மாயங்களின் யதார்த்த வெளி

This entry is part 3 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி.
என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்?
பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன்.
நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….?
என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? உன்னை உன் உறக்கத்திலேயே என்னைக் காண வைப்பது நான்தான். காற்றைத் தரும்போதெல்லாம் சுகமாய் அனுபவித்தாயே நீ… இந்த ஜன்னலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாயே…கைகளை வெளியே நீட்டி எத்தனை முறை என் இலைகளை நீ பறித்திருக்கிறாய்…பசுந்தளிராய் நான் பச்சையத்தோடு காலை வெயிலில் மிளிர்ந்த போது ஆசை ஆசையாய்ப் பறித்து என்னை முகர்ந்து பார்க்கவில்லையா நீ! இன்று என்னைப் பற்றி எதுவுமே தெரியாதவள் போல் முழிக்கிறாயே இது நியாயமா? இன்று நீ இனிமேல உறங்க முடியாது… இது எனக்கான நேரம்…
மரமா பேசுகிறது…. அய்யோ..இதென்ன கொடுமை…? என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்? என்னால் எழுந்திரிக்க முடியவில்லையே? யாராவது என்னை எழுப்புங்களேன்….நந்தினி புரண்டு புரண்டு பார்க்கிறாள். அவளால் விடுபட முடியவில்லை. எது தன் கைகளையும் கால்களையும் போட்டு இறுக்குகிறது?
மரம் தன் கிளையை ஜன்னல் வழியே உள்ளே விட்டு நந்தினியை எழுப்பியது.
சீ…போ….நீ எழுப்பினால் நான் எழுந்திரிக்க மாட்டேன்…உன்னை எனக்குப் பிடிக்க வில்லை….
என்னவோ என்னோடு மிகுந்த பழக்கம் உள்ளவள் போல் சிணுங்கிக் கொள்கிறாயே…உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் என்ன…எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறதே…அதனால்தானே இந்த வெளியில் நின்று கொண்டு சதா சர்வ காலமும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்…இப்பொழுது நீ எழுந்திருந்தால் பிழைத்தாய்…இல்லையென்றால் உன்னை உன் கணவரோடு நீ சென்ற வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விடுவேன்.
கணவரோடு எப்படிப் போக முடியும்…அவர்தான் இறந்து வருஷங்களாயிற்றே…
வருஷங்கள் ஆனால் என்ன? அந்த ஜீவன் தவித்துக் கொண்டிருக்கிறது. உன்னை நினைத்தே இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உனது அவமானங்களைத் தாங்கிக் கொண்டு இன்னும் உன்னை நோக்கித் தன் தலை தாழ்த்திக் காத்துக் கொண்டிருக்கிறது…
அவரை இழந்து நீ சந்தோஷமாகக் காலம் கழிக்கிறாய்… உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் அவர்…அதை கொஞ்சமேனும் மதித்தாயா நீ?
இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அதுவும் இந்த வீட்டில்? நானும் அவரும் இருந்தது. வெளியூராயிற்றே…?
நீ எங்கிருந்தால் என்ன, நான்தான் உன் கூடவே வந்து கொண்டிருக்கிறேனே…
என்ன சொல்கிறாய் நீ? உன் பேச்சு எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
உன் கல்யாணத்திற்குக் கூட வந்திருக்கிறேன் நான்…மண மேடையில் தாலி ஏறும் முன் நீ அழுது கொண்டேயிருந்தாயே….அதற்கு முன்னாலேயே உன் கணவன் மீது பிரியம் கொண்டவள் நான்…
நான் அழவுமில்லை, சிரிக்கவுமில்லை..…நீ என்னை எதுவோ செய்யப் பார்க்கிறாய்…அதற்காக எதெதையோ சொல்லி என்னை பயமுறுத்துகிறாய்…
மனசாட்சியைக் கொன்றுவிட்டுப் பேசாதே…பிறகு நான் என் குணத்தைக் காண்பித்து விடுவேன்…
மிரட்டும் வேலையெல்லாம் வேண்டாம்…
உன்னை மிரட்டுவது என் வேலையல்ல. உன் ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்கவே நான் வந்தேன்.
என் தூக்கத்தைக் கெடுப்பதில் உனக்கென்ன சந்தோஷம்….
அதில்தான் எனது திருப்தியே அடங்கி இருக்கிறது. அதை நீ அறியமாட்டாய்…
இதைத்தான் நான் சொன்னேன். நீ எது எதையோ சொல்லி என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறாய்…என்று…
அது என் வேலையல்ல என்றுதான் முன்பே சொல்லி விட்டேனே…உன் கணவனின் திருப்திதான் என் திருப்தி…
என்ன உளறுகிறாய்…
ஆமாம், உன் மீது கொள்ளையாய் ஆசை வைத்திருந்தான் அவன். அவனை நீ அலட்சியப்படுத்தினாய்…அவனின் உண்மையான ஆசைகளை மதிக்கத் தவறினாய்…அதனால் அவனை நான் எடுத்துக் கொண்டேன்…
நீ எடுத்துக் கொண்டாயா? அப்படியானால் அவரின் மரணத்திற்கு நீதான் காரணமா?
ஆசையாய் உள்ள ஒரு கணவன் எனக்குத் தேவைப்பட்டது. அவனின் ஆசை அத்தனை புனிதமானது. களங்கமற்றது. அதை உன் கூடவே இருந்து கண்டவள் நான்.
என்ன இது? திடீரென்று பெண் போலப் பேசுகிறாய்…
எனக்கென்று ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தேன்…உன் கணவனின் மரணம் அதற்கு உதவி செய்தது….
அவர் எப்பொழுது மரணம் எய்துவார் என்று காத்துக் கொண்டிருந்தாயா?
மரணத்திற்கு முன்பே அவர் என்னிடம் வந்து சேர்ந்து விட்டவர்…ஆசையாய் உள்ள என்னைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது…அதனால் நான் அவரை எடுத்துக் கொண்டேன்.
நான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி அவரை எடுத்துக் கொண்டிருக்க முடியும். நீ என்ன பெண்ணா? கண் முன்னே வா பார்ப்போம்…
நீ என்னை இப்பொழுது கண்டுகொண்டுதான் இருக்கிறாய்…என்னைப் பார்த்துத்தான் பேசுகிறாய்…பிறகு முன்னே வா என்றால் எப்படி…?
.உன்னால்தான் அவர் மனப்பிறழ்விற்கு ஆளானார். அவர் கொடுத்த அன்பின் விலையை நீ உணரவில்லை…
இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்…அவர் புத்தி சரியில்லாமல் போனது இந்த ஊரில் இல்லையே…அது நாங்கள் தனிக்குடித்தனம் சென்ற இடமாயிற்றே…
அங்கு ஒரு பெண்ணிருந்தாள். அது உனக்குத் தெரியுமா?
அங்கு ஒருத்தியா? அது காலியாகக் கிடந்த வீடு….
அங்கேதான் நான் இருந்தேன். அதை நீ அறியமாட்டாய்…
இந்தப் பேத்தலெல்லாம் வேண்டாம்…
இது உண்மை. உன் கணவன் அறிவான் என்னை. ஒரு நாள் அவன் என்னைப் பார்த்து உன் பெயரைச் சொல்லி அழைத்தான். ஆம் நான்தான் என்று சொல்லி அவனை இழுத்துக் கட்டி அணைத்துக் கொண்டேன். அன்று முதல் அவன் என்னிடம்தான் இருக்கிறான். அதனால்தான் உங்களோடு நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.….இப்போது அவர் என்னோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சந்தோஷத்தை நீ அவருக்கு அளித்திருந்தால் அவருக்கு இந்தத் தேவை ஏற்பட்டிருக்காது. அவர் என்னை நாடி வந்திருக்க மாட்டார்.
உன்னை நாடி வர நீ என்ன பெரிய அழகியா?
நான் அத்தனை அழகில்லைதான்…ஆனால் அன்பு செய்யத் தெரிந்தவள்…அந்த அன்பு என் அழகைக் கூட்டியது…
அன்புக்குக் கூட அழகு உண்டா என்ன? உன்னை மாதிரி உளறுவோரை நான் கண்டதேயில்லை…
அன்புக்குத்தான் அழகு உண்டு…உடம்புக்கு அல்ல…உடம்புக்கு என்று நீ நினைத்தாய்…அதிலேயே மூழ்கிக் கிடந்தாய். எப்பொழுதும் எந்நேரமும் அதை அலங்கரிப்பதிலேயே உன் காலத்தை வீணாக்கினாய்…அதைப்பற்றி உனக்கு அத்தனை பெருமிதம்…அதனால் உன் மனதில் உண்டான அலட்சியம்…நீ எனக்குச் சமமில்லை என்று உன் கணவனை உதாசீனப்படுத்தினாய்…அன்பின் விலையைப் புரிந்துகொள்ளாதவர்கள் எல்லாம் உன் நிலையைத்தான் அடைந்திருக்கிறார்கள். உன் அழகைப் போற்றத் தெரிந்தவனின் களங்கமற்ற அன்பை நீ மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்…அதில் தவறி விட்டாய்…
போதும் உன் பேச்சு…நான் எப்படியிருந்தேன் என்று நீ சொல்லத் தேவையில்லை. எனக்கென்று இரக்கப்பட நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஆறுதலை நான் கேட்டுக் கொள்கிறேன்…
நான் உனக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் என்று நீயாகவே ஏன் நினைத்துக் கொள்கிறாய்…என் ஆசைக் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன்…அவரின் வெள்ளை மனது படும் அவஸ்தையை நான் உணர்வேன்…அதனால்தான் வெகு முன்னேயே அவரை நான் உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டேன்…அதனால்தான் அவர் உன் முன்னால் பைத்தியம் போல் அலைந்தார்.
என்ன சொல்கிறாய் நீ…இதெல்லாம் எப்படி நீ அறிவாய்…
எல்லாமும் அறிவேன்…அந்தப் புத்தி பிரண்ட நிலையில் கூட நீ அவரிடம் அன்பு காட்டவில்லை. அன்புதான் வேண்டாம்…இரக்கமாவது செலுத்தியிருக்கலாமில்லையா? சக மனிதன் என்கிற முறையில் கூட ஒரு மூன்றாமவளாக நின்று கூட உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை.. உன் மனதில் கருணையே இல்லையா…நீ ஒரு பெண்தானே…
நான் அவரை எதுவும் செய்யவில்லை. அன்பு காட்டவும் இல்லை…துன்புறுத்தவும் இல்லை….
மனதினால் எவ்வளவு துன்புறுத்தியிருக்கிறாய்…இல்லை என்கிறாயே மனசாட்சியைக் கொன்று விட்டு…ஒவ்வொரு முறை அவர் உன்னை ஆசையோடு நெருங்கும்போதும் நீ விலகி விலகிப் போனாயே…நினைவிருக்கிறதா? நீ என்னைத் தொடக்கூடத் தகுதியற்றவன் என்று சொல்லாமல் சொன்னாயே? ஒரு கணவனுக்கு அவன் மனைவியைத் தொடவும் அனுபவிக்கவும் உரிமையில்லையா? நீ அதற்கு இடம் கொடுத்தாயா? எத்தனை இடங்களில் எத்தனை பெண்கள் இதற்காக ஏங்கித் தவம் கிடக்கிறார்கள். நீ அதை அறிவாயா? உன் கணவன் ஒரு அப்பாவி. பாவம். உன்னை நெருங்கும்போது கூட அவன் பயந்து கொண்டேதான் நெருங்கினான். தான் இதற்குத் தகுதியானவன்தானா என்கிற சந்தேகம் அவன் மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும் உன் மீதான ஆசை, தான் உன்னின் கணவன் என்கிற உரிமை அவன் ஒரு ஆண் என்கிற இடத்தில் இருந்து அவனைச் செயல்பட வைத்தது. ஆனாலும் அவன் நல்லவன். அதனால்தான் நீ அவனை உதறியபோது உன்னிடம் மண்டியிட்டான். அப்படியும் நீ அவனை ஒதுக்கினாயே? அது நியாயமா? ஒரு கணவன் அவனுக்கு நீ மனைவி என்கிற அளவிலேனும் அவனுக்கு இணங்கியிருக்க வேண்டாமா?
உன் அழகு பற்றியதான கற்பனைகள் உன் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் ஏராளமாக இருந்திருக்கலாம். ஒரு யவ்வனமான இளைஞன் உனக்குக் கிடைப்பான் என்று நீ மாயாலோகத்தில் பறந்திருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான் என்று நீ உணர முற்பட்ட வேளையில் நடப்புலகத்திற்கு வந்து நீ பொருந்தியிருக்க வேண்டாமா?
உன் தந்தையையும், உன்னை வளர்த்த உன் அண்ணனையும், அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் நீ கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்தாயா? தன் பெண் இப்படியெல்லாம் கட்டு மீறி வளர்ந்திருப்பதற்குத் தானும் ஒரு காரணம் என்று உன் தந்தை நினைத்துப் புழுங்கிய அந்த ஒரு நிமிடத்தை என்றாவது நீ உன் நினைப்பில் கொண்டு வந்து வருந்தினாயா?
எப்படிப்பட்ட அற்புதமான குடும்பத்தில் உன்னை வாழ்க்கைப்படுத்தினார் உன் தந்தை. அதற்குப் பிறகாவது நீ மாறியிருக்க வேண்டாமா? அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களைக் கண்டாவது நீ உன்னை பதப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா? அவர்கள் உன் மீது எவ்வளவு அன்பு வைத்து உன்னைக் கொண்டாடினார்கள்.
நிறுத்து. என்ன உன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறாய்…. அவர்கள் என் மீது அன்பு செலுத்தியதுபோல் நானும் அவர்களுடன் இணக்கமாகத்தான் இருந்தேன். அவர்களை யாரையுமே நான் வெறுக்கவில்லையே…என்னவோ கூடவே இருந்து கண்டதுபோலல்லவா சொல்கிறாய்…
பார்த்தாயா உன் வார்த்தைகளிலேயே நீ சிக்கிக் கொண்டாய்…இணக்கமாய் இருந்தேன் என்கிறாய்…உன் வாழ்க்கை ஓட்டத்திற்கு உனக்கு இது தேவைப்பட்டிருக்கிறது. அப்படித்தானே…அந்தக் குடும்பமும் அவர்கள் உன் கணவனை எத்தனை முக்கியப்படுத்தி முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுமாவது நீ உன்னை மாற்றிக்கொண்டிருக்க வேண்டாமா? எத்தனையோ வாய்ப்பிருந்தும் எல்லாவற்றையும் நீ நழுவ விட்டுவிட்டாயே?
இத்தனைக்கும் காரணம் உன் அழகு….அப்படியான உன் நினைப்பு…அதுதானே…
பார்த்தாயா இதற்குக் கூட நீ அமைதியாகத்தான் இருக்கிறாய். அப்படியானால் என்ன பொருள்? உன் அழகுபற்றியதான பிரமை உன்னை விட்டு இன்னும் விலகவில்லை.
இன்று நீ தனியளாக்கப்பட்டிருக்கிறாய். அதற்கும் கூட உனக்கு நீயேதான் காரணம். ஆனால் உன் அழகு உன்னைவிட்டுப் போய்விட்டதே, அதை நீ உணர்ந்தாயா? இல்லை பழையமாதிரித்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அழகு பதப்படும், மேம்படும், தெய்வீகமாக்கும். அப்படி உன்னை ஆக்கியிருப்பதாக நீ உணர்கிறாயா? இல்லை. நிச்சயமாக இல்லை…ஏனென்றால் அதன் மகிமையைக் கூட நீ உணரவில்லை. அதையும் உன் அடிமை என்று கொண்டாய். நீ அதை மதித்திருந்தாயானால் அது உன்னை ஒளி வீசச் செய்திருக்கும். மாறாக அதில் நீ கர்வம் கொண்டாய்…இப்போது அது உன்னைத் தோற்கடித்துவிட்டது…
போதும்…எனக்கு உன் அறிவுரை தேவையில்லை. நீ இங்கிருந்து போய்விடு… சொல்லிவிட்டு நந்தினி தன் கூந்தலை அள்ளி முன் பக்கம் திருப்பித் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
இன்னமும் இந்தக் கூந்தலால் உன் முகத்தை மூடும் பழக்கம் உன்னிடமிருந்து போகவில்லையா?
ஐயோ, இதெப்படித் தெரியும் உனக்கு…எல்லாவற்றையும் நேருக்கு நேர் நின்று பார்த்ததுபோல் சொல்கிறாயே?
நீ உன் கணவனோடு இந்த அறையில் படுக்கையில் கிடந்ததும், அவனைத் தொடவிடாமல் விலக்கியதும், உன் இந்த நீண்ட கூந்தலை வைத்து உன் முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல் பாவனை செய்ததும், மென்மையான அவன் அதற்குக் கூடப் பதறித் துடித்ததும், எல்லாம் உன் அழகு மேல் அவன் வைத்திருந்த மதிப்புதான்…உன் மேல் கொண்டிருந்த பிரேமைதான்…காலப் போக்கில் கூட நீ கனியவில்லையே…அப்படி என்ன பாவம் செய்தான் அவன்…உன் நீண்ட கூந்தலைக் கொத்தாக சுருட்டிப் பிடித்து உன்னை அப்படியே வெளியே இழுத்து எறிந்து விடவா?
என் கைகள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நீளும்…ஏனென்றால் என்னின் இந்தக் கைகளால் நான் எத்தனையோ பேருக்கு எனது ஆசீர்வாதத்தினை வழங்கியுள்ளேன். நீ இப்பொழுதுதான் இங்கே வந்தவள்…நான் பல ஆண்டுகளாய் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்…இங்கே நீண்டு கிடக்கும் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காலத்திலும், சதா சர்வ காலமும் தண்ணீர் வற்றாது ஓடிக் கொண்டிருந்த காலத்திலும், இருந்து நான் அதைப் பார்த்துப் பார்த்து அந்த நீரை உண்டு உண்டு வளர்ந்திருக்கிறேன்… எனக்குப் பின்னால் வந்தவர்கள்தான் நீங்களெல்லாம்…சுற்றிலும் உள்ள இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன நடக்கிறது என்பதை இங்கேயிருந்தே நோட்டமிட்டுக் கொண்டிருப்பது நான்தான். யார் என்ன செய்தாலும் அது என் கண்களிலிருந்து தப்பாது. அது நல்லதானாலும் சரி, தவறானாலும் சரி…என்ன நான் சொல்வதற்குப் பதிலே இல்லை…என் கேள்வி புரிகிறதா, அல்லது காதிலேயே விழவில்லையா?
இந்த இடத்திலிருந்து பலரும் தன் ஆசைக் கணவனோடு சந்தோஷமாக சல்லாபிப்பதைத்தான் நான் கண்டிருக்கிறேன்.
நிறுத்து, நிறுத்து…என்ன சொன்னாய்…என்ன சொன்னாய்…ஆசைக் கணவன் என்று சொன்னாயல்லவா…? அப்படி எனக்கு அமைந்ததா என்பதை நீ யோசித்தாயா?
அமையாவிட்டால் என்ன? அமைந்ததை ஆசைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அதுதானே பெண்கள் வழக்கம்…
அப்படியும் முயற்சி செய்து பார்த்தேனே…என்னால் முடியவில்லை…
இங்கேதான் நீ உன் மனசாட்சியைக் கொல்கிறாய்…உன்னைத் தூக்கி வீச வேண்டியதுதான் இனி பாக்கி…
என்ன சொல்கிறாய் நீ…
என்னிடம் பொய்யுரைக்காதே…இந்த ஜன்னலுக்கு நேரே எது தெரிகிறது…அந்தத் தெரிதலின் மூலமாய் தினமும் என்ன நடக்கிறது என்பதை நான் அறிவேன்…நேர் எதிர் இரண்டாவது மாடி வீட்டின் அந்த அவன் அத்தனை நல்லவனல்ல…அவன் ஏற்கனவே தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருப்பவன்…இப்பொழுது உன்னையும் ஏமாற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறான்…நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும் நீ அதற்கு இடமளித்துக் கொண்டிருக்கிறாய்…
என் வாழ்க்கையில் இதுநாள்வரை நான் எந்த உடல் சுகத்தையும் காணாதவள் என்பதை அறிவாயா நீ…?
அதற்காக…?
அவன் என்னை விரும்புகிறான்…என் கூந்தல் அவனுக்குப்பிடித்திருக்கிறது.அதை ரசிக்கிறான். அந்த ரசனையை நான் விரும்புகிறேன். அந்தக் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்… அதன் மணத்தை நுகர்கிறான். தன்னை மறக்கிறான்…படுக்கையில் அதனை விசிறிப்போட்டு, அதன் மேல் படுத்து உருளுகிறான்…என் பின் பக்க பிருஷ்ட பாகத்தின் கீழும் அது தழைந்து தொங்குவதைக் கண்டு அவன் எனக்கு அடிமையாயிருக்கிறான்…அப்படி ஒருவனை அடிமைப்படுத்துவது எனது ஆதங்கத்திற்கு இதமளிப்பதாக உள்ளது. அங்கேதான் என் மனம் ஆறுதல் கொள்கிறது. என்னால் இந்த இளமையின் விரகதாபத்திலிருந்து மீள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்வாருமில்லை. என் வாழ்க்கையின் போக்கில் நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…புத்தி பேதலித்த என் கணவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை…அவரின் புத்தி அப்படி பேதலிக்கும் அளவுக்கு நான் காரணம் என்று கருதவில்லை. எல்லாம் என் தலையெழுத்து…இந்த அழகினால் எனக்கு இதுநாள்வரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் கழித்து இப்படி ஒருவன் வந்து என் மனசைச் சலனப்படுத்துகிறான்…அவனிடம் நான் மெல்லமெல்ல அடிமைப்பட்டுவிட்டேன்…என்னையறியாமல்என்னைக்கொடுத்துவிட்டேன்…எல்லோரும்என்னை விட்டுப் போய்விட்டார்கள். நல்லவைகளெல்லாம் என் கூட இருந்தபோது அவற்றின் மகிமையை நான் உணரவில்லை…தற்பொழுது இந்த நிலையில் எனக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அந்த எதிர்வீட்டு அவன்தான். அவன் எனக்கு வேண்டும். ஒரு ஆணையாவது காலடியில் கிடத்தினேன் என்கிற பெருமை வேண்டும் எனக்கு. அழிந்து கொண்டிருக்கும் என் அழகினுக்கு நான் சாவதற்குள் பெருமை சேர்க்க வேண்டும். இந்த அழகை நான் இதுநாள்வரை மதித்து வந்திருக்கிறேன்…அதனால் நான் பெருமை பெற்றிருக்கிறேன். அதை நான் பெருமைப் படுத்தியதேயில்லை…இப்பொழுது நான் செய்வது பாவமாக எனக்குத் தோன்றவில்லை. என்னை விட்டு எல்லோரும் போய் விட்டார்கள். நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…நான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காததால் இந்த வாழ்க்கையை நான் பழி வாங்கத் துணிந்து விட்டேன்…அதற்கு அவன் சிக்கியிருக்கிறான். அவனை நானாக வரச் சொல்லவில்லை. அவனாக வந்து என் வலையில் விழுகிறான். என்னை ஆராதிக்கிறான். என்னை, என் அழகைப் பூஜை செய்கிறான்…அவனின் அழகு என் மனதுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. முடியுமானால் அதை நீ தடுத்துக் கொள்…நீ என்ன அதீத சக்தியா? இல்லை கடவுளா? என்னை மிரட்டிப் பார்ப்பதற்கு…
உன் உளறலுக்கு ஏமாற நான் தயாரில்லை…இனி உன்னை விட்டு வைப்பது பாவம்…உன் கணவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்…அவன் என்னோடு கலந்த பிறகும் இன்னும் நிம்மதியில்லாமல் அலைகிறான். உன்னையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறான். நீ கிடைக்காமல் போனதில் பெருத்த ஆதங்கம் அவனுக்கு. அவனை ஆற்றுவது என் கடமை. அவன் என்னின் குழந்தை. என் ஆத்ம சொரூபமான பிம்பம்….அவன் சாந்தி பெற வேண்டும்…சாந்தி பெற வேண்டும்…
ஐயோ…அம்மா….வலிக்கிறதே…யாரேனும் வாருங்களேன்…வந்து என்னை இந்த ராட்ச்சசனிடமிருந்து காப்பாற்றுங்களேன்…அடச்…சீ…விடு என் ஜடையை…யாரது இப்படி இழுப்பது? விடு….விடு…..விடு என்னை……என்ன? நீங்களா…? நீங்கள் எப்படி இங்கே….?இதென்ன கோலம்…எப்படி வந்தீர்கள் வீட்டிற்குள்? கதவைப் பூட்டித்தானே வைத்திருந்தேன்…எப்படித் திறந்தீர்கள்?…அடடா….எதிர் வீட்டில் கூட யாருமில்லையே…உதவிக்குக் கூப்பிடுவதற்கு….யாருமில்லாத இன்றுதான் வசதி என்று நினைத்தேனே…இப்பொழுது என்னென்னவோ நடக்கிறதே…நீங்களா…நீங்களா… உங்களின் ஆசை மனைவியல்லவா நான்…என்னை விட்டு விடுங்கள்…புண்ணியமாய்ப் போகும் உங்களுக்கு….நான்தானே வேண்டும் உங்களுக்கு…இதோ நிற்கிறேன் நான்…எடுத்துக் கொள்ளுங்கள்…முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்…சர்வமும் எடுத்துக் கொள்ளுங்கள்…எனக்குப் பூரண சம்மதம்…என்னை விட்டு விடுங்கள்…என்னைக் கொன்று விடாதீர்கள்…கொன்று விடாதீர்கள்…..
புலம்பித் தவித்தவாறே மெல்லக் கண்களைத் திறக்க முயற்சித்தாள் நந்தினி…ஜன்னல் வழியாக அந்த மரத்தின் நீண்ட கைகள் வளைந்து நெளிந்து இவளை நோக்கி முன்னேறிக் கொணடிருந்தன… உடம்பு தெப்பமாக வியர்த்திருப்பதை அப்போதுதான் கண்ணுற்றாள். மேலே காற்றாடி பேயாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. எந்த நொடியிலும் அது தன் மேல் விழுந்து விடுமோ என்று உடம்பு பதறியது அவளுக்கு. ஜன்னல் வழியாக நீண்ட கைகள் அந்த அறையைத் தாண்டி அவள் படுத்திருக்கும் அந்த இடத்தை அடைந்தபோது அதன் வலுவான கரங்கள் அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இழுத்தபோது அவள் தன்னிலை மறப்பதை மெல்ல உணர ஆரம்பித்தாள்…
பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் இருட்டு முழுதும் கலையாத குளிர்ந்த வேளையில் அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நேர் வாசலின் பாதையை மறைத்த வாக்கில் நந்தினியின் சடலம் தலை குப்புறக் கிடந்தது.
எதிர் மரத்தின் உச்சிக் கிளையின் விரிந்த கைகள் கீழும் மேலுமாக நிற்காமல் வெகு நேரமாக ஆடிக் கொண்டிருந்த்து. காற்று துளிக் கூட இல்லாத அந்த விடிகாலைப் பொழுதில் சுற்றிலும் உள்ள ஏனைய நிழல் தருக்களெல்லாம் சற்றும் அசைவின்றி வரைந்து வைத்த ஓவியம் போல் நின்று கொண்டிருக்கையில் இந்த விருட்சத்தின் இந்தக் கிளைக்கு மட்டும் எங்கேயிருந்து காற்றுக் கிடைத்து, எப்படி இது தன்னை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரியாத நோக்கில் எவரும் கவனித்து உணரத் தலைப்பட்டிருக்கவில்லை.
பொழுது நன்றாகப் புலர்ந்த வேளையில் நந்தினியின் சடலம் அந்தக் குடியிருப்புப் பகுதி மக்களின் கண்களில் பட ஆரம்பித்த போது . அந்த மாய நிகழ்வின் ஒப்புக்கொள்ளத் தக்க உண்மையாக யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு போலீஸ் வேன் சரேரென்று அங்கே வந்து நின்றது.

Series Navigationபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *