நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்

This entry is part 14 of 48 in the series 11 டிசம்பர் 2011

இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த படைப்பாளிகள் பங்கு பெற்ற கூட்டங்களாக இருந்தன என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.
செட்டியார்களின் கொடையில் நடந்து வரும் அமைப்பு அது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏ வி எம் ராஜேஸ்வரி திருமணக்கூடத்தில் ஆண்டு விழா நடைபெறும். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைகள் பன்னிரெண்டு புத்தகமாகப் போடப்படும். பன்னிரெண்டில் சிறந்த கதைக்கு பரிசும் வழங்கப்படும். இது தவிர புனைக்கதை சாராத ஒரு நூலுக்கும் பரிசு உண்டு.
சமீப காலமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான். வருவார் இல்லை.
ஒவ்வொரு மாதம் கடைசி சனிக்கிழமை அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடைபெறும். ஆனால் அவ்வார்த்தையை மெய்ப்பிப்பது போல் நவம்பர் மாதக் கூட்டம் அன்று அடை மழை.. சென்னையே வெள்ளக்காடு. மாரி பொய்த்தால் வரும் மாந்தர் கூட அன்று இல்லை.
இலக்கியசிந்தனை அமைப்பின் தற்போதைய நடத்துனர் பாரதி, டிசம்பர் கச்சேரிக்கு டைரக்டரி போடும் கண்ணன், நிரந்தர வருகையாளரான திருப்பூர் கிருஷ்ணன், அன்று பேசவிருந்த அமுதா பாலகிருஷ்ணன், அதிசயமாக நான். இவ்வளவுதான் கூட்டம்!
முன்பெல்லாம் ஒருவரை எல்லாக் சஞ்சிகை கதைகளையும் படிக்க வைத்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். இப்போதெல்லாம் அதற்குக் கூட ஆள் கிடைப்பதில்லை போலிருக்கிறது. அதை நிறுத்திவிட்டதாகச் சொன்னார் பாரதி. அமைப்பு சில கொள்கைகளை வைத்திருக்கிறது. அதை ஒட்டி வரும் கதைகளையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குக் கிடைத்த கூடுதல் தகவல். அதனால்தான் அவர்களே தேர்வு செய்து விடுவதாக சொல்லப்படுகிறது. நல்ல கதைகளே வருவதில்லை என்று அதற்கு ஒரு முகமூடி போட்டுவிட்டார்கள்.
‘ ஜே பி சாணக்யா கதையை யாராவது தேர்வு செய்து விட்டால் அது இவர்களுக்கு ஒத்துக்காது. ‘
‘ ஜே பி சாணக்யா தலித் என்பதாலா? ‘
‘ ஜே பி சாணக்யா தலித் தான்.. ஆனால் அவர் தலித் கதைகளை எழுதுவதில்லை.. சினிமாவில் இருக்கிறார் போலிருக்கிறது.. அதைப் பற்றிதான் எழுதுகிறார். ‘
ஆறு மணிக்கு மழைக்கு முன்னால் போய் சேர்ந்த எனக்கு துணை பாரதி மட்டுமே. அன்றைக்கு அமுதா பாலகிருஷ்ணன் ‘ துப்பறியும் கதைகள் இலக்கியம் ஆகுமா? ‘ என்ற தலைப்பில் பேசப்போகிறார்.
ஏழே காலுக்கு கூட்டம் ஆரம்பித்தது. அரைமணியில் முடிந்து விட்டது. எல்லோருக்கும் அவசரம்.. மழைக்கு முன் வீடு போய் சேர வேண்டும் என்று.
பேச்சாளர்கள் அருகிப்போன, பாரம்பரியம் மிக்க { ஜெயகாந்தன், அகிலன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்ற படைப்பாளிகள் கலந்து கொண்ட } அமைப்பின் அன்றைய நிலை பரிதாபம். பேச வந்தவர் துப்பறியும் கதைகளின் சரித்திரத்தை எழுதிவைத்துக் கொண்டு வாசித்தார். அத்தனையும் ஆங்கில கதைகள். தமிழில் தேவனுக்கு வந்தார். அதற்கு மேல் தாண்ட முடியவில்லை.
ஆனால் அவை இலக்கியம் ஆகுமா என்ற நிலைக்கே அவர் வரவில்லை. சமீப கால சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் பற்றிய அலசல் ஏதுமில்லை.
இடைச்செருகலாக கல்கியின் பொன்னியின் செல்வன் கூட ஒரு வகையில் துப்பறியும் கதைதான் என்றார் பாரதி. பொ.செல்வன் இலக்கியம் என்று ஒத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அதை துப்பறியும் கதை என்று நிர்ணயித்து விட்டால் ஒட்டு மொத்தமாக துப்பறியும் கதைகளும் இலக்கியமே என்று ஸ்தாபித்து விடலாம் என்கிற அவசரம் தெரிந்தது.
‘ எது இலக்கியம் ‘ என்றேன் நான்.
‘ என்றென்றும் நினைவில் நிற்பது ‘
‘ எந்த துப்பறியும் கதையாவது அப்படி நினைவில் நின்றால் அது இலக்கியமே ‘
‘ கடைசி வரை வாசகனைக் கட்டிப் போட்டு எதிர்பாராத முடிவைக் கொடுக்கிறதே.. அது இலக்கியம் தானே ‘
‘ துப்பறியும் நாவல்களின் கடைசி பக்கங்களை படித்து விடும் எனக்கு முடிவு தெரிந்த பின்னும் படிக்கத் தூண்டினால் அது இலக்கியம். இல்லை என்றால் அது இலக்கியமில்லை ‘
சுஜாதாவின் இரு கடிதங்களின் கதையை நினைவிலிருந்து சொன்னார் திருப்பூர் கிருஷ்ணன். நான் படித்திருந்தேன். ஆனாலும் அவர் முடிவைச் சொல்லும்வரை அது என் நினைவில் இல்லை. இது இலக்கியமா?
எந்தக் கதையும் வரிகளுக்காகவும் வர்ணனைகளுக்காகவும் திரும்பப் திரும்பப் படிக்கத் தூண்டினால் அது இலக்கியமே – நான்
கடைசியில் எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் குழப்பமாகவே முடிந்தது கூட்டம்.

Series Navigationமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4ஒஸ்தி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *