பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்

This entry is part 43 of 45 in the series 2 அக்டோபர் 2011மு. இராமனாதன்

 

[2010ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சார்பாக மாதந்தோறும் வாசக-விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பன்னிரண்டு சிறுகதைகளை திரு. மு இராமனாதன் மதிப்பீடு செய்து, 2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்ததது- சதுரங்கம், எழுதியவர்: ஆனந்த் ராகவ். பன்னிரண்டு சிறுகதைகளின் தொகை நூல் சதுரங்கம்எனும் தலைப்பில் 15.4.2011 அன்று நடந்த இலக்கியச் சிந்தனையின் 41ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது. நூலில் இடம் பெற்றிருக்கும் மு. இராமனாதனின் மதிப்புரை கீழே]


பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு முறை சொன்னார்: ‘தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது’. இது ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பிற்கும் பொருந்தும். 1970இல் தொடங்கி ஆண்டு தோறும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகை நூலை வெளியிட்டு வருகிறது இலக்கியச் சிந்தனை. மழை, புயல், சூறைக்காற்று என்று எது வந்தாலும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார் பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கியச் சிந்தனையின் கூட்டம் நடைபெறும். தமிழ் வாசகர்கள் பலருக்கும் கிடைக்கக் கூடிய பருவ இதழ்களிலிருந்து அதற்கு முந்தைய மாதம் வெளியான சிறுகதைகளில் ஒன்றை ஒரு வாசக-விமர்சகர் தேர்ந்தெடுப்பார். ஆண்டிறுதியில் அவ்விதம் சேரும் பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றை ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுப்பவர் ஒரு தேர்ந்த எழுத்தாளராகவோ திறனாய்வாளராகவோ இருப்பார் (இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்காக அமைந்துவிட்டது என்றறிக!). இந்த கதைகளின் தொகைநூல் சித்திரைத் திருநாளில் சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் வெளியிடப்படும். இவ்விழாவில் ஆண்டின் சிறந்த சிறுகதை ஆசிரியருக்குப்  பரிசளிக்கப்படும். 41 ஆண்டுகளாக இந்தத் தொடர் ஓட்டத்தில் யாதொரு முடக்கமும் இல்லை. இத்துடன்  பல ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த நூல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது இலக்கியச் சிந்தனை. கூடவே  ஒவ்வொரு ஆண்டும் மறைந்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டு வருகிறது.

இதுகாறும் ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தெரிவு செய்தவர்கள் அறியப்பட்ட ஆளுமைகள். தி. ஜானகிராமன், அசோகமித்திரன், பி. எஸ். ராமையா, எம். வி. வெங்கட்ராம், நீல. பத்மனாபன், ஆ. மாதவன், சோ. சிவபாதசுந்தரம், சுஜாதா, வல்லிக்கண்ணன், ராஜம் கிருஷ்ணன், தி. ச. ராஜூ, பிரபஞ்சன், சரஸ்வதி ராம்னாத் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

இப்படியான பாரம்பரியமும் தொடர்ச்சியும் மிக்க அமைப்பு, 2010ஆம் ஆண்டில் வாசக விமர்சகர்கள் தெரிவு செய்த பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு என்னைக் கேட்டுக் கொண்டபோது நான் மிகவும் தயங்கினேன். இதற்குக் காரணம் இருக்கிறது.

ஹாங்காங்கில் இலக்கிய ஆர்வலர்களைத் திரட்டிக் கூட்டங்களை நடத்தியதும், அரசியல்-சமூக-இலக்கியம் தொடர்பான சிற்சில எண்ணங்களை அவ்வப்போது எழுதி வருவதுமல்லாமல் நான் வேறொன்றும் செய்ததில்லை. நான் விமர்சனக் கலையைக் கற்றுத் துறை போகியவனோ திறனாய்வாளனோ அல்லன். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நல்லதும் அல்லதுமான எழுத்துக்களை வாசித்து வருகிறேன். இந்த வாசகத் தகுதியைப் பற்றிக் கொண்டே இம்முயற்சியில் ஈடுபடுகிறேன். இந்தத் தெரிவு எனது ரசனையின் அடிப்படையில் அமைகிறது. ஈழப் போரின் முன்னோடிகளில் ஒருவரான சி. புஸ்பராஜா, தான் எழுதிய நூலுக்கு வைத்த பெயர் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’. இதில் இடம்பெறுவது புஸ்பராஜாவின் அனுபவங்களும் சாட்சியங்களும். வேறொரு போராளி எழுதும் நூல் வேறுவிதமான பார்வைக்கோணங்களைக் கொண்டிருக்கும்; அது இன்னொரு சாட்சியமாக அமையும். அதைப் போலவே இங்கே இடம் பெறும் மதிப்பீடும் தரம் பிரித்தலும் எனது சாட்சியங்களாகும். இது மற்றவர்களுக்கு ஏற்புடையதாக் இருக்க வேண்டுமென்பதில்லை.

இந்த மதிப்பிடலுக்கு முன்னால் அதற்கான அளவுகோல்களை நிர்ணயித்துக் கொள்ள வேண்டாமா? இந்தப் பூமியில் 690 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதை 690 கோடி விதமான மக்கள் வசிக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஒருவரைப் போல் மற்றவர் இருப்பதில்லை. அதுவே வாழ்வின் ரகசியம்; எல்லா ரகசியங்களும் சுவாரஸ்யமானவைதாமே! படைப்பிலக்கியமும் இப்படித்தான். ஒன்று போல் இருப்பதில்லை மற்றொன்று, அது மொழிபெயர்ப்பே என்றாலுங்கூட. ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மை வாய்ந்தது. இங்கு இடம்பெறும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு விதமானவைதாம். இவற்றை எங்ங்னம் வரிசைப்படுத்துவது? முன்னோர் பலர் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்கள். அதன் மூலம் நல்ல கதை எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்புணர்த்தி இருக்கிறார்கள். சிலர் அதைத் தம் விமர்சனங்களில் சொல்லியுமிருக்கிறார்கள்.

1. ஒரு சிறுகதை எளிமையாக இருக்கலாம், கடினமாகவும் இருக்கலாம். ஆனால் நல்ல கதைக்குச் சிக்கனம் முக்கியம். இங்கு சிக்கனம் என்பது கதையின் அளவைக் குறிக்கவில்லை; அது சொற்சிக்கனத்தைக் குறிக்கிறது. தேவைக்கதிகமான சொற்கள் சேருகிறபோது அந்தப் படைப்பு வார்த்தைக் காடாகிவிடும்.

2. கட்டுரைகளினின்றும் உடனடியாக இனம் பிரிக்கக் கூடிய புனைவின் மொழி ஒரு நல்ல கதையில் அமைந்திருக்கும்.

3. ஒரு நல்ல கதை தனக்கென்று நிர்ணயித்துக் கொண்ட இலக்கை நோக்கி சரி கணக்காக முன்னேறும். இடையில் தடம் புரளாது. மையக் கருவுக்கு தேவையற்ற யாதொன்றும் கதையில் இராது.

4. ஒரு நல்ல கதை முன்முடிவுகளையோ தீர்மானங்களையோ வாசகர்கள் மீது திணிக்காது.

5. கதை நிகழும் புற வெளியாகிலும், கதை மாந்தர்களின் மன அவசங்கள் இடம் பெறும் அக வெளியாகிலும், வாசகன் இந்த வெளிகளில் சஞ்சரிக்க முடிந்தால் மட்டுமே கதை நம்பகத்தன்மை பெறும்.

6. இவற்றைத் தவிர, ஒரு நல்ல கதையில் வாசகனுக்கேயான ஒரு வெளி இருக்கும். எழுதப்பட்ட வரிகளுக்கிடையில் அவன் உய்த்து உணர்ந்து பொருள் கொள்ள ஏதுவான எழுதப்படாத வரிகளும் இருக்கும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அவை மணற்கேணி போல் ஊறி வரும். ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்ற குறளுக்கு இலக்கியமாக அமைந்தால் அது பெரிய வெற்றி.

படைப்பிலக்கியவாதிகளாலு திறனாய்வாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்கூறிய அம்சங்களை, நான் உள் வாங்கிக் கொண்ட விதத்தில், கீழே வரும் மதிப்பீடும் வரிசைப் படுத்தலும் அமைகிறது.

சிற்பவல்லி (ஜெய் விஜய்)

இதில் வரும் கணவனும் மனைவியும் முறையே நன்மை, தின்மை என்ற குணநலன்களைக் கொண்டவர்கள். கதையும் தட்டைப் பரிமாணம் கொண்டது. கதையின் முடிவில் நாடகத்தனமான திருப்பமும் வருகிறது. பழைய தமிழ்த் திரைப்படங்களைப் போல் ‘சுபம்’ என்று எழுதிக் காட்டி முடித்திருக்கக் கூடிய கதை.

குறையொன்றுமில்லை (ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா)

ஊராட்சித் தேர்தலை நடத்த அரசு அதிகாரிகள் ஒரு மலைக் கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலைகள், தண்ணீர், மின்சாரம் என்று எந்த வசதிகளுமில்லை. வேட்பாளர்கள் யாரும் அங்கு வந்து மெனக்கெடுவதுமில்லை. ஆனாலும் நூறு சதவிகிதம் வாக்குப் பதிவாகிறது. ஏனெனில் வாக்களிப்பது குடிமக்கள் கடமை. “எங்க வேலையை நாங்க சரியாச் செய்வோம்’ என்கிறார் கிராமத்துப் பெரியவர். அவருக்கு ஒரு நீண்ட வசனமும் இருக்கிறது. அதில் ஒலிப்பது ஆசிரியரின் குரல்தான். இந்தப் ‘பொன் செய்யும் மருந்து’, ‘கடமையைச் செய்’ போன்றவற்றை ஆசிரியர் இந்த எளிய மக்களின் தலையில் சுமத்தி விடுகிறார்.

அன்றும் இன்றும் அடைக்கலம் (பாமதி மைந்தன்)

வீட்டில் அப்பாவோடு பிணங்கி வெளியேறும் இளஞன் மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திற்கு வருகிறான். அந்தச் சூழலில் தன்னை மீள்பரிசோதனை செய்து கொள்கிறான். தெளிவு பெறுகிறான். கதையில் ஒரு பறவையைக் காகங்கள் துரத்துகின்றன. பறவை ராமகிருஷ்ணரின் கருவறைக்குள் புகுந்து விடுகிறது. இங்கே பறவைதான் இளைஞன், அவனை அலைக்கழிக்கும் எண்ணங்கள்தாம் காகங்கள். பறவை யார், காகங்கள் எவை என்பதைக் கோனார் உரை நூல் போல கதை பட்டியலிட்டு விடுகிறது. வாசகன் சிந்திப்பதற்கு எதுவும் இல்லை. அது ஆசிரியரின் நோக்கமும் இல்லை. இது ஒரு பிரச்சாரக் கதை.

அண்ணாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றில் அதன் தொகுப்பாசிரியர் பெருமாள் முருகன் இப்படிச் சொல்கிறார்: “கருத்து விளக்கக் கதைகள் எப்போதும் (அதற்கான) வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்படுபவை. தமது கருத்துக்களை ஏற்றுக் கொண்டு விட்ட மக்கள் திரள் ஒன்றுக்குச் சந்தோஷம் தரும் நோக்கத்திலும், அத்திரளிடம் கருத்தை வலுப்படுத்தும் நோக்கத்திலும் எவை எழுதப்படுகின்றன”. இது இந்தக் கதைக்கும் பொருந்தும்.

கலப்பை  (செ செண்பகக்கண்ணு)

ஒரு கிழவியின் பார்வைக் கோணத்தில் நேராகச் சொல்லப்படுகிற கதை. நெல்லைத் தமிழ் பயில்கிறது. ‘பொன்னா வெளயிற பூமி’யை மகன் விற்கப் போகிறான். கிழவி அரற்றுகிறாள். மருமகள் கிழவியை அடக்கி விடுகிறாள். ஆனால் கணவனின் கலப்பையை அவள் விற்க முற்படும்போது கிழவியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்த் தொலைக் காட்சித் தொடர்கள் போல, இந்தக் கதையின் பிரதான பாத்திரங்கள் வெள்ளையாகவோ கறுப்பாகவோ இருக்கிறார்கள். கடைசியில் மகனும் மருமகளும் மனம் திருந்தி விடுகிறார்கள். பச்சாதாபத்தை வரவழைக்கக் கூடிய ஓர் ஆதி காலத்து உத்தியோடு கதை முடிகிறது.

தமிழ் மணம் (சீதா ரவி)

சித்ரா டீச்சரின் தமிழ் வகுப்புகளை மாணவிகள் மிகவும் நேசிக்கிறார்கள். டீச்சரையும். ஆனால் டீச்சர் ஓர் ஆங்கிலேயரை மணந்து கொண்டார் என்றறிந்ததும் மாணவிகளின் தமிழ் மனம் துணுக்குறுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகள் படிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்திற்கும் போகிறார் ஒரு முன்னாள் மாணவி. அங்கே ஓர் ஆங்கிலேயர் நடத்தும் தமிழ்ப் பாடத்தைக் கேட்டு நெகிழ்ந்து போகிறார். தமிழ் தனது சொத்து என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த (முன்னாள்) மாணவியின் பேதைமை தகர்கிறது. ஆனால் இதைக் கதை நேராகச் சொல்லி விடுகிறது.

ஓர் உன்னத தினம்  (மாதங்கி)

கதை சிங்கப்பூரில் நிகழ்கிறது.  சிங்கப்பூரின் புற அடையாளங்கள் கதை நெடுகிலும் பதிவாகி இருக்கிறது. அடுக்குமாடி ப்ளாக், ஒரே தளத்தில் பத்து வீடுகள், நேரத்திற்கு தரப்படும் மதிப்பு, சேமநிதி, தேசிய சேவை – இப்படி. இது கதைக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. சக மனிதர்களை நேசிக்கும் சந்திரிக்கா எனும் எளிய குடும்பத்தலைவியும் வேற்றுக் கிரகத்திலிருந்து வரும் பெரிய உருக் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதை அறிவியல் புனைகதை (Science Fiction) எனும் வகைமையில் வரக்கூடும்.

கரப்பான், தங்கள் கிரகத்திற்குச் சந்திரனை ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப் போவதாகச் சொல்கிறது: அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூமிவாசிகளிடம் ஆதரவு திரட்ட வந்திருக்கிறது. சந்திரனை எடுத்துக் கொண்டு போனால் பூமி அழிந்துவிடும். பூமியில் நடக்கும் அநீதிகள் அநேகம். ஆகவே பூமி அழியத்தான் வேண்டும். கரப்பானுடனும் தன் உள் மனதுடனும் வாதப் பிரதிவாதங்கள் செய்தபிறகு சந்திரிக்கா இதை ஏற்றுக்கொண்டு கரப்பானின் விண்ணப்பத்தில் ஒப்பிட்டுக் கொடுக்கிறாள்.

சந்திரனை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் புனைகதை வெளியில் இடமில்லை! இந்த இடத்தில் எழுபதுகளில் மு. மேத்தா வானம்பாடிக் கவிஞர்களை நோக்கி எழுப்பிய ஒரு வினா என் நினைவுக்கு வருகிறது. அது: “பூமி உருண்டையைப் புரட்டும் நெம்புகோல் கவிதையை உங்களில் யார் எழுதப் போகிறீர்கள்?”. கவிஞர்களால் பூமியைப் புரட்ட முடியுமென்றால், எழுத்தாளர்களால் சந்திரனைப் பெயர்க்க முடியாதா என்ன? ஆனால் சந்திரனைப் பெயர்த்தடுப்பதென்பது ஒரு முரட்டுத்தனமான அறிவியல் புனைவு. அது இந்தக் கதைக் களத்திற்கும் கதை மாந்தர்களுக்கும் பொருந்தி வரவில்லை. அல்லது எனக்கு அவ்விதம் தோன்றுகிறது.

கதையின் வாலாக இடம்பெறும் பின்குறிப்பு இது: “மாலையில் சேகர் மாற்றுச் சாவி மூலம் வீட்டைத் திறந்து கொண்டு வந்தபோது, முன்னறையில் மயங்கிக் கிடந்த சந்திரிக்காவை தண்ணீர் தெளித்து எழுப்பியவுடன் ‘வானத்துல நிலவு தெரியுதா? என்று ஏன் கேட்டாள் என்பது சேகருக்குப் புரியவில்லை”.

எல்லாம் கனவுதான் என்று தோன்றும்படியான இந்த முடிவை ஏன் ஆசிரியர் முத்தாய்ப்பாக வைத்தார்? தமது அறிவியல் புனைவில் அவருக்கே நம்பிக்கை இல்லையா?

தரை தொடும் விமானங்கள் (ஆனந்த் ராகவ்)

என். ஆர். ஐ. என்றொரு இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு. வெளிநாட்டு வாழ்க்கையிலும் அதன் வசதிகளிலும் தங்களை ஒப்புக் கொடுத்து விடுபவர்கள்; அந்தச் சுபிட்சம் இறுதிவரை நீடிக்கும் என்ற நினைப்பில் உடைமைகளைச் சேகரித்துக் கொண்டு வருடக்கணக்கில் கடன்படத் தயாராகி விடுவார்கள். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம் துபாயில் வாழும் தாமோதரனும் அவர் குடும்பத்தினரும். உலகப் பொருளாதார நசிவு எல்லோரையும் போல தாமோதரனையும் பாதிக்கிறது. வேலை போகிறது. மாதாமாதம் வரும் சம்பளப் பணத்தின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை சிதைகிறது. ஊர் திரும்புகிறார்கள். அந்திய நாட்டில், துய்த்த சுகங்களுக்கு ஏங்குகிறார்கள். அதை ஓரளவுக்கு மீட்டெடுக்க பெரிய வருமானம் தேவைப்படுகிறது. அப்படியொரு வேலை அவருக்கு கிடைக்வில்லை. கிடைத்த வேலையில் சேருகிறார்.

எந்தச் சிடுக்கும் திருப்பமும் இல்லாத நேரான கதை. போதனைகளும் படிப்பினைகளும் இல்லாத கதையுங்கூட. கதை சொல்லும் முறையில் இதன் இலக்கியத் தரத்தை உயர்த்தியிருக்கலாம் என்று படுகிறது. கதையில் முடிவில் தரையிரங்கும் விமானமொன்று. இந்திரா பார்த்தசாரதியின் ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ நாவலின் பெயர் தாக்கம் இக்கதையின் தலைப்பில் தெரிகிறது. தொடர்ந்து ஆசிரியர் முத்தாய்ப்பாக சிலவற்றைச் சொல்கிறார். ஆனால் அவற்றைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கதை நெடுகிலும் சொல்லிவிட்டாரே!

வூடு  (பாரதி தம்பி)

நடைபாதையில் குடியிருக்கும் ஒரு குடும்பம் வசதியானவர்கள் வாழும் பகுதியில் இன்னும் திறக்கப்படாத ஒரு கட்டணக் கழிப்பறையில் குடி புகுவதையும், அதையே அவர்கள் வீடெனக் கொண்டு வாழ்வதையும், பிற்பாடு அவர்கள் அங்கிருந்து மீண்டும் நடைபாதைக்குத் தூக்கி எறியப்படுவதையும் கதை சொல்கிறது.

கதையின் தொடக்கம் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறது. ஜஸ்டின் என்கிற பையனின் பார்வைக் கோணத்தில் கதை தொடங்குகிறது. இடையிடையே அது தந்தையின் கோணத்திற்கும் தாயின் கோணத்திற்கும் தாவுகிறது. ஆசிரியரும் உள்ளே புகுந்து பேசுகிறார். ஓர் இடத்தைப் பார்க்கலாம். கழிவறையில் உள்ள பீங்கான் குழிப் பகுதியை மூடி அடுப்பாக்குகிறார் அப்பா; புது வீட்டில் பால் காய்ச்சுகிறாள் அம்மா. அப்போது டாய்லட் பீங்கான் உடைந்து விடுகிறது. ஆசிரியர் சொல்கிறார்: ‘உலக வரலாற்றில் முதன் முதலாக கழிப்பறையில் பால் காய்ச்சிக் குடிக்கப் போகும் பெருமையை ஜஸ்டின் குடும்பம் ஜஸ்ட் மிஸ் பண்ணிவிட்டது’. இந்த மொழி கதையின் களத்திற்கும் பிரச்சனையின் தீவிரத்திற்க்கும் இயைந்த மொழியன்று. அது கதை மாந்தர்களின் மொழியுமன்று. அது நகரவாழ் நடுத்தர வர்க்கத்தினரின் மொழி.

இன்னொரு இடத்தைப் பார்க்கலாம். ஜஸ்டின் கடைசிக் கழிவறையில் ஒண்ணுக்கு அடிப்பதை பார்க்கும் அப்பா அவன் பொடனியில் போடுகிறார். உனக்கு இது வீடு என்கிறார். பிற்பாடு அவர்கள் துரத்தப்பட்டு, கழிவறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இவர்கள் புழங்கிய வீடு எங்கும் நாற்றம். ஜஸ்டின், ‘ஒண்ணுக்கு அடிக்கட்டுமா?’ என்று கேட்கிறான். ‘அடிறா… ஒண்ணுவிடாம எல்லா ரூம்லேயும் அடிச்சுவிடு’ என்கிறார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் பேசுகிறார்.

இந்த இடத்தில் அ. முத்துலிங்கத்தின் ‘அம்மாவின் பாவாடை’ என்கிற கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையையும் ஒரு பையன் தான் சொல்கிறான். அவன் ஒரு முறை பக்கத்து வீட்டுப் பையனைத் தூமையன் என்று ஏசி விடுகிறான். அது மிக மோசமான வசைச் சொல். அம்மா இவன் வாயில் சுண்டிவிடுவாள். பூவரசங் கிளையால் திருப்பித் திருப்பி அடிப்பாள். பிறகொரு முறை அவளே அந்த வசையைச் சொல்லும்படியாகிறது.

முத்துலிங்கத்தின் கதை அவர்களது கிராமத்தில் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழுகிறது. அந்த  ஊரில் உள்ள பெண்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு பாவாடை வைத்திருக்கும் ஏழைப் பெண்கள். இரண்டு பாவாடை வைத்திருக்கும் வசதியான பெண்கள். அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவள். கல்யாணமாகி வரும்போதே இரண்டு பாவாடைகள் கொண்டு வருகிறாள். வாழ்க்கைப்பட்ட வீட்டில் இன்னொரு பாவாடை வாங்க வசதியில்லை. அதனால் அதை நுரை வராத சோப்பினால் கழுவித் துவைத்து உலர்த்திக் கட்டிக் கொள்கிறாள். ஒரு நாள் பக்கத்து வீட்டு மாடு கொடியில் காயும் பாவாடையை கடித்துக் குதறிவிடுகிறது. மாட்டைத் துரத்துகிற அம்மாவின் வாய் தூமையன் என்று முணுமுணுக்கிறது. அவளின் மதிப்பீட்டில் தரம் தாழ்ந்த ஒரு வசைச் சொல்லை அவளே முணுமுணுக்கிறாள். அம்மாவின் இழப்பின் வேதனை வாசகனையும் தொற்றிக் கொள்கிறது.

‘வூடு’ கதையில், கழிவறையில் வசிக்கும் போது அங்கு சிறுநீர் கழிக்கலாகாது என்கிற அப்பா, பிற்பாடு மகனை அவ்விதமே செய்யச் சொல்கிறார். இந்த இடம் அவரது இழப்பின் வலியைச் சொல்வதாகப் பரிணமித்திருக்கவேண்டும். ஆனால் கதையில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலிப்பதால் அது கலை அமைதிக்கு ஊனம் வருத்தி விடுகிறது.

பையனின் பார்வைக் கோணத்திலேயே சொல்லப்பட்டு, கதைக்களனுக்கு இயைந்த மொழியைக் கைக்கொண்டு, குரலை உயர்த்தாமல் சொல்லியிருந்தால், இந்தக் கட்டுரையில், இந்தக் கதை இன்னு சற்றுத் தள்ளி இடம் பெற்றிருக்கக் கூடும்.

சுப்ரபாதம் (மலர் மன்னன்)

பாரதியால் குவளைக் கண்ணன் என்றழைக்கப்பட்ட குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், இரவு பகல் எந்நேரமும் பாரதிக்கு சேவகம் செய்தவர்; மதம் பிடித்த திருவல்லிக்கேணி கோயில் யானையின் காலடியில் மூர்ச்சையாகிக் கிடந்த பாரதியை இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து தோளில் சார்த்தி வெளியே கொண்டு வந்தவர்.

குவளையுடன் புதுச்சேரி தியாகராஜப் பிள்ளை மடுவில் குளிக்கச் செல்கிறார் பாரதி. இந்த மடுவின் அழகிய படம் பாரதி அறிஞர் ரா. அ. பத்மநாபன் தொகுத்த ‘சித்திர பாரதி’ நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு நாள் குவளை வரத் தாமதமாகவே, குவளையின் வீட்டிற்குச் செல்கிறார் பாரதி. அங்கே குவளையின்  தாயார் பாரதியை ஒரு சுப்ரபாதம் பாடச் சொல்லிக் கேட்கிறார். இந்த வேண்டுகோளே சில தினங்களில் பாரதியை அவரது புகழ் பெற்ற பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாடச் செய்கிறது

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்;
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி”

என்கிற பாடலை முதன் முதலாகக் கேட்கிற பேறு குவளைக்கும் அவரது தாயாருக்கும் வாய்க்கிறது.

இந்த உண்மைச் சம்பவத்தை மலர் மன்னன் சிறுகதையாக்கியிருக்கிறார். சம்பவங்களின் விவரிப்பாக இல்லாமல் ஒரு புனைகதையின் உருவத்திலும் மொழியிலும் சொல்லியிருக்கிறார். கதையின் தொடக்கத்தில் குவளை பாரதியை எழுப்புகிறார். பாரதி சிரிக்கிறார், “திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனை எழுப்பினாள்; இங்கே கண்ணன் என்னை எழுப்பிக் குளிக்கக் கூப்பிடுகிறான்’ என்கிறார். இது கதையின் மையக் கருவுக்கு வாசகனைத் தயாராக்கி விடுகிறது.

கதையில் ஒரு நுட்பமான மாறுதலும் செய்திருக்கிறார் மலர்மன்னன். ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் சுப்ரபாதம் என்றால் என்னவென்று குவளையிடம் பாரதி கேட்டறிந்து கொள்வதாக வருகிறது.  பாரதிக்கு சுப்ரபாதம் என்றால் என்னவென்று தெரியாமலா இருந்திருக்கும்? மலர்மன்னன் இந்தக் கதையில் இதைப் பின்வருமாறு கையாள்கிறார்:

” ‘சுப்ரபாதம் என்றால் என்ன?’ என்று குவளையிடம் மீண்டும் வேண்டுமென்றே கேட்டார், கவிஞர். காசியில் விஸ்வநாதருக்கென்று உள்ள சுப்ரபாதத்தையும் சென்னையில் வெங்கடேசப் பெருமாள் சுப்ரபாதத்தையும் அவர் காது குளிரக் கேட்டதே இல்லையா, என்ன? ‘சுப்ரபாதம் என்றால் திருப்பள்ளி எழுச்சி!’ என்றார் குவளை, சுருக்கமாக.”
நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துள்ள பாரத மாதாவுக்குத்தான் இப்போது திருப்பள்ளி எழுச்சி தேவைப்படுகிறது என்று சொல்லி, பாரதி அப்பாடலை பாடுவதுடன் கதை முடிகிறது.

பாரதியின் கம்பீரமும் குவளையின் விசுவாசமும் கதையில் செம்மையாகப் பதிவாகி இருக்கிறது.

கரகு பெரி ஜா (இராம. முத்துக்கணேசன்)

சென்னையில் வீடு-வாசல், பெண்டு-பிள்ளை, கார்-வண்டி என்று வசதிகளோடு வாழும் ஒரு நடுத்தர வயதுக்காரன் ஒரு நாள் வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு வெளியேறிவிடுகிறான். ரயில் போகும் திசையில் போகிறான் நடைபாதையில் படுத்துறங்குகிறான். பீகாரின் பாகல்பூரில் ஒரு நண்பன் கிடைக்கிறான். நதிக்கரையில், பாழடைந்த மண்டபத்தில் வாழும் அந்த நண்பனுடைன் ஒரு 90 வயது முதியவரும் வசிக்கிறார். இவர்களின் ஆதரவில் ஒரு விலைப் பெண்ணும் அருகே குடியிருக்கிறாள். இவர்களோடு இவனும் சேர்ந்து கொள்கிறான். புத்தர் ஞானம் பெற்ற அந்த மண்ணில் வறுமையும் அறியாமையும் வன்முறையும் பரவிக் கிடக்கிறது. அந்த வன்முறையே இவனது இரண்டாவது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருகிறது. கடைசியில் நண்பன் ‘கரகு பெரி ஜா’ என்கிறான். அதற்கு ஒரிய மொழியில் ‘வீட்டிற்குத் திரும்பிப் போய்விடு’ என்பது பொருள். இவன் முதல் வாழ்க்கையை நோக்கித் திரும்புகிறான்.

கதை நேராகச் சொல்லப்படுகிறது. முதல் வாழ்க்கை சுருக்கமாக விவரணங்களாக அடுக்கப் படுகிறது. அது ஒரு முன்கதைச் சுருக்கம் போலிருக்கிறது. எனில், இரண்டாம் வாழ்க்கை நிகழும் பாகல்பூரும், அந்த எளிய மனிதர்களும், அவர்களைச் சுற்றிப் படர்ந்திருக்கிற வன்முறையும் மிகையின்றி நம்பகத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் இவனது மனம் எதையுமே சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடைப்பட்ட சமநிலையில் பார்க்கப் கற்றுக்கொண்டது என்கிறார் ஆசிரியர். அது வள்ளுவர் சொல்லும் ‘பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும்’ என்கிற துறவு நிலையில்லை. அதை அவன் அடையவில்லை. பிள்ளைகளின் மீதான பற்று இவனைப் பின்னோக்கி இழுக்கிறது. கதையில் ஆரம்பத்திலேயே இதற்கான குறிப்பு இருக்கிறது (கதவை மெதுவாகச் சாத்திவிட்டு படியிறங்கி ரோட்டிற்கு வந்து விட்டேன். குழந்தைகளின் முகத்தைப் பார்க்கத் தோன்றியது. ஆனால் என் கால்கள் நடக்கத் தொடங்கியிருந்தன.) பிற்பகுதியில் தாய்ப்பூனையைத் தேடும் குட்டிகளின் மூலமாக இவனது பிள்ளைப் பாசம் குறிப்புணர்த்தப்படுகிறது.

இரண்டாவது வாழ்க்கையின் விவரிப்பையே ஆசிரியர் கதைக்களனாகக் கொண்டிருக்கிறார். அதனால் அதை மட்டுகே அவர் விவரிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் சுபிட்சத்திலும் சுகத்திலும் திளைத்த முதல் வாழ்க்கையினின்றும் ஏன் விட்டு விடுதலையாக நினைக்கிறான்? ‘சரியான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கவில்லை’ என்பது கதையின் முதல் வரி. எனினும் அதன் காரண காரியங்கள் கதைக்குள் இருக்க வேண்டும். இருக்கக் கூடும். ஆனால் எனக்குக் கிட்டவில்லை.

கதைக்குக் கீழுள்ள குறிப்பிலிருந்து, இவர் அதிகம் எழுதியவரில்லை என்று தெரிகிறது. படைப்பு மொழி இவருக்குக் கை வருகிறது. இவருக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

ஒரு வேளை உணவு (பாவண்ணன்)

நகர வாழ்வில் உதிரி மனிதர்களாக ஜீவிக்கும் எண்ணற்றோரில் ஒருத்தி சாவித்திரி. வீட்டு வேலைக்காரி. அவள் வேலை செய்யும் வீட்டு எஜமானியால் ஏற்படும் இன்னல்களை மனிதநேயம் மிக்க கதை சொல்லியிடம் விவரிக்கிறாள். கதை மிகுதியும் உரையாடலால் ஆனது. பேச்சுத் தமிழ் நேராகவும் மிகையின்றியும் விரிகிறது. அவள் கேட்பதெல்லாம் ஒரு வேளை சோறுதான். அதற்கு அவள் படுகிற பாடும் எதிர் கொள்கிற அவமானங்களும் கதையில் இடம் பெறுகின்றன.

புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி இப்படிச் சொல்கிறார்: “பெரும்பான்மையான மக்கள் உண்டு, உடுத்து, தன்மானத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். இவ்வளவு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கொண்ட மக்களுக்குக் கூட கூடிவராத வாழ்க்கை புதுமைப்பித்தனை பெரிய அளவில் சங்கடப்படுத்தியிருக்கிறது. . ‘சாதாரண வாழ்க்கையைச் சென்றடைய முடியாத சாதாரண மக்கள்’ என்ற தலைப்புக்குள் அவரது பெரும்பான்மையான கதாபாத்திரங்களை அடக்கிவிடலாம்.”

புதுமைப்பித்தனைப் போலவே இந்த எளிய மக்களின் கூடி வராத வாழ்க்கை பாவண்ணனையும் சங்கடப்படுத்துகிறது. மேற்படித் தலைப்புக்குள் சாவித்திரியையும் அடக்கிவிடலாம். அவள் நிலை இன்னும் மோசம். உடுப்பு அவளுக்குப் பிரதானமில்லை. தன்மானத்தையும் அவள் பொருட்படுத்துவதில்லை. உணவு-அதுவும் ஒரு வேளை உணவு- மட்டுமே அவளின் இலக்காக இருக்கிறது.

கதையின் உள்ளடக்கத்திலும் உரையாடல்களிலும் நம்பகத்தன்மை இருக்கிறது. ஆனால் கதை உணர்ச்சிப் பெருக்கில் பொங்கி வழிகிறது. சாவித்திரி தன் துயரங்களைச் சொல்லி முடித்ததும் ஆசிரியரின் எண்ண ஓட்டம் தொடங்குகிறது. அதில் வள்ளுவனும் சாப்ளினும் வந்து போகிறார்கள்.

மேலும், சாவித்திரியின் துயரங்களைச் சொல்ல அவளது வாய்மொழி மட்டுமே போதுமானது. அவள் பேசிய பின்பு, ஆசிரியர் அவள் பால் பச்சாதாபத்தைக் கோருகிறார். இந்த இடத்தில் அசோகமித்திரினனின் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. திலீப்குமாரின் கதைகளைப் பற்றி அசோகமித்திரன் இவ்விதம் சொல்லுகிறார்: “புனைக்கதைகளில் பொதுவாக வறுமையுடன் கூடவே ஒருவிதக் கழிவிரக்கமும் வெளியாகிப் பாத்திரம், வாசகர் இருவருடைய கண்ணியத்தையும் சுயமதிப்பையும் பாதித்து விடுகிறது. திலீப்குமாரின் எழுத்தில் இவ்விஷயத்தில் சிறந்த கட்டுப்பாடு தெரிகிறது.”

பாவண்ணன் பாத்திரங்களின் துயரத்தில் தானும் அமிழ்ந்து விடுவதால் இந்தக் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் இந்தக் குறைகளையும் மீறி இது நல்ல கதையாக விளங்குகிறது.  ஏனெனில் அது உண்மையைப் பேசுகிறது.

 

சதுரங்கம் (ஆனந்த் ராகவ்)

பர்மா-தாய்லாந்து எல்லையில், ஒரு பர்மீய ராணுவ அவுட் போஸ்டில் கதை நிகழ்கிறது. ராணுவ ஆட்சியின் அடக்குமுறைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் தப்பி, பிழைப்பதற்காகத் தாய்லாந்திற்கு எல்லை தாண்டும் பர்மீயர்களைப் பிடிப்பதுதான் அங்குள்ள ராணுவத்தினரின் வேலை. அங்கே இரண்டு ராணுவ அதிகாரிகள் சதுரங்கம் ஆடுகிறார்கள். சில காய்கள் முன்னேறுகின்றன, சில வெட்டுப்படுகின்றன. ஆட்டம் முடியும்போது கதையும் முடிகிறது.

சதுரங்கத்தில் இரண்டு ராஜாக்களுக்கும் அவர்தம் பிரதானிகளுக்குமிடையே நடக்கும் விளையாட்டு, பலகைக்கு வெளியே இரண்டு அதிகாரிகளுக்கிடையேயான போட்டியாக இருக்கிறது; இன்னொரு கோணத்தில் சொந்த நாட்டு மக்களை வெட்டிச் சாய்க்கும் ராணுவத்தின் விளையாட்டாகவும் பரிமாணம் கொள்கிறது. பலகைக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் ஆட்டங்கள் ஒன்றன் மீது ஒன்று கவிந்து கிடக்கின்றன. இந்த உத்தியை ஒரு சாதுர்யமாக அல்ல, பிரச்சினையின் தீவிரத்தையும் வலியையும் உணர்த்தவே ஆசிரியர் பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு காயும் ஒவ்வொரு விதமாக நகருகிறது. கதைப்போக்கில் அது பதிவாகிறது. குதிரை முன்னே பின்னே என்று குதித்து போர்க்களத்தின் வீச்சை நாலு எட்டில் எட்டி விடுகிறது. யானையும் ராஜாவும் இடம் மாறிக் கொள்கின்றன. யானை மதங்கொண்டு ஒரு முனையிலிருந்து மறு முனைக்குப் போகிறது. ராணியோ எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகர்ந்து காய்களைக் கபளீகரம் செய்யத் தயாராயிருக்கிறது.

எல்லை கடக்க முயன்று சிக்கும் இளைஞர்களைச் சிப்பாய்கள் விதவிதமாய் இம்சிக்கிறார்கள். அந்தக் குரூர விளையாட்டும் விதவிதமாய் நகரும் காயகளைப் போலத்தான் இருக்கிறது. எத்தனை விதமான சித்திரவதைகள்? “கதறவைத்து நகங்களைப் பிடுங்கலாம். சிகரெட்டால் முகப்பொட்டுகள் வைக்கலாம். கயிற்றால் கட்டி தொங்கவிட்டு மிளகாய்பொடி தடவிய கழியால் ஆசனவாயில் எரிச்சல் ஏற்றலாம். விளையாடி முடித்து கட்டவிழ்த்து காட்டுப் பாதையில் ஓடவிட்டு குறிபார்த்து பின்தலையில் சுட்டுச் சாய்க்கலாம். பிணத்தை இழுத்துக் கொண்டு போய் கிராமத்தின் நடுவே மரத்தில் தொங்கவிடலாம். பெண்களை அப்படிச் செய்யமுடியாது.”

ஆட்டத்தில் முவங்தான் எனும் அதிகாரி வெற்றி முகத்தில் இருக்கிறான். ஆட்டம் சூடு பிடிக்கிறது. விஸ்கியின் கிறுகிறுப்பும் அதிகமாகிறது. ஆட்டம் முன்னேற முன்னேற முவங்தான் வேறொரு காரியமும் செய்கிறான். முதலில் பூட்சின் நாடாக்களை, சாக்ஸை, பிறகு சட்டையை, பனியனை, கால் சராயை ஒவ்வொன்றாய் அவிழ்த்து எறிகிறான். ஏன்? அது கதையின் முடிவில் தெரிய வரும். அந்த முடிவு சுவாரஸ்யத்திற்காகச் சேர்க்கப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பமல்ல. மாறாகக் கதை முழுவதுமே அந்தக் கடைசிப் பத்தியை நோக்கித்தான் நகருகிறது. மேலே மேற்கோள் காட்டிய பத்தியின் முடிவில் ‘பெண்களை அப்படிச் செய்ய முடியாது’ என்று ஒரு வரி வருகிறது. அது கதையின் முடிவிற்கு வாசகனைத் தயார்ப் படுத்துகிறது.

இந்தக் கதையின் இன்னொரு அம்சம் இது அந்நிய மண்ணில் நிகழ்வது. 1981இல் சாவி பத்திரிகையின் இதழ் ஒன்றை சுஜாதா தயாரித்தார். அந்த இதழில் இடம் பெறுவதற்காகப் பல வாசகர்கள் தங்கள் கதைகளை அனுப்பியிருந்தனர். சுஜாதா அவற்றிலிருந்து ஒரேயொரு கதையைத் தெரிவு செய்து வெளியிட்டார். இப்போது எனக்கு அந்தக் கதையோ, அதன் தலைப்போ நினைவில் இல்லை. அதன் ஒரு வரியேனும் நினைவில் இல்லை. ஆனால் தெரிவுக்கு வந்த கதைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையொன்று நினைவிருக்கிறது. அதில் ஒரு பத்தி: “சவுதி அரேபியாவிலிருந்து கதையை எழுதும் ஏ. எஸ், மார்க்கண்டு- அண்ணா சமாதி பஸ் நிலையத்தின் முன் அவள் நின்றிருந்தாள்-என்று ஆரம்பிக்கிறார்”.  இன்று நிலைமை அத்துணை மோசமில்லை. புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் புனைவுகள், எண்ணிக்கையால் குறைவானாலும் வரத்தான் செய்கின்றன. இந்தப் தொகுப்பிலேயே ஒரு துபாய்க் கதையும், ஒரு சிங்க்ப்பூர்க் கதையும் இடம் பெறுகின்றன. எனில், அவற்றின் பிரதான கதை மாந்தர்கள் தமிழர்கள். ஆனால் சதுரங்கம் கதையின் பாத்திரங்கள் அனைவரும் பர்மீயர்கள். முழுதும் வெளிநாட்டுப் பாத்திரங்களைக் கொண்டு ஒரு கதையைப் படைப்பதற்கு, மொழி கலாச்சார வேற்றுமைகளுக்கு அப்பால் இயங்கும் மனித மனங்களை எழுத்தில் கொண்டு வரவேண்டும். தமிழில் அ. முத்துலிங்கம் போன்ற வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே பிரவேசித்திருக்கும் வெளி இது.

கதையில் குறைகள் இல்லாமல் இல்லை. கதைக்குள்ளே ஆசிரியரின் குரல் அவ்வப்போது ஒலிக்கவே செய்கிறது. உரையாடல்களில் பேச்சுத் தமிழைத் தவிர்த்திருக்கலாம். பாத்திரங்கள் ஓர் அந்நிய மொழியில் பேசுகிறார்கள் என்கிற ஓர்மையோடு வாசகன் படிக்கவேண்டியிருக்கிறது. ஆயின் இக்குறைகளை மீறி கதையின் கருவும், களனும், செய்நேர்த்தியும் மொழியும் செயல்படுகின்றன.

இந்தக் கதையின் முடிவு நம்பிக்கையூட்டும்படியாக இல்லையே என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு எழுத்தாளர்  பி.ஏ. கிருஷ்ணன் பதில் சொல்கிறார்: “தருமம் வெல்வதும் சூது தோற்பதும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் முக்கியமானது… ஆனால் வெட்ட வெட்ட வளரும் தலைகள் சூதினுடையது. தருமம் வெல்ல இன்னும் பல நாட்கள் ஆகும் என்பது பற்றி ஒரு நல்ல சிறுகதை கோடி காட்டிவிடும்”.

இந்தக் கதை சொல்லும் செய்தியும் அதுதான். 2010ஆம் ஆண்டில் வாசக-விமர்சகர்கள் தெரிவு செய்த பன்னிரண்டு கதைகளில் ஆனந்த் ராகவ் எழுதிய ‘சதுரங்கம்’ எனும் இந்தக் கதையையே நான் சிறந்த கதை என்று கருதுகிறேன்.

(இணையதளம்: www.muramanathan.com; மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com)

###
சான்றுப் பட்டியல்

1.  இலக்கியச் சிந்தனை, பசி: 1978ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1979), மதிப்பீடு: தி. ஜானகிராமன்
2.  இலக்கியச் சிந்தனை, கடிதம்: 1993ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1994), மதிப்பீடு: அசோகமித்திரன்
3.  இலக்கியச் சிந்தனை, அற்ப ஜீவிகள்: 1979ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1980), மதிப்பீடு: பி. எஸ். ராமையா
4.  இலக்கியச் சிந்தனை, விடிவதற்குள்: 1984ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1985), மதிப்பீடு: எம். வி. வெங்கட்ராம்
5.  இலக்கியச் சிந்தனை, தயவு செய்து: 1983ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1984), மதிப்பீடு: நீல. பத்மநாபன்
6.  இலக்கியச் சிந்தனை, முள்: 1986ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1987), மதிப்பீடு: ஆ. மாதவன்
7.  இலக்கியச் சிந்தனை, இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: 1987ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1988), மதிப்பீடு:சோ. சிவபாதசுந்தரம்

8.  இலக்கியச் சிந்தனை, தனுமை: 1974ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1975), மதிப்பீடு: சுஜாதா
9.  இலக்கியச் சிந்தனை, சின்னம்மிணி: 1980ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1981), மதிப்பீடு: வல்லிக்கண்ணன்
10. இலக்கியச் சிந்தனை, ஞாபகம்: 1975ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1976), மதிப்பீடு: ராஜம் கிருஷ்ணன்
11. இலக்கியச் சிந்தனை, நான்காம் ஆசிரமம்: பன்னிரண்டு எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள், 1972ஆம் ஆண்டில் வெளிவந்தவை, இலக்கியச் சிந்தனை (1973), மதிப்பீடு: காப்டன் தி. சா. ராஜூ
12. இலக்கியச் சிந்தனை, பிரும்மம்: 1982ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், வானதி பதிப்பகம் (1983), மதிப்பீடு: கரிச்சான்குஞ்சு
13. சி. புஸ்பராஜா, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், அடையாளம் (2003)
14. பெருமாள் முருகன் (தொ-ர்), தீட்டுத்துணி: அண்ணா சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம் (2008)
15. சுஜாதா, விஞ்ஞானச் சிறுகதைகள், உயிர்மை பதிப்பகம் (2002)
16. ரா. அ. பத்மநாபன், சித்திர பாரதி, காலச்சுவடு பதிப்பகம்/கடவு (2006)
17. அ. முத்துலிங்கம் கதைகள், தமிழினி (2003)
18. ஆ. இரா. வேங்கடாசலபதி (ப-ர்), புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு பதிப்பகம் (2000)
19. திலீப்குமார், கடவு, க்ரியா (2000)
20. சுஜாதா, அப்பா அன்புள்ள அப்பா, விசா பப்ளிகேஷன்ஸ் (1993)
21. பி. ஏ. கிருஷ்ணன், அக்கிரகாரத்தில் பெரியார், காலச்சுவடு பதிப்பகம் (2007)

[இலக்கியச் சிந்தனை, சதுரங்கம்: 2010ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள், மதிப்பீடு: மு. இராமனாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17, ஏப்ரல் 2011, விலை: ரூ.60]

 

Series NavigationRequest to preserve the Tamil cultural artifactsஉண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *