சிலையில் என்ன இருக்கிறது?

This entry is part 29 of 41 in the series 13 நவம்பர் 2011


விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு?

1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டி விட்டு அப்போதுதான் இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். அப்படி அவர் அங்கே என்னதான் சாதித்தார்?

ஆரம்பத்தில், பேரவையில் பேச விவேகானந்தருக்கு வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம். பிறகு அவருக்கு, சில நமிடங்கள் பேசும் வாயப்புக் கிடைத்தது.  “சீமான்களே! சீமாட்டிகளே! என்று எல்லோரும் பேச்சைத் தொடங்க, “;சகோதரிகளே! சகோதரர்களே!” என்று புதுமையாகப் பேச்சைத் தொடக்கி, முதல் வார்த்தையிலேயே கூடியிருந்தவர்களின் உள்ளங்கவர் கள்வரானார்!

அவர் பேசிய கவர்ச்சிமிகு ஆங்கில நடை அனைவரையும் அடிமை கொண்டது. பிறகு நடைபெற்ற ஒவ்வொரு விவாதத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேரவையினரால் அவர் விரும்பி அழைக்கப்பட்டார்.  அந்த விவாதங்களில் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை எல்லாம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் மெச்சும்படியாய் அலசிக் காட்டினார்.

மேலும் இந்துக்களின் பிரம்மம், ஜோராஸ்டர்களின் அஹ_தா மஜ்தா, பௌத்தர்களின் புத்தர், யூதர்களின் ஜெஹோவா, கிருஸ்தவர்களின் பரமண்டலப் பிதா எல்லாம் ஒன்றே என்ற பொதுமைக் கருத்தைப் பாங்குற நிலை நாட்டினார்.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் பேச்சைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள் பலர் அவரது சீடர்களாகவே மாறிவிட்டார்கள்.

இத்தனைச் சாதனைகளையும் புரிந்து திரும்பியிருக்கும் விவேகானந்தருக்குப் பரபரப்பான வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  முப்பத்தி இரண்டே வயதான அந்த இளைஞரைப் பார்த்து ஜனங்களெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டார்கள்.  “மங்கிப் போயிருந்த இந்தியாவின் ஆன்மீகப் புகழை மறுபடியும் மணம் பெறச் செய்ய வந்திருக்கும் மகான்!” என்று எல்லோரும் அவரை வாயாரப் புகழ்ந்தார்கள்.

மராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றரசர். அவர் விவேகானந்தருக்கு அரண்மனையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அந்தச் சிற்றரசர் உலக நாடுகளெல்லாம் சுற்றி வந்தவராகையால் எல்லாவற்றிலுமே முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவர்.  மூடப் பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தவர். ஆயிரக்கணக்கான கடவுளர் உருவங்களையெல்லாம் அழித்து ஒழித்துவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையை நம் இந்து மதத்தில் புகுத்த வேண்டும் என்று மனதார விரும்பியவர்.  அவர்தான் விவேகானந்தரின் அமெரிக்கப் பயண வெற்றியைக் கருத்தில் கொண்டு அவரைச் சிறப்பிக்க வேண்டும் என்று வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வரவேற்பு மண்டபம் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசர் அமரும் ஆசனத்திற்குப் பின்புறம் ஆளுயரத்திற்கும் மேலாக சதுரவடிவத்தில் கட்டடம் எழுப்பப்பட்டு, அதன்மேல் அரசரின் இடை அளவான அழகுச்சிலை கம்பீரமாக அமைக்கப் பெற்றிருந்தது.  அந்தச் சிலையே உயிர் பெற்று வந்தது போல், கீழே ஆசனத்தில் அரசர் அமர்ந்திருக்க, ஜனக்கூட்டம் மண்டபமெல்லாம் பொங்கி வழிந்தது.

தேனாகப் பொங்கிய விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்ததும், மக்கள் கையொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து அரசர் பேசும்போது, “சிலை வணக்கம் என்பது நமக்குத் தேவையில்லை.  ஆண்டவனை வணங்க நமக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கற்சிலையை வணங்குவது பாமரத்தனத்தைத்தான் காட்டும். கேவலம் சிலையில் என்ன இருக்கிறது? என்று பொழிந்துத் தள்ளித் தம் முற்போக்குக் கருத்துக்களை விளக்கிக் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நவ நாகரிகப் பெண்மணி இந்தப் பேச்சைப் பெரிதும் ரசித்துக் கைத்தட்டி மகிழ்ந்தாள்.

அரசரின் பேச்சு முடிந்ததும் அதை ரசித்துக் கைத்தட்டிய நவ நாகரிக நங்கையை விவேகானந்தர் அழைத்தார். “என்ன?” என்றவாறு அவளும் மேடைக்கு வந்து நின்றாள்.

“இதோ இருக்கிறதே அரசரின் கம்பீரமான சிலை! இதன் மேல் கொஞ்சம் எச்சில் உமிழ்வதுதானே?” என்றார் விவேகானந்தர்.

“அபச்சாரம் அபச்சாரம்!” என்றாள் பதறிப் போன நங்கை.

“ஏனிப்படிப் பதற வேண்டும்?” என்றார் விவேகானந்தர்.

“சிலையின் மேல் உமிழ்ந்தால் அரசர் மேல் உமிழ்ந்தது போல்!” என்றாள் நங்கை பரபரப்புடன்.

“கேவலம் சிலையில் என்ன இருக்கிறது?” என்றார் விவேகானந்தர் அமைதியாக.

இதைக் கேட்டதும் அந்த நங்கை தலை குனிந்தாள். அவள் மட்டுமல்ல! அரசருங்கூடத்தான்!

Series Navigationகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!பழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    களிமிகு கணபதி says:

    விவேகானந்தரைப் பற்றி எழுதிய நோக்கத்தைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து நீங்கள் விவேகானந்தரைப் பற்றி எழுத வேண்டும்.

    நீங்கள் சொல்லி உள்ள சம்பவம், ஆதாரபூர்வ நூல்களில் வேறு மாதிரி இருந்தாலும், உட்கருத்தைச் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *