பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்

This entry is part 35 of 37 in the series 18 செப்டம்பர் 2011

காகமும் கருநாகமும்

 

ரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து பெரிதாவதற்கு முன்பே, அந்த மரத்தின் பொந்தில் இருந்த ஒரு கருநாகம் மேலேறி வந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். இந்த அக்கிரமத்தால் காக்கைக்கு எவ்வளவோ மனோ வேதனை ஏற்பட்ட போதிலும், வெகுகாலமாக வசித்த ஒரு பாசத்தால் அந்த ஆல மரத்தை விட்டு வேறு மரத்துக்குப் போக அதற்கு மனம் வரவில்லை.

எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் மானும், கோழையும், காகமும் இருக்கிற இடத்தை விட்டுப் பெயர்ந்து போக மாட்டார்கள். ஆனால், சிங்கமும், தைரியசாலியும், யானையும் உடனே வெளியேறி வேறிடம் செல்கின்றனர்.

 

கடைசியில் பெண் காகம் தன் கணவன் கால்களில் விழுந்து, ”நாதா! நம் குழந்தைகளையெல்லாம் இந்தக் கொடிய பாம்பு சாப்பிட்டு வருகிறது. அன்புக் குழந்தைகளை இழந்து என்னால் துக்கம் தாள முடியவில்லை வேறெங்காவது போய்விடலாம் என்று தோன்றுகிறது. வேறொரு மரத்துக்குப் போய்விட்டாலென்ன?

 

ஆரோக்கியத்துக்கு ஒப்பான நண்பன் வேறு யாருமில்லை; நோய்க்கு ஒப்பான விரோதி வேறு யாருமில்லை; குழந்தை அன்புக்கு ஒப்பான அன்பு வேறெதுவு மில்லை; பசிக்கு ஒப்பான வேதனை வேறெதுவுமில்லை.

 

நதிக்கரையில் நிலபுலன்களுடையவன், சோரம் போகும் மனைவியுடையவன், பாம்பு வாசம் செய்கிற வீட்டிலிருப்பவன் இவர்களுக்கு மனோ நிம்மதி என்றைக்கும் கிடையாது.

 

நாம் பிரணாபத்தான நிலைமையில் இருந்து வருகிறோம்” என்றது பெண் காகம்.

 

காக்கைக்கு ஒரே துக்கமாய்ப் போயிற்று. ”அன்பே! ரொம்ப நாளாக இங்கே இருந்து வருகிறோம். இதைவிட்டுச் செல்லமுடியாது. காரணம், கேள்!

 

நீரும், புல்லும் கிடைக்கிற இடத்திலெல்லாம் மான் வாழ முடியும். என்றாலும், மானை எவ்வளவவோ அவமானப் படுத்தினாலுங்கூட தான் பிறந்து வளர்ந்த காட்டை அது விட்டுச் செல்வதில்லை.

 

நீ பொறு, கொடிய சத்ருவும் படுபாவியுமான அந்தப் பாம்பை கொல்வதற்கு உபாயம் கண்டு பிடிக்கிறேன்” என்றது.

 

”கொடிய விஷமுள்ள பாம்பு ஆயிற்றே! நீங்கள் எப்படிக் கொல்வீர்கள்!”

 

”அன்பே! அதைக் கொல்ல எனக்குப் பலமில்லைதான் என்றாலும் பரவாயில்லை. நீதி சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்த நண்பர்கள் பலர் எனக்குண்டு. இந்தக் கெட்ட எண்ணங்கொண்ட துஷ்டனை நாசம் செய்வதற்குத் தகுந்த உபாயத்தை அவர்களிடம் கேட்டறிந்து வருகிறேன்” என்று ஆத்திரம் பொங்கக் கூறிவிட்டு இன்னொரு மரத்துக்குப் போயிற்று. அந்த மரத்தடியில் அதன் நெருங்கிய நண்பனான நரி ஒன்று இருந்தது. வணக்கத்துடன் நரியைக் கூப்பிட்டு காக்கை தன் சோகக் கதையைச் சொல்லிற்று. ”நண்பனே! என்ன செய்தால் சரி என்று நினைக்கிறாய்? குழந்தைகளைக் கொல்வது என்னையும் என் மனைவியையும் கொல்வது போலிருக்கிறது” என்றது.

 

”நண்பனே! நன்றாய் யோசித்தேன். நீ அதைரியப்படாதே. அந்தக் கருநாகத்துக்குச் சாவு சமீபத்துவிட்டதில் சந்தேகமில்லை. ஏனென்றால்:

 

தீமை புரிபவனுக்குக் கெடுதி செய்ய நீ யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதேயில்லை. நதிக்கரையிலுள்ள மரம் வீழ்வதுபோல் அவன் தானாகவே வீழ்ச்சியடைவான்.

 

இதைக்கேள்.

 

பேராசையுள்ள ஒரு கொக்கு நிறைய மீன் சாப்பிட விரும்பி நல்ல மீன் கெட்ட மீன் என்று வகை தொகை பாராமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு நண்டின் பிடியில் சிக்கி உயிர்விட்டது”

 

என்றது நரி.

 

”அது எப்படி?” என்று காக்கை கேட்க, நரி சொல்லத் தொடங்கியது.

 

கொக்கும் நண்டும்

 

எங்கோ ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு கிழட்டுக் கொக்கு. சிரமமில்லாமல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்கு என்ன வழி என்று அது யோசித்தது. குளக்கரையருகில் போய் நின்று கொண்டது. கிட்ட நெருங்கிய மீன்களைக்கூட அது கொத்தாமலே இருந்தது. மீன்களைத் தின்ன தனக்கு ஆசை எதுவும்  இல்லாததுபோல் பாசாங்கு செய்தது.

 

அந்த மீன்கள் மத்தியிலே ஒரு நண்டும் இருந்து வந்தது. அது நெருங்கி வந்து, ”மாமா! வழக்கத்திற்கு மாறாக எதையும் தின்னாமல், விளையாடாமல் இன்றைக்கு இருக்கிறீர்களே, ஏன்?” என்று கேட்டது.

 

”மீன்களைத் தின்கிறவரை நான் புஷ்டியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து வந்தேன். உங்களை ருசி பார்த்துச் சுகமாகக் காலம் கழித்து வந்தேன். ஆனால் உங்களுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வரப்போகிறது. அதனால் கிழப்பருவத்தில் என் சுகஜீவனத்துக்கும் கேடு வரும். அதை நினைந்து மனம் சோர்ந்து நிற்கிறேன்” என்றது கொக்கு.

 

”அதென்ன ஆபத்து, மாமா?”

 

”குளக்கரையோரமாய்ச் செம்படவர்கள் பலபேர் பேசிக்கொண்டு போனதைக் கேட்டேன். ‘இது பெரிய குளம். மீன்கள் நிறைய இருக்கின்றன. நாளைக்கோ மறுநாளைக்கோ வந்து வலை வீசுவோம். இன்றைக்கு நகரத்தின் அருகிலுள்ள ஏரிக்குப் போகலாம்’ என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் நீங்களும் சாகப் போகிறீர்கள். நானும் உணவில்லாம் சாகப் போகிறேன். அதை நினைக்க நினைக்க எனக்கு வருத்தமாயிருக்கிறது. சாப்பாட்டில் இன்று மனம் செல்லவில்லை” என்றது கொக்கு.

 

அந்த வஞ்சகனின் சொற்களைக் கேட்டு ஜலராசிகள் எல்லாம் உயிருக்குப் பயந்து போயின. எல்லோரும் கூட, ”மாமா! அப்பா! அண்ணா! நண்பா! மதிவாணா! அபாயத்தைக் கேட்ட நீ உபாயமும் அறிந்திருப்பாய். சாவின் வாயிலிருந்து எங்களைக் காப்பாற்று!” என்று வேண்டிக்கொண்டன.

 

”நான் ஒரு பறவை. மனிதனோடு என்னால் சண்டைபோட முடியாது. ஆனால் ஒன்று செய்ய முடியும். உங்களையெல்லாம் இந்தக் குளத்திலிருந்து வேறொரு ஆழங்காணாத குளத்திற்கு மாற்றிவிட முடியும்” என்றது கொக்கு.

 

இந்தச் சாகஸப் பேச்சில் அவை எல்லாம் மதிமோசம் போய், ”மாமா! நண்பா! சுயநலமில்லாத பந்துவே! முதலில் என்னைக் கொண்டுபோ! இல்லை, என்னைக் கொண்டுபோ! இந்தப் பழமொழியை நீ கேட்டதில்லையா?

 

தன்னல மறுப்புடன் உதவி செய்வதில் உதவி செய்வதில் திடச்சித்த முடையவர்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள். உயிர் போனாலும் போகட்டும், நண்பனுக்கு நன்மை செய்தால் சரி என்று கருகின்றனர்

 

என்று ஒரே சமயத்தில் ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று கேட்டுக் கொள்ளத் தொடங்கின.

 

அந்தக் கிழட்டுப் போக்கிரி அதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டது. தன் மனதுக்குள்ளேயே, ”நம் புத்தி சாதுரியத்தால் மீன்கள் எல்லாம் நம் வசமாகிவிட்டன. இனி நிம்மதியாகச் சாப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்துகொண்டது. அவை வேண்டிக்கொண்டபடி சபதம் செய்து, சில மீன்களை அலகால் தூக்கிக்கொண்டு கொஞ்சதூரம் போய் ஒரு கற்பாறை மீது வைத்துச் சாப்பிட்டது. ஒவ்வொருநாளும் இப்படி மீன்களைக் கொண்டு போவதிலே அதற்கு ஒரே கொண்டாட்டமும் திருப்தியுமாயிருந்தது. மீன்களைப் பார்க்கும் போதெல்லாம் புதிய புதிய பொய்களைச் சொல்லி நம்பவைத்து வந்தது.

 

மரணபயம் அடைந்த நண்டும் ஒருநாள் அதனையணுகி, “மாமா, என்னையும் சாவின் வாயிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று வேண்டிக் கொண்டது. கொக்கு யோசிக்கத்தொடங்கியது. “ஒரேமாதிரியான மீன் மாமிசம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்து விட்டது. இந்த நண்டை ருசி பார்த்தால் என்ன? அபூர்வமாயும் இருக்கும், விசேஷமாயும் இருக்கும்” என்று எண்ணம் கொண்டது. நண்டைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறந்தது. நீர்நிலை களையெல்லாம் விட்டுவிட்டு வெயிலில் காய்ந்த பாறையை நோக்கி கொக்கு பறந்து செல்வதைக்கண்ட நண்டு, “மாமா, ஆழங்காணாத குளம் ஒன்று இருக்கிறது என்று சொன்னீர்களே, அது எங்கே? “ என்று கேட்டது. கொக்கு சிரித்துக் கொண்டே, “அதோ வெய்யிலில் காய்ந்த விலாசமான அந்தக் கற்பாறை தெரிகிறதா? எல்லா ஜலராசிகளும் அங்கேதான் ஓய்வும் நிம்மதியும் கண்டன. இப்போது நீயும் காணப்போகிறாய்” என்றது.

 

நண்டு கீழே பார்த்தது. மீன்களின் எலும்புகள் மலைபோல் குவிந்து பலிபீடம் போல் காணப்பட்ட பயங்கரமான ஒரு பெரிய கற்பாறை தெரிந்தது. நண்டு உடனே யோசிக்கத் தொடங்கியது.

“ஐயையோ!

தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகச் சினேகிதர்கள் சத்ரு ரூபத்திலும், சத்ருக்கள் சினேகிதர் ரூபத்திலும் வருகிறார்கள். இவர்களில் சிலரைத்தான் உலகில் கண்டுகொள்ள முடிகிறது.

 

நடிப்பு நண்பர்களோடும், முட்டாள் நண்பர்களோடும், சஞ்சலபுத்தி உள்ள நண்பர்களோடும், பாபநோக்கமுள்ள நண்பர்களோடும் சகவாசம் கொள்கிறதைக் காட்டிலும் பாம்புடன் விளையாடுவதும், துரோகமிழைக்கும் சத்ருவுடன் கூடி வசிப்பதும் எவ்வளவோ மேல்.

 

மீன்கள் அனைத்தையும் தின்றுவிட்டிருக்கிறதே! அதோ குவியல் குவியலாக அவற்றின் எலும்புகள் சுற்றிலும் கிடப்பது தெரிகிறதே. இந்த நிலையில் எது செய்தால் சரி? சரிதான், இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?

 

தப்பானவழியில் போகிறவன், மமதை கொண்டிருப் பவன், கடமையறியாதவன்,-அவர்கள் உன் குருவாயிருந்தாலும் அவர்களைத் தண்டிக்க சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

 

எதிரே வராதவரையில் பயப்படத்தக்கவைபற்றிப் பயப்படு. எதிரே வந்தபின் பயமின்றி அவற்றைத் தாக்கு!

 

ஆகவே, அங்கே என்னைக் கொண்டுபோய் போடுவதற்கு முன்பே எனது நான்கு கூரிய கொடுக்குகளால் கொக்கின் கழுத்தைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று தீர்மானித்தது.

 

அப்படியே அதன் கழுத்தை நண்டு தன் கொடுக்குகளால் பற்றிக்கொண்டதும் கொக்கு தப்பிக்க முயற்சித்தது. என்றாலும், கொக்குதான் மந்தபுத்தி உடையதாயிற்றே! நண்டின் கொடுக்குகளிலிருந்து தப்பிக்க வகைதெரியாமல் தலை வெட்டுண்டு செத்தது.

 

தாமரைத் தண்டு போலிருந்த கொக்கின் கழுத்தைக் கவ்வியபடியே நண்டு மிகவும் சிரமப்பட்டு மறுபடியும் பழைய குளத்துக்கு வந்து சேர்ந்தது. மீன்களிடம் வந்ததும், “அண்ணா நீ ஏன் திரும்பி வந்தாய்?” என்று அவை கேட்டன. நண்டு கொக்கின் தலையை அடையாளத்துக்காகக் காட்டியபடி, “ இந்தக் கொக்கு பொய்யும் புளுகும் சொல்லி, எல்லா ஜலராசிகளையும் ஏமாற்றி, அருகாமையிலுள்ள கற்பாறைமேல் கொண்டுபோய்ப் போட்டுத் தின்றுவிட்டிருக்கிறது. எனக்கு ஆயுள் கொஞ்சம் மிச்சமிருக்கிறது போல் தெரிகிறது. இது நம்பிக்கை துரோகம் செய்யும் என்று கண்டுகொண்டு கழுத்தைக் கொண்டுவந்தேன். கவலைப்படாதீர்கள். எல்லா ஜலராசிகளும் இன்மேல் சுகமாக இருக்கலாம்” என்றது.

 

அதனால்தான் ‘பேராசையுள்ள கொக்கு…‘என்றெல்லாம் சொல்லுகிறேன் என்றது நரி.

 

“நண்பனே, அந்த துஷ்டப் பாம்பைக் கொல்வதற்கு வழிசொல்” என்று காகம் கேட்டது.

 

“அரசன் வழக்கமாய் வரும் ஏதாவதொரு இடத்துக்குப் போ. அங்கே யாராவது ஒரு பணக்காரன் அஜாக்கிரதையாக வைத்துவிட்ட தங்கச் சங்கிலியையோ, மாலையையோ எடுத்துக்கொண்டு வா. அதைத் தேடி வருகிறவர்கள் பாம்பைக் கண்டுகொல்கிற இடமாகப் பார்த்து அங்கே அதைப் போட்டுவிடு” என்றது நரி.

 

.இதைக் கேட்டவுடனே, ஆண் காகமும், பெண் காகமும் எங்கெங்கோ பறந்து சென்றன. கடைசியில் பெண்காகம் ஏதோவொரு ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தது. அங்கே யாரோ அரசனுடைய அந்தப்புர ஸ்திரீகள் கரயோரத்தில் தங்கச் சங்கிலி, முத்து மாலை, துணிமணிகள், இதர நகைகள் எல்லாவற்றையும் வைத்துவிட்டு நீராடுவதைக் கண்டது. உடனே அது ஒரு தங்கச் சங்கிலியை கொத்திக்கொண்டு தன் மரத்தை நோக்கிப் பறந்தது. காவலாளிகளும், அலிகளும் அது கொத்திச் செல்வதைக் கண்டுவிட்டு தடிகளை எடுத்துக் கொண்டு பிந்தொடர்ந்து ஒரே ஓட்டமாய் ஓடினார்கள். தங்கச் சங்கிலியை காக்கை பாம்புப் பொந்தில் போட்டுவிட்டு, கொஞ்ச தூரம் தள்ளியிருந்த ஒரு மரத்தில் போய் உட்கார்ந்துகொண்டது. ராஜாவின் ஆட்கள் மரத்தில் ஏறியபோது பொந்தில் ஒரு பெரிய நாகம் படமெடுத்து ஆடுவதை கண்டனர். உடனே அதைத் தடிகளால் அடித்துக் கொன்றுவிட்டுத் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு வந்தவழியே திரும்பிப் போயினர். காக்கைக் குடும்பம் அதன்பின் நிம்மதியாக வாழ்ந்தது.

 

அதனால்தான் ‘உடல்பலத்தால் ஆகாததை மனோபலத்தால் முடிக்கமுடியும்..’ என்றெல்லாம் சொல்லுகிறேன்’ என்றது தமனகன். “மேலும் சொல்கிறேன், கேள்:

 

அஜாகிரதையால் கண்ணிழந்த சிலர் எதிரியைப் பலவீனன் என்று அலக்ஷ¢யப் படுத்துகிறனர். ஆனால், முதலில் பலவீனனாயிருந்த எதிரி பின்னால் பலம்பெற்று, தீராத நோய்போல், கட்டுக்கடங்காமல் போகிறான்.

 

ஆகையால் புத்திசாலிக்குல் கிடைபதற்கு அரியது என்று உலகில் ஒன்றுமில்லை. ஒரு பழமொழி உண்டு,

 

அறிவே பலம்; அறிவில்லாதவனுக்கு பலம் கிடையாது. கர்வம் கொண்ட சிங்கத்தைக் காட்டில் முயல் கொன்றது.

 

என்றது தமனகன். “அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லிற்று:   

Series Navigationபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *