சரவணனும் மீன் குஞ்சுகளும்

This entry is part 38 of 53 in the series 6 நவம்பர் 2011

“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் கூறினான் அவன். “இல்லை நீ ஓயாம வெயில்லேயும் தண்ணியிலேயும் விளையாடிக் கிட்டுதான் இருக்கிறே. எவ்வளவு தடவை சொல்லி இருப்பேன். கேட்க மாட்டேங்கிறே. இப்போ உனக்கு இப்படி காய்ச்சல் வந்திருக்கிறது” என்று கூறியபடியே அவனை மருத்துவரிடம் கூட்டிச் சென்றார் அம்மா. அவனுக்கு காய்ச்சலால் உடம்பு நன்கு கொதித்தது. மருத்துவமனை கொஞ்சம் தொலைவில் இருந்தது, அதனால் பேருந்து நிறுத்ததிற்கு சென்றார்கள். பேருந்தும் உடனடியாக வந்துவிட்டது. அதனால் சரவணனையும் அவன் அம்மாவையும் அந்த பேருந்து நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவில்லை. அவர்கள் அதனுள் ஏறிவிட்டார்கள். அன்று ஞாயிற்றுகிழமையானதால் கூட்டநெரிசல் குறைவாகத்தான் இருந்தது. அன்று விடுமுறை நாள். அதனால் பாதி மக்கள் வீட்டிலே சொகுசாக டி.வி பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். மீதி பேர் வெளியுலகத்தில் நேரத்தை களிக்க கார்களிலும் பைக்குகிலும் உலா வருவார்கள். அதிலும் சிலர் மட்டும் இந்த மாதிரி பேருந்துகளில் உட்கார்ந்து செல்வார்கள். இந்த விடுமுறை நாளில் வேலை செய்பவர் மிக குறைந்த பேர் மட்டுமே தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த பொதுவான விஷயம் அல்லவா! கடைசியில், இரண்டு மணி நேரம் கழித்து சரவணனும் அவன் அம்மாவும் மருத்துவமனையை அடைந்தார்கள். அங்கே மருத்துவரிடம் சென்றார்கள். வரவேற்பறையில் ஒரு மீன் தொட்டியில் நிறைய மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அங்கே வேலை பார்க்கும் அந்தப் பெண் அந்த மீன்களுக்கு மண் புழுவை உணவாகப் போட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த போது மண் புழுவை உணவாக மீன்களுக்கு போடலாமென்ற அறிவு அவனுக்கு வந்தது. ஆனாலும் அந்த மீன்களைப் பார்த்த போது மனது படபடவென அடித்தது. மனதில் பயம் இன்னும் அதிகமாகி காய்ச்சல் கூடியது போல் உணர்ந்தான். அந்த பயத்தின் பின்னணியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அதற்குள் மருத்துவர் அவனையும் அவன் அம்மாவையும் உள்ளே வரச் சொன்னார் . சரவணனிடம் அவன் பெயரைக் கேட்டார். அவன் சரவணன் என்று கூறினான். மிகவும் அன்பாகப் பேசினார். அதற்கு பிறகு அவன் என்ன வகுப்பில் படிக்கிறான் என்று கேட்டார். அவன் ஐந்தாம் வகுப்பில் படிப்பதாகக் கூறினான். “நீ எந்த பள்ளியில் படிக்கிறாய்” என்று அவனிடம் கேட்டபடியே அவன் வாயில் தெர்மாமீட்டரை வைத்தார் மருத்துவர். அவனும் “டான் பாஸ்கோவில் படித்து வருகிறேன்” என்று குறைந்த சுருதியில் பதில் கூறினான். உடனே மருத்துவர் ”கேட்டதுமே டான் போஸ்கோ என்று டாணென்று பதில் சொல்ல வேண்டாமா” என்று நகைச்சுவையாகக் கூறி அவன் முதுகைத் தட்டினார். சரவணனுக்கு கொஞ்சம் நாணப்படும் பழக்கம் உண்டு. அதனால் அவன் கொஞ்சம் கூச்சமாகவும மெதுவாகவும் தான் பதில் கூறினான். கொஞ்சம் நேரம் கழித்து அவன் வாயில் இருந்த தெர்மாமீட்டரை எடுத்து பார்த்து அவனுக்கு ரொம்ப அதிகமான கொதிநிலையில் காய்ச்சல் வந்திருப்பதாக கூறினார். அவன் உடலை அவர் முழுவதும் பரிசோதித்து பார்த்தார். அவர் அவனுக்கு வைரஸ் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறினார். அவன் அப்படியே உறைந்து போனான். அவனுக்கு ரொம்ப பயமாக இருந்தது. மருத்துவர் “உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதோ?” என்று அவன் அம்மாவிடம் வினவினார். ஏன் டாக்டர் பையனுக்கு மலேரியா காய்ச்சல் ஒன்றும் இல்லையே என்று அம்மா அச்சத்தில் கேட்டார். அதற்கு மருத்துவர் அதெல்லாம் ஒன்றுமில்லை. பையன் கையில் நன்றாக தடுத்திருக்கிறது. ஒவ்வாமை அறிகுறி தோலில் தெரிகிறது. அதனால்தான் கேட்டேன். வீட்டில் கொசு வலை அடித்து கொசு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். “பார்த்தாயா நான் அப்பவே சொல்லல்ல, இவ்வாறு நடக்கும் என்று!” என்று மருந்தை வாங்கி விட்டு காய்ச்சலுக்கு காரணம் சரவணனாக சித்தரித்து அவனைத் திட்டிக் கொண்டே வீட்டிற்கு வந்தார் அம்மா.
சரவணனுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. மனது மிகவும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வு அவனுக்கு இருந்தது. அவனது இப்போதைய பிரச்சனை வீட்டின் பின் வாசலில் அவன் மறைத்து வைத்திருக்கும் மீன் குஞ்சுகளுக்கு அம்மாவுக்கு தெரியாமல் உணவிட வேண்டும். அவன் மனது குட்டி போட்ட பூனையாக அலைக்கழிந்து கொண்டிருந்தது. அவை அவன் கஷ்டப்பட்டு வாங்கிய மீன் குஞ்சுகளாயிற்றே.. நேற்று முழுநாளும் அவற்றிற்கு உணவிடவே இயலவில்லை.
சரவணன் அமைதியான பையன்தான். அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். அவன் நன்றாக படிப்பான். அவன் இனிமையாக மனிதர்களிடம் பேசினாலும் கால்நடைகளிடம் அவன் காட்டும் அன்பு அலாதியானது. அதனால் அவன் ஒரு மிருகப் பிரியன் என்றே கூறலாம். அவன் எல்லா உயிர்களிடமும் காட்டும் பிரியம் எல்லையற்றது. அவன் கால்நடைகளிடம் மட்டுமல்ல கொசு, புழு, நமக்கு தீங்கு செய்யும் எதுவாக இருந்தாலும் அவன் அன்பு அதன் மேல் இருக்கும். உதாரணத்திற்கு, அவனை கொசு கடிக்க நேரிட்டால் அவன் அதைக் கொல்லாமல் பூவை தூக்குவதை விட மெதுவாக அவன் இரண்டு உள்ளங்கைகளில் பிடித்து தோட்டத்தில் சென்று அதனை விடுவிப்பான். பலரும் அவனை அதற்காக கிண்டல் செய்வார்கள். அதனைக் கொல்ல சொல்வார்கள். ஆனாலும் அவன் அச்செயலை செய்யவேமாட்டான்
அவனுக்கு மீன் வளர்க்க… நாய் வளர்க்க… பூனை வளர்க்க… என ஆசைகள் நிறைய இருந்தன. ஆனால் அவற்றிற்கெல்லாம் பல்வேறு காரணங்களால் அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கிடைக்கவே இல்லை. வீட்டில் கால்நடைகள் வளர்த்தால் அலர்ஜி வருமென்றார்கள். மீன் வளர்த்தால் படிப்பில் கவனம் சிதறுமென்றார்கள். அவன் பலமுறை முயற்சித்தும் அவர்கள் சம்மதிக்க முன்வரவில்லை. ஒரு நாள், அம்மா ஊருக்கு ஒரு திருமணத்திற்காக சென்றார். அப்போது சரவணனை பக்கத்து வீட்டாரின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அப்போது அங்கே பெங்களூரிலிருந்து அவர்களின் உறவுப் பையன் ஒருவன் வந்திருந்தான். அவன் பெயர் இனியன். அவன் சரவணனிடம் உற்சாகமாய் பேசி விளையாடிக் கொண்டிருந்தான். சரவணன் பேச்சுவாக்கில் தனது மீன் வளர்ப்பு ஆசை பற்றியும் அதற்கு அப்பா அம்மா அனுமதிக்காததையும் மிகுந்த வருத்தத்துடன் கூறினான். அதற்கு அவன் சரவணனை மிகவும் உற்சாகப்படுத்தி தான் வளர்க்க மீன் வாங்கித் தருவதாக கூறினான். பின் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அவன் அன்று மாலேயே ஊருக்கும் போய் விட்டான்.
சரவணன் வீட்டிற்கு வந்து தோட்டத்தில் பார்த்த போது ஒரு பழைய அலுமினியம் வாளியில் தண்ணீரில் மிகச் சிறியதாய் குஞ்சுகள் நீந்திக் கொண்டிருந்தன. அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவன் மகிழ்ச்சியில் திளைத்தான். பெங்களூரிலிருந்து வந்த அந்த பக்கத்து வீட்டு நண்பன் யாருக்கும் தெரியாமல் மீன் குஞ்சுகள் வாங்கி அவன் வீட்டு வாளியில் விட்டிருக்க வேண்டுமென நினைத்தான். அவனிடம் மற்றவர்கள் முன் சொல்லத் தயங்கி சொல்லாமல் இருந்திருப்பான். சரவணனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வீட்டில் பழைய பொருட்களிலிருந்த அறையிலிருந்து பழைய கண்ணாடி பரணியை பத்திரமாக எடுத்தான். பின் அதனை நன்கு கழுவி அதில் தண்ணீரை நிரப்பி அதில் அந்த நீந்தும் சிறு உயிர்களை விட்டான்.. அதோடு கொஞ்சினான். அம்மா வழக்கமாக செல்லாத ஒரு இடத்தில் அந்த பரணியை பத்திரமாக வைத்தான். அது என்னவகை மீன் குஞ்சுகளென்று அறிவதில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் யாரிடமும் கேட்க அச்சமுற்று கேட்காமல் இருந்தான்.
அம்மா ஊரிலிருந்து வந்தார்கள். சந்தோஷமாக இரவு உணவை உண்டுவிட்டு படுத்தான்.
சரவணனுக்கு ஒரே இன்பம். மனம் துள்ளிக் குதித்தது. ஆனால் அவன் அந்த மகிழ்ச்சியை வெளிக் காட்டவில்லை. ஏனென்றால் அவன் அசாதரணமான மகிழ்ச்சியாக இருந்தால் அம்மா ஏன் இந்த இன்பம் என்று கேட்பாரல்லவா? அதனால் தான் முகத்தில் இன்பத்தை வெளிக் காட்டவில்லை. ஆனாலும் அகத்தின் அழகு முகத்தில் தானே தெரியும்? அப்படி அவன் முகத்திலும் தெரிந்து விட்டது போல் தெரிகிறது. அதுவும் அவன் ஒரு ஓட்டை வாயன் என்பதால் நினைப்பதை கொஞ்சம் சத்தமாக பேசிவிடுவான். அப்படி பேசியது அம்மா காதில் நுழைந்தது என்று நினைக்கிறேன். ” டேய் என்ன விஷயம். ஒரு நாளும் இல்லாம இண்ணைக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கிறே. முகத்திலே ஒரு சின்ன திருட்டுத் தனமும் இருக்குது..” என்று அம்மா கிண்டல் தொனியில் கேட்டாள். சரவணன் ”அப்படியொண்ணுமில்லை. நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா ” என்று சமாளித்தான்.
அம்மாவிற்கு தெரியாமல் அந்தக் குஞ்சுகளை நன்றாக கண்காணித்து வளர்த்தான். அதற்கு என்ன உணவு போடுவதென்று கூட அவனுக்கு தெரியாமல் இருந்தது. அதற்கு ரவையை உணவாகக் கொடுத்தான். அது அதையெல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை. அவன் எவ்வளவு தாலாட்டுப் பாடியும் அது சாப்பிடவேயில்லை. அதனிடம் மீனின் பழக்கவழக்கங்களே இல்லை. அவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. ‘அது ரவையை சாப்பிடாமல் எப்படி வளர்ந்தது?’ என்ற கேள்வி அவன் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அது சீக்கிரமாக சாப்பிடாமல் வளர்ந்து விடும் என்று நினைத்து துள்ளி குதித்தான் அவன். சில நாட்கள் கழித்து அதற்கு ஏதோ இறக்கை போன்ற உறுப்புகள் வளர்ந்திருந்தன. அப்போழுது அவன் அது இறகு உள்ள புதிய வகை மீன் என்று எண்ணினான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அதற்கு கண்கள் கொஞ்சம் வளர்ந்ததை போன்று இருந்தது. அதனை பார்த்து அது சாப்பிடாமலே வளர்ந்துவிடும் மீன் என்று விதவிதமாக எண்ணங்கள் அவன் மனதில் சிறகு விரித்து ஓடின. இதனைக் கண்டு அவன் இன்பவெள்ளத்தில் மூழ்கிவிட்டான். சில நாட்கள் கழித்து அவைகளுக்கு கோடுகள் உருவாயின. சாப்பிடாமலே இவை வளர்ந்ததைக் கண்டு அவனுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. அவனுக்கு இந்த மகிழ்ச்சியை அம்மாவோடு பகிர்ந்து கொள்ள ஆசை. ஆனால் அம்மாவும் அப்பாவும் பொய் சொன்னதற்கும் மீன் வளர்த்ததற்குமென இரண்டு குற்றங்களுக்குமாய் பெரிய தண்டனை தருவார்களென்ற அச்சம் வேறு அவனுக்கு வந்து விட்டது. அந்த அச்சத்தில் அவனுக்கு காய்ச்சல் வேறு வந்துவிட இன்று மருத்துவமனைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. மருத்துவமனையில் மீனைப் பார்த்ததும் அந்த பயப்பேய் இன்னும் அதிகமாய் அவனுள் குடியேறி விட்டது.
அவனது மீன் விஷயம் அம்மாவிற்கு தெரிந்துவிடுமோ என்று பயந்தான். அவனிடம் எதையும் அவ்வாறு மறைக்கும் குணம் இல்லை. அவ்வாறு மறைத்தாலும் அது அவனது மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அன்று அவன் படுக்கையில் படுத்த போது அவனுக்கு தூக்கமே வரவில்லை. அம்மாவிடம் மறைத்து கொண்டிருக்கும் மீன் விஷயத்தைச் சொல்ல அவன் மனம் துடித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அச்சம் அதைத் தடுத்தது. அடுத்த நாள் அவன் அம்மாவிடம் எப்படியாவது இந்த விஷயத்தைச் சொல்லத் தீர்மானித்தான். அவன் காலையில் பல் துலக்கி காலை உணவை அம்மா சமைத்துக் கொண்டிருக்கும் போது அம்மாவிடம் தயக்கத்துடன் சென்று மெதுவாக மெல்லிய குரலில் பணிவாகவும் தெளிவில்லாமலும் பேச ஆரம்பித்தான், ‘அம்மா……’ என்றான் முதலில். அம்மா, ‘என்னடா இவ்வளவு கவலையாக இருக்கிறாய்’ என்றார். அவனுக்கு எப்படி கூறுவதென்றே தெரியவில்லை. மூளை ‘சொல்’ என்ற போது அவனது மனம் ‘கூறாதே’ என்றது. அவன் மிகவும் குழப்பத்திற்க்குரியவனாய் இருந்தான். அதனால் பிறகு கூறலாம் என்று தைரியம் குறைய அந்த சூழலை சமாளிக்க, ‘அம்மா இன்று எனக்கு பள்ளியில் தேர்வு. எப்படி நான் எழுதுவேன் என்று கவலையில் இருக்கிறேன்.’ என்றான். அம்மாவும் ‘ஏன் பயப்படுகிறாய், நீ நன்றாக எழுதுவாய்.’ என்று அவனது பொய் மொழிக்கு ஆறுதல் கூறினார். அப்படியே பள்ளிக்குப் போன அவனுக்கு ஒரு திடீர் யோசனை வந்தது.
அவன் அன்று இரவு அந்த யோசனைப்படி ஒரு தாளில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அந்த விஷயத்தை விரிவாக எழுதி அதனை மடித்து பல் துலக்கி பக்கமாக வைத்தான். அதற்கு பிறகு படுக்கைக்கு சென்று தூங்கியது போல் நடித்தான். இரவு தூக்கமே வரவில்லை. அம்மாவும் அடுத்த நாள் காலையில்தான் அந்த கடிதத்தை கவனித்திருக்கிறாள். அதைப் படித்து விட்டு அம்மா படிக்காதது போல் இருந்து விட்டாள். சரவணன் காலையில் எழுந்து பயத்துடன் வந்தான். அப்பா அவனுக்கு காய்ச்சல் இருக்கிறதாவெனப் பார்த்தார். உடனே அம்மா… “இந்த காய்ச்சலுக்கு மருந்து டாக்டர்கிட்டே இல்லே. நம்மகிட்டேதான் இருக்குது. நம்ம கிட்டேப் பொய் சொல்லி இருக்கிறான். அந்த பொய்யிலே இருந்து வெளியிலே வரத் தெரியாம அந்த பயத்திலேயே காய்ச்சல் வந்திருக்குது. சரி .. உன்னுடைய தவறை உணர்ந்திருக்கிறேயே.. எங்களுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது” என்றார் அம்மா.. சரவணனுக்கு பெரிய அழுகையே வந்து விட்டது. பெரிய ஆபத்திலிருந்து மீண்டது போன்ற தெளிவு அவனது மனதிற்கு கிட்டியது.
” சரி. மீனை எங்கே வச்சிருக்கிறே காட்டு … ” என்றார் அப்பா.. சரவணன் அவர்களை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே பழைய குளியலறையில் அவன் மறைத்து வைத்திருந்த கண்ணாடிக் குவளையைக் காட்டினான். அதில் எந்த மீன் குஞ்சுகளும் காணவில்லை. புதிதாய் நான்கைந்து குஞ்சுகள் நீந்திக் கொண்டிருந்தன. அவன் ” அப்பா!’ இதிலிருந்த மீன் குஞ்சுகளொண்ணையும் காணல்லியே” என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னான். ”புதிதாக நிறைய குஞ்சுகள் இருக்கின்றன.” என்று ஆச்சரியத்துடன் அப்பாவிடம் கூறினான். ” டேய். இதுவாடா நீ வளர்க்கிற மீனு ” என்று கேட்டார் அப்பா. ” ஆமாப்பா! இது ரெம்ப சிறிய குஞ்சுப்பா… பாவம்..ரெண்டு நாள் முன்னாடி கூட நிறைய ரவ போட்டேன். கொஞ்சம் கூட சாப்பிடல்லே.. அதுவே தானா வளர்ந்துச்சு . இண்ணைக்கு எல்லா குஞ்சுகளையும் காணல்லே. புதிதா சில மீன் குஞ்சுகள் மட்டும் இருக்குது. அதுவும் நான் வளர்த்த மீன்கள்தான் போட்டிருக்குதுன்னு நினைக்கிறேன். ஆனா நான் வளர்த்த மீன்களை காணல்லியே ” என்றான். அவைகளின் சுவடு எங்கேயுமேயில்லை. அவன் அழுதுவிட்டான். திருப்பியும் அப்பா சரவணனிடம் கேட்டார். ” டேய்! நல்லா பார்த்து சொல்லு.. இந்த குஞ்சுதான் நீ வளர்த்த மீனா ” என்று. அதற்கு சரவணன் ”ஆமாப்பா.. இதேதான். நான் வளர்த்ததும் முதல்லே அந்த மீன்குஞ்சுகளும் இதே மாதிரிதான் இருந்திச்சு.. அதுக்க பின்னாடி சிறகெல்லாம் முளைச்சு காணாம போயிடுச்சு ” என்று வருத்தத்துடன் சொன்னான். உடனே அப்பா உரக்க சிரித்தார். அம்மாவும் தான். ”டேய்.. நீ வளர்த்தது..கொசு லார்வா… இதோ நீந்திக்கிட்டிருக்கிறதும் கொசு லார்வாதான். கொசு லார்வா தானே வளர்ந்து கொசுப் பறவையா பறந்து போச்சு. யாரும் உனக்கு மீன் வாங்கித் தரல்லே. நம்ம வீட்டு பழைய வாளியிலே தேங்கி நின்ன மழைத் தண்ணியிலே கொசு முட்டை போட்டு கொசுப் பறவையா பறந்து போயிருக்குது. அதனாலேத்தான் வீட்டிலே தண்ணியை எங்கேயும் தேங்க வைக்கவோ திறந்து வைக்கவோ கூடாதுன்னு சொல்றது ” என்றார் அப்பா… எப்படியோ அப்பா அன்று முதல் வேலையாய் எனக்கு ஐந்தாறு மீன்களுடன் ஒரு பெரிய மீன் தொட்டி வாங்கித் தந்தார்.

சூர்யா நீலகண்டன்

Series Navigationஇதுவும் அதுவும் உதுவும் -3சனநாயகம்:
author

சூர்யா நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *