இறப்பு முதல், இறப்பு வரை

This entry is part 18 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு!
காலை ஆறு மணி..
“பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?”, குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது.
குளியல் அறை என்று கூற முடியாத ஒரு ஓலைக் கூடு. அதன் மறைப்புத் தடுப்பை (கதவு என்றும் கூற முடியாது) தூக்கி, வெளிப் பக்கமாகத் தள்ளி வைத்து, வெளியே வருவதற்கு வழி செய்தார் மணி. அவர் குளித்து முடித்துவிட்டு உடம்பை ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் உலர்த்திக் கொள்வதைப் பார்க்க இளைய மகன் இளவரசனுக்குப் பிடிக்கும். பெரியவன் மகாராஜன். அவனுக்கு படிப்பது தான் குறிக்கோள். மணியின் குளியல் காட்சிகளில் விருப்பம் இல்லை.
“கறந்துட்டேன். நான் போயிட்டு வரவா?”, பால் பாத்திரத்துடன் இளவரசன் எழுந்தான். ஆனால்,
“எதுக்கு? பால் குடுத்துட்டு வீட்டுக்கு வர நேரம் ஆயிடுச்சுன்னு காரணம் சொல்லி பள்ளிக் கூடத்துக்கு போகாம போங்கு செய்யவா? நானே போறேன். நீ உன் அண்ணனோட சேந்து ஸ்கூலுக்கு போ”, என்று சொல்லி பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.
இளவரசனுக்கு படிப்பென்றாலே வேப்பிலை தின்பது போலத் தான். அவனுக்கு வெளியே தெரியும் நாக்கு தான் முக்கியம். உள்ளே இயங்கும் நூத்தி எட்டு ‘ஸ்பேர் பார்ட்ஸ்’-உம் இல்லாமல் போனாலும் கவலை இல்லை. படிப்பை வெறுப்பவன் என்பதால் விளையாட்டுப் பிள்ளை என்று எண்ணி விட வேண்டாம். அவனுக்கு படிப்பு வேப்பங்காயாய் கசப்பதற்கு காரணம் சோம்பேறித் தனம் அல்ல.
தன் அப்பா, நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வரும் வேலை, அவன் உடம்பில் ஊறிப் போன ஒன்றானது.
“பால் கறப்பது!” என்று சொல்லிப் பாருங்கள்.
“ஆஹா! எத்தனை அழகான வேலை. செய்யத் தயார்” என்பான்.
கையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, பால் பாத்திரத்தை இரு தொடைகளின் இடுக்கில் சரிவாய் பிடித்துக் கொண்டு, ஒரு கை அளவு நீரை மடியில் தெளித்து, மெதுவாக அம்மெல்லிய காம்புகளை பிடித்து இழுக்க, ‘சர்..சர்’ என்ற சத்தத்துடன் வெளியே வரும் பாலின் வண்ணத்தை பார்க்கும் போது,
“இது தான் சந்தோசத்தின் நிறம்”, என்று தோன்றும் அவனுக்கு. அதோடு,
“என் வெண்மையைப் பார்”, என்று பால் அவனைக் கெஞ்ச,
“உனக்கு அழகே என்னால் தான்”, என்று மேலே படியும் நுரை பாலைப் பின்னால் இழுக்க,
“நான் நிறைந்தவுடன் உனக்கு வேலையே இல்லை”, என்று மறுபடியும் திமிரும் பால்-நுரை சண்டையை ரசிக்க அவனுக்குப் பிடிக்கும். தன்னிடம் திறமையை நிரூபிக்க மாறி மாறி அவை போடும் சண்டையைக் காணும்போதெல்லாம் எஜமானாக தன்னை கற்பனை செய்வான்.
பாலைக் கறந்தவுடன் அளவை அதிகரிக்க தண்ணீர் ஊற்றாமல், எத்தனை லிட்டரென்று அளக்காமல், வரும்படி எவ்வளவென்று யோசிக்காமல்,பாத்திரத்தினுள் தலையை விட்டு அப்படி என்னத்தை ரசிக்கிறான் என்று தினமும் அவன் தந்தை விநோதமாய் பார்ப்பதுண்டு. அதற்கான பதிலாய்,
“பாத்திரத்தின் உள்ளே சிதறிக்கிடக்கும் பால் துளிகளுக்கு, மழைத் தூறல்களை உவமையாக்கி ரசிக்கிறேன்”, என்று சொல்லும் அளவிற்குக் கூட கல்வி அவனுக்குத் தேவைப் பட்டதில்லை. ஒருவேளை, தன் உவமையை பிறர் அறிவதால் கிடைக்கப் போகும் பாராட்டை பெறத் தான் கல்வி; எனக்கு ரசனை போதும். பாராட்டு வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டானோ என்னவோ!
“இப்போ எல்லாம் பாலை கறந்து குடுக்குறவனுக்கு எங்க மதிப்பு? அழகா பாக்கெட்-ல பவுடரை கலந்து கொடுத்தா எலாரும் வாங்கிக் குடிக்கிறாங்க. பேசாம உங்க பையங்களை படிக்க வையுங்க”, என்று தன் அப்பாவிடம் நண்பர் கூறியபோது,
“அப்போ நான் பாலைக் கறந்து பாக்கெட்-ல விக்கிறேன். கறந்த பால்-னு வெளம்பரம் செஞ்சா பவுடர் பாலுக்கு பதிலா என் பாலை வாங்காமலா போய்டுவாங்க?”, என்று வாதம் செய்தான்.
“பத்து வயசுல உனக்கு இவ்வளவு பேச்சு ஆகாது. பேசாம படி!” தன் மகனின் ‘பாலாசை’யைப் பார்க்கும் போதெல்லாம், மணியின் மார்பு, இருநூறு முறை தோலைக் கிழித்து கீழே விழத் துடிக்கும். எப்படியும், தான் முன்னுக்கு வந்ததைப் போல, அவனும் முன்னுக்கு வந்து விடுவான் என்ற எண்ணம், துடிக்கும் மார்பிற்கு முடுக்கு போடும்.
யாராவது, “உங்களுக்கு மகாராஜன் புடிக்குமா? இளவரசன் புடிக்குமா?” என்று கேள்வி எழுப்பினால், “இருவரும் இரண்டு கண்கள்”, என்று தான் எல்லோரையும் போல் கூறுவார் மணி. ஆனால் உண்மையில்,
“என் பேச்சை கேட்டு, படிப்பில் ஆர்வம் காட்டி, இந்த நாசமா போன தொழிலை விட்டு, என் வம்சத்தையும் பணக்காரங்க வரிசையில சேக்கப் போற என் மகாராஜன் தான் எனக்கு பெருசு”, என்ற எண்ணம் அவருக்கு எப்போதுமே உண்டு. பணக்காரன் ஆவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கானவர்களில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா!?
“அப்பா உங்களுக்கு போன். ஊர்ல இருந்து அம்மா”, வெளியே அடியெடுத்து வைத்த மணியை சப்தமிட்டு அழைத்தான் மகாராஜன்.
“என்னவாம் அவளுக்கு? பால் குடுக்கப் போற நேரத்துல என்ன போன் வேண்டிய கெடக்கு. என்ன செத்தா போய்டாங்க?”, புலம்பிக் கொண்டே வந்து ‘ஹலோ’ சொன்னவரிடம்,
“என்னங்க! நம்ம அசோக்கு செத்து போய்டாங்க”, என்று கதறினாள் பத்மா; குழந்தையின் (அசோக்) ஒரு வயது நிறைவு விழாவை கொண்டாடச் சென்ற மணியின் துணைவி!
“என்ன டி பெனாத்துற? ஆண்டு நெரவுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு, இப்படி எழவு சேதி சொல்றியே உருப்படுவியா?”
“நெஜமா தாங்க. கொழந்தைக்கு திடீர்னு இழுத்துக்கிச்சுன்னு மருத்துவச்சி கிட்ட கூட்டிகிட்டு போனோம். போற வழியிலேயே தல தொங்கிடுச்சுங்க! நீங்க வாங்க”, விக்கிக் கொண்டே நடந்ததை தெரிவித்தாள் பத்மா. அவள் சொன்னதை நம்ப முடியாமல் திகைத்து நின்றார் மணி. சில நொடிகளுக்குப் பின்,
“சரி இரு வரேன். நீ மச்சானுக்கும், தேவிக்கும் தெம்பு கொடுத்துட்டு இரு”, இணைப்பை துண்டிக்கப் போன மணியை நிறுத்தி,
“புள்ளைங்களையும் கூட்டிட்டு வாங்க. பையங்க குழந்தைய பொறந்ததுலேந்து பாத்ததே இல்ல”, என்றாள்.
“சரி வையி! கூட்டிட்டு வரேன்”, தற்காலிகமாக கீழே வைத்த பால் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு வெளியே ஓடிய மணி, எதிர் வீடு நண்பரிடம் சென்று,
“எம் மச்சானுக்கு ஒரு மவன் பொறந்திருக்கான்னு சொன்னேன்-ல? அந்த கொழந்த இறந்து போச்சாம்”, என்றார் அவசரமாக.
“அடப் பாவமே! எப்படின்னே”
“திடீர்னு இழுத்துக்கிச்சாம். மருத்துவச்சி கிட்ட காமிக்கிரதுக்குள்ள செத்துப் போச்சாம். நான் போகணும். இந்த பாலை எடுத்துட்டு போய் நான் குடுக்க வேண்டிய வீடுகள்ல கொடுத்திட முடியுமா?”
“கண்டிப்பா அண்ணே! நீங்க போயிட்டு வாங்க. எனக்கு இடம் தெரியும்”, பாத்திரத்தை வாங்கிக் கொண்டார் நண்பர்.
“நன்றி முருகா. மாடுகள பாத்துக்கோ என்ன? “, என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.
“வாங்க டா பசங்களா. சாவுக்கு போகணும்”, துணி மணிகளை எடுத்து ஒரு பையினுள் திணித்தபடி பிள்ளைகளை விரைவு படுத்தினார்.
“என்னப்பா இது! இன்னைக்கு அறை பரீட்சை இருக்கே!”, என்றான் மகாராஜன்.
“என்னப்பா இது! இன்னைக்கு என் சிநேகிதன் குண்டில புளியாங் கொட்டை சொருகிட்டு வரேன்-னு சவால் விட்டுருக்கான். நான் போகலேன்னா ரெண்டு கொட்டைய என் குண்டியில சொருகிடுவான்!”, என்றான் இளவரசன்.
“சீ! பேச்ச பாரு. என்ன கடுப்பேத்தாத! நானே சாவுக்கு எவ்வளவு செலவாகும்-னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்”, குல தெய்வம் கோயிலுக்குப் போவதற்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் காசை உடைத்து எண்ணினார். மொத்தம், நானூற்றி ஐம்பது இருந்தது.
“இது போதாதே! சரி, இன்னைக்கு இத குடுப்போம். பொறவு, கடன வாங்கிக் கரியத்தன்னிக்கு குடுப்போம். என்ன செய்யிறது!”, மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டே பணத்தை எடுத்து பையில் வைத்தார். சட்டையை மாட்டிக் கொண்டிருந்த பிள்ளைகளை, பொத்தான் போடுவதற்குள் இழுத்துச் சென்று வெளியே விட்டார். கதவை பூட்டி, துணிக்கடியில் சாவியை சொருகிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.
பத்மாவின் அண்ணன் பெயர் லட்சுமி நாராயணன். அவனுக்கும், அவன் மனைவி தேவிக்கும் பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் அசோக். அவன் பிறந்தவுடன் அவ்விருவரும் கொண்ட ஆனந்தத்தை பார்த்த மணி, முதல் முறையாகத் தன் மனைவி வழிச் சொந்தத்தைப் பற்றி நல்ல ஒரு அபிப்ராயம் கொண்டார். காரணம், பத்மாவின் அப்பா, குடிபோதைக்கு ஆளாகி, அவள் பிறந்த சில நாட்களிலேயே லிவர் கேட்டுப் போய் உயிர் இழந்தார். பத்மாவின் தம்பியும், கஞ்சா கேசில் கம்பி எண்ணுகிறான். அவள் குடும்பத்திலேயே, கட்டிய மனைவிக்கும், பெற்ற குழந்தைக்கும் நல்ல துணையாய் இருந்தது, இருப்பது லட்சுமி தான்.
“அப்பேற்பட்டவனுக்கு இந்த நெலமையா?” பேருந்தில் பயணம் செல்லும் போது, மணிக்கு ஏற்பட்ட மனக் கசப்பு.
“ஹும்! நடந்துடுச்சி. இனி ஆவுரதப் பாக்கணும்”, என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஜூனியர் விகடனில் ஆழ்ந்துவிட்டார்.
இரண்டு மணி நேரம் பேருந்தில் ஆட்டம் கண்ட இரு பிள்ளைகளும், சில நிமிடங்கள் முன்பு தான் கண் அயர்ந்தன. அதற்குள் இறங்கும் இடம் வந்துவிடவே, இருவரையும் தட்டி எழுப்பி, பையோடு சேர்த்து இறக்கிவிட்டார். தானும் இறங்கியவுடன், அருகில் இருந்த மாட்டு வண்டிக் காரரிடம், கணபதி தெரு முனையில் இறக்கி விடும்படி கேட்டுக் கொண்டார். சிறிய கிராமம் என்பதால், அவருக்கு விவரம் தெரிந்திருந்தது. மூவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது மாடு.அதைப் பார்த்து,
“அப்பா இந்த மாடு எவ்வளவு கறக்கும்?” என்று சிரித்தான் இளவரசன். அவனுக்கு காளை மாடு பால் கறக்காது என்பது தெரியும் என்று மணிக்கு தெரியும்.
“கிண்டல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கோ. அங்க வந்து சோகமா மூஞ்சிய வெச்சுக்கோ”, என்று அதட்டினார்.
சில நிமிடங்கள் பள்ளங்கள் தாண்டுவதில் கடந்தது. கணபதி தெருவை நெருங்கும் போதே,தாரைச் சத்தமும், கூட்டக் கதறலும் காதைக் குடைந்தது. காரணம் இல்லாத படபடப்பும், பயமும், அந்த சூழ்நிலையின் அசௌகர்யத்தை இளவரசனுக்குப் புரிய வைத்தது. எல்லோரும் அழுது கொண்டிருந்த வீட்டின் முன்பு போய் மணி நின்றார்.
அவரைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கதறினார் லட்சுமி நாராயணன். தான் பெற்ற மகாராஜனைப் பார்த்ததும் இழுத்து அணைத்து, மேஜையின் மேல் வைத்திருந்த அசோக்கின் உடலைக் காட்டி,
“பாரு டா. சாவுக்கு தான் வரணும்-னு இருக்கு! அசோக்கப் பாருடா”, என்று அழுதாள் பத்மா. முதல் முறையாக ஒரு பிணத்தை பார்ப்பதால், சிரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே நின்றனர். அதுவரை தொட்டுக் கூடப் பார்க்காத தேவி, தன்னை கட்டி இறுக்குவதை பார்த்ததும், சங்கட வலைக்குள் இளவரசன் விழுந்தான். பயத்தில் இரு பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அழாதீங்க மச்சா! நடந்தது நடந்திருச்சு. இந்த பாழாப் போன வாழ்க்கைய இந்த மகராசன் அனுபவிக்க வேண்டாம்-னு தான் இவன சொர்கத்துக்கு அனுப்பிட்டாரு முனிய சாமி. மனச தேத்திக்குங்க. தேவிக்கும், கெழவிக்கும் உங்கள விட்டா யாரு இருக்கா சொல்லுங்க”, தன் தோளை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்த லட்சிமி நாராயணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் மணி.
இறப்பிலும், பிறப்பிலும் ஒரு ஒற்றுமை காணலாம். ஒருவர் பிறந்த பின் கடக்கும் நேரமும், இறந்த பின் சுருங்கும் மணித்துளிகளும், நகரும் வேகத்தை எவரேனும் சொன்னால் தான் உணர முடியும். அப்படித் தன் நடந்தது அந்த இடத்திலும். சொந்தமும் பந்தமும் வந்து சேருவதற்குள், நேரம் மதியம் ஒன்றைத் தாண்டிவிட்டது. எப்போதும் போல, திடமனதுக் காரர் ஒருவர், ஏற்பாடுகளை முடித்துவிட்டு,
“நேரம் கடத்தக் கூடாது. எடுத்துரலாம்”, என்றார். உடனே அடங்கியிருந்த அழுகை வலுத்தது. மயங்கிய நிலையில் இருந்த தேவி, குழந்தையை பிரிய மனமில்லாமல் துடித்தாள். அவளை பிடித்து ஒரு இடத்தில் அமிழ்த்திப் பிடித்தனர், உடன் இருந்த பெண்கள். சக்தியில்லாமல் அழுதுகொண்டே, சட்டியை பிடித்துக் கொண்டு, பிணத்தின் முன்னால், பின்னால் பார்க்காமல் நடந்தார் லட்சுமி. அவரைப் பின் தொடர்ந்தார் மணி; பிணத்தின் ஒரு காலைப் பிடித்தபடி. உடன் வரும் மக்களில் ஒருவர்,
“போன சென்மத்துல என்ன புண்ணியம் செஞ்சானோ! கஷ்டப் படாமலே பொணந்தூக்க நாலு பெற சம்பாதிச்சிட்டான். இனி அடுத்த ஜென்மமே உனக்கு கெடையாது டா. நிம்மதியா தூங்கு டா”, என்று சொல்லிக் கொண்டே வர, லட்சுமியின் அழுகை சற்று குறைந்து காணப் பட்டது. மகனுக்கு செய்யவேண்டிய கடனை எல்லாம் செய்யும் வரை, தன் துக்கத்தை அடக்கி வைக்கத் முயற்சி செய்தார்.
ஒரு மணி நேரச் சடங்கு முடிந்ததும், கொள்ளியிட்டு விட்டு வீடு திரும்பினர் காட்டிற்குச் சென்ற ஆண்கள். துக்கத்திலிருந்து மீண்டவர்கள் காரியப் பேச்சை தொடங்கிய போது, தன் பங்கிற்கு மூவாயிரம் கொடுக்க ஒப்புக் கொண்டார் மணி. முன்பணமாக தான் கொண்டு வந்த உண்டியல் காசை விரித்த துண்டினுள் காணிக்கை இட்டார். பணம் சேகரித்த ஒருவர், படிப்பறிவில்லா கிழவரானாலும்,
“போடுய்யா போடுய்யா! உண்டியல் காசானாலும், சாவுன்னு வந்துட்டா அந்த முனிய சாமி கோச்சுக்காதுயா”, என்று பகுத்தறிந்து பேசினார். முடிவில் காரியத்திற்கு நிதி அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
அன்று இரவு தூங்கியவர்கள் எல்லாம்,பிஞ்சு குழந்தைகளும், பழுத்த முதியோரும் தான். அழுது அழுது கண்கள் பூத்த தேவியை, தன் மடியில் கிடத்தி தட்டிக் கொண்டிருந்தாள் பத்மா. மச்சானிடம் மற்ற விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் மணி. இப்படிக் கழிந்த இரவு, இரண்டு மணிக்கு திடீர் என்று பரபரப்பானது.
“ஐயோ தேவி! கதவை தொரயேன். என்னங்க! இங்க பாருங்க. தேவி தூக்கு போட்டுக்கப் போறா”, என்று கதறினாள் பத்மா. உடனே, தன்னை அறியாமல் கண்மூடிய மணியும், லட்சுமியும், ஓடிப் போய், கதவை உடைத்து,
“என்ன காரியம் செய்ற நீ! முட்டாளா?” என்று திட்டினர்.
“அவள எங்கயும் நகராம பாத்துக்கத் தானே சொன்னேன்? என்ன தூக்கம் வேண்டிய கெடக்கு”, என்று தன் மனைவியை உதைத்தார் மணி.
“தப்பு தான். தப்பு தான்! இந்த சிறுக்கி இப்படி செய்வான்னு நெனைக்கலையே”, என்று தலையில் அடித்துக் கொண்டாள் பத்மா.
“இல்ல..என்னால எம் மகன் இல்லாம வாழ முடியாது. என்ன சாக விடுங்க”, என்று மறுபடியும் நாற்காலியின் மேல் ஏற முற்பட்ட தேவியை இறக்கி ஓரிடத்தில் தள்ளி,
“உனக்கு என்ன வேணும்? கொழந்த தானே? எம்மகன் இருக்கான். இளவரசன்! உனக்கு தாரை வாத்துக் குடுக்கறேன். சும்மா இல்ல. உன் தலையில அடிச்சு சொல்றேன். இந்த எடுத்துக்கோ”, என்று அவசரமாக தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையை எடுத்து அவள் கையில் வைத்தார் மணி. அந்த நேரம் பார்த்து,
“டேய் குசுத் தலையா! உன் குண்டில சூடு வெச்சேன் பாத்தியா?” என்று தூக்கத்தில் உளறினான் இளவரசன். அதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த தேவி, கடினமாக சிரிப்பை வரவழைத்து, அவனை அணைத்து ஒரு முத்தமிட்டாள்.
அதைப் பார்த்ததும் லட்சுமி நாராயணனுக்கு ஆச்சர்யம். இனி இவளை வைத்துக் கொண்டு எப்படி காலம் தள்ளப் போகிறேனோ என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு, மணி சொன்ன சில வார்த்தைகள் எத்தனை மாற்றத்தை, எத்தனை சீக்கிரம் ஏற்படுத்திவிட்டது என்ற வியப்பு. ஆனால் உடனே, மணி செய்த சத்தியத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், பலத்த எதிர்பார்ப்புடன்,
“நீங்க உண்மையா தான் சொன்னீங்களா? இளவரசனை எங்க கிட்ட குடுப்பீங்களா?” என்று கேட்டார். தன் மனைவியிடம் கேட்கவில்லையே, அவசரப் பட்டு விட்டேனோ என்று யோசித்துக் கொண்டிருந்த மணிக்கு, சரியான வாய்ப்பாய் அந்த கேள்வி அமைந்தது.
“என்ன டீ? நீ என்ன சொல்ற?” என்று வினவினார். பத்மா,
“இவ செத்து போறத விட இளவரசனை குடுக்குறதே நல்லது? என் அண்ணன் கிட்ட தானே வளரப் போறான்? எனக்கு எந்த கவலையும் இல்ல”, என்றாள்.
“அப்புறம் என்ன மச்சான்? எடுத்துக்குங்க”, என்றார் மணி; வீரமாக!
“சாமி எங்க குல தெய்வமே நீங்க தான்”, என்று காலில் விழுந்தார் லட்சுமி. முட்டியை நெருங்கும் போதே அவரை நிறுத்தித் தூக்கி,
“நமக்குள்ள என்னய்யா! புள்ளைய நல்லா பாத்துக்க. அது போதும்”, என்றார். சுற்றி இருந்த அனைவரும் மணியின் பெருந்தன்மையை மெச்சிப் பேசிக் கொண்டிருக்க,
“பத்து வயசான பையன். இவ, இவன தொட்டு தூக்குறது இது தான் ரெண்டாவது மொற. எங்க கூட இருப்பானா?” என்று அடுத்த சந்தேகத்தை முன்வைத்தார் லட்சுமி.
“அதுவும் சரி தான். ஒண்ணு செய்றோம். நாங்க ரெண்டு பேரும் இவன் முழிக்கிறதுக்குள்ள கிளம்பிடறோம். ரெண்டு நாள் அடம் பிடிப்பான். அப்புறம் நாங்க வர மாட்டோம்-னு தெரிஞ்சதும், அவனா பொழங்கிடுவான். அப்புறம் வந்து விஷயத்தை சொல்லி சரி பண்ணிட்டு போயிடுறேன். என்ன சொல்றீங்க?”
“உங்களுக்கு பெரிய மனசு!”, லட்சுமி நாராயணன் கட்டி அணைத்தார்.
சில வருடங்கள் கழித்து…இளவரசனின் 22 -ஆம் வயதில்.
“இளவரசு…உங்க அப்பா வந்துருக்காரு. வந்து பாரு”, தேவி, முரத்தில் அரிசி புடைந்துக் கொண்டே பிள்ளையை அழைத்தாள்.
“இதோ வரேன்”, வெளியே வந்ததும், இளவரசன் எதிர்பார்த்த அப்பா அங்கு இல்லை. பழைய அப்பா வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் எந்த ஒரு செய்கையும் செய்யாமல்,
“வாங்க. நல்லா இருக்கீங்களா?”, என்று கேட்டான்.
“இருக்கேன். நீ நல்லா இருக்கியா பா?”, கையில் இருந்த பையை அழுத்தித் தன் சங்கடத்தை வெளிப்படுத்திவிட்டு, வார்த்தைகளில் யதார்த்தமாய் கேட்பதாய் நடிக்க முயன்றார்.
“நல்லா தான் இருப்பேன். எங்க அப்பா, அம்மாவுக்கு என்ன கொறச்ச?” என்றான் வேறிடம் பார்த்து.
“நீ எம்மேல கோவமா இருப்பன்னு எனக்கு தெரியும். ஆனா, நான் வராததுக்கு காரணம் இருக்கு. உன்ன விட்டுட்டு போன பிறகு நீ ரொம்ப அழுதன்னு கேள்விப் பட்டு, திரும்ப வந்தா எங்க கூட வரணும்-னு அடம்பிடிப்பியோன்னு தான் சமாதானம் செய்ய வரலைய்யா”, தன் நிலை விளக்கம் அளித்தார்.
“நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. எனக்கு உங்க மேல இந்த காரணத்துக்காக கோவம் இல்ல”, அவன் சொன்னது மணிக்கு மட்டும் இல்லாமல், தேவிக்கும் கூட விநோதமாய் இருந்தது. அரிசி புதைப்பதை நிறுத்திவிட்டு,
“வேற என்ன காரணம் டா?” என்றாள் தேவி.
“இப்போ இவரு எதுக்காக இங்க வந்துருக்காரு?”
“உன்ன கொஞ்ச நாளைக்கு அவங்க கூட வெச்சுக்க. அதுல என்ன தப்பிருக்கு?”, தேவிக்கு புத்திர சோகம் தீர்ந்ததாய்த் தோன்றியது.
“போன மாசம் வரை ஏன் வரல?”
“உன் மேல பாசம் இல்லாம இல்ல டா. எங்களுக்கு-ன்னு இருக்குறது நீ ஒருத்தன் தான். அதனால தொல்ல செய்யக் கூடாது-ன்னு வராம இருந்திருப்பாரு”
“இப்போ வந்திருக்காரே. அப்போ தொல்லை; இப்போ மட்டும் என்னவாம்?” இருவரும் பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.
“சரி, நீ சொல்லு மா. இப்போ இவரு வந்து, கொஞ்ச நாளைக்கு இளவரசனை வெச்சுக்கவா-ன்னு கேட்ட மாதிரி, அசோக் செத்துப் போன ரெண்டாவது மாசம் வந்து கேட்டிருந்தா,இதே மாறி அனுப்ப தயாரா இருப்பியா?”
“கண்டிப்பா டா!”
“பொய் சொல்லாத. என்ன டா, தார வாத்துக் குடுத்துட்டு, திடீர்னு வந்து கேக்குறாரே-னு உனக்கு தோணாம இருக்க வாய்ப்பே இல்ல”
“ஆமா டா.ஆனா, அதுக்கும் இவரு மேல இருக்குற கோவத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“போன வருஷம் வரைக்கும் எனக்கு எந்த கோவமும் இல்லாம தான் இருந்துது. ஆனா, அந்த சம்பவம் நடந்த பிறகு தான், என்னோட ரெண்டு அப்பா, அம்மாவும், தங்களோட சோகத்தை தீத்துக்க என்ன பொம்மையா உபயோகிச்சிட்டீங்கன்னு புரிய வந்துது”
“டேய் என்ன டா பேசுற நீ? உனக்கு நாங்க என்ன கொற வெச்சோம்?”
“நான் பால் காரன் ஆகலையே! கேவலம் எஞ்சினியர் தான் ஆயிருக்கேன்”
“என்னடா அப்படியே உல்டாவா சொல்ற?”
“ஆமா! எனக்கு புடிச்ச வேலை பால் கரக்குறது தான். அத விட எவ்வளவு பெரிய வேலையை என் முன்னாடி வெச்சாலும், எனக்கு அது கேவலம் தான்.”
“எல்லாரும் அவங்களுக்கு புடிச்சா மாதிரி வாழ்ந்திட முடியாது”
“ஏன் நீங்க வாழலையா? உங்களுக்கு புடிச்ச நேரத்துல என்னை பந்தாடலையா?”
“இப்போ என்ன சொல்ல வற? எங்க யாரையும் உனக்கு புடிக்கலேன்னா, நாங்க உங்க அப்பா அம்மா இல்லைன்னு ஆயிடுமா?”
“ஆகாது. ஆனா, நீங்க உங்க சுயநலத்துக்காக என்னை கைப்பொருளா உபயோகிக்கிறத இனி நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் தான் என்னோட அப்பா அம்மா. நான் திரும்பவும் இவர் கூட போக முடியாது. தாரை வாத்தது வாத்ததாவே இருக்கட்டும்”
“நீ…”, என்று வாதத்தை தொடர நினைத்த தேவியை நிறுத்தி,
“விடு. அவன் சொல்றது சரி தான். என் பெருமைக்காகவும், உங்க துக்கத்துக்காகவும் இவனை பலியாடு ஆக்கினதுக்கு தண்டணையா இத நான் நெனச்சுக்கறேன். நான் வரேன்”, என்று கூறிவிட்டு திரும்பினார் மணி. அவரை வார்த்தைகளால் காயப் படுத்தினாலும், உள்ளே இருந்த பாசம், அவனை சில துளிக் கண்ணீர் சிந்த வைத்தது.
மனம் நொந்துத் திரும்பிச் செல்லும் அப்பாவை ஓடிச் சென்று கட்டிப் பிடிக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால், பாசத்தை சுயநல விருப்பு வெறுப்புகளுக்காக பங்கு போட்டு, தன் புதிய அப்பா அம்மாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடாதென்று, தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான்.
கடைசியாக தன் மகனை கொண்டு வந்து விட்ட அதே பேருந்தில், தான் மட்டும் தனியாக பயணிப்பது தொண்டையில் முள்ளாய் அடைத்தது மணிக்கு. அவன் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவர் மனதில் முட்டி மோதின. அது வரை என்றும் உதிக்காத ஒரு கேள்வி, அன்று அவர் மனதில் ரணத்தை உருவாக்கியது.
“தத்து கொடுக்கணும்-னு முடிவெடுத்ததும், நீ ஏன் மகாராஜனை தத்து குடுக்கல? உன் புள்ளைங்க ரெண்டு பேருல யாரு ரொம்ப புடிக்குமோ அவனை கூட வெச்சிட்டு, அடுத்தவனை நெருப்புல எரிஞ்ச பாவி தானே நீ?”
நடந்தவற்றை எப்படியாவது திருத்தி எழுதிவிட உள்ளம் துடித்தது. ஆனால், முடியுமா?
பிறந்து ஓராண்டு காலம் நிறைவான குழந்தை, பிறந்த நாள் அன்றே சாகும் விசித்திரம், தற்செயலாய் நடந்த ஒன்றா?
இறந்த சொந்தத்தை நினைத்து வாழ்நாள் முழுதும் வருந்திக் காலம் கழிக்கும் பலர் இருக்க, இறந்த பிள்ளைக்காக தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்த தேவி, பாசம் என்பது மூளையின் இயக்கத்தால் ஏற்படும் வெளிப்பாடு தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்வாளா?
பாசத்தை பங்கு போட்ட மணி, பெருமைக்காக செய்த தவறு, தியாகமாக அன்று பெரும்பான்மையால் போற்றப் பட்டது என்றால், மக்கள் பொதுவாக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என்ற முடிவு சரியா?
மணி செய்த தவறை அவர் மகனின் வாயிலாகவே புரிய வைக்க, மகாராஜனை விபத்தில் கொன்று, தனிமையை ருசிக்க வைத்த இயற்கை, தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் மணிக்கொரு பயம் எழுந்தால், அதுவும் மூட நம்பிக்கையா?
ஆம்!
மணி கொண்டிருந்த நிம்மதியின் ஆயுட்காலம்,
அசோக் இறப்பு முதல், மகாராஜன் இறப்பு வரை!
அவர் அனுபவிக்கப் போகும் குற்ற உணர்ச்சியின் ஆயுட்காலம்,
மகாராஜன் இறப்பு முதல், மணி இறப்பு வரை!

Series Navigationகடைசி இரவுஜென் ஒரு புரிதல் – பகுதி 12
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *