இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

This entry is part 1 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன்.
கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி நாடறியச் செய்து விடுகிறார்கள் என்பதாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டைப் பிடித்த சாபக் கேடோ என்னவோ, இங்கு எழுதுபவனெல்லாம் அவனவன் மன உந்துதலுக்கும், மன சாந்திக்கும், மன எழுச்சிக்கும், உள் மனப் புழுக்கத்திற்கும், மனத்தின் அதீதத் தாக்கத்துக்கும், வடிகாலாக மட்டுமே என்று எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். யாரைக் கேட்டு நான் எழுத வந்தேன். எனக்குத் தோன்றுகிறது எழுதுகிறேன் உனக்குப் பிடித்தால் படி இல்லையென்றால் விடு, என்கிற ஒரு பிடிவாதத்தின்பாற்பட்டு தொடர்ந்த முயற்சிகளில் ஆட்பட்டு, அவரவர் மனதிற்கு எது உகந்ததாகத் தோன்றுகிறதோ அதை, எது நியாயமாகப் படுகிறதோ அதை, எதைச் சொல்ல வேண்டும் என்று உந்துதல் ஏற்படுகிறதோ அதை, எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நல்ல விஷயங்களும் உண்டு, தாங்க முடியாத மன வக்கிரங்களும் உண்டு. எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எவன் கேட்பது? இதெல்லாம் என் வாழ்க்கையில் இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம்? உன் வாழ்க்கையில் உள்ள அசிங்கங்களைச் சொன்னால் அது உனக்குக் கசக்கிறதா? அருவருப்பாக இருக்கிறதா? இல்லையென்று மறுக்க முடியுமா உன்னால்? நாங்கள் உடல் மொழியைச் சொல்லுகிறோமய்யா! அது படும் அவஸ்தைகளை விவரிக்கிறோமய்யா! அதனால் உண்டாகும் பாடுகளை, மனப்புழுக்கங்களை விஸ்தரிக்கிறோமய்யா! என்று என்னத்தையாவது பதிலாகச் சொல்லுவார்கள்.
இன்னும் தமிழ்நாட்டு எழுத்துவகையில் சொல்லப்படாதது ஒன்றே ஒன்றுதான். மனைவியோடு எப்படியெல்லாம் இஞ்ச் பை இஞ்ச்சாக சம்போகித்தேன் என்பதை மட்டும்தான். அதையும் வெட்கமின்றி, கூச்சநாச்சமின்றி, அம்மணக்குண்டியோடு சொல்ல ஒரு எழுத்தாளர் விரைவில் வந்தாலும் வரலாம். இல்லை ஏற்கனவே சொல்லியாயிற்றோ என்னவோ? யார்ரா இவன் கூகை? அதெல்லாம் நாங்க எப்பவே சொல்லிட்டோம்? இந்தக் கிறுக்கன் எதையுமே படிக்கிறதில்லை போலிருக்கு? என்று எந்த மூலையிலிருந்தாவது பதில் வந்தாலும் வரலாம். அப்படியான படைப்புக்களை, நவீன யதார்த்தம், மாய யதார்த்தம், என்று எதையாவது சொல்லிக்கொண்டு அவரைப் பாராட்டவும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவும் நிச்சயம் ஒரு குழு முன்வரக்கூடும்.
ஆம்! குழு குழுவாகத்தானே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ஒரு குழுவுக்கு மற்றவனைப் பிடிக்காது. இவனுக்கு அவனைப் பிடிக்காது. அவனுக்கு இவனைப் பிடிக்காது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இப்படிக் குழு அமைத்து இயங்குவது கூட ஒரு இலக்கிய அரசியலோ? என்று கூட நமக்குத் தோன்றக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு குழுவின் கையிலும் சில பதிப்பகங்கள் உள்ளன. நம்மின் எழுத்துக்களைப் போட வேண்டுமே…தொடர்ந்து அவை புத்தகங்களாக வர வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் இப்போதைக்கு இப்படி இயங்குவோம், பிறகு காலப் போக்கில் நிறம் மாறுவது போல் தோன்றினால் நாமும் நம்மின் நிறத்தை மாற்றிக் கொள்ளுவோம்…என்பதாக முடிவு செய்து படு உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ படைப்புக்களையெல்லாம் படித்தாயிற்று. புரட்டியாயிற்று. அவன் இவனோடு படுத்தது, அவள் இவளோடு படுத்தது, வேலைக்காரியோடு போனது, வீட்டுக்காரிய மாற்றினது, மாமியாரை நோங்கியது, மச்சினியை வைத்திருப்பது, சுய சந்தோஷம், கனவு சந்தோஷம், நனவு சந்தோஷம், இப்படி என்னென்ன வகையிலெல்லாம் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்க முடியுமோ, சாக்கடையாக்கிக் கலக்கி ஊற்ற முடியுமோ அத்தனை வகையான எழுத்துக்களும்தான் வந்து கொண்டேயிருக்கிறது. இல்லையென்று மறுக்க முடியுமா?
நவீஈஈஈஈஈஈஈஈன இலக்கியம் என்பது இதுதான் என்று நிறுவுவது போலிருக்கிறது இப்படைப்புக்கள். நிறுவியாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம்தான் பழைய விழுமியங்கள் எல்லாவற்றையும் மறக்கத் தயாராகிவிட்டோமே! கலையும் இலக்கியமும் இந்தச் சமுதாயத்திற்காக என்பதை மறுதலித்துவிட்டு, கலை கலைக்காகவே என்று நன்நோக்கில் சொல்லப்பட்டதைக் கொச்சையாக்குவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் நாங்க சொல்றதெல்லாம் கலைதாங்க, நீங்க படிக்கலேன்னா அதுக்கு நாங்க என்ன செய்றது? என்று விட்டேற்றியாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டு, கற்பனையில் எழுத்தின் மூலம் கூட எங்களால் சுய இன்பம் காண முடியும், உடலுறவு கொள்ள முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.
எது எப்படிப் போனால் என்ன? காலத்தால் நிற்க வேண்டியது நிற்கும். அழிந்துபடுவது அழிந்துபோகும். அப்படித்தான் விடாமல் இந்த 74 வயதிலும் எழுதிக்கொண்டேயிருக்கிறார் ஒருவர். அவர் மணிக்கொடிக்கால எழுத்தாளர். மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு சமமாகப் படைப்புக்களைத் தந்தவர். அதற்குப்பின் நாற்பதுகளில் எழுதிய பல அரிய படைப்பாளிகளோடு அன்றாடம் விடாமல் பழக்கம் கொண்டவர். அவரது கடைப்பக்கம் வந்து போகாத படைப்பாளிகளே கிடையாது. ஊரெல்லாம் அலைந்துவிட்டு, அங்கு படுத்து ஓய்வு எடுக்காதவரே கிடையாது. அவரது வீட்டுக்குச் சென்று விருந்துண்டுவிட்டு, அவரோடு இலக்கியப் பகிர்வு செய்து கொண்டுவிட்டு, ஒருநாள் ரெண்டு நாளேனும் தங்கிவிட்டுச் செல்லாதவரே கிடையாது. ஐம்பதுகளில் ஜெயகாந்தனுக்கு இணையாக எழுதியவர் அவர். பத்துச் சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து ஜெயகாந்தன் அளித்திருந்தார் எனில், அதற்கு இணையாக ஐந்தாவது படைத்துத் தன்னை நிறுத்தியிருப்பார் இவர்.
இன்று இணையதளத்திலும், எழுதிவைத்த பல புத்தகங்களையும் படித்துவிட்டு, தொகுத்துக் கொடுத்துப் புத்தகங்களாக தங்கள் பெயரினைப் போட்டு வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படியான பல அரிய தகவல்களை, பல சரித்திர நிகழ்வுகளை, சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றிய பெருமைகளை, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின், இடங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய நினைவுகளை, அல்லது அழிந்துபட்ட விழுமியங்கள்பற்றிய ஆற்றொணாத் துயரங்களை, தன் புத்திக்குள்ளேயே, தன் நினைவுகளுக்குள்ளேயே, புதையலாய் வைத்துப் பாதுகாத்து வருபவர் இவர்.
இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் எழுதியவர். தமிழக அரசின் பரிசினைப் பெற்றவர். அவர்கள் எங்கே போனார்கள் என்கிற ஒரு கட்டுரைப் புத்தகத்தை மட்டும் வாங்கிப் படித்துப் பாருங்கள். அவரின் பெருமை புரியும் உங்களுக்கு. கி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை (20 தமிழ்ப் படைப்பாளிகள்) என்று ஒரு புத்தகத்தை நர்மதா பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது. கி.வா.ஜ., சி.சு.செ., ஜீவா, கு.அழகிரிசாமி, சூடாமணி, லா.ச.ரா., கி.ரா., ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், தொ.மு.சி., அகிலன், கடைசியாக வண்ணதாசன் என்று இந்த அற்புதப் படைப்பாளிகளைப் பற்றி அவரிடமிருந்து வெளிவரும் தகவல்கள் இருக்கிறதே அதெல்லாம் உங்கள் வாழ்நாளில் உங்களால் எங்கிருந்தும் திரட்ட முடியாது. தகவல் களஞ்சியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெருமை மிகு படைப்பாளி வேறு யாருமல்ல.
அது திரு கர்ணன் அவர்கள்தான்.
யாரு கர்ணனா? எந்தக் கர்ணனைச் சொல்றீங்க? மகாபாரதக் கர்ணனைத்தான் தெரியும். அதுவும் கொஞ்சம் கொஞ்சம். கர்ணன் படத்துல கர்ணனா ஆக்ட் குடுத்த நம்ப சிவாஜியைத் தெரியும்…வேறு யாரு கர்ணன்? நாமெல்லாம் படைப்பாளிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறோம்.(அதென்ன படைப்பாளி என்று உன்னைவேறு நீ சேர்த்துக் கொள்கிறாய், நாங்க அப்டிச் சொல்லலியே என்று நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை) ஒரு படைப்பாளிக்குத் தன் தலைமுறைபற்றி மட்டும் தெரிந்தால் போதாது. நாலு தலைமுறை, ஐந்து தலைமுறை என்றாவது அவன் குறைந்தபட்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே சத்தியமான உண்மை. குறைந்தபட்சம் அதற்கு முயற்சியாவது பண்ணலாமே!
நான் திரு கர்ணன் அவர்களை அறிவேன். அவரின் படைப்புக்களைப் பற்றி அறிவேன். நான்கு தலைமுறைக்கு முந்திய மூத்த முதிர்ச்சியான அற்புதப் படைப்பாளி என்பதை நன்கறிவேன். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்லிவிட்டேன். இது வெறும் முகவுரைதான். முன்னுரையல்ல. அது அவரின் அற்புதமான காணக்கிடைக்காத படைப்புக்களைப் பற்றிய மதிப்புரை. அதை இந்த எழுத்துலகம் உணர வேண்டும். குறைந்தபட்சம் அவரின் படைப்புக்கள் எங்கு கிடைக்கிறது என்று தேடிப்பிடித்தாவது வாங்கிக் படிக்க முனைய வேண்டும் என்கிற தீராத அவா. யாரும் சொல்லவேயில்லை என்கிற பழி தீர்ந்தது இதன் மூலம். நன்றி!

Series Navigationகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  arshiya.s says:

  அன்பான நண்பர் உஷாதீபனுக்கு நல்ல பதிவு அருகிருந்தும் எழுத மறந்தது வருத்தமாக இருக்கிறது அதை நீங்கள் நன்றாகவே பதிவு செய்து இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்

 2. Avatar
  ushadeepan says:

  அன்பு நண்பா்க்கு, கா்ணன் மிகவும் தோ்ந்த படைப்பாளி. நாம் படித்தும், குறிப்பெடுத்தும், எழுதமுடியாதவை பலவற்றையும் அவா் நினைவிலேயே வைத்திருப்பவா். இந்தத் தமிழ்நாட்டின் சாபக்கேடு அவா் இளம்தலைமுறையினரால் அறியப்படாதவராய் இருக்கிறார. தேசபக்தியும் தெய்வபக்தியும் மிக்க தத்துவார்த்தங்கள் பலவற்றை உள்ளடக்கிய முதிர்ந்த படைப்பாளி அவா். அவரை அறியாமலும் போற்றாமலும் இந்தத் தமிழ் எழுத்துலகத்தின் பெரும் சாபக்கேடு. அன்பன் உஷாதீபன்

 3. Avatar
  கலையரசி says:

  இவரைப் பற்றி இன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.
  அவரது படைப்புக்கள் பற்றிய (நூலின் பெயர், பதிப்பக விலாசம்) முழுமையான விபரங்கள் தந்தால் வாங்கிப் படிக்க உதவியாய் இருக்கும்.
  நல்ல ஒரு படைப்பாளியைப் பற்றிய முகவுரைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *