முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்

This entry is part 36 of 37 in the series 18 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.”

கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

”எப்பிடி தேங்காவெடல் போடறீங்க! அப்பிடிப் பார்த்தாலும், உங்க மாதிரி அவரை மதிக்கிற, அவமதிக்கிற ஆட்கள் சொல்பம் தான். அதை நீங்க ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? இதைச் சொல்ல எனக்கு கூச்சம் கிடையாது. அவரோட நாவல்களை யெல்லாம் நான் ஒருதடவை, ரெண்டுதடவை அல்ல, அஞ்சாறு தடவை வாசிச்சிருக்கேன். எப்ப வாசிச்சாலும் அவை முன்னைவிட அருமையா இருக்கிறதா பிரமிக்கிறேன். அவருக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எல்லாம் நீங்க வாசிச்சீங்களா?…”

”ஒண்ணு ரெண்டு வாசிச்சேன்.”

”அதையெல்லாம் ஒண்ணுகூட்டி ஒரு கருத்துக்கணிப்பு செஞ்சா… அற்புதமான எழுத்தாளர் அவர்னு தெரியுது. எல்லாக் கட்டுரையும் நான் வாசிச்சேன்.”

”எல்லாரும் ஒரே மாதிரிச் சொன்னாங்கன்னால், கூறியது கூறல் தானே? எதுக்கு இத்தனை கட்டுரை? தேவையே இல்லை.”

அ, என்று பரந்த தோள்களை அலங்கார ஒய்யாரத்துடன் குலுக்கிக்கொண்டார் ராய். பதில் சொல்லவில்லை.

”அவரோட தி டைம்ஸ் லிட். சப். ரொம்ப ஒசத்தியான முயற்சி. (தி டைம்ஸ் பத்திரிகை அவரைப் பற்றி வெளியிட்ட இலக்கிய இணைப்பு.) அவரைப்பத்தி ரொம்ப நல்ல மதிப்பு தந்திருந்தார்கள். அடுத்த குவாட்டர்லி இதழில் கூட திரிஃபீல்ட் பத்தி ஒரு கட்டுரை வருதுன்னு கேள்விப்பட்டேன்…”

”எது எப்படியோ, எனக்கு வாசிக்க சகிக்கல்லியே.”

ராய் புன்னகை தேக்கிய முகத்துடன் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.

”ஊரோட அவரை ஓகோன்னு பேசுது, எழுதுது. இதுல நீங்க ஒருத்தர் அதை ஒத்துப்போகாமல் பேசறது… உங்களுக்கு சிரமமா இல்லியா? கோ. கட்டாத ஊரில் கோ. கட்டியவன் கோமாளி…”

”அதையெல்லாம் நான் கண்டுக்கறதில்லை. நான் ஒரு 35 வருஷமா எழுதிட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியாது… இந்தக் காலக் கெடுவில் எத்தனையோ மேதைகள் நான் பிரமித்து, ஒரு மணி அல்லது ரெண்டு மணி நேர அளவில் தங்கள் புகழ் ஆளுமையை நிறுவிவிட்டு, பிறகு இருளில் காணாமல் போயிருக்கிறார்கள். வெளியேவந்து தகதகவென்று மின்னிவிட்டு உள்ளே போகும் தங்க மீன் போல. அவங்களுக்கெல்லாம் என்னாச்சி, இப்ப எங்க அவங்க என்ன பண்ணிட்டிருக்காங்க? செத்துட்டாங்களா, எதும் பைத்தார ஆஸ்பத்திரில அடைஞ்சிட்டாங்களா… வயித்துப்பாட்டைப் பாப்பம்டான்னு எதுவும் குமாஸ்தா தாத்தாவா கெடக்காங்களா? பாவம். எங்காவது பொட்டல்காட்டுல ஒதுங்கி வாழறாங்களா. டாக்டரைப் பார்க்கப் போனால் அவர்கிட்டயும், வீட்டு வேலைக்காரிகிட்டயும் புத்தகத்தைக் கொடுத்து, படிச்சிப் பார்த்துப் பாராட்டும்படி அவங்க கேட்டிட்டிருக்கலாம்… அப்ப அவர்களைப் பத்தி ஓகோன்னு எழுதிச்சே இதாலியன் பென்ஷன் போன்ற இதழ்கள், இன்னமும் அவை அவர்களை மேதைகள்னு சொல்லுமான்னே புரியல.”

”ஓ அவர்கள் எல்லாருமே குமுட்டியடுப்பு கரிப் பொறிகள்! எனக்கு அவங்களைத் தெரியும்…”

”அவர்களைப் பத்தி நீங்க மேடையில விலாவாரியாப் பேசியிருக்கீங்க.”

”ஆ அது நம்ம கடமை. நம்மால அவங்களுக்கு ஒரு இது பண்ணமுடியும்னா பண்ணிறணும்… இல்லியா? நமக்கு தம்பிடிக்குப் பிரயோசனம் கெடையாதுன்னு வைங்க… என்ன ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பெருந்தன்மையா இதைச் செய்யிறதுதான். ஆனால் எப்பிடின்னாலும், நம்ம திரிஃபீல்ட் அந்த ரகத்தில் வரமாட்டார். அவரது மொத்தப் பங்களிப்பையும் தொகுத்து 37 தொகுதிகள் போட்டிருக்கிறார்கள். ஆக சமீபத்திய பதிப்பு ”சோதிபய்”ல வந்தபோது அதன் விலை 78 பவுண்டு. அவர் பெருமைக்கு இதொண்ணே பத்தாதா? வருடா வருடம் அவர் புத்தகங்கள் விற்பனை கூடிட்டேதான் போயிட்டிருக்கு. கடந்த வருடம்தான் அவர் புத்தக விற்பனையில் தொட்டபெட்டா சிகரம் தொட்ட வருடம்… அதை நான் உறுதியாச் சொல்ல முடியும். நான் அங்க போயிருந்தப்ப திருமதி திரிஃபீல்ட் கணக்குகளைக் காட்டினாள்….”

”அதை யார் சொல்றது? எப்பிடிச் சொல்ல முடியும்?”

என்னாடா இவன், எதுக்கெடுத்தாலும் அஸ்து பாடிக்கிட்டு, என அலுப்புடன் ராய் என்னைப் பார்த்தார். ”ம்… நீங்க என்ன நினைக்கறீங்களோ அப்பிடியே இருக்கட்டும்” என்றார்.

நான் அடங்குவதாய் இல்லை. அவரை எரிச்சல்படுத்துகிறேன் என்பதே எனக்குத் திருப்தியைத் தந்தது.

”சின்ன வயசில் அவரைப் பார்த்த அந்த குருத்துப் பார்வை, அப்போது சட்டென எனக்குக் கிட்டிய யூகம்… இன்னிவரை அது சரியாகவே இருக்கிறது. எல்லாரும் கார்லைல் அபாரமா எழுதறார்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு அவர் எழுதிய ரெண்டு புத்தகமுமே வாசிக்க முடியவில்லை. பிரஞ்சுப் புரட்சி, மற்றும் சர்ட்டார் ரிசார்ட்டஸ், ரெண்டுமே தான் சொல்றேன். அன்னிக்கு எனக்கு அப்பிடித் தோணித்துன்றதை விடுங்க. இன்னிக்கு அதை எவனாவது சீந்துவானா? ஒரு வரி வாசிக்க முடியுமா?… மத்தவங்க அபிப்ராயம் என்னைவிட உசந்ததுன்னு நான் நினைச்சேன். நானே நினைச்சிக்கிட்டது… யப்பா, இந்த ஜார்ஜ் மெரிடித், என்னமா எழுதறார்னு மனசைப் பறிகொடுத்தேன். என்னைப் பொருத்தவரை அந்தாள் துக்கப் பிறவி. கொஞ்சம் வளவள வெண்டைக்காய். சிலப்ப எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டுப் போயிருவாரு. இப்பகூட நிறையப்பேர் மெரிடித் பத்தி அப்படித்தான் நினைக்கிறார்கள். வால்டேர் பேடரை ரசிக்க ஒரு பண்பட்ட இளைஞனாக இருக்கவேண்டும் என்றார்கள் எல்லாரும்… நான் வால்டேர் பேடரை ரசித்திருக்கிறேன்…. என்றாலும் அவரது மரியஸ் மகா அறுவை!”

”அதுண்மை… இப்ப பேடரையும் படிக்க ஆளத்துப் போச்சு. மெரிடித்தும் குழில அமுங்கியாச்சி. கார்லைல் ஒரு அல்டாப்பு வாயாடி.”

”சரி. ஒரு முப்பது வருஷம் முன்னாடி, இவர்கள் எல்லாரும் அழியாப்புகழ் வாய்ந்தவர்களா கொண்டாடப் பட்டவர்கள்தான்…”

”அதிருக்கட்டும்… நீங்க வாழ்க்கையில் தப்புக் கணக்கே போடல்லியாக்கும்?”

”ஒண்ணு ரெண்டு. என் சிந்தனைத் திறனில் பாதியளவு நியுமேன் சிந்திச்சிருப்பாரா தெரியவில்லை. ஃபிட்ஜெரால்ட் அளவுக்கும் அதுக்கும் மேலேயே ஒரு நாலடிப்பாட்டு என்னால் சிந்திக்க முடியும். (Newman – English prelate and theologian who (with John Keble and Edward Pusey) founded the Oxford movement; Newman later turned to Roman Catholicism and became a cardinal (1801-1890) கோதேயின் வில்ஹெல்ம் மீஸ்ட்டர் அந்தக் காலத்தில் என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் இப்ப பார்த்தால் அதான் அவரது ஆகச் சிறந்த படைப்புன்னு படுது.”

”அப்ப நீங்க ஓகோன்னு நினைச்சி, இப்ப புஸ்சுனு போன ஆள் யார், எந்தப் படைப்பு சொல்லுங்க.”

”ஏன் அதுவும் இருக்கத்தான் இருக்கு. திரிஸ்ட்ராம் ஷாண்டி, அமேலியா, வானிடி ஃபேர், மேடம் பொவேரி, லா சார்ட்ரியுஸ் டி பார்மே, அதே மாதிரி – அன்னா கரினினா. வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ். வெர்லைன்…..”

”தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப நீங்க குடுக்கற பட்டியல், அதொண்ணும் நீங்க புதுசா சொன்னது இல்லை. காப்பி. நிறையப்பேர் இந்த அபிப்ராயம் சொல்லியிருக்காங்க.”

”இதுல எனக்கு ஒண்ணும் ஒத்துக்கிடத் தயக்கம் கிடையாது. ஆனால் நீங்க என்ன கேட்டீங்க, என்னை? ஏன் நீங்க என் யூகத்தை நான் ரொம்ப நம்பறேன்னு கேட்டீங்க, இல்லியா? அதுக்குதான் விளக்கம் சொல்லிட்டிருக்கேன். அதாவது அந்த இள வயசுல நான் பயந்து பயந்து சொன்னது, இந்த வெகுஜன அபிப்ராயத்துக்கு மாறுபட்டு நான் பேசினது… எல்லாமே இப்ப சரின்னு ஆயிட்டுருக்கு. அப்ப அந்தக் காலத்துல ஊரே கொண்டாடி மகிழ்ந்த சில எழுத்தாளர்கள் எனக்கு அத்தனை ரசப்படவில்லை. நான் நேர்மையா, ஆத்மாவின் ருசியோட பார்த்த படைப்புகள் காலத்தைத் தாண்டி இன்னியவரை வந்திருக்கு. என்கூட வந்தது மாத்திரம் அல்ல, இந்த சமூகத்தின் பல்வேறு விமர்சனங்களையும் தாக்குப்பிடிச்சி தாண்டி வந்திருக்கு…”

ராய் ஒருவிநாடி மௌனம் காத்தார். தன் காபி குவளை அடியைப் பார்த்தார். காபி தீர்ந்திட்டதான்னு பார்க்கிறாரா, அதனுள் வார்த்தைகளைத் தேடுகிறாரா தெரியவில்லை. மேல் சிம்னியில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். கிளம்ப ஆயத்தமாகிவிட்டேன். ஆயிற்று, இன்னும் ஒரு நிமிடம். இந்தாள் அழைப்பில் என்னவோ சூட்சுமப் பொறி இருக்கிறதாக நானே போட்டுக் குழப்பிட்டு வந்துவிட்டேனா யிருக்கும். ஆசுவாசமா காலாட்டிக்கிட்டு ஷேக்ஸ்பியரோ, கண்ணாடியில் கிளிங் கிளாங் என்று ரசிக்கிற இசை போலவோ பேசிக்கொள்ளலாம் என்று ராய் என்னை அழைத்திருக்கலாம்.

ஏன் இப்படி அந்தாளைப் பத்தி வரட்டுத்தனமா, முரட்டுத்தனமா சிந்திக்கறோம், இந்த அலுப்பு தேவையே இல்லை… என என்னையே கட்டுப்படுத்திக் கொண்டேன். ராயை உன்னித்துப் பார்த்தேன். அப்படி அவர் ஸ்வீட் நத்திங்ஸ் போலப் பேசி என்னோடு உற்சாகப்பட விரும்பியிருந்தாலும் நான் அவர் காத்தைப் பிடுங்கிவிட்டாச். அலுப்பாய் அவநம்பிக்கையுடன் கொட்டாவி விட்டார் அவர். சரி அந்தாளுக்கு அலுப்பு என்றால் அது இப்பசத்தய அலுப்புதான். உலகம் பெரிசு. சும்மா நாலு எழுத்தாளர் பத்தி வாசிச்சி புளகாங்கிதப்பட்டுப் பேச ஒண்ணும் இல்லை. நான் கடிகாரத்தைப் பார்த்ததை கவனித்துவிட்டு அவர் பேசினார்.

”இல்ல எனக்குப் புரியல… ஒரு மனுசன் அறுபது வர்ஷமா புத்தகத்து மேல புத்தகமா எழுதிக் குவிக்கிறான்… பொதுசனம் எப்பவுமே அவனை ஆன்னு பார்த்து ஆச்சர்யப்படறாங்க, கொண்டாடறாங்க. நீங்க அந்தாள்கிட்ட எதுவுமே இல்லைன்றாப்ல மட்டந்தட்டறீங்க… ஏன்னே தெரியல எனக்கு. எல்லாத்துக்கும் மேல ஃபெர்ன் கோர்ட் போனீங்கன்னா, திரிஃபீல்டோட நிறையப் புத்தகங்கள் எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்ப்பாகி அடுக்கி வெச்சிருக்கு. மொழிபெயர்த்த எல்லாருமே ஏப்பசாப்பை இல்லை. ஜாம்பவான்கள்தான்.

– இப்ப அந்த எழுத்து மோஸ்தர்லாம் மாறிட்டதுன்றதை ஒத்துக்கறேன். இலக்கியத்தின் தேக்க காலத்தில் அவர் குப்னு வாசனையா மலர்ந்தார். தாக்குப் பிடிக்கணும், சாதனை பண்ணணும்னு அவர் தீர்மானம் பண்ணியே எழுத வந்தார். அவரது பெரும்பாலான கதையம்சங்கள் மெலோடிராமாவா, உணர்ச்சிக் கொந்தளிப்பா இருந்தது. ஆனால் அதுல ஒரு தன்மை…. அதை நீங்க ஒத்துக்கிட்டாகணும். அழகியல்.”

”ம்” என்றேன் நான்.

”அவரது 80வது பிறந்தநாளன்னிக்கு நாங்க எல்லாருமே போயி அவரோட உருவப்படத்தைப் பரிசா கொடுத்திட்டு வந்தப்ப நீங்க இல்லாமல் போயிட்டீங்க. மறக்கவே முடியாத நெகிழ்ச்சியான நிகழ்ச்சி!”

”செய்தி வாசிச்சேன்…”

”எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, எல்லா வட்டத்தில் இருந்தும் கொள்ளைப்பேர் வந்து குழுமியிருந்தார்கள். அறிவியல். அரசியல். வணிகம். கலை…. உலகமே வந்திருந்தது. அப்படியான ஒரு கூடல் உங்களுக்கு அமையுமானால் நீங்க சமுதாயத்தில் ரொம்பதூரம் இயங்கியிருக்கணும்… பிளாக்ஸ்டேபிளில் ரயிலில் இறங்கிப் போகிற கூட்டம் போல அப்படியொரு கசகச. உளுந்துபோட இடம் இல்லை. பிரதம மந்திரி தானே தன் கைப்பட அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்று சாதனைப் பட்டத்தை வழங்கியது, அப்படியே சிலிர்ப்பாயிட்டது எங்களுக்கெல்லாம். அதன்பிறகு அவர் பேசியதும் பிரம்மாதம். இதைச் சொல்லிக்க நான் வெட்கப்படவில்லை. நிறையப் பேர் கண்ணில் கண்ணீர். அத்தனை இதுவான தருணம் அது…”

”திரிஃபீல்ட் அவரே அழுதாரா?”

”அதெல்லாம் அழல்ல. தனிமனுசனா தன் பீடத்தில் அமைதி காத்தார். எப்பவும் எப்பிடி இருப்பார், அப்படித்தான் இருந்தார். லேசான சபைக் கூச்சம், அத்தோட மௌனம். பதவிசா அமெரிக்கையா நடந்துக்கிட்டார். அடக்கமாய், நன்றி பாராட்டும் பணிவுடன், கொஞ்சம் களைப்பாய் இருந்திருக்கலாம். வயசும் ஆகிறது 80. இல்லே? திருமதி திரிஃபீல்டு அவர் இன்னும் களைப்பா ஆயிறப்டாதுன்னு கவலைப்பட்டாள்.

– நாங்கள் உணவு அருந்த உள்ளே போனோம். வாசிப்பறையிலேயே அவர் தங்கிவிட்டார். அவருக்கு ஒரு தட்டில் எதையோ அனுப்பி வைத்தாள் அவர் மனைவி. எல்லாரும் காபி எடுத்துக்கிட்டிருந்தார்கள். நான் மெல்ல நழுவிவிட்டேன். அவர் இருந்த அறைக்குப் போய்ப் பார்த்தேன்.

– தன் குழாயைப் புகைத்துக்கொண்டு தன் உருவப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எப்பிடி வந்திருக்கு சார்?- என்று கேட்டேன். சிறு புன்னகை.

பொய்ப்பல்லை கழட்டிறவா, என்று என்னிடம் கேட்டார்.

இல்ல, இப்ப வேணாம். பெரியவர்கள் எல்லாரும் இதோ திரும்ப விடைபெற வந்துருவாங்க, என்றேன்.

இன்னிக்கு உங்க வாழ்க்கையில் அருமையான நாள், இல்லையா?

எனக்கு சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ நடக்குது. எனக்கு ஒட்டவே இல்லை… என்றார்.

நிஜத்தில், அந்த சிகர உயரம்… அது அவரைக் குழப்பிட்டதுன்னு தோணுது. பிற்காலத்தில் அவர் அப்பிடி கண்டதைச் சாப்பிடறதும், வகைதொகையில்லாமல் புகை பிடிக்கறதுமா நிதானமிழந்திருந்தார்னு நினைக்கிறேன். குழாயை நிரப்பிக்கறேன் பேர்வழின்னு புகையிலையை உடம்பெங்கும் சிந்திக்கிட்டாரு. இப்பிடி இந்தக் கோலத்தில் அவரை மத்தாட்கள் பார்க்கிறதை திருமதி திரிஃபீல்ட் விரும்பவில்லை. ஆனால் நான் போலாம் வரலாம். அவள் ஒண்ணும் சொல்ல மாட்டாள்.

– அவர்மேல் சிந்திய புகையிலையைத் தட்டி கிட்டி தரையை சுத்தம் செய்து அப்புறப்படுத்தினேன். பிறகு எல்லாரும் வந்தார்கள். அவரோடு கைகுலுக்கினார்கள். அப்புறம் நாங்கள் ஊர் திரும்பியாச்…”

எழுந்துகொண்டேன். ”கிளம்பறேன். உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது.”

”அடுத்து நான் லீசெஸ்டர் ஓவிய அகம்தான் போகிறேன். எனக்கு அங்க நிறையப் பேர் பழக்கம். கூட நீங்களும் வரதானா வரலாம்.”

”நீங்க கூப்பிட்டதில் சந்தோஷம். எனக்கும் அழைப்பு இருக்கு. இல்ல, நான் இப்ப வரல்ல.”

படியிறங்கி வந்தோம். என் தொப்பியை எடுத்துக் கொண்டேன். வெளியே தெருவுக்கு வந்ததும் நான் பிகாதிலி பக்கமாய்த் திரும்பினேன். ராய் சொன்னார்.

”அதோ மேடுவரை நானும் கூட வர்றேன்…” கூட வர ஆரம்பித்தார். ”அவரோட முதல் மனைவியை உங்களுக்குத் தெரியும்லியா?”

”யாரைப் பத்தி கேட்கறீங்க?”

”திரிஃபீல்ட்.”

ஓ, என்றேன். அவரை நான் இந்நேரத்தில் மறந்திருந்தேன். ம், என்றேன்.

”நல்லாத் தெரியுமா?”

”ஓரளவு தெரியும்.”

”நான் நினைக்கிறேன்… ரொம்ப அம்சமா இருப்பாள் அவள். இல்ல?”

”எனக்கு ஞாபகம் இல்ல.”

”கீழ்த்தட்டு சமுதாயப் பெண் அவள்… மதுவிடுதியில் வேலை செய்துகொண்டிருந்தாள். இல்லியா?”

”ஆமாம்.”

”இந்த மனுசன் என்னாத்துக்கு அந்தப் பிசாசைப்போயி கல்யாணம் கட்டிக்கிட்டாரு, தெரியல்ல. நான் கேள்விப்பட்டவரை அவளுக்கு ஆயிரம் ஆம்பளைங்களோட சகவாசம் இருந்தது போல… கல்யாணத்துக்கு முன்னாலும், பின்னாலும் கூட…”

”ஆயிரத்துக்குக் கூடவே சொல்லலாம்.”

”அவள் பார்க்க எப்பிடி இருந்தாள்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

”ஸ்பஷ்டமாவே இருக்கு…” என்று புன்னகைத்தேன். ”ரொம்ப இனிமையானவள் அவள். மாதவிப் பொன்மயிலாள்.”

ராய் சிறு புன்னகையை வெளிப்படுத்தினார்.

”பொதுக்கருத்து அப்பிடி இல்லை, இல்லியா?”

நான் பதில் சொல்லவில்லை. பிகாதிலி வந்திருந்தோம். பிரிகிறதாக கைநீட்டினேன். வாங்கிக் குலுக்கினாலும் வழமையான இதயபூர்வம் அதில் இல்லை. ஒரு சம்பிரதாய, கோவில் உற்சவ உண்டியல் குலுக். போட்டாலுஞ் சரி. போடாட்டியும் பாதகம் இல்லை… இந்த சந்திப்பில் நான் அவர் எதிர்பார்த்த உற்சாகத்தை வழிமொழியவில்லை என அவர் உணர்கிறார். அதன் தாத்பர்யம் அறியேன். காரணம் நான் எப்பவும் போல வெளிப்படையாகவே நேர்மையாகவே நடந்துகொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் எதிர்பார்த்ததை நான் அவருக்காகச் செய்யக் கூடவில்லை. காரணம் பழைய சம்பவங்களை அத்தனை தெளிவாக நான் அசைபோட இயலவில்லை. அதையெல்லாம் தெள்ளத் தெளிவாக மனசில் கொண்டுவந்து உற்சாகமாய் நான் பேசவேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். ரிட்ஸ் ஹோட்டல் வளாகக் கடைகள் சந்து ஊடாகப் போனேன். பூங்காவை நோக்கி வேலி கட்டிய பாதை. ஹாஃப் மூன் தெருவுக்கு எதிர்ப்புறம் வரை நடந்தேன்.

ஒருவேளை நான் வழக்கத்துக்கு அதிகமா அவரைப் போட்டு வறுத்தெடுத்திட்டேனோ என்றிருந்தது. இல்லை, விஷயம் என்னன்னால், அவர் தன் கருத்தைச் சொல்ல நான் அதெல்லாம் இல்லை… என வாத பிரதிவாத அடிப்படையிலேயே எங்கள் உரையாடல் நடந்து கழிந்துவிட்டது. உதவிகோர அவருக்கு வாய்க்கவே யில்லை.

 

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *