எனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி

This entry is part 12 of 45 in the series 2 அக்டோபர் 2011

சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம் அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம் உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்பத்திரிகைகளுடனும், ‘தமிழ்ப் புத்தகாலயம்’ போன்ற பதிப்பகங்களுடனும் தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன். அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் அழைத்துப் போவார். அங்கு வரும் எழுத்தாளர்களை அறிமுப்படுத்துவார். இலக்கியச் சிற்றிதழலாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் – 70களில் பரபரப்பை ஏற்படுத்திய இலக்கிய இதழான் ‘ஒரு வல்லின மாத ஏடு’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ‘கசடதபற’வின் ஆசிரியர் குழு, மற்றும் அதன் முக்கியப் படைப்பாளிகளான திருவாளர்கள் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி ஆகியோர். திருவல்லிக்கேணியில் திரு.ஞானக்கூத்தன் அறை தான் ‘கசடதபற’வின் அலுவலகம். அங்கு தான் அநேகமாக எல்லா நாட்களிலும் கசடதபற குழுவினர் மாலையில் சந்திப்பார்கள். சர்மாவின் றிமுகத்தால் நான் சென்னையில் இருக்கும் நாட்களில் எல்லாம், அவருடன் சென்று அவர்களது உரையாடல்களில் கலந்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் தான் திரு.ந.முத்துசாமியுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

அறிமுகம் ஆனபிறகு முத்துசாமி, என் ஊர், நான் படித்த கல்லூரி, படித்த ஆண்டு பற்றியெல்லாம் விசாரித்தர். நான் அண்ணாமலையில் 1956-57ல் ஆசிரியர் பயிற்சிக கல்லூரியில் படித்ததைச் சொன்னதும், “அப்படியானால் உங்களுக்கு சி.மணியைத்தெரிந்திருக்க வேண்டுமே! அவரும் அந்த ஆண்டில் தான் அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார்”, என்றார். அப்போது சி.மணி ‘எழுத்து’ பத்திரிகை மூலம் புதுக்கவிதைக் கவிஞராய் பிரபலமாகி இருந்தார். “அப்படி யாரும் என்னுடன் படித்ததாக நினைவில்லையே” என்றேன். “இல்லை, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்று மாலை அவர் வருகிறார். பாருங்கள் தெரியும்” என்றார். எனக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. அப்போது அண்ணாமலையில் படித்து 15 ஆண்டுகள் ஆகி இருந்தபோதிலும் என்னுடன் படித்த 75 பேரையும் நன்றாக நினைவில் இருந்தது. எனவே பிரபல கவிஞரான சி.மணி என் வகுப்புத் தோழரா என்ற வியப்பில் அவரைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தேன்.

மாலையில் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்ற போது, முத்துசாமி, அருகில் அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டி, “இதோ, இவர் தான் சி.மணி” என்றார்.”அடடே! நம்ம பழனிசாமி!” என்று நான் மகிழ்ச்சியில் கூவினேன். “ஆமாம், சி.மணி என்கிற பெயரில் எழுதுகிறவர் பழனிசாமி என்று நான் சொல்லத் தவறி விட்டேன்” என்றார் முத்துசாமி.

சி.மணி, பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். “முத்துசாமி உங்கள் பெயரைச் சொன்னதும் புரிந்து கொண்டேன். ‘கன்னாங்குளம் கேம்பி’ல் நீங்கள் வரைந்த பாரதி போர்ட்ரெயிட்டை மறக்க முடியுமா? எப்படி இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார் மணி. இப்படித்தான் என் வகுப்புத் தோழரான சி.மணியுடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது அவர் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார் என அறிந்தேன்.

பழனிசாமி எங்களுடன் பயின்றபோது மிகவும் அமைதியானவர். அதிர்ந்து பேசாதவர். அவரது குரலே பலருக்குக் கேட்டிராது. மெலிந்த உருவம். தீர்க்கமான கண்கள். எப்போதும் மெல்லிய பன்னகை. எல்லோராலும் விரும்பப்படுகிற அரிய பண்பாளர். எங்களுடன் பயின்றபோது அவர் கவிதை எழுதுவார் என்று தெரியாது. ஆனால், அப்போதே நான் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்ததை அவர் அறிவார்.

அதன் பிறகு, சென்னையில் கிடைத்தபோதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன். ஒருமுறை, “சி.மணி, வே.மாலி என்ற பெயர்களில் நீங்கள எழுதிய கவிதைகளை ‘எழுத்து’வில் படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் அவர் என்று அப்போது தெரியாது. தெரிந்த பிறகு மீண்டும் தேடிப் படித்தேன்” என்றேன். என் கவிதைகள் எப்படி உள்ளன என்று அவர் கேட்கவில்லை. நானாகச் சொன்னேன். “ஆனால் இப்போதும் உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை. புதுக்கவிதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை” என்றேன். அதற்காக அவரது முகம் வாடவில்லை. என்னிடம் விவாதிக்கவோ விளக்கவோ இல்லை. மென்னகை மட்டும் அவரது இதழ்களில் மலர்ந்தது. அவ்வளவு சாந்தசீலர் அவர். ஆனால் பின்னாளில் எனக்காகத்தானோ என்னவோ ‘புததுக்கவிதை புரியவில்லை’ என்ற தலைப்பில் ‘நடை’ இதழில் ஒருகட்டுரை எழுதினார்.

பிறகு அவரும் ந.முத்துசாமி போன்ற நண்பர்களும் சேர்ந்து ‘நடை’ என்றொரு இலக்கிய இதழைத் தொடங்கியபோது, முதல் இதழைப் படித்து விட்டுப பாராட்டி அவருக்குக் கடிதம் எழுதினேன். முதல் இதழில் சங்கக் கவிதைப் பாணியில் சி.மணி என்ற பெயரில் கீழ்க்கண்ட கவிதையை எழுதி இருந்தார்.

‘காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்’ .

– இந்தக் கவிதை எனக்குப் புரிகிற மாதிரி இருந்தது. அதையும் அவருக்கு எழுதி இருந்தேன். கவிதை மட்டுமல்லாமல்,’செல்வம்’ என்ற பெயரில் ‘திரைப்படப் பாடல்’ என்றவொரு ஆய்வுக் கட்டுரையும் எழுதியிருந்தார். 3வது இதழுடன் யாப்பிலக்கணம் பற்றி ‘செல்வம்’ என்ற பெயரில் எளிமையான, கவிதை எழுதுவோருக்குப் பாடப் புத்தகம் போன்ற ஒரு 28 பக்க இணைப்பையும் எழுதி வெளியிட்டார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தும, ஒரு தமிழ்ப் பேராசிரியரையும் விடத் தெளிவுடன் எழுதி இருந்தது மிகுந்த பாராட்டுக்குள்ளாயிற்று.

அதே இதழில் ‘வாழ்வு தந்த செல்வன்’ என்ற, சி,.ஏ.பாலன், மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருந்த எம்.டி வாசுதேவன் நாயரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற ‘நாலு கெட்டு’ என்ற நாவலுக்கு சி.மணிகேட்டுக்கொண்டபடி, நான் விமர்சனம் செய்திருந்தேன். அதுதான் நான் முதன் முதல் எழுதிய விமர்சனமும் ஆகும்.

தரமான படைப்புகளுடனும், புதிய சோதனை முயற்சிகளுடனும் சிறப்பாக வெளிவந்து, தனக்கென ஒரு சிறப்பிடத்தை சிற்றிதழ் வரலாற்றில் பதித்த ‘நடை’ 8 இதழ்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது- இலக்கிய உலகுக்குப் பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக சிற்றிதழ்கள் நின்று போவதற்குப் பொருளாதார நெருக்கடிதான் காரணமாய் இருந்திருக்கிறது. ஆனால் ‘நடை’ அதனால் நின்று போய்விடவில்லை. நடையை நடத்தியவர்கள் அனைவரும் வசதியான வருவாய் வரும் நல்ல வேலையிலதான் இருந்தார்கள். அதனால் அவர்களுக்குப் பண நெருக்கடி இல்லை. ஒரு இலட்சியத்தோடு நடத்தியவர்கள், வெளியிடுவதற்குத் தரமான படைப்புகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தாமாகவே வெளியீடை நிறுத்தி அதிலும் ஒரு சாதனையைப் படைத்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்பு விட்டுப்போயிற்று. அவரும் பணி ஓய்வுக்குப்பின் எழுதுவதை நிறுத்திக் கொண்டதாகக் கேள்விப் பட்டேன். உடல் நலிவு காரணமாக, இலக்கிய நிகழ்வுகளையும் தன்னைச் சந்திக்க வருபவர்களையும் தவிர்த்து வந்ததாகவும் அறிந்தேன்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நேரிட்டது. அவருக்கு ‘விளக்கு’ பரிசு வழங்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் மூலம் அறிந்து அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். அவரும் நன்றி தெரிவித்து அதற்குப் பதிலும் எழுதினார். பிறகு நான் விரும்பினாலும் அவருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி 2009 ஏப்ரலில் அவரது மறைவுச் செய்தியையும், அடுதடுத்த மாதங்களில் அவரது மறைவிற்கான அஞ்சலிக் கட்டுரைகளையும் இலக்கிய ஏடுகளில் படிக்க நேர்ந்தது. இனிய நண்பரை நானும், ஒரு சிறந்த படைப்பாளியை இலக்கிய உலகமும் இழந்த சோகத்தை, இன்னும் மனம் வலிக்க எண்ணிப் பார்க்கிறேன். அவரது ‘வரும் போகும்’ கவிதைத் தொகுப்பு மட்டும் அவரை நினைவூட்ட என்னிடம் இருக்கிறது. 0

Series Navigationநிதர்சனம்(78) – நினைவுகளின் சுவட்டில்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *