சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

This entry is part 1 of 39 in the series 18 டிசம்பர் 2011

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் “ஏறக்குறைய சொர்க்கம்” சொல்ல வருவது இதனை தான்

குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக க்டையிலிருந்து கிடைக்க பெற்றேன்.

ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் பார்த்து திருமணம் செய்கிறான். திருமணமான அன்றே ராமின் தாயார் மரணமடைகிறார். “பெண் ராசி அற்றவள் ” என பலரும் சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் ராம். வங்கியில் பணி செய்யும் ராமின் நண்பன் சந்துரு, ராமின் மேனஜர் என பலருக்கும் காமுவின் மீது ஒரு கண். ” உங்க நண்பன் சந்துரு என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்” என்கிறாள் காமு. சந்துருவை பார்க்க போனால், அவன் ” உன் மனைவி நடத்தை சரியில்லை. என்னிடம் தப்பா நடந்து கொள்ள பார்த்தாள்” என்கிறான். சந்துரு சொன்ன வேறு சில விஷயங்கள் சரியாக இருக்க அவனை திட்டாமல் திரும்புகிறான் ராம்.

ராமின் மேனஜர் மூலம் ஒரு சினிமா டைரக்டர் காமுவை வந்து பார்த்து விட்டு காமுவை தன் படத்தில் நடிக்க சொல்லி அழைக்கிறார். ராம் இதை மறுக்கிறான்.

காமுவின் நடவடிக்கைகள் ராமுக்கு தொடர்ந்து சந்தேகம் தர, வேலைக்கு செல்லாமல் அவளை உளவு பார்த்து கொண்டு திரிகிறான். கர்ப்பமாகும் காமுவை அபார்ஷன் செய்ய சொல்லி விடுகிறான். இதன் பின் தன் வீட்டுக்கு போகும் காமு திரும்பவே இல்லை. நீண்ட நாள் அலைந்து காமு அவள் சித்தப்பா மூலம் சென்னை சென்று நடிகை ஆகி விட்டதை அறிகிறான். இந்நிலையில் அவன் வேலையும் இழந்து இருக்க, “எந்த தொந்தரவும் தராமல் வீட்டில் இருந்தால், உன்னை இங்கு இருக்க அனுமதிக்கிறோம்” என்கிறார்கள் சித்தப்பாவும், காமுவும். தினம் தண்ணி அடித்து கொண்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஒரு நடிகையின் கணவன் வேலையை பார்க்க துவங்குகிறான் ராம். இந்த வாழ்க்கையை பொறுத்து கொண்டால் “ஏறக்குறைய சொர்க்கம்” என ராம் சொல்வதுடன் கதை முடிகிறது

எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட நாவல் இது. ஒவ்வொரு வாரம் முடிக்கும் போதும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் உடன் முடிக்க, வாசகர்கள் நிச்சயம் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் இருந்திருப்பார்கள்.

கதை முழுக்க முழுக்க காமு என்கிற அழகிய பெண்ணை சுற்றியே சென்றாலும் கூட, அவள் அழகை பற்றி தான் பேசுகிறதே ஒழிய, அவள் உணர்வுகள் அல்லது அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எங்குமே சொல்ல வர வில்லை. சொல்ல போனால் இது தான் கதையின் மிக பெரிய புதிரே.

ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது.

இறுதி பகுதியில் சந்துரு இப்படி சொல்கிறான்.

” யோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது”.

உலகத்தில் நடக்கிற எல்லாம் உனக்கு தெரிந்தா நடக்கிறது? அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா என அறிவுரை சொல்கிறான் நண்பன். கடைசியில் ராம் அந்த வாழ்க்கைக்கு ஒப்பு கொள்வதும் இதன் அடிப்படையில் தான்.

இந்த நாவலை 90-களில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும், ஏறக்குறைய சொர்க்கம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது “அழகான மனைவி- நடிகையாகும் கதை” என்பது தான்.

சுஜாதாவின் One of the best என்று சொல்ல முடியா விட்டாலும் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் இந்த நாவலை.

snehamohankumar@yahoo.co.in

http://veeduthirumbal.blogspot.com

Series Navigationநெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
author

மோகன் குமார்

Similar Posts

Comments

 1. Avatar
  kasirajan says:

  ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது // இல்லை ஒருவகையில் ராம் பாத்திரம் தனது நிலைப்பாட்டை சமுதாயம் அனுமதிக்கும் “தெளிவாக சுயநலமான வில்லன்” என்றே கதையமைப்பு உள்ளது. காமு தவறு செய்தாள் என்றால் கூட, தனக்கு சொந்தமில்லா ஒரு உயிரை கருவிலேயே கொல்ல ராம் பாத்திரம் உரிமை இல்லை.
  அன்பற்ற வாழ்க்கை முறை என்பது ராம் பாத்திரம் கொடுக்கும் குடும்ப வன்முறை வாழ்க்கை முறை.
  சமையல் செய்து கொண்டு முக்காடு போட்டு கொண்டு வாழும் வாழ்க்கையே ராம் தந்த வாழ்க்கை முறை .
  சினிமா நடிகை என்பது சுகந்திரமான வாழ்க்கை முறை என்று ஏற்றுக்கொண்டு வாழும் சுகந்திரம்.

  ஒரு வருட குடும்ப வன்முறையில் அவதிப்பட்ட காமு இந்த சினிமா நடிகை வாழ்க்கை முறை என்பது காமுவின் பற்றிக்கொண்ட சுகந்திரமே !

  Kasirajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *