பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை

This entry is part 30 of 32 in the series 24 ஜூலை 2011

முகவுரை

உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான்.

இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள்   சிந்தும் ஒளியிலே அமரசக்தியின் பாதங்கள் பிரகாசித்தபடி இருக்கும். அமரசக்தி சகல கலைகளையும் கரை கண்டவன். அவனுக்கு வசுசக்தி, உக்கிரசக்தி, அனந்தசக்தி என்று மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூவரும் பரம முட்டாள்கள். அவர்கள் கல்வி கற்க விருப்பமில்லாமலிப்பதைக் கண்ட அரசன், தனது மந்திரிமார்களை அழைத்து, ”பெரியோர்களே! எனது புத்திரர்கள் கல்வியை வெறுக்கிறார்கள், விவேகமின்றி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லா இடுக்கண்களையும் களைந்து சீர் மிகுந்து விளங்கும் இந்த ராஜ்யம் எனக்கு இருந்தும் என்ன பலன்? இவர்களைப் பார்க்கும் போது இந்த ராஜ்யமெல்லாம் எனக்குச் சந்தோஷம் தரவில்லை. ஏனென்றால், ஒரு பழமொழி கூறுவதுபோல,

ஒரு குழந்தை பிறக்காமலிருந்தாலும் அல்லது பிறந்து செத்தாலும் அல்லது மூடக் குழந்தையொன்று செத்துப் பிறந்தாலும் நமக்கு ஏற்படுகிற துன்பம் கொஞ்சந்தான். ஆனால் புத்தியில்லாத குழந்தையைப் பெற்றவனுக்கு வாழ்க்கை முழுவதுமே துன்பம்தான்.

கன்றும் ஈனாமல் பாலும் சுறக்காமல் இருக்கிற பசுவால் யாருக்கு என்ன லாபம்? சொந்தப் புத்தியுமில்லாமல் சொல்கிற புத்தியையும் கேட்காத பிள்ளையினால் என்ன பயன்?

ஆகவே இவர்களுக்குப் புத்தியுண்டாகி வளர்வதற்குத் தகுந்த உபாயம் செய்ய வேண்டும்” என்றான்.

”அரசே! முதலில் இலக்கணத்தைக் கற்க வேண்டும். அதற்குப் பன்னிரெண்டு வருஷங்கள் பிடிக்கும். அதை ஓரளவுக்குக் கற்றபின், அறம் பொருள் என்கிற இரண்டு சாஸ்திரங்களையும் கற்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அறிவு மலர்ச்சியடைகிறது” என்று மந்திரிகள் ஒவ்வொருவராகப் பதில் சொன்னார்கள்.

அவர்களில் சுமதி என்கிற மந்திரி மட்டும் பின்வருமாறு சொன்னான்: “அரசே! இந்த வாழ்க்கையோ நிலை இல்லாதது. இலக்கணம் கற்பதற்கோ ரொம்பக்காலம் வேண்டியிருக்கிறது. ஆகவே, அவர்கள் அறிவு பெற்று வளர்வதற்குச் சுருக்கான மார்க்கங்கள் தேடுவதுதான் நல்லது. ஒரு பழமொழி உண்டு:
இலக்கண சாஸ்திரம் முடிவற்றது. ஆனால், ஆயுளோ குறைவானது. அதிலும் அநேகத் தடங்கல் வந்து போகும். எனவே, அன்னப்பறவை நீரில் கலந்த பாலை மட்டும் பிரித்துக் குடிப்பதுபோல் சாரமுள்ள விஷயங்களை மட்டுமே நினைவில் பதிய வைக்க வேண்டும்.

பல சாஸ்திரங்களில் நிபுணர் என்று புகழ் பெற்ற விஷ்ணு சர்மன் என்ற பிராம்மணர் ஒருவர் இங்கு இருக்கிறார். அவரிடம் இவர்களை ஒப்படையுங்கள். நிச்சயமாக இவர்களை வெகு சீக்கிரத்தில் புத்திசாலிகளாக ஆக்கிவிடுவார்” என்றான்.

அரசன் விஷ்ணுசர்மனை வரவழைத்தான். ”சுவாமி! தயை செய்யுங்கள். என் புதல்வர்களை உலக அறிவில் இணையற்றவர்களாகச் செய்ய வழி பாருங்கள். அதற்குக் கைம்மாறாக நூறு வேலி நிலம் தங்களுக்குத் தருகிறேன்” என்று அரசன் கூறினான்.

”அரசே, கேளுங்கள், நான் பேசுவது உண்மை. நூறு வேலி நிலத்துக்காக நான் கல்வியை விற்பவனல்ல. ஆறுமாத காலத்தில் இவர்களை நீதி சாஸ்திரங்களில் தேர்ச்சி பெறச் செய்யாவிட்டால் என் பெயர் விஷ்ணுசர்மன் இல்லை. பேச்சை வளர்ப்பானேன்? எனது சிம்ம கர்ஜனையைக் கேளுங்கள். பணத்தாசை பிடித்துப் பேசவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியவன் நான். வயதும் எண்பது ஆகிவிட்டது; எனக்குப் பணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே, இதை ஒரு விளையாட்டு என்று கருதி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்குள் உமது குமாரர்களை நீதி சாஸ்திரங்களில் இணையற்று விளங்கும்படி செய்யாமற் போனால் பிறகு என்னை அவமானப்படுத்துங்கள்” என்றார் விஷ்ணுசர்மன்.

மந்திரி பிரதானிகள் புடைசூழ அமர்ந்திருந்த அரசன் விஷ்ணு சர்மனின் பிரதிக்ஞையைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். அவரிடம் தன் குமாரர்களை ஒப்படைத்து மிகுந்த மனநிம்மதி அடைந்தான். அரசகுமாரர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுசர்மன் வீடுபோய்ச் சேர்ந்தார். நட்பறுத்தல்; நட்படைதல்; காகங்களும் ஆந்தைகளும்; அடைந்ததை அழித்தல்; கவனமற்ற செய்கை என்கிற ஐந்து தந்திரங்களைப் புனைந்து விஷ்ணுசர்மன் அவர்களுக்குப் போதித்தார். அரச குமாரர்களும் அவற்றை மனப்பாடம் செய்து, அவர் வாக்குப்படி ஆறுமாத காலத்திற்குள் புத்திசாலிகளாக ஆனார்கள். அன்று முதல், பஞ்சதந்திரம் என்கிற இந்த நீதி சாஸ்திரம் குழந்தைகள் அறிவு வளர்ச்சி பெறும் பொருட்டு உலகெங்கும் பரவியது.

அதிகம் சொல்வானேன்?

இந்த நீதி சாஸ்திரத்தை யார் மனப்பாடம் செய்கிறார்களோ அல்லது காது கொடுத்துக் கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்திரனே எதிரியாக வந்து குறுக்கிட்டாலும் வாழ்க்கையில் தோல்வி கிடையாது.

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
author

க்ருஷாங்கினி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *