான படைப்புகள் கிடைக்காததால் நிறுத்திக்கொண்டு, சந்தா மீதமிருந்தவர் களுக்கு நாணயமாய்த் திருப்பி அனுப்பினார் கவிஞர் சி.மணி அவர்கள்.
கி.ராவின் ‘கதை சொல்லி’, சந்தா ஏற்பாடு இல்லாமல் ‘எண்வழிச் சிற்றிதழா’க – இதழ் வெளியானதும், பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளச் செய்தது – சந்தா  தாரரின் அவநம்பிக்கையைப் போக்குவதாக இருந்தது. சில சிற்றிதழ்கள் சீரான  வெளிப்பாடு, பக்கஅளவு பற்றி எல்லாம் கவலைப் படாமல் ஒரு சமயம் கனத்த  பக்கங்களுடனும், அடுத்த இதழ் 8,10 பக்கங்களுடன் மெலிந்தும், விலையில்  மாற்றமின்றி வந்து புதிராக விளங்கின. சில சிற்றிதழ்கள் எவ்வளவு பெரியவர் களாக இருந்தாலும் சந்தா வரவில்லை என்றால் – தொடர்ந்து அனுப்பியவராய்  இருந்து இப்போது மறதியில் புதுப்பிக்கவில்லை என்றாலும் நினைவூட்டு ஏதும்  அனுப்பாமல் நிர்த்தாட்சண்யமாய் இதழை அனுப்புவதை நிறுத்திவிடுகிற செயல்,  சந்தாதாரருக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவர்களது முன்னெச்சரிக்கை  மனப்பாங்கை பாராட்டவே தோன்றுகிறது.
நிறைய சிற்றிதழ்கள் நம் முகவரியை எவ்வாறோ அறிந்து, நமக்கு முன்பரிச்சயம்  இல்லாதிருந்தும் நமது இலக்கிய ரசனை மீது நம்பிக்கை வைத்து அனுப்புவதுண்டு.  விமர்சனத்துக்காகவும் அனுப்புவோரும் உண்டு. அப்படிப்பட்டவற்றிற்கு உடனடியாக விமர்சனத்துடன் நன்கொடையாக ஐம்பதோ, நூறோ அனுப்பி உற்சாகப்படுத்தி  உள்ளேன். ஆனால் அதையே சந்தாவாகக் கணக்கிட்டு, ‘உங்கள் சந்தா தீர்ந்து  விட்டது, புதுப்பிக்கவும்’ என்று கேட்டு எழுதும் போது, தொடர ஆர்வமில்லாதபடி  அவற்றின் தரம் இருந்ததால் ஊக்குவிக்க முடியாது போனதுண்டு.
சிலர் விடாது அனுப்பி நம் பொறுமையைச் சோதிப்பதும், நம்மைக் குற்ற  உணர்ச்சிக்கு ஆளாக்குவதும் எரிச்சலூட்டுகிறது. ‘நல்ல இலக்கியம் என்றால் எத்தனை  நந்திகள் வழி மறைத்தாலும் உரிய இடம் போய்ச் சேர்ந்தே தீரும்’ என்ற புதுமைப் பித்தனின் கருத்தை சிற்றிதழ் நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளலாம். அதை விட்டு,  சந்தா கட்டாமல் தொடர்ந்து இதழைப் பெற்று வருவதைக் கடும் சொற்களால் இடித்துக்  கடிதம் எழுதி வாசகரைக் குற்றவாளியாக்குவதைத் அப்படிச் செய்கிற சிற்றிதழாளர்கள்  தவிர்க்கவேண்டும். தமக்குப் பயனளிக்கும் என்றால் என்ன விலை கொடுத்தும் நல்ல  பொருளை வாங்க விழையும் நுகர்வோர் உணர்வை இவர்கள் மதிக்க வேண்டும்.
சிற்றிதழாளர்களின் சிரமங்கள் அவர்கள் கோணத்தில் நியாயந்தான் என்றாலும் செலவிவிடும் பணத்துக்குத் தரமான பொருளை எதிர்பார்க்கும் வாசகரின் நியாயத்தையும் பார்க்க வேண்டும்தானே?                0

 

Series Navigationஅபியும் அப்பாவும்நினைவுகளின் தடத்தில் – (72)
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *