(79) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 26 of 45 in the series 9 அக்டோபர் 2011


 

மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன்.

 

பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும்  வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது. பஞ்சாட்சரம் என்னைவிட நாலைந்து வயது மூத்தவன். பட்டதாரி. எனக்கு ஒரு படி மேல் உத்தியோகத்தில் இருப்பவன் மணி என்று நாங்கள் அழைக்கும் ஆர். சுப்பிரமணியம் என்னைப் போல பத்தாங்கிளாஸ் முக்கி முனகித் தேறியவன். அங்குள்ள பட்டறையிலோ என்னவோ ஏதோ வேலை பார்த்து வந்தவன். எல்லோரும் அன்பாகப் பழகுகிறவர்கள். பொழுது தமாஷாகப் போகும். பஞ்சாட்சரம் தமிழக அரசியல், ப்ழந்தமிழ் இலக்கியம் இவற்றில் ஈடுபாடும் ருசியும் கொண்டவன். ஆனால் இந்த ஈடுபாட்டை அவனோடு இருக்கும் போது நாம் உணர்ந்து கொள்வோமே தவிர அவன் நம்மேல் திணிக்கமாட்டான்.

 

ப்ஞ்சாட்சரம் வீட்டுக்கு நான் போகும் போது அனேகமாக கூட வீட்டில் என்னொடு இருக்கும் தேவசகாயமும் வேலுவும் கூட வருவார்கள். இந்தக் குழு ஒரு தனிக்குழு. இதன் விவகாரங்களும் தனி. தனி உலகம். மிருணாலோடு ஒரு தனி உலகம். சீனிவாசனோடு ஒரு தனி உலகம். அலுவலக நண்பர்களோடு இன்னொரு தனி உலகம். எல்லா உலகங்களும் தனித் தனி என்றாலும் நான் அந்த எல்லா உலகங்களிலும் உலவுவது சகஜாமகத் தான் இருந்தது.

 

அங்கு தான் பஞ்சாட்சர், மணி இவர்களோடு கழிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில். அங்கேயே சாப்பிட்டுவிடுவேன். அப்படித் தான் மெல்ல ஒவ்வொரு அடிவைப்பாக என்னையறியாது, யாரும் நிர்ப்பந்திக்காது, நண்பர்கள் சூழலில் மிதப்பில் முட்டை சாப்பிடுவதும், பின்னர் பிரியாணி என்றும் பழகிப் போனேன். இதுவும் பழக வெகுநாளாகியது. எப்பவோ கூடும்போது, ஏதும் கொண்டாடும்போது என்று இருந்ததால் அது எப்பவோ தான் நிகழும்.

 

1956 டிஸம்பர் கடைசியில் வேலை கிடைத்து தில்லிக்குப் பயணப் பட்ட நாளிலிருந்து பஞ்சாட்சரத்தையோ மணியையோ பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒரு முறை நடுவில் நர்மதையில் உடைப்பெடுத்த காரணத்தால் நாக்பூர் வழி போகமுடியாது என்று தெரிந்ததும், பிலாஸ்பூர் சென்று பிலாய் இரும்பாலை நகரில் வேலை செய்துகொண்டிருந்த மிருணாலைப் பார்க்கலாம் என்று அந்த வழி சென்ற போது மிருணால், மஞ்சு சென்குப்தாவை யெல்லாம் சந்தித்ததோடு வேலு, தேவசகாயம் பஞாட்சரம் மணியையும் சந்தித்தேன். எல்லாம் ஒரே ஒரு நாள் பகல். இது 1958 அல்லது 1959-ல் என்று நினைக்கிறேன். அது நான் இவர்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் சென்றது. அதற்கு இடையில் ரயில் பாதை சீர்கெட்டிருந்தது அந்த எண்ணத்தை மனத்தில் விதைத்தது.

.

ஆனால் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று 2000 ஆண்டு  சென்னைக்குத் திரும்பிய பிறகு அந்த ஆண்டே ந. .பிச்சமூர்த்தி நூற்றாண்டு நினைவு விழா ஒன்றை சென்னை சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்தது. அது தொடர்பான கருத்தரங்கு தரமணியில் இருக்கும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன அரங்கில் நடந்த போது அங்கு திடீரென் விரித்த வெண்சடையுடன் நெடிதுயர்ந்த உருவம் ஒன்று கண்முன் நின்று தரிசனம் தந்தது. யாரென்று திகைத்து நிமிர்ந்து பார்த்தால் அது பஞ்சாட்சரம். பழம் இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியத்துக்கு பஞ்சாட்சரம் தாவியதால் நிகழ்ந்த ஆச்சரிய சந்திப்பு அது. சந்தோஷமாக இருந்தது. கூட மருமகப் பிள்ளை மணியும். இப்போது பஞ்சாட்சரம் இருப்பது மேற்கு மாம்பலத்தில்.ஒழிந்த வேளைகளில், –  ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஒழிந்த வேளை என்று தனியாக இல்லை.- ஹோமியோபதி மருத்துவர். இந்த மாற்றமும் எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது இதற்குப் பிறகு நான் பஞ்சாட்சரத்தைச் சந்திக்கவில்லை. நானும் மணியும் தொலை பேசியில் பேசிக்கொள்வோம் எப்போதாவது. பின் நாலைந்து வருடங்கள் கழித்து திடீரென ஒரு நாள் மடிப்பாக்கத்தில் இருக்கும் வீட்டிற்கு நான் வெளித் தாழ்வாரத்தில் உடகார்ந்திருக்க திடீரெனெ கேட்டைத் திறந்து கொண்டு மணி வருவதைப்பார்த்தேன். எல்லாம் ஆச்சரியங்கள் தருவதற்கே இருந்தார்கள்

.

இப்போது நாங்கள் எல்லோருமே தாத்தாக்கள். அவரவர் பேரப் பிள்ளைகளோடு. மணி தன் மகள் வீடு மடிப்பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னான். 70 வயது நிரம்பிய ஜீவனை “சொன்னான்” என்று சொல்வது விசித்திரம் தான். இருந்தாலும் சந்திக்கும்போது 1950 களின் ஹிராகுட்/புர்லா ஆண்டுகளில் வாழ்வதாகத் தான் நினைப்பு.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கும் மேல் காலம் கடந்த பிறகு எதிர்பாராது பழைய நட்புக்கள் எதிர் நின்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.  திரும்ப புர்லா வாழ்க்கைக்கே சென்றோம்.

 

அங்கு தேவசகாயம் அழைத்து வந்து எங்களுக்கு அறிமுகம் செய்த ஜார்ஜும் ஒருவர். அவரைச் சுலபத்தில் யாரும் மறக்க முடியாது. அனேக விஷயங்கள் அவர் சம்பந்தமானவை மறக்க முடியாதவையாக அவர் நினைவுகளை ஆக்கியுள்ளன.. எப்போதும் சிரித்துக்கொண்டும் ஏதாவது பாடிக்கொண்டுமே இருப்பார். சாதாரணமாகப் பேசும்போது கூட ஒரு குழைவோடும் மிகுந்த பாசம் காட்டும் முகத்தோடும் தான் பேசுவார். அவர் அடிக்கடி பாடும் பாட்டு ஒன்று, சினிமாப் பாட்டுத்தான். ஹிந்தி பாட்டு.

 

ஸுஹானி ராத் டல் சுக்கி, ந ஜானே தும் கப் ஆவோகே…..(இந்த இனிமையான இரவு கழிந்து விட்டது. நீ வருவதாகத் தெரியவில்லை. எப்போது வரப் போகிறாய் நீ ) என்று தொடங்கும் அது இன்னும் நிறைய புகார்களுடனும், புலம்பல்களுடனும் நீண்டு கொண்டே போகும். எனக்கு மறந்து விட்டது. இன்னமும் “டல் சுக்கி‘ என்ற வார்த்தை சரிதானா எனபது தெரியவில்லை. அந்த பாட்டு சொல்லும் செய்தியில் எதிர்பார்ப்பின், ஏமாற்றத்தின் ஏக்கம் உருக்கமாகவும் இனிமையாகவும்.  இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு பாடம்படும் மெட்டு எனக்கு அவ்வளவாக உயர்த்திப் பேசக்கூடிய ஒன்றாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஜார்ஜ் அதைப் பாடும்போது கேட்க நன்றாக இருக்கும். அதை நினைக்கும் போதே நன்றாகத் தான் இப்போதும்  இருக்கிறது. இவ்வளவு காலம் நினைவில் நிலைத்திருக்கிறதே..

 

அவரோடு ஊரெல்லாம் சுற்றுவோம். எப்போது லீவ் போடலாம் எங்கேயெல்லாம் சுற்றலாம் என்றே காத்துக்கொண்டிருப்போம். ஜார்ஜ், நான், தேவசகாயம், பஞ்சாட்சரம், மணி, வேலு எல்லாம் ஒரு குழு. கும்பல். Gang என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் அதன் குணத்தைச் சொன்னதாக இருக்கும்.

 

கிறிஸ்துவ வருஷப் பிறப்புக்கு, சம்பல் பூர் போய் பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாமா? என்று கேள்வி கேட்டு எங்கள் பதிலுக்குக் காத்திராமல் எல்லாரும் போவதாகத் தீர்மானமும் அவரே செய்துகொண்டும் விட்டார். இந்த கும்பலில் அவரும் தேவசகாயமும் இருவர் தான் கிறித்துவர்கள். ஏன்யா கிறித்துவர்கள் அல்லாதவரையும் அவர்கள் அனுமதிப்பார்களா என்று கேட்டேன். யார் வேண்டுமானாலும் வரலாம். சொல்லப் போனால், நீங்கள் வந்து கலந்து கொண்டால்  பாதர் ரொம்பவும் சந்தோஷம்ப் படுவார்” என்றார்.

 

பின் என்ன? டிஸம்பர் குளிர். ராத்திரி சாப்பாட்டை முடித்துக் கொண்டோம் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டாலும் அது குளிர் தாங்கப் போதவில்லை. நீலகிரி தோடர்களைப் போல எல்லாரும் அவரவர் கம்பளியை கழுத்திலிருந்து கால் வரை போர்த்திக்கொண்டு கிளம்பினோம். இரவு பத்து மணி இருக்கும். புர்லா கேம்ப் எல்லையைக் கடந்தால், வெட்ட வெளி தான். நடுவில் மகாநதி. பாலத்தைக் கடந்தால் லக்ஷ்மி டுங்கிரி என்னும் கரடு. சம்பல்பூர் கிட்டத்தட்ட 10 மைல் தூரம் கவனிக்கவும். மைல். என்று சொன்னேன். கிலோ மீட்டர் இல்லை. . நடக்க ஆரம்பித்தோம். எல்லோரும் கூட்டமாக பேசிக்கொண்டு சென்றதால் குளிர் இருந்தாலும் அந்த இரவுப் பயணம் சந்தோஷமாகவே இருந்தது  மகாநதிப் பாலம் வந்ததும் அதன் அருகே இருந்த ஒரு குடிசையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது டீக்கடைய்யா. டீ கிடைக்குமா கேட்கலாமே என்று எங்களில் ஒருத்தர் சிந்தனை எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

 

 

.

Series Navigationகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரைநாயுடு மெஸ்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *