அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது.
அலுவலகத்தில் கழியும் நேரத்தை எவராவது சந்தோஷமாக நினைவு கொள்வார்களா? அதாவது நேர்மையாக உழைத்து கிடைக்கும் அற்ப பணத்தில் வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப் படும் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு? இன்றைய தினம் எந்த அரசு அலுவலகமும், எத்தகைய கீழ் நிலை சேவகனுக்கும் அது பொது மக்களை ஒரு பொருட்டாகவே கருதாது அதிகாரம் செய்யவும் மிரட்டி பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள இன்றைய தினம் ஒருவேளை அலுவலக நேரங்கள் தரும் பணத்தையும் முரட்டு அதிகார பந்தாக்களையும் நினைத்து சந்தோஷப் படலாம். அரசின் உச்ச நாற்காலியிலிருந்து வாசல் கேட்டில் சேவக உடை தரித்து வரும் கார்களுக்கு சலாம் போடும் கடை நிலை வரை.
அதெல்லாம் ஏதும் இல்லாமலேயே அது பற்றிய சிந்தனைகளே ஏதும் இல்லாத அந்நாட்களில் அலுவலக நேரம் கூட சந்தோஷமாகவே கழிந்தன. எத்தனை ரக சகாக்கள். எத்தனை தூரத்திலிருந்து எத்தனை மொழி பேசும், சகாக்கள். அவர்கள் எல்லோருடைய பேச்சும் சுபாவமும், சுவாரஸ்யமானவை. அப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இப்போது எழுதும் சாக்கில் நினைத்துப் பார்க்கவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. மனோஹர் லால் சோப்ரா என்று ஒரு பஞ்சாபி. இப்போதைய ஹரியானா விலிருந்து ரோஹ்தக் என்ற இடத்திலிருந்து வந்தவன். ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்திருப்பவன். மேல்நிலை குமாஸ்தா. (அப்பர் டிவிஷன் கிளர்க்) காலேஜில் படித்தவன்.ஒல்லியான தேகம் பஞ்சாபிக்குள்ள சிகப்பு நல்ல உயரம். மூக்கு மாத்திரம் இந்திரா காந்தி மூக்கு மாதிரி கொஞ்சம் முன்னால் நீண்டு நுனியில் வளைந்து இருக்கும் கழுகு மாதிரி என்று சொன்னால் அது மிகைப்படுத்தலாக இருக்கும். ஆனால் ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்தவன். எவ்வளவு உருக்கமாக, ஸ்பஷ்டமான உச்சரிப்பில் வங்காளியில் பாட்டுக்கள் பாடுகிறான். என்று எங்களுக்கு ஆச்சரியம். வங்காளிகள் யாரும் அவன் ஒரு பஞ்சாபி, என்று அவன் பாட்டின் உச்சரிப்பைக் கொண்டு சொல்லி விட முடியாது. அர்த்தம் தெரியாது. ஆனால் ஒரு வங்காளியின் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கும். அதற்கு எங்களோடு வேலை செய்யும் சகா மிருணால் காந்தி சக்கரவர்க்த்தியே சாட்சி. ”எங்கேடா கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டால் ஒரு திருட்டுச் சிரிப்பு தான் பதிலாக வரும். அவன் பாடியதெல்லாம் சோக கீதங்கள். ஆனால் சோகத்தைப் பிழியும் பாட்டுக்கள் என்று அவனுக்கு என்ன தெரியும்? அவை கேட்க என்னவோ மிக இனிமையாக இருக்கும். அவையெல்லாம் சோகத்தைச் சொல்வன என்று கேட்டதும் இன்னும் இனிமையாக இருக்கும் கேட்க.
அவன் எனக்கு அவன் பெயரை சரியாக உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்து அலுத்துப் போனான். அலுத்துத் தான் போனானா, இல்லை, அப்படி ஒரு நாடகமாடினானா? தெரியாது. கடைசி வரை எனக்கு அது வரவேயில்லை. தப்பாகத் தான் சொல்கிறேன் என்றே சொல்லி வந்தான். ”சோப்ரா” இல்லை, இதோ பார், நாக்கை கொஞ்சம் பாதி மேலன்னத்தோடு சேர்த்து அழுத்தி சொல்லு ”ச்சோப்ரா” என்று சொல்லிக் கொடுப்பான். நானும் அவன் சொன்ன படியே சொல்வேன். இதோ பார் சோப்ரா சரிதானா? அப்படி இல்லை, ச் ச் சொல்லு ச். நாக்கை மேலன்னத்தோடு ஒட்டி மடக்கிண்டு சொல்லு ச் ச்சொப்ரா”. இந்த தமாஷ் ரொம்ப நேரம் நடக்கும். அவன் என்னை வைத்துக்கொண்டு தமாஷ் பண்ணுகிறான் என்று சுற்றி இருக்கும் எல்லோருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எல்லோரும் சிரிப்போம்..
அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தால் வீட்டுக்கு ஒரு இளம் பெண் மனைவியாக வருவாள். வந்தவன் வீட்டில் உள்ளே அவன் மனைவி. வெளியே ஒரு எருமையும் கட்டியிருந்தது. என்னடா இது? என்று கேட்டால், அவன் சிரித்துக் கொண்டே, “இங்கே பாலுக்கு ரொமபவும் கஷ்டப்படுகிறேன் என்று அவராகவே நினைத்துக்கொண்டு ஒரு மாட்டையும் ஒட்டி விட்டு விட்டார் என் மாமனார்” என்றான். அவன் இருக்கும் இடம் கொழுத்த எருமைகளுக்கு பேர் போனது. அன்றிலிருந்து அவன் அலுவலக நேரத்தில் நான் அவன் வரவேற்பதும் முகமன் பரிமாறிக்கொள்வது மாறியது.
கீ ஹால் ஹை பயீ தேரா? (எப்படிடா இருக்கே நல்லாருக்கியா)?
டீக் டாக் ஹூம் யார், படியா சம்ஜோ? ( நல்லா இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கேன்னு வச்சுக்க) என்று பதில் சொல்வான்.
அதோடு முகமன் விசாரிப்பது நிற்காது. அடுத்த கேள்வி
“ஓர் தேரா பைன்ஸ் தா ஹால் சுனாவ்? வஹ் பீ டீக் டாக் ஹைனா? ( உன் எருமை? அதுவும் சௌக்கியம் தானே?)
பதில் ஒவ்வொரு தடவை ஓவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சமயம் முறைப்பான். ஒரு சமயம் பதிலுக்குச் சிரிப்பான். இன்னும் சில சமயங்களில் “து கர்லே பயீ மஜாக் கர்லே” (” உனக்கென்ன வேண்டியது கேலி செய்துக்கோ”) என்று பதில் வரும். இன்னும் சில நாட்கள். அவனே எடுத்துக்கொடுப்பான். ”மேரா பைன்ஸ்தா ஹால் க்யோ நஹி பூச்சா? பூல் கயா?) (ஏன் எருமை எப்படி இருக்குன்னு கேட்கலியே,. மறந்துட்டியா?)
கல்யாணத்துக்கு முன் தனிக்கட்டையாக இருந்த போது நடந்தது இது. ஒரு நாள் அவன் தன் கடைசித் தங்கை, பத்துபன்னிரண்டு வயசுத் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று சொன்னான். ரோஹ்தக்கிலிருந்து அவன் அப்பாவுக்கு அவள் இங்கு வந்திருக்கும் செய்தியைச் சொல்லி கவலைப் பட வேண்டாம் என்று தந்தி அனுப்பிவிட்டு அலுவலகம் வந்திருக்கிறான். தனியாக. அவன் சொன்ன கதை நெஞ்சைப் பிழியும். அவன் தங்கைக்கு அவனிடம் பாசம் அதிகம். அவன் இல்லாமல் இருக்க மாட்டாளாம். ஆனால் இங்கே வேலை என்றால் விதி செய்த விளையாட்டுக்கு என்ன செய்ய. அண்ணாவைப் பார்க்கப் போகணும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாளாம். ”போகலாம் போகலாம்”, என்று அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதெல்லாம் மனோஹர் லாலுக்குத் தெரியும். அவனுக்கும் இந்த நச்சரிப்பப் பற்றி கடிதங்கள் எழுதியிருக்கிறார் அவன் அப்பா. பின் நடந்தது எல்லாம் அவள் இங்கு வந்து அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான். ”எப்படிடா வந்தாள் இந்த 12 வயது வாண்டு”? என்று கேட்டதற்கு, ”நீயே கேட்டுத் தெரிந்து கொள், வீட்டுக்கு வா ஞாயிற்றுக் கிழமை” சாப்பிடலாம். அந்த உன் வாண்டு தான் ரொட்டி பண்ணித் தருவாள் அது எப்படி இருக்குண்ணு சொல்லு.” என்றான்.
அவன் தனியாக இருந்தபோது ஒரு தடவை அவன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஒரு நாள் எதற்கோ எங்கோ போவதற்கு சக்கரவர்த்தியின் வீட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தபோது சக்கரவர்த்தி இருந்த வீட்டுக்கு எதிர்வரிசையில் தான் சோப்ராவின் வீடும் இருந்தது. .அன்று சோப்ராவின் வீட்டுக்கு மூன்று நாலு வீடுகள் தள்ளி ஒரு வீட்டுக்கு முன் பெரிய கூட்டம். ஒருவருக்கொருவர் காதோடு காதாக ரகசியம் பேசிக்கொள்ளும் அமைதியான கூட்டம். என்னவோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது. என்று அந்த அமைதியிலிருந்தும் பட்டது. அந்தக் கூட்டத்தின் சூழல் எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. என்னவென்று விவரமாக அக்கறையோடு பதில் சொல்லக் கூடிய,தெரிந்த இடத்தில், சக்கரவர்த்தியின் வீட்டில் விசாரித்தேன் சக்கரவர்த்தியின் அம்மா, இரண்டு சகோதரிகள் எல்லோரும் வீட்டின் வெளியே இருந்த மேடையில் நின்று கொண்டிருந்தார்கள். என்னவென்று. கேட்டேன். சக்கரவர்த்தியின் அம்மா சொன்ன செய்தி மனத்தை உலுக்குவதாக இருந்தது.
அந்த வீட்டில் ஒரு இளம் தம்பதி. மதராஸிகள்.( மதராஸிகள் என்றால் தமிழர்கள் என்று அர்த்தமில்லை..யாரோ தென்னிந்தியர்கள்) ரொம்ப நாளாக கணவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது அந்தப் பெண் தான் கவனித்துக் கொண்டாள். யாரும் உறவினர் வரவில்லை அவர்கள் உதவிக்கு. ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இரு தரப்பிலும் அவரவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்து கொண்டார்களோ இல்லை, வரமுடியாத தூரமோ, வறுமையோ, இல்லை முதுமையோ, இல்லை யாரும் இல்லையொ என்ன காரணமோ, அந்த இளம் மனைவி தான் படுக்கையாகக் கிடந்த கணவனைப் பார்த்துக்கொண்டாள். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்குப் போய்வருவார்கள். ஆனால் இப்போது அதுவும் நின்றுவிட்டது. முடியவில்லையோ என்னவோ. என்ன சுகக்கேடு என்பதும் தெரியவில்லை. ஓரிரு முறை போய்ப் பார்த்து ஏதும் உதவி தேவையா என்று கேட்டு வந்தோம் ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஹிந்தியும் பேச வரவில்லை. அழுது கொண்டு இருப்பாள் இல்லை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்,. பதில் வராது. கணவன் இன்று காலை இறந்து விட்டான். அந்த துக்கம் தாங்காது அவள் மூர்ச்சித்துக் கிடக்கிறாள் என்று தான் நினைத்தோம். ஆனால் இப்போது தெரிகிறது அவளும் இறந்துவிட்டாள். வீட்டில் இளம் தம்பதி இருவரும் பிணமாகிக் கிடக்கிறார்கள். இப்போது என்ன செய்வது, யாருக்குச் சொல்வது, யார் அவர்கள் உறவினர் என்று ஒன்றும் தெரியவில்லை. என்று விட்டு விட்டு விஸ்தாரமாகச் சொன்னாள். அந்த இளம் பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது. கணவன் நோயாகப் படுத்துக்கிடந்த நாளெல்லாம் தனித்து விடப்பட்ட அவள யாருடனும் எதுவும் பேச பாஷையும் தெரியவில்லை. பேசும் தெம்பும் அவளுக்கு இல்லை. எந்நேரமும் எங்கோ எதையோ வெறித்த பார்வை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படி எதுவும் செய்யமுடியாது, அவள் யாரோ நாம் யாரோ என்று இருக்க நேர்ந்து விட்ட பாபத்துக்கு என்ன செய்வது? என்று சக்கரவர்த்தியின் அம்மாவும் சோக முகத்தோடு சொல்லிக்கொண்டே போனாள். எதுவும் செய்ய முடியாத கையாலாகத் தனம் அவளை மிகவும் வருத்தியது.
பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சக்கரவர்த்திக்கும் தெரியவில்லை. சோப்ராவுக்கும் தெரியவில்லை. சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் தாமே ஏதோ பாபம் செய்தவர்களாகவே உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களை வேதனைப் படுத்தும். ரொம்ப நாளைக்கு. அந்த இயலாமையைத் தான் சற்றுக் கோபத்தோடும் விரக்தியோடும் அவர்கள் ‘சொல்வார்கள். ‘[குச் ந பூச்சோ யார், ஐசி ஹாலத் கிஸீ கோ பி நஹி ஆனா சாஹியே” (அதைப் பற்றிக் கேட்காதே, இந்த மாதிரி ஒரு நிலமை யாருக்கும் வரக்கூடாது) என்று தான் அவர்கள் பதில் வந்தது.
- இழவு வீடு
- முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..
- வேஷங்கள்
- பயணம்
- வேடிக்கை
- “கானுறை வேங்கை” விமர்சனம்
- பெண்பால் ஒவ்வாமை
- தாய் மனசு
- தூசு தட்டப் படுகிறது!
- மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்
- என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
- அந்த ஒருவன்…
- பிரியாவிடை:
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
- எதிர் வரும் நிறம்
- அவள் ….
- ஸ்வரதாளங்கள்..
- வலி
- வட்டத்துக்குள் சதுரம்
- 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7
- அபியும் அப்பாவும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
- நினைவுகளின் தடத்தில் – (72)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)
- பூமராங்
- ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.
- “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “
- ஓரிடம்நோக்கி…
- சோ.சுப்புராஜ் கவிதைகள்
- நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!
- அழையா விருந்தாளிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
- தூரிகையின் முத்தம்.
- விழிப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
- பகுப்பாய்வின் நிறைவு