மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

This entry is part 8 of 39 in the series 4 டிசம்பர் 2011

“அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்.”
4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டியது. இரவு மின்னல் தாக்கியதில் நடராஜர் கோவில் மேற்கு கோபுரத்தில் கோபுர கலசம் சேதமடைந்து, யாழியும் ஒன்றிரண்டு பொம்மை சிற்பங்களும் உடைந்து விழுந்திருந்தன. பொது தீட்சிதர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். கோவிலுக்குள் பூசணிக்காய் உடைத்து பரிகார பூசை நடத்தவேண்டியிருந்தது

முன்பக்கம் முடிந்த குடுமியும், நெற்றியிலே சந்தணக்கீற்றும், பெரிய குங்குமப்பொட்டும், வயிற்றில் நெளிந்த விரலளவு முப்புரிநூலும் அவர்தான் என்றது. வலதுகாலை சுழட்டி வைப்பார், அப்படியும் இடதுகாலை அதற்குத் தோதாக எடுத்துவைக்க அவரால் முடியாது ஓடித்தான் வலது காலை பிடிக்கவேண்டும். அது நாள்வரை மார்பின் குறுக்காக போட்டிருக்கும் உத்தரியம் கக்கத்தை விட்டு இறங்கிப் பார்த்தவர்களென்று எவருமில்லை. ஆனாலன்று இறங்கியிருந்தது. அவர்தானோ என்ற சந்தேகமும் பார்வதிக்கு வந்தது. எப்போதும்போல இடதுகை இடுப்பை தாங்கிக்கொண்டிருக்க வலது கையை வீசி போட்டபடி நடந்து வருகிறார். இடுப்பில் சாவிக்கொத்து குலுங்குவது தெரிந்தது. தாம்பூலத்தை இன்னும் துப்பவில்லை. வீட்டை நெருங்கியதும் தெருவாசற்படியில் கால் வைக்கிறபோது வாசலை ஒட்டியுள்ள தென்னை மரத்தில் பச்சென்று துப்புவார். வீட்டை நெருங்கும்போதே, வழக்கமான தீட்சதரில்லை என்பது புரிந்தது. முகத்தில் வரிவரியாகத் தெரிந்த கவலைகள் இவளையும் தொற்றிக்கொண்டன.

வீட்டெதிரே வந்த சபேச தீட்சதர் சிறிது நின்றார். இப்படியொரு தோற்றத்தில் பார்வதி அவரை இதற்கு முன் பார்த்ததில்லை. உலைக்கள துருத்திபோல கீழ்வயிறு முன்-தள்ளுவதும் உள்வாங்குவதுமாக இருக்கிறது. மூச்சிறைத்தது. கக்கத்திலிருந்து உத்தரீயத்தை விடுவித்து முகத்திலிருந்த வேர்வையைத் அழுந்தத் துடைத்துக்கொண்டு வீட்டின் சுற்றுசுவர் முன் படலைத் திறந்தார். தலைவாசலுக்கருலே நின்றபடி வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பது தீட்சதருக்குப் பிடிக்காதென பார்வதிக்குத் தெரியும், அவசரமாய் எழுந்து நின்றாள். கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. தீட்சதர் முகம் சிவந்தது

– தண்ணீர் கொடு ! என்ன கோலமிது குடும்ப பொம்மனாட்டியா இலட்சணமா இல்லாம இப்படி தலையை விரித்துபோட்டுக்கொண்டு?

அவள் பதில் சொல்லவில்லை, தீயை மிதித்த அச்சத்துடன் குற்றத்தை சரி செய்தாள். தலை குனிந்து உள்ளே போனவள் அடுத்த இரண்டொரு நாழிகையில் ஒரு செம்பு தளும்ப நீரை சேந்திவந்தாள். கையில் வாங்கினார் தெருவாசற் படிகளில் முதல் படியில் நின்றார். பார்வதி காலையில் இழுத்திருந்த கம்பிக்கோலத்தில் நின்று செம்பிலிருக்கும் நீரை அளவெடுத்து ஆளத் தெரிந்தவர்போல புறங்கால் தேய பாதங்களை மாற்றி மாற்றி ஒரு முறைக்கு இருமுறையாக கழுவினார், பின்னர் முகத்திலும் கை நிறைய தண்ணீரை சேர்ந்தி முகத்தை அலம்பினார். மிச்சமிருந்த தண்ணீரை அங்கிருந்த மல்லிகைச்செடியின் வேரில் ஊற்றினார். கமறிக்கொண்டு மீண்டும் படியேறினார். செம்பைப் பார்வதியிடம் கொடுத்தவர் அப்படியே வாசல் திண்ணையில் உட்கார்ந்தார்.

– உள்ளே வாங்க, இலை போடறேன்.

– எனக்குப் பசியில்லை, எனக்காக காத்திருக்காதே

பார்வதிக்கு மனம் படபடத்தது. என்ன நடந்ததென கேட்கலாமா? ஜெகதீசனைக் கேட்டால் தகவல் தெரியும். அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கிருஷ்ணபுரம் மன்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி புணருத்தான வேலைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், மராமத்து பொறுப்பை கொள்ளிடக் கிழவன் வசம் ஒப்படைத்திருப்பதாகவும் சீரங்கத்திலிருந்து கல்தச்சர்கள் அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள். நாற்சந்தியிலும் படித்துறையிலும் வம்பு நடப்பதாகவும் உங்க வீட்டு மனுஷர் இதுபற்றி பேசினாரா? என்று கேட்டுக்கொண்டு காலையிலேயே தீட்சதர் கோவிலுக்குப் புறப்பட்டதை மோப்பம் பிடித்துவிட்டு வந்திருந்தாள். ‘எனக்கென்ன பாட்டி தெரியும், இந்த மனுஷர் அதுமாதிரியான சங்கதிகளையெல்லாம் வீடுவரை கொண்டுவருவதில்லை, தெற்கு பிரகாரத்தோட சரி’, என மூக்குச்சிந்தியதை பாட்டி நம்பத் தயாரில்லையென்பதை சுளித்த கடைவாயும், நொடித்த தோளும் நிரூபித்தது. போகும்போது கொஞ்சம் தயிர் இருந்தா கொடேன், வீட்டில் பால் மீந்துபோச்சு உரைகுத்தவேண்டும் என்று மறக்காமல் வாங்கிபோனாள்.

– சோறில் கொஞ்சம் மோரைவிட்டு கரைச்சு குடு.
பார்வதி தீட்சதருக்குப் பதில் சொல்லவிரும்பி வாயைத் திறக்கிறாள். அடுத்து வந்த கேள்வி அவளுடைய சொற்களை நெஞ்சுக்குள்ளேயே முடக்குகிறது.

– பிள்ளைகளெல்லாம் வந்து போய்விட்டார்களா? ஒழுங்காய் சாப்பிட்டார்களா?

– ம் வந்தார்கள் திரும்பவும் பாடசாலைக்குப் போயிருக்கிறார்கள், அங்கே தோட்டத்தில் ஏதோ வேலையாம். காலையில் வேதம் சொல்லிக்கொடுக்கிற குருக்கள் இன்றைக்கு வரவில்லையாம். ஒதுவார் மாத்திரம் வந்திருக்கிறார். தேவாரம் படித்ததாக சொன்னார்கள்.

– சங்கரன்?

– அவன் வழக்கம்போல எதிர் வீட்டுலேதான் இருக்கவேணும். அங்கு தொல்லை கொடுப்பதில்லையாம்.

– ம்..ம்.. ஏன் நிற்கிறாய். மோர்விட்டு கொஞ்சம் சாதம் கரைத்துக்கொடுக்க சொன்னேனே காதில் விழவில்லையா?

– விழுந்தது விழுந்தது அதற்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள். இலைபோட்டு வைத்திருக்கிறேனென்று சொன்னேன் அது உங்களுக்குக் காதில் விழுந்ததா? ஏதோ கவலையில் ஆழ்ந்திருப்பதுபோல தெரிகிறது. என்ன நடந்தது? மனதில் இருப்பதை சொன்னால்தானே தெரியும்

– உன்னிடத்தில் சொல்கிற நாழிகை பகவான் கிட்டேயோ அல்லது திரிபுரிசுந்தரி காதிலேயோ கத்தினாலும் பலனுண்டு.

– இப்படி சொல்லி சொல்லி என் வாயை அடைத்து விடுவீர்கள்

– சரி சரி உடனே கண்ணை கசக்க ஆரம்பித்துவிடாதே.

– தொப்புளான் வந்தானா?

– ம் வந்தான் தொழுவத்திலே கட்டிவைத்திருக்கிற வண்டிமாடுகளை இடம் மாற்றி கட்டினான். புவனகிரி எருது நம்ம செவலையோட இணங்கிப்போகமாட்டேங்குதாம் அடிக்கடி படுக்கிறதென்றான். பாதி எரு குப்பையிலே தங்கிவிட்டதாம், ஐயாவிடம் வந்ததும் கூறுங்களென்றான். தரகன் வந்தால் சொல்லிவையுங்கள் என்றும் கூறினான். இரண்டு நாளாக தீனிகூட எடுக்கவில்லையாம், சொல்லச் சொன்னான் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு. புவனகிரி தரகன் வாசற்படியை மிதிக்கக்கூடாதென்று சொன்னேன். கேட்டால்தானே? சண்டாளன் நல்ல கதிக்கு போகமாட்டான். ஒவ்வொருமுறையும் நல்ல மாடென்று எதையாவது ஓட்டிவந்து தொழுவத்துலே கட்டுவதும் நீங்கள் அவனுக்குப் பூரணகும்ப மரியாதைசெய்து அனுப்புவதும் எனக்கு கட்டோட பிடிக்கவில்லை. தீட்சதர் குபேரன் என்கிற நினைப்பு அந்த இடையனுக்கு.

– திடீரென்று எருதில் ஒன்று செத்துபோனதற்கு அவன் என்ன செய்வான். நம்மால நாலு இடம் போய் பார்த்து மாடுகளை வாங்க முடியுமா? பகவான் அவரவருக்கு இன்னின்ன பணிகளென்று எழுதி வைத்திருக்கிறான். அதை மாற்றி எழுதவேண்டுமென்றால் எப்படி? இரண்டு பணம் இந்த வியாபரத்துலே அவன் பார்த்தாலும் தப்பு எங்கே இருக்கிறது. அவனுக்கும் குடும்பம், பெண்டாட்டி பிள்ளகளென்று இருக்கிறார்களே.

– அண்ணா உங்களைத் தேடிவந்தார். கோவிலிலே வைத்து பேசக்கூடாதென்பதால் இங்கே வந்தாராம்.

– கல்யாணத்திற்கு இன்னும் இரண்டுமாதமிருக்கிறதே. வடக்கேயும் தெற்கேயும் வண்டி பூட்டிக்கொண்டா போய் உறவுகளை அழைக்கப்போகிறோம். இருக்கிறது நாலு தெரு. இல்லையெனில், தெற்கு கோபுரவாசலில் கூடுதலாக ஐந்து நாழிகை நின்றால் தீர்ந்தது. இதற்குள் என்ன அவசரமாம் உங்க அண்ணாவுக்கு.

– பிரச்சினை அண்ணாவல்ல. அண்ணிதான் இப்போது பிரச்சினை. அவளுக்கு மகள் திருமணத்துலே உடன்பாடு இல்லையாம்

– ஏன் நம்மைக்காட்டிலும் ஒசத்தியா வேறு தீட்சதர் குடும்பம் இந்த தில்லையிலே இருக்கிறதோ?

– அதில்லை, பால்ய விவாகத்துலே அவளுக்கு விருப்மைல்லையென்று அண்ணா சொன்னார்.

– உங்க அண்ணாவுக்கு புத்தி எங்கே போயிற்று? சொல்லவேண்டியதுதானே? தீட்சதர் குடும்பங்களுக்கு இதென்ன புதியதா? திட்டமிட்டபடி நடக்கும். முரண்டுபிடித்தால் கோவில் வளாகத்துலேயே அவன் நுழைய முடியாது. நடராசன் தயவு இல்லையெனில் கீழ ரதவீதியில் பிச்சைதான் எடுக்கணும். கிருஷ்ணபுர நாயக்கன் வேறு இங்கே சிதம்பரத்திலே முகாமிடப் போவதாகக் கேள்விபட்டேன். கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி திருப்பணியை அருகிலிருந்து நிறைவேற்றப்போகிறேனென்று சங்கல்பம் செய்திருக்கிறானாம் வேலூரிலிருந்து தகவல் வந்தது. இந்த நேரத்தில் இப்படியொரு மிரட்டல். ஈஸ்வர தீட்சிதன் அகமுடையாளுக்கு நாலெழுத்து கூட்டிவாசிக்க தெரியுமென்று சொன்னார்கள். அதுதான் அவனை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. பேடிப்பயல். அகமுடையாள் சொல்வது வேதவாக்கு. இவர்கள் எதற்காக குடுமி ? மழுக்க சிரைத்துக்கொள்ள வேண்டியதுதானே. தீட்சதர் குலத்தை நாசம் செய்யவந்த கோடரிக்காம்புகள்.

அவர் கண்களைப் பார்க்க பார்வதிக்குப் அச்சமாக இருந்தது. உதடுகள் உச்சரித்த அதிர்விலிருந்து இன்னமும் மீளாமலிருந்தன. அவருக்கு மூச்சு இரைத்தது. அண்ணார் வந்துபோன விவகாரத்தை தீட்சதர் சிரமபரிகாரம் முடித்துக்கொண்ட பிறகு சொல்லியிருக்கலாமோ என அவளது மனம் யோசித்தது. பார்வதிக்கு கோபம் அண்ணிபேரில் திரும்பியது.

– என்ன யோசனை தொப்புளான் எங்கே?

சிலிர்த்துக்கொண்டு சுய நினைவுக்கு வந்தாள்.

– இந்நேரத்துலே எங்கே இருப்பான்? வழக்கமா என்ன செய்வானோ அதைச் செய்ய போயிருக்கிறான். வைக்கோலை போரிலிருந்து பிடுங்கிப் போட்டுவிட்டு வயல் பக்கமாக புல் அறுத்து வருவதென்று அரிவாளுடன் கிளம்பிப் போனான்.

பார்வதியின் பதிலைக் காதில் வாங்கியவண்ணம் நடையைத்தாண்டி, முற்றத்திற்கு வந்தார். இரண்டு கட்டு வீடு அது. வான்நோக்கி திறந்திருந்த விசாலமான முற்றத்திற்கு வந்திருந்த ‘பகல்’ வீடுமுழுக்க தளும்பிக்கொண்டிருந்தது. அம்முற்றத்தை விட உயர்ந்து முற்றத்தை வலம்வரும் தாழ்வாரங்கள். இறந்து ஐந்து திதிகண்ட தீட்சதரின் தகப்பனார் கூடத்தில் நிற்பதுபோலிருந்தது. அருவுருவத் திருமேனி. சதாசிவம். தலைக்குமேலே இரு கைகளையும் உயர்த்தி உதடுகளைப்பிரித்து கண்கள் பிரகாசிக்க நெற்றிச் தசைகள் இறுக மகாதேவா! என்றார்.

– பார்த்து பார்த்து இலையில் காலை வைத்துவிட போகிறீர்கள் – பார்வதி குறுக்கிட்டாள்.

தலைக்குடுமியை தேவையின்றி அவிழ்த்துக் கட்டினார். அவருடன் கடந்த இருபது வருடங்களுக்குமேல் நடத்திய இல்வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு தீட்சதர் மனச் சங்கடத்திலிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டாள். மூத்த மகன் சங்கரன் வீட்டில் இல்லாதது அவளுடைய சஞ்சலத்தை அதிகரித்திருந்தது. வாசல் பக்கம் நிழல் ஆடியது. அவன்தானா? இல்லை அவனில்லை. வேறு யாரோ கூட இல்லை. தெருவாசலிலிருந்த தென்னைம்பிள்ளையின் கீற்று பிரசவித்த நிழல் சுங்கரக்காய் ஆடிக்கொண்டிருந்தது.

கூடத்தில் சிறிது நேரம் நிதானித்த தீட்சிதர் பார்வை இலைமீது விழுந்தது. நுனிவாழை இலை. நீவி தண்ணீர் விட்டுக் கழுவியதில் பச்சை இன்னமும் மினுங்கிக்கொண்டு இருந்தது. இலைக்கருகில் நீர் தளும்பும் குவளை. வயிறு அதிகம் குனியவிடாமல் தடுத்தது, சிரமத்துடன் உடலை மடித்து விரல்களை குறடுபோலபாவித்து குவளையை எடுத்தவர் ஒரே மடக்கில் தண்ணீரைக் விழுங்கி குவளையை பார்வதியிடம் நீட்டினார். தீட்சிதர் நீட்டிய குவளையை கையில் வாங்கி அங்கிருந்த வாங்குப் பலகையின்மீது வைத்தாள். ஏற்கனவே «¾¢ø அரிசிமூட்டைகளிரண்டும் வாணியச் செட்டியிடமிருந்து வந்திருந்த புண்ணாக்கு சிப்பமும் இருந்தன. இப்போது அவைகளுடன் ஒரு குவளையும் சேர்ந்துகொண்டது.

உக்கிராண அறைக்கும் சமையற்கட்டுக்கும் நடுவிலிருந்த நடை கூடத்தை தீட்சதரும் பார்வதியும் ஒருவர் பின் ஒருவராக கடந்திருந்தார்கள். புறவாசற் படியில் நின்றவர் பார்வை அங்கிருந்த கேணியைக் கடந்து தொழுவத்தில் ஊன்றி நின்றது. தொழுவம் வெறுமையாக நின்றது. மேய்சலுக்குப் போயிருக்கிற மாடுகள் அந்திவேளைக்கு முன்பாக திரும்புவதில்லை. இடம்புறமிருந்த காணிக்கல்லில் ஒரு ஜோடி உழவுமாடுகள் கட்டப்பட்டிருந்தன. ஈக்கள் மேல் வயிற்றின் சரிவில் உட்காரவும், மாட்டின் உடல் ஒருமுறை சிலிர்த்து ஓய்ந்தது. வால் தும்புபோல வயிற்றின் இரு புறமும் விழுந்து புரண்டது. உழவு மாடுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு முளை அடித்து எருதுகளிரண்டும் கட்டப்பட்டிருந்தன. வேத பாண்டியத்துவத்தைதைப்போலவே எருதுகள் அவர் தகுதியை தீர்மானிக்கிற சம்பத்துகள். இவரைக் கண்டதும் வீட்டெருது கொம்புகளை அசைத்தது. கழுத்துமணியும் கொப்பித் தண்டையும் கண..கணவென்றன. தரகன் வாங்கிக்கொடுத்திருந்த புவனகிரி எருது மிரண்டு எழுந்தது, நுங்குபோல திறந்திருந்த அதன் நாசியிருந்து அனற்காற்று கொப்பளித்தது. கீழ்வாயில் எச்சில் நுரைத்து இறங்க வலதுகாலை முடக்கி குளம்பால் மண்ணைப் பறித்தது, தலை சிவ்வென்று கீழிறங்கிய வேகத்தில் மேலேயெழ கொம்புகளிரண்டும் காற்றைக்கிழித்துக்கொண்டு உயர்ந்தன. கணத்தில் விபரீதத்தை உணர்ந்தவர்போல தீட்சதர் விலகிகொண்டார். எருதைக் கிருஷ்ணப்ப நாயக்கராகக் கற்பனை செய்து எரிச்சலைடந்தார். ‘சனியனை முதலில் தொலைத்தாகணும்’, என அவரது வாய் முனுமுனுத்தது. தலையைத் திருப்பினார். புறக்கடை வாசலில் பார்வாதி நின்றுகொண்டிருந்தாள். அவளருகே சங்கரன், ஈஸ்வரன் தீட்சதர் மகளை ஐப்பசிமாதத்தில் விவாகம் செய்யவிருந்த மாப்பிள்ளை. பார்வதியின் இடது கை சிறுவன் தலைமீது இருந்தது. Å¢Ãø¸û «ÅÛ¨¼Â §¸ºò¨¾ ¯ØЦ¸¡ñÊÕó¾É. கடைவாயில் எச்சில் நூல்போல ஒழுகிக்கொண்டிருந்தது. கட்டை விரல் வாயிலிருந்தது.

– எங்கேடா போயிருந்தாய்?

– தலையாட்டினான்.

– எதிர்த்த வீட்டு ராம சுப்பு வீட்டுக்கா?

அதற்கும் தலையாட்டினான். பிறந்ததுமுதல் அப்படித்தானிருந்தான். தீட்சதர் தலையிலடித்துக்கொண்டார். சபேசன் தமது அத்தைபெண் பார்வதியை கைபிடித்தபொழுது சபேசனுக்கு பத்துவயது பார்வதிக்கு ஆறுவயது. தனது பதினாலாவது வயதில் பார்வதி சங்கரனைப் பெற்றெடுத்தாள். முதல் இரண்டுவருடம் நன்றாகத்தான் இருந்தான். தீட்சதர் குடும்பகளில் பொதுவாக பையன்கள் அப்பா அம்மா என வாய்திறந்து சொல்ல ஆரம்பித்த ஒன்றிரண்டுவயதில் வேதம் பயில ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் சங்கரன் அப்பா அம்மாவைக்கூட சொல்ல மாட்டேன் என்பதுபோல அடம் பிடித்தான். பார்வதிக்கு மட்டுமே பயப்படுவான். திடீரென்று பாய்ந்து பிறத்தியாரை கடித்துவிடுவான். வெளி ஆட்கள் வீட்டிற்கு வர அஞ்சி திண்ணையிலேயே உட்கார்ந்து பேசிவிட்டு போய்விடுவார்கள். தஞ்சைபக்கமிருந்த அவ்வளவு வைத்தியர்களும் வந்து பார்த்தார்கள். அம்பலவாணனில் ஆரம்பித்து மதுரை சுந்தேரஸ்வரை எல்லோரிடமும் முறையிட்டாயிற்று.

– கொள்ளிடத்திற்குப் போன உன் தம்பி வந்தானா?

– இன்னுமில்லை

– எனக்கு கோவிலில் கொஞ்சம் வேலையிருக்கிறது. உன் தம்பிவந்ததும் ஒவ்வொரு தீட்சதரையும் நேரில் பார்த்து இரவு வீட்டிற்கு வரச்சொல். அர்த்தஜாம பூஜையிலிருக்கும் தீட்சதர்களிடமும் சொல்லவேண்டும். பள்ளியறைக்கு பாதுகைப்போய்சேர்ந்ததும் நேராக இங்கே வரவேண்டுமென்று சொல்லிவை. பெரியவர் காலையில் பிரகாரத்தில் உங்களிடம் பேசினாராமே அது சம்பந்தமாக என்று சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

– ம்… என்றாள். தனது கணவர் இதுவரைகாணாத தனதுசஞ்சலத்தில் மூழ்கியிருக்கிறார் என்பது புரிந்தது. ஈஸ்வரா! என்றாள். தெற்கு கோபுரம் தெரிந்த திசையை நோக்கி தாடையில்போட்டுக்கொண்டாள்

மகேஸ்வரி எல்லாவற்றையும் விவாதிக்கிறாள். அறிவு விவாதிப்பதற்காம். வாய்மூடி இருப்பதற்கில்லையாம். கேள்வி எழுப்பாதவர் மகேஸ்வரிக்கு பாமரர்கள்.
5. ஈஸ்வர தீட்சதருக்கும் பரமேஸ்வரிக்கும் பாணிக்ரகணம் நடந்துமுடிந்தபோது, வழக்கமான அப்பா அம்மா விளையாட்டென்று இருவரும் நினைத்தார்கள். விளையாட்டின்போது வீட்டில் தாம் பார்த்த தாயின் நடவடிக்கைகளை பரமேஸ்வரி அட்சரம் பிசகாமல் ஈஸ்வரன்மேல் அரங்கேற்றுவாள். பரமேஸ்வரிக்கு அப்போது வயது ஐந்தோ ஆறோ. ஈஸ்வர தீட்சதருக்கு பன்னிரண்டு. ஈஸ்வரா! உனக்கு பரமேஸ்வரியைப் பிடித்திருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் சட்டென்று எனக்கு பிடிக்கவில்லை, என்றாராம். காரணம் கேட்டபொழுது : “சண்டாளி கோபம் வந்தால் அத்தனை மூர்க்கம். குடுமியைப் பிடித்து இழுத்து மண்ணில் சர்வசாதாரணமாக என்னை புரட்டிப்போடுகிறாள்”; என்று விளக்கியிருக்கிறார். தாலி கட்டினால் நல்ல பொம்மனாட்டியாகிவிடுவாள், பயப்படாதே என்று கூறி இவரைச் சமாதானம் செய்திருக்கிறார்கள். பரமேஸ்வரி கையில் குடுமியை கொடுப்பதில் அவருக்கு சங்கடங்களில்லை. ஊரில் பல தீட்சதர்கள் தங்கள் குடுமியை பராமரிக்கின்ற பொறுப்பையும் ஆட்டுவிக்கும் பொறுப்பையும் வீட்டுப் பெண்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால் இவருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தித் தந்தது பரமேஸ்வரியின் வித்யா கர்வம். அவர் மாமனார், மகளை ஆணுக்கு ஆணாய் பெண்ணுக்குப் பெண்னாய் குறையின்றி வளர்த்திருக்கிறேன் என்று கூறிவந்ததன் பொருள் இளமைக் காலத்தில் விளங்கவில்லை. ஈஸ்வர தீட்சதரும் வித்யார்த்திதான். ஆனால் அவருடைய அத்தனை வித்வமும் நடராஜர் சன்னதி கற்பூர ஆரத்திக்கென்றானது. மகேஸ்வரி எல்லாவற்றையும் விவாதிக்கிறாள். அறிவு விவாதிப்பதற்காம். வாய்மூடி இருப்பதற்கில்லையாம். கேள்வி எழுப்பாதவர் மகேஸ்வரிக்கு பாமரர்கள்.

ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்றென ஜெகதீசனும் சிவகாமியும் அவர்கள் தாம்பத்யத்தின் பலனாக பிறந்தார்கள். மகனுக்கும் தீட்சதர்களின் வழக்கத்திற்கேற்ப சிறுபிராயத்திலேயே மணம் முடிந்தது. அவன் தலையில் என்ன எழுதியிருந்ததோ? ஆடிபெருக்கிற்கு தம்பதிசமேதரராய் இருவரும் புறப்பட்டு போனார்கள். ஆற்று நீரில் திருமண மாலையை விட்டால் குடும்பம் செல்வச் செழிப்போடும், தம்பதிகள் வளத்தோடும் இருப்பார்களென்ற ஐதீகத்திற்கேற்ப புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை நீரில் விடுவதற்கு இறங்கினர். கண்ணெதிரே சுருண்டுவந்த வெள்ளம் இருவரையும் ஆழத்திற்கு கொண்டுபோனது.

கண்விழித்தபோது ஜெகதீசன் மட்டும் கரையிற் கிடந்தான். காப்பாற்றியவர்கள் அவன் மனைவிக்குச்சேர்ந்த சோகத்தை விவரித்தார்கள். கடகராசிகாரனுக்கு இருதாரமென்பது விதி என்று அடித்துக்கூறிய ஜோஸ்யரை மீண்டும் அழைத்து ஈஸ்வரதீட்சதரும் பரமேஸ்வரியும் யோசனை கேட்டார்கள், சில தோஷபரிகாரங்களைச்செய்து ஒரு பெண்ணைப்பார்த்து ஆவணியில் கல்யாணத்தை தாராளமாக வைத்துக்கொள்ளலாம், என்றார். ஆனால் சிறுவன் ஜெகதீசன் விபத்தை நேரில் பார்த்திருந்தான். இரண்டு கிழமைகள் பாயில் கிடக்கவேண்டியிருந்தது. திருமணமென்று பேச்செடுத்தால் நாடராஜர் கோவில் பிரகாரத்தில் எங்காவது பதுங்கிக் கொண்டு பொழுதுசாயும் வரை வீட்டிற்கு வரமாட்டான். அதற்குப்பிறகு தம்பதிகள் அவனை வற்புறுத்துவதில்லை. ஆறுவயதான பெண் சிவகாமிக்கு திருமணத்தை முடிக்கலாமென்று தீர்மானித்தார்கள். வீடுதேடிவந்த ஜாதகங்களை சபேச தீட்சதரிடம் கொடுத்து பொருத்தமான வரனைக்குறித்துக்கொடுக்கச்சொல்லி யோசனைகேட்டதுதான் வினையாயிற்று.

ஒருநாள் சபேச தீட்சதர் வீடுதேடிவந்தார். தங்கள் பெண்ணின் திருமண விஷயம் குறித்து பேசவந்திருக்கலாமென கணவனும் மனைவியும் நினைத்தார்கள். ஆனால் மாப்பிள்ளையாக சித்தசுவாதீனமற்றிருக்கும் தனது பையனை பிரேரிப்பாரென ஈஸ்வர தீட்சதரும் எதிர்பார்க்கவில்லை, பரமேஸ்வரியும் எதிர்பார்க்கவில்லை. இருவரும் கோபத்தை அடக்கிக்கொண்டு யோசித்து பதில் சொல்லுகிறோமென்று அவரை அப்போதைக்கு அனுப்பிவைத்தார்கள். ஈஸ்வர தீட்சதர் சபேச தீட்சதரை சம்பந்தியாக்கிக்கொள்ள காரணங்களிருந்தன. சபேச தீட்சதரர் இவரது தங்கையை மணம் முடித்திருந்தார். அடுத்து சபேச தீட்சதர் குடும்பம் ஊரில் குபேரர் என்று பெயரெடுத்திருந்தது. அதுவும் தவிர தீட்சதர்களிடத்தில் அவருக்கிருந்த செல்வாக்கும் மரியாதையும் வெகு பிரபலம். ஏற்கனவே தங்கை கணவரால், கோவில் வருமானத்தில் இவருக்கு அநேக சௌகரியங்கள். அதன் எல்லை இப்புதிய உறவால் மேலும் விரிவடையக்கூடும். சபேசதீட்சதர் புறப்பட்டு போனதும் “ஏண்டி பரமேஸ்வரி அவர் மகனுக்கு நம்முடைய சிவகாமியை மணம் முடித்தால்தான் என்ன? அவருக்கிருப்பது ஒரே மகன். அவருக்குப் பின் அவ்வளவு ஆஸ்தியும் நமது மகளுக்குத்தானே வந்து சேரும், யோசித்துப்பார், என்றார். பரமேஸ்வரிக்கு யோசித்துக்கொண்டிருக்க நேரமில்லை என்பதுபோல சம்மதமில்லையென்று பதில் வந்தது. ஜெகதீசனிடம் கருத்தைக்கேட்டார். அவனும் தனது, “ச்சீ அதெப்படி முடியும். நம்முடைய சிவகாமியில் அழகென்ன, அறிவென்ன ? அவளைப் போயும் போயும் புத்தி பேதலித்துள்ள பையனுக்குக் கட்டி கொடுப்பதா? இதென்ன முட்டாள்தனமான யோசனை, என்றான்.

அன்று உச்சிகால பூஜைமுடித்து வீடு திரும்பிய கணவரிடம் பரமேஸ்வரி தெளிவாய் சொல்லிவிட்டாள். ‘இத் திருமணத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என கறாராய் சபேச தீட்சதரிடம்’ கூறிவிடுங்கள். ஏன் எதற்கென்று கேட்டால் ஜெகதீசனுக்கு நல்ல பெண்ணொருத்தியைத் தேடிக்கொண்டிருக்கிறோம், கிடைத்ததும் இரண்டையும் ஒன்றாக முடிக்கலாமென்று இப்போதைக்கு சமாளியுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தாள்.

சதியின் சொல்லை சிரமேற்கொண்டு தங்கை வீட்டிற்குப்போய் நிலமையை ஈஸ்வர தீட்சதர் விளக்கினார். அவள் எதிர்வினை இவர் எதிர்பார்த்ததுபோலவே இருந்தது. முதல் ஆயுதமாகக் கண்களைக் கசக்கினாள். “நீங்களே மறுத்தால் தில்லையில் என் மகனுக்கு யார் பெண் கொடுக்க முன் வருவார்கள். அப்படியாராவது இருந்தால் தாய்மாமனென்ற ஹோதாவில் அதை நீங்கள்தான் முடித்து வையுங்களேன், நான் வேண்டாமென்றா சொல்லபோகிறேன். இவ்வளவு ஆஸ்தியை வேறொரு மாட்டுப்பெண்ணிடம் ஒப்படைப்பதா என்று யோசித்தேன். யாருக்கு என்ன எழுதியிருக்கிறதோ அதுதானே நடக்கும்- என அவள் புலம்பினாள். இவர் எழுந்து வந்துவிட்டார்.

ஈஸ்வர தீட்சதருக்கு தங்கைகூற்றில் நியாயம் இருந்தது. பரமேஸ்வரியை உட்காரவைத்து,”கொஞ்சம் நிதானமாக சிந்தித்துபார். என் தமக்கைவீட்டில் எல்லாவளமும் இருக்கிறது. நம்மைபோல உண்டைக்கட்டி தீட்சதர் குடும்பமல்ல. நல்லவேளை ஜெகதீசன் அந்த வீடே கதியாய் கிடப்பது நமக்கு இலாபம். உன் பெண்ணையும் பாணிக்ரகணம் செய்து அனுப்பிவைத்தால் அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் இந்த தரித்திரத்திலிருந்து விமோசனம் கிடைக்கும். தவிர சபேச தீட்சதரை குறைத்து மதிப்பிடாதே. அவர் நினைத்ததை சாதித்து பழகியவர் நாம் வேண்டாமென்றாலும் இந்த முகூர்த்தத்தை நடத்திக்காட்டுவார்.

– அதைக்காட்டிலும் என்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு நானும் குதித்து பிராணனை விடுவேன். தாமதிக்காமல் மகேஸ்வரியிடமிருந்து பதில் வந்தது. ஈஸ்வர தீட்சதருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப்போனது.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (82)கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *