தங்க ஆஸ்பத்திரி

This entry is part 19 of 45 in the series 2 அக்டோபர் 2011

தண்ணி பிடிக்கிற இடத்தில, குளத்தில, காட்டுக்கு போற வழியில எல்லாம் இடத்திலும் கேட்டுப் பார்த்தாள் செல்லம்மாள். ராஜாத்தி மசியவே இல்லை. செல்லம்மாள் மட்டுமல்ல; மஞ்சுளா, அமுதா ரெண்டு பேரும் தனியா தனியா கேட்டுப் பார்த்தார்கள்.. ஒரு பதில் வராது ராஜாத்தியிடம் இருந்து.. வேற வழியே இல்லன்னு செல்லம்மாள், மஞ்சுளா, அமுதா மூணு பேரும் கூட்டு சேர்த்துப் போய் கேட்டகலாம்னு முடிவு பண்ணி சத்திரத்துகிட்ட நின்னார்கள். ராஜாத்தி தனியா ஆத்துல குளிச்சிட்டு வந்துக் கொண்டிருந்தாள். ஈரத்துணியை உடம்பில சுற்றிட்டு வருவது எதோ கருந்தூண் அசைந்து வருவது போலிருந்தது..

இடுப்பில வாளி இருந்தது. அதில் துணிகள் நிரம்பி இருந்தது.. ஒரு புறம் வாழைத்தோட்டம், மறுபுறம் வயக்காடு. ரோட்டுக்கு நேரா மேல பார்த்தா மலை மேல வெங்கடாஜலபதி கோவில்.. ஆட்கள் ஆத்துல குளிச்சிட்டு ஊருக்குள்ள வருவதும் போவதுமாக இருந்தனர்.
நல்லா ஜிலு ஜிலுன்னு காற்று அடித்தது.
சத்திர பஸ்டாண்டுல ஒரு ரூபாய்க்கு வெள்ளைரிக்காயை வாங்கி கடித்துக் கொண்டாள் ராஜாத்தி. வீட்டுக்கு போய் சேருர வரைக்கும் நேரம் போகனும்லா.. பாளையங்கோட்டை போறதுக்கு பஸ்ஸுக்காக காத்திருந்த
ரோஸ் மேரி இவளைப் பார்த்து ” ஏய், ராஜாத்தி.. என்ன ஆற்றுப்பக்கம்… ஆச்சர்யமால்லா இருக்கு…”
என்றாள். சொல்லும் போதே அவளிடம் இருந்த ஒரு வெள்ளைரிக்காய் பிஞ்சை ஒண்ண எடுத்துக்கொண்டாள். ரோஸ் மேரி ஆர்.சி கோவில் தெருக்காரி. “அங்க குளம் வரண்டுலா கிடக்கு.. அதான்.. துணி வேற சேர்ந்துப் போச்சு…எடுத்துட்டு வந்து துவைச்சா ஒரு வேலை முடிஞ்ச மாதிரிலா.. அப்புறம் எங்க தூரமா…?”

“இங்கத்தான்… ஹைகிரவுண்டுக்கு போறேன்… என் மச்சான் பொண்டாட்டிய அங்க சேர்த்திருக்கு… போய் பார்க்கப் போறேன்…”

திருநெல்வேலி என்று போர்டு போட்டு பஸ் வரவும் ரோஸ் மேரி கிளம்பினாள். ராஜாத்தியும் நடையக் கட்டினாள்.

கொஞ்சம் தூரந்தான் நடந்திருப்பாள்..அங்க மூன்று பேரும் ஒன்னா நிக்கது பார்த்துட்டு கொஞ்சம் பயந்துதான் போனாள்..
இப்ப ஜிலு ஜிலு காற்றுலாம் போய் வெக்கை வந்தமாதிரி இருந்தது ராஜாத்திக்கு..

“ஏய் நில்லுடி, உன்னைத்தான்… எவ்வளவு தூரம் உன்னை கேட்டுப்பார்க்கிறோம்.. பதில் எதும் சொல்லாமல் சிலுப்பிக்கிட்டு போறே..இப்ப பதில் சொல்லிட்டு போடி ” என்று வெடித்தாள் மஞ்சுளா..
“ஆமாக்கா.. நானும் கெஞ்சி வேற கேட்டுப் பார்க்கிறேன்.. ஒன்னும் சொல்ல மாட்டுக்குறா.. ஏய் இப்ப சொல்லுடி.. பங்கு தர முடியுமா.. முடியாதா…?” என்றாள் செல்லம்மாள்.
மூவரும் சண்டைகோழி மாதிரி சீறுவதப்பார்த்து ஆத்திரமா வந்தது ராஜாத்திக்கு. இதுல வேற ஒரு சைக்கிள்ல போன ஒரு பெருசு, நிண்ணு பார்த்துட்டுப் போச்சு..

தீடிரென்று ஆவேசம் வந்தவளாய்

” ஒரு மயிரும் தர முடியாதுங்கடி.. என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்கடி…” என்று கத்தி விட்டு இடத்தை காலி பண்ணினாள்.
மூன்று பேருக்கும் மூஞ்சில அடித்தால் போல் ஆகிவிட்டது.

நடந்த விசயம் இதுதான்.

முன்னால் திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தூத்துகுடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவைச்சார்ந்த கருங்குளம் ஊரில் இருந்து சிவராமகிருஷ்ணன் பொது மக்கள் சார்பாக எழுதிக்கொள்வது, எங்கள் ஊரைப் பற்றி தாங்கள் எற்கனவே அறிந்திருப்பீர்கள்.. தாமிரபரணி நதிக்கரையில் எங்கள் ஊர் அமைந்துள்ளது..பாதி பேர் விவசாயமும், மீதி பேர் கூலித்தொழிலையும் நம்பி உள்ளனர்.. நவதிருப்பதிகளில் ஒன்றான வெங்கடாஜலபதி கோவில் எங்களூரில் அமைந்துள்ளது. இங்கு எல்லா சமயத்தினரும், சமூகத்திருமாக சுமார் ஐயாயிரத்திற்கு அதிகமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கு மருத்துவ வசதி இல்லை..எதுக்கெடுத்தாலும் ஹைகிரவுண்டுக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் ஒட வேண்டியதாயிருக்கிறது.. இருக்கிறவன் ஓடுவான், இல்லாதவன் என்ன பண்ணுவான்..எனவே எங்கள் ஊரில் ஒரு ஆஸ்பத்திரி தொடங்க எற்பாடு செய்ய வேண்டும் என்பதை ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

சு.சிவராமகிருஷ்ணன்
தலமை ஆசிரியர் ( ஓய்வு)
கருங்குளம்

சிவராமகிருஷ்ணன் வாத்தியார் அக்ரகாரத்துக்காரர்.. அக்ரகாரம் மலைக்கு கீழே அமைந்துள்ளது.. யூகோ வங்கி அருகில்தான் வாத்தியார் வீடு.. இந்த வங்கியே வாத்தியாரின் வலியுறுத்தலின் பேரில்தான் வந்தது என்று பெருமைபட்டுக்கொள்வார். அவரது வீட்டின் திண்ணையில்தான் ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் ஆஸ்பத்திரி அமைக்கும் முடிவு…எழுதி முடித்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ விடம் நேரில் சென்று கொடுத்துட்டு வந்தார்.. சீக்கிரம் ஆஸ்பத்திரி வரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ஊரின் முக்கியஸ்தர்கள்..

ஒரு வழியா சுமார் ஒரு வருடம் கழித்து கருங்குளத்திற்கு ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டம் வந்தது.. அது வந்ததுக்கு வாத்தியார் போட்ட மனுதான் என்று ஊருக்குள்ளே பேசிக்கொண்டார்கள். ஆஸ்பத்திரி கட்ட இடம் பார்ப்பதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில் சந்தன மாரியம்மன் கோவில் கிட்டயும், பின்னர் கள்ளிகாட்டு கிட்டயும் இடம் பார்த்தனர்.
பின்னர் முடிவாக மலைக்கு அடியில் கட்டலாம் என்று இடம் ஒதுக்கப்பட்டது.. ஊருக்குள் இச்செய்தி கேள்விப்பட்டு சந்தோசமடைந்தனர்.. மலைக்கு மேல செல்ல போடப்பட்ட தார் ரோட்டுக்கு கிழக்காக, வாத்தியார் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.. வேலை மும்முறமாக நடைபெற ஆரம்பித்தது.
வானம் தோண்ட ஆள் வரவழைக்கப்பட்டனர்.. அவ்வாறு வந்தவர்கள்தான் சுப்பையா, இசக்கி, ஆறுமுகம் மற்றும் மாணிக்கம்..நான்கு பேருமே உள்ளூர்தான்.. சுப்பையாவுக்கு வாத்தியார் நல்ல பழக்கம்.. அதனாலயே சுப்பையாவுக்கு வானம் தோண்டும் வேலை கொடுக்கப்பட்டது.
சுப்பையாத்தான் மற்ற மூணு பேர கூட்டிட்டு வந்திருந்தான்..
நான்கு பேரும் நாலு பக்கமும் மண் வெட்ட ஆரம்பித்தனர். மலைப்பகுதியினால கல்லும் பாறையுமாக இருந்தது.. தோண்டுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டனர்.. அப்பப்ப ஊர் மக்கள் வந்து பார்த்துட்டு போவார்கள்..
ஒரு நாள் வேடிக்கை பார்க்க வ்ந்த ராமு கோனார்
” ஏல, என்ன வேலை ரொம்ப மந்தமா நடக்கிற மாதிரி இருக்கு.. வேகமாய் தோண்டுங்கப்பா.. அதுக்குன்னு காலுல கீலுல போட்டுராதிங்க…” என்றார்.
“அதுலாம் எங்களுக்கு தெரியும்.. உம் ஜோலியப் பார்த்துட்டு போரும்..” என்று வெடுக்குடன் கூறிவிட்டான் சுப்பையா.

“வெயில் வேற மண்டையை பொழக்குது.. ஒரே வேக்காடா இருக்குதே ஒரு பைனி வாங்கிட்டு வந்து கொடுக்கலாம்லா.. அதவிட்டுட்டு நொள்ள மயிரு சொல்லிக்கிடுதானுவோ…” என்று கூறிக்கொண்டே கடப்பாறையை ஒரு போடு போட்டான்.
ராமுகோனார் எப்பவோ இடத்தை காலி பண்ணிவிட்டார்.

கடப்பாறையை போட்ட போடுல “டிங்க்”னு சத்தம் வந்தது. மண் எதும் கிளறவில்லை.மறுபடியும் ஓங்கி குத்தினான். மறுபடியும் அதே சத்தம்.. மற்ற மூணு பேரையும் பார்த்தான். அவர்கள் இதை கவனித்த மாதிரி தெரியவில்லை.. காலால் நொண்டிப்பார்த்தான்.. ஏதோ இடறுது மாதிரி தெரிந்தது.. சுற்றும் முற்றும் பார்த்துட்டு கீழே குனிந்து கையால் நெருடினான்.. பானை மாதிரி இருந்தது.. சுப்பையாவுக்கு குப்பென்று வேர்த்து விட்டது. சந்தோச வேர்வையா என்று தெரியவில்லை..புதையலா இருக்குமோன்னு சந்தேகமாயிருந்தது.. இருந்தாலும் இப்ப எடுக்க முடியாது..இவனுவ வேற இருக்கானுவ.. ராத்திரி வந்து பார்க்கலாம்.. என்று எண்ணிக்கொண்டு மணலை போட்டு மூடினான். வேற இடதில தோண்ட ஆரம்பித்தான், எதுவும் தெரியாத மாதிரி.. நடகிறத எல்லாம் தெரியாத மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மூணு பேரும்.. மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஒரு விதமான பட படப்புடன் வேலை செய்தான் சுப்பையா.

” என்ன.. சுப்பையான்ன.. ஒரு மாதிரி இருக்கியே… என்ன ஆச்சு..எதும் புதையல் எதும் அம்புட்டுகிச்சா…” என்று நெண்டினான் இசக்கி.

” யேய்.. அதுலாம் ஒண்ணுமில்லப்பா.. வேலையப்பாருங்கப்பா… ஐயர் வானம் தோண்டுறதுக்கு பத்து நாளுதான் குடுத்திருக்காரு..சீக்கிரம் முடிச்சாகனும்.. ஆகட்டும் ஆகட்டும்..” என்று மண்வெட்டியைக் கொண்டு கொத்த ஆரம்பித்தான்.

மூன்று பேரும் சிரித்துக் கொண்டனர்.

சாயங்காலம் எதிர்த்தாப்புல உள்ள ஒடையில் கை,கால் கழுவிட்டு நான்கு பேரும் வீடு திரும்பினர்.

இரவானதும் பொண்டாட்டி தூங்கினதுக்கப்புறம் பூனை மாதிரி எழுந்து மலைக்கு வந்தார். ஆள் அரவமே இல்லை.. ஒரே இருட்டு கசமாயிருந்தது.. மலைக்கு மேல கோவிலில் மட்டும் லைட் எரிந்தது.

டக்குன்னு குழில இறங்கி பானையைச்சுற்றி உள்ள மண்ணை கையால் தோண்டி , பானையை வெளிய எடுத்தான்.. செம்பா, வெண்கலமா என்று இருட்டில் தெரியவில்லை. பானையின் வாயில் எதோ கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.. மூச்சு நின்று விடும் போலிருந்தது.. அப்படியே பானையை எடுத்துக்கொண்டு மேலேறினான்.. பாறைக்கு பின்னால் இருந்து மூன்று பேரும் வெளிய வந்தனர்.. சுப்பையாவுக்கு கண்ணு முழியெல்லாம் பிதுங்கிவிட்டது.

“கையில் என்ன சுப்பையான்ன… சுடு சோறா..? வாங்க சாப்பிடலாம்… நாங்க குழம்பு வச்சிருக்கோம்…” என்று கூறிக்கொண்டே மூன்று பேரும் சூழ்ந்துக் கொண்டனர். வேற வழியில்லை பங்குதான்…
பாறைக்கு பின்னால் போயி பானையின் வாயை அவிழ்த்தனர். உள்ளே தங்கம் ஜொலி ஜொலித்தது..அந்த இருட்டுக்குள்ளே மொத்தம் எத்தனை என்று எண்ணினர். மொத்தம் 60 காசு இருந்தது.. ஒவ்வொண்ணும் நாலு கிராம் இருந்தது..
மூன்று பேருக்கும் மிகுந்த சந்தோசம்.. சுப்பையாவுக்கு மட்டும் வருத்தமாயிருந்தது.. ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டனர். பானை மட்டும் தனக்கு வேண்டும் என்று கூறி விட்டான் சுப்பையா.. அவர்கள் மறுப்பெதும் கூறவில்லை.. காரியத்தை முடித்து விட்டு வீட்டுக்க்கு வந்தனர். அவர்கள் புதையல் எடுத்ததுக்கு சாட்சியாக நிலா மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அவரவர் பொண்டாட்டியிடம் மட்டும் சொல்லி வைத்தனர். அவர்களுக்கும் அடக்க முடியாத சந்தோசம்..

இசக்கி பொண்டாட்டி செல்லம்மாள் கேட்டாள்

“சரி.. இந்த தங்கமெல்லாம் எதுல இருந்தது..” என்றாள்.

“அது ஒரு பானையில இருந்தது..” என்றான் இசக்கி.

“மண் பானையா…?”

“இல்லை… அது என்னமோ.. தெரியல..”

“அத எங்க…”

” அது நம்ம சுப்பையா அண்ணன் எடுத்துகிட்டாரு..”

“அவருக்கு எப்படி குடுக்கலாம், நமக்கு அதுலயும் பங்கில்லையா…? என்று கேட்டாள்.

இதே கேள்வியைத்தான் மஞ்சுளா மாணிக்கத்திடமும், அமுதா ஆறுமுகத்திடமும் கேட்டார்கள்.

“நாங்க பார்த்துக்கிறோம்…அத எப்படி வாங்குவதுன்னு எங்களுக்கு தெரியும்..” என்று பார்க்கிற இடத்திலெல்லாம் சுப்பையா பொண்டாட்டி ராஜாத்தியிடம் நச்சரிக்க ஆரம்பித்தார்கள்..

இதுதான் நடந்தது..

மூன்று பேரும் ராஜாத்தி வீட்டு முன்னால் நின்று கத்த ஆரம்பித்தார்கள். இதை கேள்விப்பட்டு இசக்கி ஒடிவந்து

“பொட்டை முண்டைகளா… காரியத்தை கெடுத்துடாதிங்கடி… இடத்தை காலி பண்ணுங்கடி…” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். அவர்கள் அதை காதுல வாங்கின மாதிரி தெரியல.

” அந்த பானை வைரமாயிருந்துருக்கலாம்.. இல்ல அத வுட பெருசா இருந்திருக்கலாம்.. அதான் புருசனும் பொண்டாட்டியும் கமுக்கமா ஆட்டையப் போட்டுட்டிங்க…பானைய எடுத்து வந்து காட்டுடி.. அப்ப எதுக்கு ஒழிச்சு வைக்க…”என்று தாருமாரா கத்திகொண்டிருந்தார்கள்.. அதற்குள் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விட்டது.. இசக்கி தலையில் அடித்துக் கொண்டான். விசயம் வாத்தியாருக்கும் தலைவர் காதுக்கு போனது.. ஊரே ஒன்று திரண்டு விட்டது.

அதற்குள் சுதாகரித்துக் கொண்டு நாலு பேரும் ஒன்று தெரியாதது போல நாடகமாடினர்..வீட்டுக்குள் யாரையும் சோதனை செய்ய விடவில்லை.. செய்துங்கநல்லுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார்.. வாத்தியார்தான் தகவல் சொன்னார்.. இன்ஸ்பெக்டர் மிரட்டி கேட்டதில் ஒத்துக்கொண்டனர்..

சுப்பையாத்தான் எல்லாருட்டயும் தங்க காசுகளை வாங்கி மொத்தம் 60 காசுதாங்க என்று சாமி மேல சத்தியம் செய்து போலிஸீடம் ஒப்படைத்தான்.. பத்திரமாக அரசாங்க கருவூலத்தில் கொடுக்கப்பட்டது..
சுப்பையாவ பார்க்கத்தான் பாவமாய் இருந்தது.. அன்றிரவு நாலுபேர் பொண்டாட்டிகளுக்கும் உதை விழுந்தது..
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே என்று நொந்துக்கொண்டார்கள்.

விறுவிறுவென்று ஆஸ்பத்திரி கட்டிமுடிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ வந்திருந்தார்.
” இந்த ஆஸ்பத்திரி வருவதற்கு எம்.எல்.ஏ எடுத்த முயற்சி சொல்லி மாளாது..மேலும் தோண்டும் போதே நமக்கு தங்கம் கிடைத்தது.. இனிமேல் இத தங்க ஆஸ்பத்திரி என்றே கூப்பிடுங்கள்.. நமக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும்..” என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தார் சிவராமகிருஷ்ணன் வாத்தியார். ஆஸ்பத்திரி திறந்து வைக்கவும் கூட்டம் ஆர்ப்பரித்தது. கூட்டத்தில் சுப்பையா மட்டும் அழுதுக் கொண்டிருந்தான்..

பல வருடம் கழித்து…!

” ஏய்.. ராஜாத்தி அக்கா… தங்க ஆஸ்பத்திரியில உங்களுக்கு பேரன் பிறந்திருக்காமே.. போய் பார்க்கலயா…” என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் உட்கார்ந்தாள் வள்ளி.

“கேள்விப்பட்டேன்… மருமகனுக்கும் நமக்கும் சண்டை..அவுங்க குடும்பம்லா ஆஸ்பத்திரிய வந்து மொய்க்கும்.. அதான் லேட்டா போய் பார்த்துக்கலாம்.. முதல் பேத்திக்கே மோதிரம் போட்டோம்.. இப்ப போட தங்கம் வாங்க எவண்ட காசு இருக்கு…
வந்த சீதேவியை விரட்டி விட்டாச்சு..அப்புறம் போய் பேரனை பார்க்கணும் வள்ளி..” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

சுப்பையா கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.. வீட்டுக்குள் சென்று அடுக்களையின் மேல் உள்ள பரணியில் மூடி வைத்த பானையத்தூசி தட்டி எடுத்தார். நேரா கணேச ஆசாரி கடைக்கு போய் பானையை விற்று ஒரு கிராம் மோதிரம் வாங்கிக்கொண்டார்.

புதையலை போலிஸிடம் ஒப்படைக்கும் போது அங்கு நடந்த கூச்சல் குழப்பத்தில், தங்கத்தை மண்பானையில் வைத்து கொடுத்ததை யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை..

தங்கத்தோடு தங்க ஆஸ்பத்திரிக்கு பேரனை பார்க்க நடக்க ஆரம்பித்தார் சுப்பையா.

—ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி

Series Navigationகட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…இலக்கியங்களும் பழமொழிகளும்
author

ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *