ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல அவனுடைய இனத்தோடும் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.”.
6. வெயில் சற்று மட்டுபட்டதுபோலிருந்தது. தலையிற் கட்டியிருந்த சவுக்கத்தை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான். மார்பைத் துடைக்க எத்தனித்தபோது முந்திரிப்பழம்போல வயிற்றில் புடைத்திருந்த தொப்புளைப்பார்க்கக்கூச்சமாக இருந்தது வெட்கப்பட்டான். இனி வெட்கப்பட்டு ஆவதென்னவென்று சமாதானமும் செய்துகொண்டான். தீட்சிதருக்குகூட அப்படியொரு தொப்புளுண்டு ஆனால் அவருக்கு தொப்புளான் என்ற பெயரில்லை. இவனுடைய ஆத்தா இவனை வேறு பெயரிட்டு அழைத்த ஞாபகமில்லை. ‘அப்படியே வைத்திருந்தாலும் மண்ணாங்கட்டி, அம்மாவாசை, மொட்டை, கறுப்பன், வெள்ளையன் இதுக்குமேலே என்ன பெரிதாக கிழட்டு முண்டை வைத்திருக்கப்போகிறாள்?’ சேரியிலே இருபது தலைகட்டுத்தேறும். எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ ஒரு பெயர்.
“எந்தப்பெயருலே கூப்பிட்டா என்ன? உள்ளே வாடா குத்தமில்லைண்ணு தீட்சிதர் ஆண்டைதான் கூப்பிடுவாரா? இல்லை கும்பிடற சாமிதான் ஏண்டா பாவி வெளியிலே நிக்கிறேண்ணு கதவைத் தொறக்குமா?”. ‘சண்டாளனா பொறந்தா இப்படித்தானென்று மண்ணாங்கட்டி அலுத்துக்கொள்வான். போனமாதம் பாம்புகடித்து இறந்திருந்தான். துக்க சம்பவம் நடந்த அன்றைக்கு இண்டுபேரும் ஒன்றாகத்தான் நாலுமுழ வேட்டியை அதிகாலைபனிக்காக உடலிற் சுற்றிக்கொண்டு மண்வெட்டியுடன் தண்ணீர் பாய்ச்ச வயல் வெளிக்கு வந்தார்கள். படுபாவி ஒருவாய் வெத்திலைகூட கொடுத்தானே! அவன் வடக்கே போனான் இவன் தெற்கே நடந்தான். கிழக்கு வெளுத்ததும், ஒரு வேலங்குச்சியை ஒடித்து மென்றுகொண்டு வாய்கொப்பளித்து வரலாமென்று வாய்க்காலை இவன் தேடிப்போனான். போன இடத்தில் முழங்கால் மட்ட தண்ணீரில் நுரைதள்ளியபடி நாட்டிக்கொண்டு மிதக்கிறான். சேரிக்கு ஓடி ஆட்களுடன் திரும்பிவந்து பார்த்தபோது மூச்சு அடங்கியிருந்தது.
ஒரு காலை மடித்தும் ஒருகாலை கிடத்தியும் வரப்பில் முன்னேறியபடி தொப்புளான் புல் அறுத்துக்கொண்டிருந்தான். இடதுகை கொள்ள புற்களைச் சேர்த்துப்பிடிப்பான், கைப்பிடிக்குக்கீழே அறிவாளை கவனமாகக்கொடுத்து அறுத்தால், அகன்றகையின் பிடிப்பில் கற்றையாக அணிதரளும் புற்களை வரப்பில் கிடத்துவான். திரும்பிப்பார்த்தான் புற்கள் ஒரு கட்டு தேறும்போல இருந்தது. திறந்த வெளியாகவும் கண்ணுக்கெட்டியவரை வயற்காடாவும் இருந்ததால் காற்றின் வேகம் அதிகரிக்கிறபோதெல்லாம் செவிகளிரண்டும் இரைந்தன. காதுகளில் வண்டுகளிருக்கவேண்டும் சேரியில் இவனுடைய சகாக்களில் பலர் புவனகிரி வைத்தியனிடம் போய் வண்டெடுத்துவந்ததிலிருந்து காதில் இரைச்சலில்லை என்கிறார்கள். இரண்டு வருடங்களாக தொப்புளான் தவிக்கிறான். தீட்சிதர் ஆண்டையிடம் பிசானம் நடவின் போது விண்ணப்பத்திருந்தான். மகசூல் முடியட்டும் என்றார். சம்பா சாகுபடி முடிந்து, குறுவைக்கும் சேடைகூட்டியாகிவிட்டது. காத்திருக்கிறான். ஊதற்காற்றில் தேகம் அவ்வப்போது நடுங்குவதும் அமைதியுறுவதுமாக இருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான், மேற்கு திசையில் சூரியன் கீழிறங்கி இருந்தபோதிலும் வெயில் சுள்ளாப்புடன் உறைத்தது. காவாய்க்கரை ஓரங்களில் நாணல்களுக்கிடையில் நாரைகளின் மஞ்சள் நிற கால்கள் தெரிந்தன. அடுத்திருந்த வயல்முழுக்க மடையான்கள். மண்ணாங்கட்டிக்கு அவை நொள்ளை மடையான்கள். அவைகளுக்கு ஒற்றைக்கண் என்று சத்தியம் செய்வான். இடப்பக்கமாக நெருங்கினால் ஆடாமல் அசையாமல் நிற்கும். துண்டை விரித்துக்கொண்டு பரம்புகட்டிய நீரில் மடையான்களை துரத்தாமல் அமுக்கிப்பிடிக்க சாமர்த்தியம் வேண்டும் அது மண்ணாங்கட்டியிடமிருந்தது.
கால்கள் மரத்து போயின களைப்பாகவும் இருந்தது. காலையிலிருந்து அன்ன ஆகாரமில்லை. “அய்யர் வீட்டமாவைகேட்டு, நாலுகை கூழாவது வாங்கிக் குடித்திருக்கலாம், வயிறு மடித்து வரிகளாகக் கிடந்தது. மார்பின் நரைத்த மயிர்க்கால்களில் சுரந்த வேர்வை ரோம நுணிகளில் தயங்கி நின்று பின்னர் சொட்டியது. ஒன்றிரண்டு வயிறு மடிப்புகளில் நேர்க்கோடாக பரவி வடிந்தன. ஒருசில கோவணத்தையும் நனைத்திருந்தது. கோவணம் தேசம்மா சீலையில் கிழித்தது. இனிமேலும் சீலையைக் கிழித்துக்கொடென்று அவளை கேட்கமுடியாது. “பொங்கல்வரை பல்லைக் கடித்துக்கொண்டு புதுக் கோடிக்கு காத்திருக்கவேணும். உடம்பை மறைக்க பழந்துணி கேட்டு வாங்கிவருவியோ மாட்டியோ ஆனால் தவறாம தானியம் தவிசிருந்தா இரண்டுபடி கேட்டு வாங்கிவா”, விடியக் கருக்கலில் எழுந்து தீட்சதர் வீட்டுக்குபுறப்பட்டபோது காதில் விழுந்த தேசம்மா புலம்பல் நினைவுக்கு வந்தது. புற்களை திரட்டி கட்டாக உருவாக்கினான். காவாய்க்கரையிலிருந்த பணங்கன்றில் ஒரு மட்டையை அறிவாள் கொண்டு வெட்டினான். அதை இரண்டாகப் பிளந்து நார் உரித்தான். உரித்த நாரை முடிந்து ஓரளவு தேவையான நீளம் வந்ததும் வரப்பின் மீது நீளவாக்கில் கிடத்தி புற்கட்டை தூக்கிவைத்தான். நாரைக்கொண்டு கட்டினான். நார் அவிழ்ந்து புற்கள் சிந்தாதென்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும், புற்கட்டைத் தலையிற் தூக்கிக்கொண்டு நடந்தான்.
தொப்புளான் தகப்பன் வெள்ளையன், ஐப்பசிமாதமொன்றில் ஊரெல்லாம் வெள்ளக்காடாக கிடந்தபொழுது தோளில் தூக்கிக்கொண்டுபோய் தீட்சதர் வீட்டில் இறக்கிவிட்டார். உழவு மாடுகளை அறுவடை தாள்களில் காலார நடக்கவிட்டு பொழுது சாய்ந்ததும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்றுதான் ஊழியத்தை ஆரம்பித்தான். அடுத்தடுத்த வருடங்களில் தொழுவத்திலுள்ள பிறமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிபோகும் வேலை என்றார்கள். முகத்தில் மீசை மயிரும் தாடிமயிரும் முளைக்கத்தொடங்கியபோது வண்டிமாடுகளும், வண்டியும் தொப்புளான் பொறுப்பில் வந்தன. படிப்படியாக பதவியில் உயர்வு என்றபோதும் களத்துமேட்டில் அறுவடைகாலத்தில் படி நெல்லின் அளவு மட்டும் முப்பாட்டன் காலத்திலிருந்து மாறாமலிருந்தது. ‘ஏதோ ஆண்டை தயவுலே இந்த மட்டும் பொழைக்க முடியுதே’
கடந்த சில கிழமைககளாக பிரச்சினையொன்று தொப்புளான் மனதை குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. பிரச்சினை கொஞ்ச நாட்களாக ஏதோ ஓக்காளம்போல தொண்டையில் நிற்கிறது. அப்படி நினைப்பு போகிறபோதெல்லாம் ‘ஏதோ நடந்தது நடந்துவிட்டது, எங்கே இருந்தாலும் உயிர் பிழைத்திருந்தால் சரி. ஏழைகுடிக்கு இதற்குமேல் என்னவேண்டுமென’ அலுத்துக்கொள்வான். சம்பவத்திற்குப் பிறகு, பெரிய கோவிலில் பன்னிரண்டு கொடியேற்றம் வந்திருந்தது. குடிசையில், மனக் கணக்கு போல சுண்ணாம்பில் போட்டகோடுகள் அழியாமலிருக்கின்றன. அயன் இட்ட கணக்கு ஆருக்குந் தப்பாதென்பது தகப்பன் அம்மாவாசை வார்த்தை. எப்போதாவது தேசம்மாவுக்குத் தெரியவந்தால் அவளிடம் தகப்பன் பாட்டை தானும் படிப்பதென்று தொப்புளான் தீர்மானித்திருந்தான். இருந்தாலும் தனது மகனைப்பற்றின உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான். தீட்சதர் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கேட்டுவிடுவதென துணிச்சலை வளர்த்துக்கொண்டு நெருங்குவான். அவர் முகத்தைப் பார்த்ததும், தேகத்தில் நடுக்கம் வந்துவிடும். அதை ஒரு பெரிய குற்றம்போல நினைக்கிறான். அவராக ஏதாவது சொல்வார். பெரிய சாதிகாரங்களுக்கு எதை எப்போ செய்யணுமென்று தெரியும். நம்மைப்போன்ற நீச சாதிகாரர்களா என்ன? மனதை சமாதானப்படுத்தினான். தேசமம்மா வயிறும் வாயுமா இருந்த நேரம்- மினுமினுவென்று இருப்பாள். கழனி கொல்லைக்குப் போனாலும், பிற்பகல் தீட்சதர் வீட்டில் தொழுவத்திலுள்ள மாடுகளுக்குத் தண்ணீர்காட்டி, கூளம் போட்டு தலை நிமிரும் நேரத்திலும் சதா தேசம்மா நினைப்புலே மனம் புரண்ட காலம். அமாவாசைக்கு இரண்டாம் நாள்; குடிசையில் புரண்டு புரண்டு படுத்து புழுக்கமாக இருந்ததென்று குடிசைக்கு வெளியில் கூளத்தை இறைத்து பழந்துணியை விரித்து போட்டு படுத்திருந்தான். எத்தனை நேரம் அப்படி தூங்கினானோ? மண்ணாங்கட்டி தட்டி எழுப்பினான்.
– பெரிய ஆண்டை குரல்போல தெரியுது, எழுந்திரு மாமோய்!
அலறி அடித்துக்கொண்டு, எழுந்தவன், « எங்கே எங்கே » என்றான்.
– வவ்வா மரத்துக்காய் லாந்தர் தெரியுது. எதுக்கும் கிட்டத்துலே போய் என்னன்னு பார்- நானும் வரட்டுமா?
– ஐய்யய்யோ வேண்டாம். நான் பார்த்துக்கறேன். நீ போ என்றவன் துண்டை எடுத்து பவ்யமாக இடுப்பில் கட்டினான்.
– தேசம்மா! தேசம்மா எழுந்திருடி! பெட்டைக்கழுதைக்கு தூக்கத்தைப் பார். ஒரு குரலுலே எழுந்திருக்க வேணாமா?
நல்ல நாளிலேயே அவ்வளவு சீக்கிரம் எழுத்திருக்கமாட்டாள். இப்போ வயித்துப் பிள்ளைகாரி.
– ஆண்டை வந்திருக்காராம். என்னன்னு போய் பார்த்துட்டு வரேன்.
எழுந்தாளா? இவன் கூறியதைக் காதில் வாங்கினாளா? என்று கூட யோசிக்க நேரமில்லை. மூச்சிறைக்க ஓடினான். இருட்டில் வௌவ்வா மரத்தடியில் முழங்கால் தெரிய வெள்ளை வேட்டியும், தலையில் பாதியை ஆக்ரமித்திருந்த நெற்றியும், தலையில் கவிழ்த்திருந்ததுபோன்ற சிகையும் காதினை ஒட்டி இறங்கிய முன்
குடுமியும் அவர்தான் என்றன. அவர் சேரியில் கால் வைத்திருப்பது, முதல் தடவையாக நேர்ந்திருக்கிறது. அதுவும் இப்படி நேரங்கெட்ட நேரத்தில். மனசில் என்னவெல்லாமோ வந்து போயின.
– வாங்க ஆண்டை! எதற்கு இம்மாந்தூரம். பொழுதண்ணிக்கும் வீட்டுலேதானே கிடந்தேன். சொல்லியிருக்கலாமே. ஏதாச்சும் அவசரமா?
– ம்.ம்.. நீ தனியாத்தானே வந்தே. உன்கூட வேறு யாரும் வரலையே. தீட்சிதர் கண்கள் இருட்டைத் துழாவின. வேற்று மனிதர்கள் அங்கே இல்லையென்பதை உறுதிபடுத்திக்கொண்டதும், “அருகில் வா!”, என்றார்.
மந்திரத்திற்கு கட்டுண்டவன்போல நெருங்கி கைகட்டி நின்றான். புதுமனிதர்கள் தொட்டால் அதிரும் எருதின் உடல்போல தொப்புளான் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது.
– முண்டப் பயலே! நாந்தானே நிக்கறேன். ஏதோ எமதர்மன் எதிரில் நிற்பதுபோல நடுங்குகிறாயே? ரகசியமா ஒரு உதவி செய்யணும். நீ சத்தம்போட்டு ஊரை கூட்டிவிட மாட்டாயே.
தொப்புளான் தேகம் ஜன்னி கண்டதுபோல உதறல் எடுத்திருந்தது. முகத்தில் பதட்டத்தில் சாயல் அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.
– கொஞ்சம் அமைதியாக நான் சொல்றதை காதில் வாங்கவேணும்.
– உத்தரவு சாமி.
– உன் பிள்ளைக்கு நல்ல காலம் பொறந்திருக்கு
– விளங்கலை ஆண்டை.
– உன் பிள்ளைக்கு நல்லவழி காட்டனுமென்று கூத்தபிரான் உத்தரவு. தேசம்மாவுக்கு பிறப்பது ஆண்குழந்தைன்னா பிறந்த மறுகணம் அந்தக்குழந்தை எங்கிட்டே வரவேணும். எதற்கு ஏனென்கிற கேள்விகள் கூடாது.
– அய்யோ சாமி! இந்த நீசப்பய மவன் உங்களுக்கெதுக்கு. தலைச்சானாச்சே, அவளுக்கு என்ன பதில் சொல்ல?
– இங்கே பாரு உன் அப்பனுக்கு நீங்க எத்தனை பிள்ளைங்க. உன் தகப்பன் கூட பிறந்தவங்க எத்தனைபேரு. கைலாச நாதன் உங்களுக்கெல்லாம் புத்ர பாக்கியத்தை குறையின்றி கொடுக்கிறான். இந்த ஒரு பிள்ளைக்காக ஏனிப்படி கலங்கற. தேசம்மாவை சமாதானப்படுத்து. ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் உம்பிள்ளைக்கு ராஜ யோகம் இருக்கவேணும். இல்லைன்னா எம்புத்தி ஏன் இப்படியொரு முடிவை எடுக்கணும்.
– ஏதேதோ சொல்றீங்க.
– உனக்கு விளங்கி ஆகபோவதென்ன? ஒருத்தரிடத்திலும் மூச்சு விடாம, குழந்தையைத் தூக்கிவந்து மண்ணாங்கட்டிகிட்ட கொடுத்துடு மற்றதை நான் பார்த்துக்கிறேன்.
தீட்சதர் உத்தரவு தேசம்மாவுக்கும் விளங்கியிருக்கவேண்டும். தொப்புளான் குடிசைக்குத் திரும்பியிருந்தபோது அவளுக்கு வலி எடுத்தது. சேரியில் பலருக்கும் பிரசவம் பார்க்கிற நொள்ளை கிழவியை ஓடிபோய் மண்ணாங்கட்டி அழைத்துவந்தான். வெள்ளி முளைக்கவில்லை, குழந்தையின் அழுகுரல் கேட்டது. சொல்லிவைத்ததுபோல ஆண்மகவு. அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தொப்புளான் முடங்கிக்கிடந்தான். சிசுவை மண்ணா¡ங்கட்டிதான் தூக்கிப்போனான். ஒரு வாரம் தீட்சதர் வீட்டை இவன் எட்டிப்பார்க்காமலிருந்தான். தேசம்மாவிடம் நேருக்கு நேர் நின்று பேச அஞ்சினான். மண்ணாங்கட்டியைக் கொஞ்ச நாளைக்கு தன்கூடவே இருக்கும்படி கேட்டுக்கொண்டான். மருத்துவம் பார்த்த நொள்ளைகிழவியும் மண்ணாங்கட்டியும் குழந்தை இறந்துபிறந்ததென்ற கதையைக்கூறி தேசம்மாவை சமாளித்தார்கள். அதன் பிறகு தீட்சிதர் வார்த்தையைபோலவே அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்து, அவற்றில் இறந்ததுபோக குஞ்சும் குளுவானுமாக நான்கு இருக்கின்றன. இருந்தாலும் தீட்சதரிடம் வாரிக்கொடுத்த பிள்ளையின் ஞாபகம் எழாத நாளில்லை. தேசம்மாவை நேரிட்டுப்பார்க்க கூசினான். ஒவ்வொரு நாளும் தீட்சதர் வீட்டிற்குப் போகிறபோதெல்லாம் அது விபரத்தைக் கேட்டுவிடுவதென்று தீர்மானத்துடன் போவான். அந்த மனிதரைப் பார்த்ததும் எல்லாம் மறந்துபோகும். ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய வம்சத்தோடு உடன் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.
ஏதோ கவனத்தில் தீட்சதர்கள் வீதியில் கால்வைத்துவிட்டான். நல்லவேளை யார்கண்ணிலும் படவில்லை பட்டிருந்தால் வம்பு. மூச்சிரைக்க புற்கட்டை சுமந்துகொண்டு வந்த வழியே ஓடினான். சண்டாளர்க்கானப் பாதையைப் பிடித்து தீட்சதர் வீட்டை அடைந்தான். தீட்சதர் வீட்டெதிரில் கூட்டமிருந்தது. வேற்று மனிதர்களில்லை, வந்திருப்பவர்கள் எல்லோரும் தீட்சதர்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ ?
வீட்டைச்சுற்றிக்கொண்டு புறவாசலைக்கடந்து தொழுவத்தில் புற்கட்டை கீழே இறக்கினான். துண்டை உதறினான். தாசி மீனாம்பாள் வீட்டுப்பெண் செண்பகம் நிற்பது போல தெரிந்தது. என்ன காரியமா வந்திருக்கே பிள்ளைண்ணு கேட்கலாமா? பிறகு நமக்கெதற்கு பெரிய இடத்து விவகாரமென அக்கேள்வியை மறந்தான். புற்கட்டை அவிழ்த்து கறவைகளுக்கு பிடி பிடியாக விநியோகித்ததுபோக மற்றவற்றை ஓரமாக ஒதுக்கிவைத்தான். செண்பகத்தை பார்க்காதவன் போல
– அம்மா, தொப்புளான் வந்திருக்கேன் – எனப் புறவாசல் பக்கம் குரல்கொடுத்தான்.
தீட்சதர் மைத்துனன் ஜெகதீசன் வெளியில் வந்தான்.
– வந்து ரொம்ப நேரம் ஆகிறதா?
– இல்லை சாமி சித்தே முன்னேதான் வந்தேன்.
– இன்றைக்கு நீ வீட்டுக்கு வேளையா போகலாம். மாமா தீட்சதர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். ஏதோ பேசப் போகிறார்களாம். நாளைக்கு காலமை வழக்கம்போல வந்திடு. அநேகமாக புவனகிரி தரகனை அழைத்துவரவேண்டியிருக்கும். புது எருது சரிவரவில்லையென்று அக்காளிடத்தில் சொன்னாயா?
– ஆமாம் சாமி. எருவடிக்கிற வேலை அது பண்ண கூத்தாலே பாதியிலே நிற்குது.
– ம்..ம்.. ஜெகதீசன் புறப்படத் திரும்பியபோது, தேசம்மாவின் குரல் தலைக்குள் ஒலித்தது – “அம்மா கிட்டே சொல்லி ஏதாச்சும் தானியம் தவிசு இருந்தா வாங்கிவாய்யா”.
– ஆண்டை!
ஜெகதீசன் நின்றான். திரும்பினான்.
– என்ன தொப்புளான்? ஏதாவது வேண்டுமா ?
– அம்மா விடம் ஏதாச்சும் தானியம் தவிசு இருந்தா வாங்கி வரும்படி தேசம்மா கேட்டது.
– அப்படியானால் அக்காளை அனுப்பி வைக்கிறேன். கொஞ்சம் பொறு. – ஜெகதீசன் உள்ளேபோன இரண்டொரு நாழிகைக்குப்பிறகு பார்வதி எட்டிப்பார்த்தாள்.
செண்பகம் இன்னமும் நிற்கிறாளா என்று பார்த்தான், காணவில்லை. தீட்சதரைப் பார்க்க வந்திருக்கவேண்டும், ஜெகதீசனைப் பார்த்து பயந்திருப்பாள்.
– என்னடா? கொள்ளு ஒரு குறுணி தேறும் கொடுக்கட்டுமா?
– கொடுங்கம்மா.
பார்வதி மீண்டும் வீட்டுக்குள் சென்றாள்.
- புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்
- கோழியும் கழுகும்…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 22
- விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி
- பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
- மணியக்கா
- கெடுவான் கேடு நினைப்பான்
- எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- வெண்மேகம்
- மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை
- வெளிச்சம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்
- ஒஸ்தி
- மழையின் முகம்
- பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து
- முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)
- எவரும் அறியாமல் விடியும் உலகம்
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- புரிந்தால் சொல்வீர்களா?
- மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம்
- கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி
- இரவின் முடிவில்.
- காந்தி சிலை
- அகஸ்தியர்-எனது பதிவுகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1
- தரணியின் ‘ ஒஸ்தி ‘
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்.
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- ஆனந்தக் கூத்து
- விருப்பங்கள்
- அழிவும் உருவாக்கமும்
- பார்வையின் மறுபக்கம்….!
- மழையும்..மனிதனும்..
- பிரம்மக்குயவனின் கலயங்கள்
- சொல்லவந்த ஏகாதசி
- அரவம்
- அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்
- குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்
- அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
- ’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1 Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson
- புத்தகம் பேசுது
- மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா
- அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்