செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை

This entry is part 20 of 32 in the series 24 ஜூலை 2011

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”. தலைப்பே சற்று அதிர்வைத் தருகிறது இல்லையா? ஞாபகம் அற்றுப் போவது எவருக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது. மூப்பினால் ஆகலாம். ஏதேனும் அழுத்தத்தால் ஆகலாம். பிணியினால் நேரலாம். எப்படியேனும் நாம் வாழ்ந்த வாழ்வு, சந்தித்த மனிதர்கள், நித்தம் கடந்த நிமிடங்கள் என எல்லாமே முற்றிலுமாய் அற்றுப் போகும் ஒரு நாள் வந்தே தீரும். அது எப்படி அமையும்? சர்வ சாதாரணமாகச் சொல்லியதாலேயே தலைப்புக் கவிதை கனம் கூடிப் போய். வாழ்வோடு, சமகால நிகழ்வுகளையும் பதிய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்த அற்புதமான இத்தலைப்பை, நியாயப் படுத்தியிருக்கிறது தொகுப்பின் 52 கவிதைகளும்.

எழுத்து என்பதே அதுதானே. சிலர் கதைகளாக, கட்டுரைகளாக தமது அடையாளங்களை, தாம் பார்த்த சமூகத்தின் போக்குகளை, எதிர்கொண்ட மானுடர் ஏற்படுத்திய உணர்வுகளை ஆவணப்படுத்திச் செல்லுகிறார்கள். இங்கு செல்வராஜ் ஜெகதீசனுக்கு அது கவிதைகளில் கைகூடி வந்திருக்கிறது வெகு சுலபமாக.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் 2008-ல் திண்ணை இணைய தளத்தில் எனக்கு அறிமுகமாயின. தொடர்ந்து நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களிலும் கல்கி, யுகமாயினி, அகநாழிகை, நவீன விருட்சம் போன்ற பல பத்திரிகைகளிலும் பரவலாக எழுதி வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர் அபுதாபியில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

2008, 2009 என அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அந்தரங்கம்’,‘இன்ன பிறவும்’ என முதலிரண்டு தொகுப்புகளை வெளியிட்டுக் கவிஞரை சிறப்பித்திருக்கிறது அகரம் பதிப்பகம். இது மூன்றாவது. அகநாழிகை வெளியீடு. முன்னுரை மொழிந்திருப்பவர் கவிஞர் கல்யாண்ஜி என்பதுவே போதும் கவிதைகளுக்குக் கட்டியங் கூற.

தொகுப்பிலுள்ள பல கவிதைகள் நான் ஏற்கனவே இணைய இதழ்களிலும், அவரது வலைப்பக்கத்திலும் வாசித்திருந்தாலும் ஒருசேர வாசிக்கையில் அன்றாடங்களைப் பற்றியதான அவரது அவதானிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மறுமுறை” கவிதையில்,

நன்றி தெரிவிக்கும் பொருட்டு

நீட்டப்படும் கைகளை

நன்றாகவே பற்றிக்

குலுக்கலாம் நீங்கள்

மறுமுறை வாய்க்காமலே

மறுதலிக்கப்படலாம்

மலர்ந்த முகத்தோடு பிரியும்

மற்றொரு சந்திப்பு.

நடைபாதை சித்திரம்” ஒன்றை நம்முள் விரிய வைத்துத் தன் வேதனையைப் பகிருகிறார். ஒரு சாண் வயிற்றுக்காக ஓயாமல் உழைக்கும் கடைநிலை ஊழியரின் வாழ்க்கைப் போராட்டத்தை, ஓடிக்குறைக்க இயலும் தன் வளர்ந்த வயிற்றுடன் ஒப்பிட்டு சமூக இடைவெளியைக் காட்டுகிறார் “வயிறு” கவிதையில். உடல் உழைப்புக்கு உரிய நியாயம் கிடைக்காத உலகமல்லவா இது? எதிர் கேள்வி கேட்காத “கிடை ஆடுகள்” மானுடருக்கு எத்தனை ருசியானவை என மனதை உதற வைக்கிறார். “விளம்பரங்களில்” வகுபட்டுப் பின்னமாகிக் கொண்டிருக்கும் பொழுதுகளைச் சாடுகிறார். “முன் முடிவுகளற்று இருப்பது” குறித்து முழுமூச்சாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகளைக் கொண்டாடுகிறார் சில கவிதைகளில். “பெரிய ரப்பர்” ரசிக்க வைக்கிறது. “நண்பர்கள் வட்டம்” கேட்கிற கேள்வி சுய பரிசோதனைக்கு உதவுகிறது. புலால் கடையிலிருந்து “பின் தொடரும் நிழல்” வன் கொடுமையை வாழ்வில் இயல்பானதாக எடுத்துக் கொண்டு விட்ட மனிதரைச் சாடுகிறது.

சிறுகவிதைகளில் ஒன்று,

பறத்தல் என்பதைத் தவிர

வேறெந்த முகாந்திரம்

இருக்கப் போகிறது

வெளிர் நீல வானில்

மிதந்தலையும் அந்த

வெண்ணிறப் பறவைக்கு.

‘பறத்தல்’தனை வாழ்தல் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகின்றது எனக்கு. இவர் போல வாழ்வாதாரத்துக்காக ஊரையும் உறவுகளையும் விட்டுப் பிரிந்தவர் தனிமையில் உணரும் வெறுமையை ஆதங்கத்துடன் பேசுவதாகப் படுகிறது. அப்படித் தோன்றக் காரணிகளாக பிரிவின் துயரைப் பேசுகின்றன “ரயில் கவிதைகள்.” தவிரவும் “விமான நிலைய வரவேற்பொன்றில்” ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்ப்பட்டவனிடம் தனையே பொருத்திப் பார்க்கிறாறோ கவிஞர்? அவனை நோக்கித் தவழவிட்டப் புன்னகையைப் பற்றி,

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்

இன்னொரு முகத்தின்

சோகத்தை இம்மியாவது

இடம்பெயர்க்க முடிந்ததென்ற

நிம்மதி எனக்கு’.

இதுவும் கடந்து போகும்” துவண்டு நிற்போருக்கும், துரோகத்தை பார்த்தோருக்கும், துயரில் தத்தளிப்போருக்கும் உலகெங்கும் பரவலாக வழங்கப்படும் ஆறுதல் மொழி. ஆனால்..,

இதுவரைக்கும்

எதுவும் அதுவாய்

கடந்து போனதில்லை’ என்பது அனுபவித்தவருக்கே புரியுமென்பதாக அமைந்து போன பேருண்மை.

தையும்” எனும் இரண்டாவது கவிதையில்..,

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்களேன்

ஏனைய பிற யாவற்றையும் போல

என கேட்டிருப்பது அவசியமில்லாத தவிப்பாக..! ஏனெனில் தொகுப்பை முடிக்கும் போது நன்றாக உணர முடிகின்றது, கால் நனைக்கும் ஓயாத கடலலைகள் பாதங்களுக்கடியிலிருக்கும் மணலோடு நமையும் இழுப்பது போல், தீராத வாழ்வலைகளால் நமை உள்வாங்கும் கவிதைகளை. ஆயினும் அத்யாவசியமானதாகிறது இக்கவிதை

இந்த ஒரு சிறு வாழ்வில்

இந்தளவாவது இயன்றதே என்கிறேன்

எனும் முந்தைய தன்னடக்க வரிகளால். அவையே ஆழ்கடலினின்று ஆகச் சிறந்த ஒரு நன்முத்தைக் கரை ஒதுக்கிச் சென்று விட்டுள்ளன இத்தொகுப்பாக. பத்திரமாகக் கொண்டு சேர்ப்பித்தச் சிப்பியாக அகநாழிகை பதிப்பகம். கவிஞருக்கும் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

***

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

பக்கங்கள்:64 ; விலை:ரூ.50

பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)

புத்தகத்துக்கு அணுகவும் : பொன்.வாசுதேவன் (அகநாழிகை) – 999 454 1010

இணையத்தில் வாங்கிட: [https://www.nhm.in/shop/100-00-0000-081-8.html]

*** ***

 

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதைபழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
author

ராமலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *