அழுகிணிராசாவும் புளுகிணிமந்திரியும்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 25 of 29 in the series 25 டிசம்பர் 2011

¬¬¬ ம.காமுத்துரை

அல்லியூர் அந்தப்புரத்திலிருந்தபோதுதான், சூ கூ சுகுமாறன் நம்பியாருக்கு அதிஅற்புதமான யோசனை உதித்தது. அதன்பிறகும், ஆசை நாயகிகள், அசின்பத்மினி, நயனாதிகா, த்ரிசாம்பிகா, குஷாலினி மற்றும் ஸ்ரேயாரஞ்சனி களோடு சல்லாபிக்க முடியவில்லை.

அந்தப்புரமண்டபத்தின் ஆலோசனைக் கூடத்திற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த பஞ்சதீர்த்த வாவியில் நீட்டாமல் நெளிக்காமல் படாரெனக்குளித்து, யோசனை உலருமுன், பட்டாடை வஸ்திரங்களை உடலில் பூட்டிக் கொண்டார். பாதரட்சை அணிந்து, உடைவாளை இடுப்பில் மாட்டியபோது வாசனைத் திரவியங்களோடு சேடிபெண்கள் ஓடிவந்தனர். தாமதமாக வந்த அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கும்படி அரண்மனை காரியஸ்தருக்கு ஆணை பிறப்பிக்க எண்ணிய சமயம், அந்த அடிமைகள் சடாரென அரசனின் காலடியில் சரணடைந்தார் கள். “ஐவகைத் திரவியங்களில் புனுகும் சவ்வாதும் இருப்பு இல்லை என்றும், ‘இண்டெண்ட்’ போட்டு இருபது நாளாகியும் இன்னும் வரவில்லை” எனவும் கோரஸாய்ச் குரலெழுப்பிக் கண்ணீர் வடித்தனர்.

அரசன் சூ கூ விற்கு கண்ணீர் கண்ட நிமிசத்தில் கரைந்து போவார். எல்லைமீறுகையில் தானும் கரைகிற சுபாவம் அவருக்குண்டு. சமயத்தில் தேம்பி அழுதும் விடுவார்.

இடுப்பில் பூட்டிய உடைவாளை மறுப்டியும் களைந்து, அக்கிள்களிலும் ஒளியரியா இடங்க ளிலும், பூசி மேவிக்கொண்டிருக்கையில், ‘புத்தூர் அந்தப்புரத்தில் அவை அதிக இருப்பு இருப்ப தாகவும், அம்பாரி வசதி செய்து கொடுத்தால் சுமந்துவர தோதுவாய் இருக்கும்.’ என்று வாய் பொத்திக் கேட்டாள், ஒரு சிவப்புத்தோல் அடிமை.

அந்த நேரம் அரக்கப் பரக்க உள்ளே நுழைந்தார், மந்திரிப் பிரதானி மன்மோகன சுந்தரனார்.
”தங்கள் பணியாள் வந்ததும் பதறியடித்து ஓடிவந்தேன் மன்னா….! இன்னும் பல் கூட தேய்க்க வில்லை..!” – தனது பணி பக்தியினை மெய்ப்பிக்க வேண்டி பானாவிற்குப் பானாவய்க் கொட்டினார், அந்த புளுகினி மந்திரியார்.

“என்றைக்குத்தான் நீர் உமதுவீட்டில் பல்விளக்கி சாப்பிட்டு வந்தீர்.? இன்று முற்பகலில் அம்மச்சியாபுரம் சென்று அந்த சின்னப்பயல் அமரசிகாமணியை சின்னாபின்னப் படுத்திட சீக்கிரம் ஆயத்தமாகச் சொல்லியிருந்தேனே… நினைவில்லையா உமக்கு…..! “

சொல்லிக் கொண்டே இடுப்பில் அணியப்பட்ட உடைவாளை சோதித்துக் கொண்டார். கைப்பிடியின் வசம் மாற்றி அணிவித்து விடுகிறார்கள். அடிமைச் சேவகிகள். ஆத்திரத்தில் உருவுகிறபொழுது, ஒருநாள் இடது கண்ணில் கூர்முனைபட்டு, ந்ல்லவேளையாய் சிராய்ப்பு கன்னத்தோடு போனது. இல்லாவிட்டால் அந்தக் கண், அந்தகனாக்கி இருக்கும்.

”உண்மை மன்னா.. ஞாபகம் மறப்பேனா.. அந்தச் சிந்தனையிலேயேதான் நேற்று இரவு உறங்க வெகுநேரம் பிடித்தது. அதன் விளைவுதான் இந்தத் தாமதம். “ மந்திரிபிரதானி பேசி முடித்ததும், முற்பகல் வேளை முடிந்து நண்பகல் துவங்கியதற்கான காண்டாமணியோசை ‘டாண்’ என அடித்து அதிர்ந்தது.

மணிச்சத்தம் கேட்டதும், கொதித்தெழுந்தார் மன்னர்பிரான். “யாரங்கே..காண்டாமணி அடித்தவனை இழுத்து வரச் செய்யுங்கள், அவனை ஐம்பதுநாள் சிறையிலிடுங்கள். “ கண்கள் சிவக்க உத்தரவிட்டார்.

மந்திரிக்கே அரசனின் ஆணை விள்ங்கவில்லை. மெதுவாய் அருகில் வந்து, “தண்டனைக்கான காரணத்தை நான் மட்டும் அறியலாமா.. மன்னா..! “ – வினவினார்.

எரிக்கும் விழிகளோடு நோக்கிய மன்னர், “இந்த தண்டனை உமக்கும் சேர்ந்தே தரப்பட வேண்டியது.. இன்றைய ராஜ்ய பயணத்திற்கு என்னுடன் நீர் கிளம்ப இருப்பதால் தப்பித்துக் கொண்டீர்.” என்றவர். “எமது பயணத்திட்டம் என்ன.. ?”

”முற்பகல் அம்மச்சியாபுரம் சென்று அந்த அயோக்ய அரசரை துவம்சம் செய்வது..!”

”ம்..! யாம் புறப்பட்ட பிறகுதானே முற்பகல் கடந்த மணியடிக்க வேண்டும்.? அந்த விவகார இலாகா உமது பார்வையிலே தானே உள்ளது…!”

உடனே சடாரென தெண்டனிட்ட அமைச்சர், “பொறுத்தருள வேண்டும் மன்னா.. அவசரப் பட்டு விட்டான்: அவன் பொருட்டு நான் தங்கள் பாதங்களை சிரமேற்கொள்வேன்.” என்றார்.

“சரி அதனை பின்னால் பார்த்துக் கொள்வோம். சட்டெனக் கிளம்பும். இன்றைக்கு அந்தப்புர குளியல் கிடையாது. முகமலம்பி உள்ளதை உண்டு உடனே வாரும்.” முகத்தை அஷ்ட கோணலாய் சுளித்துக் கொண்டு உணவருந்தும் அறை நோக்கிச் சென்றார் அரசர். பிரயாணத் தின்போது எடுக்க வேண்டிய உணவு வகைகளையும் அளவுகளையும் பகுத்துச் சொன்ன மருத்துவ சிகாமணிகளின் கண்ணில் போக்குக்காட்டி வழக்கம் போல இஷ்டமாய் உண்டு வழிச் செலவுக்கென நொறுக்குத் தீனிகளைத் தனித்தனியே பொட்டலங்கள் கட்டச் சொன்னார்.

குதிரையில் ஏறும் முன் வில்லும் அம்பும், அம்பராக் கூடும் எடுத்தபோது, மந்திரியவர்கள் மன்றாடி ஒரு வேண்டுகோள் விடுத்தார். “நாம் போருக்குச் செல்லவில்லை அரசே…! நமது போக்கில் விளைவித்த இடையூறுக்கான விளக்கமும்,- இறுமாப்போடு பதிலும் இருந்தால் எச்சரிக்கை செய்யவே இந்தப் பயணம். உங்களின் உடைவாள் ஒன்று போதுமே மன்னா..!”

“ஒருவேளை வீரார்ந்த பேச்சால் விபரீதம் உண்டாகுமேயானால்…?”

“வராது மன்னா.. தங்களைப் பற்றி அறியாதவனா..? தங்களின் தண்டமிழ்ப் பேச்சு தரணி அறிந்ததல்லவா..! வேண்டுமென்றால் குற்ங்கத்திகள் ஒன்றிரண்டை எடுத்துக் கொள்ளுவோம். எதிரியை குறிபார்த்து வீச…!”

”நல்லயோசனை” – என்று இடுப்பைச் சுற்றி ஏழெட்டு குறுங்கத்திகளைச் சொறுகிக் கொண்டார். கால் உறைகளிலும் எதற்கும் இருக்கட்டும் என இருத்திவிட்டு, ஜெயகோஷத்தின் பிண்ணனியில் குதிரையில் ஏறிஅமர்ந்ததும் அமைச்சர் அரசரின் காதருகே வந்து கிசுகிசுப்பாய் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

“அவசரத்தில் எனது உடைவாளை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்…. தங்களது பாலீஷ் செய்யப்படாத பழைய வாள் ஒன்றை இந்தப் பயணத்திற்குத் தந்து உதவவேண்டும்.”

“ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் இதேகதைதானே சொல்கிறீர். இதுவரை எத்தனை என்ற கண்க்கு உண்டா, புறவழியில் ஏதும் வாள்விற்பனை நடக்கிறதா…? விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் போலிருக்கிறதே… இதுவே கடைசிமுறையாக இருக்கட்டும்.!”

மீசை துடிக்கப் பேசிய மன்னரை உலுப்பிட நினைத்தோ அன்றி இயல்பாகவோ அமைச்சர் ஒரே வாக்கியத்தோடு பயணத்தைத் துவக்கினார்.

அது, “ஒரு பயணத்தைத் துவக்குகிறபோது பராக்கிரமம் பொருந்திய தங்கள் திருவாயிலி ருந்து கடைசி என்கிற அமங்கல வார்த்தை வரலாகாது மன்னா.. இருப்பினும் அதுவே நமது குலதெய்வமான ராக்காச்சியம்மனின் பேரருளால் மங்கலச் சொல்லாய் ஒலிக்கட்டும். நன்றி மன்னவா….!” என்று ஏற்கனவே எடுத்துவைத்திருந்த உடைவாளை இடுப்பில் இறுகச் சொறுகிக் கொண்டு மன்னரோடு அம்மச்சியபுரம் நோக்கிப் பயணத்தைத் துவக்கலானார்.

மன்னருக்கு வாழ்த்துச் சொல்வதொன்றையே தொழிலாகக் கொண்ட வேதம்கற்ற வேதியர் பெருமக்கள் பூரணகும்பம் ஏந்தி பூக்கள்தூவி வழியனுப்பக் காத்திருக்கும் சேடிப் பெண்களும் கோரசாய் குரலெழுப்பி பயணத்தின் புற்ப்பாட்டை சிலிர்க்கச் செய்த அவர்களுக்கு ‘டிப்சை’ வழங்கியபடி கோட்டைச் சுவரைக் கடந்து சென்றார் மன்னர்பிரான்.

நரியோடும் பாதையில் காட்டைக் கடந்து அம்மச்சியாபுரம் அடைகிறவரையில், நாம் அரசரது இந்தப் பயணத்தின் முன்கதையினை அறிந்து கொண்டால் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.

பெரிதாய் ஒன்றும் விஷயமில்லை. குறுஞ்செய்திதான். வழக்கம் போல, தின்றது செரிக்க நகர்வலம் வருவதும், தேகப்பயிற்சி மேற்கொள்வதும், வில்வேல் பயிற்சிக்காக வேட்டைக்குச் செல்வதும் அரசர்களின் அட்டவணைப் பட்டியலில் இருக்கும் அலுவலற்ற அலுவலில் காணக் கிடைக்கும்.

யாரோ சில மாடுமேய்க்கும் சிறுவர்கள், தாங்கள் மேய்ச்சல் எல்லையில் அடிக்கடி மாடுகள் களவு போவதாய் புகார் சொல்லி வந்தார்கள். விசாரித்துச் சொல்கிறோம் என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்த சில நாளில் மறுபடி அவர்களே வந்து, நமது எல்லையில் ஒரு ஒற்றைப் புலியின் நடமாட்டம் இருப்பதாய் சொன்னார்கள்.

இரைகிடைக்காமல் புலி பட்டினியால் சாகட்டும். அதுவரையில் யாரும் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லவேண்டாம் என உத்தரவு போட்டார்.

சோமபானத்தின் சேர்க்கை சரியில்லாத ஒரு நாளில் அரசர் மகாராணி மத்தளகுமாரியிடம் அல்லியூர் அந்தப் புரத்தின் பஞ்ச தீர்த்த குளியல் பற்றி உளறித்தொலைத்து விட்டார். அதிலும் புதியவள் சிரேயாரஞ்சனியின் பங்கமில்லா அங்க அவயங்களின் அளவுகளை வர்ணித்துப் பேச, அரசியின் மனத்தில் பொறாமைக் கனல் குபுகுபுவென பற்றி எரிந்தது. ’என் அகன்ற வயிறு, அனலாய் எரிவதுபோல அல்லியூர் அந்தப்புரம் எரிக்கப்பட வேண்டும்’ என ஆணையிட்டார்.

கட்டுமானப் பொருள்களின் தட்டுப்பாடும், கொத்தனார் சித்தாட்களின் கூலிப் பிரச்சனையும் குந்தாணி மத்தளகுமாரி அறியமாட்டார் என்பதால் மகாராணியின் ஆணைக்கு தடுப்பாணை ஒன்றைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. தொந்தி மகாராசாவின் செல்லக்குமாரியான அரசிக்கு, தடுப்பாணை கடும் சினத்தை ஏற்படுத்த, கண்ணை மூடிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடலானார். மகராசா சூ கூ வுக்கு படக்கூடாத இடத்தில் பட்டு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது.

அரண்மனை வைத்தியர் காயத்தின் ஆழம் பார்த்து கண்ணீர் விட்டார். கானகம் சென்று மூலிகையின் வாசம் மாறாமல் வைத்தியம் செய்ய உத்தமம் என்றார்.

உயிர்மேலிருந்த அதீதபற்றின் காரணமாய் ஒற்றைப் புலியின் நடமாட்டத்தை மறந்திருந்த அரசபெருமான், கானகப் பயணம் மேற்கொள்ள கட்டளையிட்டார். உடனே மந்திரிப்பிரதானி மன்மோகனார், மன்னர்பிரான் வேட்டைக்குப் போவதாய் தண்டோரா செய்து நாட்டுமக்களுக்கு நல்லசெய்தி சொல்லிவிட்டு, நாற்பதுபேர்களுடன் கானகக் குடிலில் மன்னரை இருத்தி வைத்து வைத்தியம் தொடங்கலானார்.

தானாய் எழுந்து நடமாடத் தொடங்கியதும், தன் கைகளாலேயே வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தைச் சுவைக்க வேண்டும் என்ற ஆசை மன்னருக்கு எழ, மந்திரியிடம் தெரிவித்தார். ‘ஆகா’ வென ஆராவரித்தாலும் மந்திரியின் மனசுக்குள், ’இது ஆகிற காரியமாய்த் தெரியவில்லையே’ என்கிற வரிகள் ஓடினாலும்; அதனை வெளிக்காட்ட முடியவில்லை, ‘மன்னர்பிரான் பெரிய ஆபத்திலிருந்து விடுபட்டு, புண் ஆறியுள்ள சூழலில் இந்த அற்ப ஆசையி னை துறந்திட வேண்டுமென்று வேண்டினார்.

மன்னருக்கு மந்திரியின் மனம் புரிந்துவிட்டது, கோபத்தில் கொதிக்காமல், கொஞ்சலாய்க் கெஞ்சலானார். “மந்திரி மன்மோகனாரே… ரெம்பவும் கேவலப்படுத்தாதீர். ஒரு காட்டுக்கோழி யைக்கூடவா என்னால் வேட்டையாட முடியாது..? ரணகாயத்திற்கு கோழிக்குழம்பு சாலச் சிறந்தது என்பதை அறியாதவரா..!”

“ஒரு கோழியல்ல மன்னா.. ஒன்பதாயிரம் கோழிகளைப் பிடித்து வரச் சொல்லுகிறேன் அரசே.. பிடிவாதம் வேண்டாம்…!” – என எத்தனையோ சமாளித்தும் மன்னர் வேட்டையில்
குறியாய் இருந்தார்.

இறுதியாக, ஒருகுறிப்பிட்ட இடத்தில் நாலைந்து கோழிகளை இறக்கைகள் கட்டப்பட்டு, நிறுத்தி வைத்திருக்க சில காட்டுவாசிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார் மந்திரி –மன்னர் அறியாவண்ணம்.

துரதிருஷ்டவசமாய் வேட்டைக்கு அரசர் முன்காலெடுத்து நடந்தார். அவரை திசைதிருப்ப முடியவில்லை. துஷ்டமிருகங்களின் பெருமூச்சுகூட எட்டாதபடிக்கு வேட்டைப் பயணம் வெகுஜோராய் நடந்தது.

அரசருக்கே ஆச்சரியம்; காடு, நாட்டைக் காட்டிலும் பயமற்று கிடக்கிறதே என்று. அவருக்குத் தெரியாது; மிருகஜாதிகள் அத்தனையும் வித்தைகாட்டிப் பிழைப்போருக்கு ராஜ்ய பேதமில்லாமல் மந்திரி ’மார்க்கெட்’ செய்து விட்டாரென்பது.

”ஒருமந்திகூட கண்ணில்படவில்லையே மந்திரியாரே..” என்று அலுப்பும், பயமற்ற மகிழ்ச்சி யுமாய் கேட்ட மன்னரைக் குஷிப்படுத்த, வழக்கம்போல புளுகுமூட்டையை அவிழ்த்து விடலா னார் மந்திரியார், “மேன்மைதாங்கிய அரசர் பெருமான் வேட்டைக்கு வருவது கண்டு, அண்ட ரண்டப் பிராணிகளிலிருந்து, சாதாரண அட்டைப் பூச்சிவரை அரண்டு மிரண்டு ஓடிவிட்டன மன்னவா…!” என புளகாங்கிதம் பொங்கச் சொன்னார்.

நம்பமுடியாத சேதியில் வாய்பிளந்த அரசர், தனது நாட்டின் எல்லை முடிவுற்றதை அறியவில்லை
இடையில் குறுக்கிட்ட ஓடையின் கரையில் நின்று நாலாபுறமும் பார்வையை ஓட்டினார். ஓடையின் மறுகரையில் ஒரு பெருத்த வாகைமரத்தினடியில் புலி ஒன்று புல் மேயக் கண்டார். உடம்பில் சிலிர்ப்பு.

“என்ன மந்திரியாரே… புலி எங்காவது புல் மேயக் கண்டீரா..? இது மெய்யா பொய்யா, கனவா நனவா..?” – மந்திரியாருக்கும் விளங்கவில்லை. புலி எப்படி புல்லைத்தின்னும்..? ஆனால் தின்னுகிறதே..! சட்டென அவரது மதியூகம் பட்டென வெளிப்பட்டது. “இதிலென்ன விந்தை மன்னவா..! அரசபெருமான் கானகத்தில் தங்கியிருக்கும் காலத்தில், மிருகராசிகள் பயந்து ஓடிவிட்டன அல்லவா, இரையேதும் கிட்டாத அந்த ஒற்றைப்புலி, பசிதாளாது புல்லைத் தின்னப் புறப்பட்டுவிட்டது. இது போன்ற அதிசயங்கள் சூ கூ அரசாங்கத்தில் தானே நடக்கும்…?” என்று வியந்தோத,

அரசருக்கு சட்டென வீரம் பொங்கிவிட்டது. “ஓ..அப்படியா..ஒற்றைப்புலி என்பது இதுதானா எமது நாட்டு மக்களின் கால்நடைகளைக் கவர்ந்த கயவாளிப் புலியே..உன்னை..” என ஆவேசம் மேலிட வில்லெடுத்து நாணை ஏற்றினார்.இடையில் ஓடை இருப்பதால் ஆபத்து அதிகமில்லை என்பது ஐயுற நுட்பமான கணக்குப் போட்டார்,ஒரு சின்ன இடைவெளியில். இப்படியான சின்ன சின்ன அபூர்வமான யோசனைகள் – யுக்திகள் அவருக்கே தெரியாமல் முளைவிடுவதுண்டு.

அதிர்ஷ்டவசமாய் குறிதப்பி புலியின் கழுத்தில் குத்தி நின்றது அம்பு.

காடே அதிர புலி, “மா” என அலறியபடி வாகை மரத்தைச் சுற்றிக் கொண்டு ஓடியது புலி.

அரசருக்கு மேலும் ஆச்சர்யம். புலி எப்போதாவது ‘மா’ எனக் கத்துமா..? மந்திரியாரை நோக்கிட,

“மன்னா…. மாமிசப் பட்சினியான புலி எப்போது தாவரப் ப்ட்சினியாக மாறியதோ அந்தக் கணமே அதன் குரலும் மாறிவிடுமே மன்னா… தாங்கள் அறியாததா..?”

மேலும் அவரை பேசவிடாமல், “சரி அரசே. நாம் புறப்படுவோம். சேவகர்களை அனுப்பி அடிபட்ட புலியை தூக்கிவரச் செய்யலாம். புலியோடு சென்று புவியதிர விழா செய்திட வேண்டும் மன்னா..” – பரபரத்தார். வாழ்க்கையில் பேறுகிடைத்த கணத்தை காலம் முழுதும் கொண்டாடிட வாய்ப்பாக்கினார் மந்திரி. தொடர்ந்த அவரது பேச்சுதான் மன்னருக்கு வேம்பாய்க் கசந்தது. “மன்னா தாங்கள் வேட்டையாடியது அம்மச்சியாபுரத்து எல்லைப் பகுதி. ஆனால் அந்த மிருகம் நமக்குச் சொந்தமானதாக இருந்தாலும் கூட வழிதவறி அவர்களது நாட்டிற்குள் சென்றுள்ளது. இந்த நிலையில் சேவகர்களை அனுப்புவது பிரச்சனைதான். பொறுத்திருந்து பார்ப்போம்; அம்பில் நமது இலச்சினை உள்ளது, நிச்சயம் அம்மச்சியாபுர மன்னரது பார்வைக்குப் போகும். அவரே தங்களது பராக்கிரமம் தெரிந்து அவர்களாக புலியை அனுப்பிட வாய்ப்புண்டு. மூன்று நாட்கள் அவகாசத்தில் நாமே நேரில் சென்று பைசல் செய்திடலாம், என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம், வாழ்வில் கிட்டிடாத பேறு; கிட்டியும் எட்டிப் போய்விட்ட வருத்தம் என்னுள்ளத்திலும் ஆழமாய் வேர்கொண்டுள்ளது அரசே…..!” – மந்திரி யாரின் நீண்ட பிரசங்கம் மன்னரை மௌனியாக்கியது.

மூன்று நட்களுக்குப் பிறகு நான்காம் நாள் இதோ, சூ கூ மன்னர் அம்மச்சியாபுரம் வந்து விட்டார்.

அல்லியூர் அரசரின் வருகையினை ஒற்றர்கள் வழியாக அறிந்தது அம்மச்சியாபுரத்து அரண்மனை. அப்போதுதான் அரசவைக்கு வந்த மன்னர் அமரசிகாமணி, மதிய உணவுக்கான பட்டியல் சம்பந்தமாக தலமை சமையலரிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அரச அலுவல் பார்த்து நாளாகிவிட்டதென அமைச்சர் அனத்திக் கொண்டிருந்தார். போனால் போகிறதென இன்றைக்கு தன் நேரத்தை கொடுத்திருந்த வேளை, அல்லியூர் அரசரின் திடீர் விஜயம்.

காரணம் என்னவாயிருக்கும்…?

“இடுப்பைச் சுற்றி குத்தீட்டிகளுடனும், மந்திரிப் பிரதானியும் மற்றும் நான்கு வீரர்களுடனும் எந்த முன்னறிவுப்புமின்றி வந்திருக்கிறாராம்.”

”நிலுவைபாக்கி ஏதுமிருக்கிறதா…? அல்லது கடன்கிடன் கேட்டு வந்திருக்கிறாரா.?அல்லது அந்தப்புரத்து அழகிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் பேசவோ.. அதுவுமில்லையெனில் பொழுது போகாது விருந்தாடியாய் வருகிறாரா….! ஒன்றும் விளங்கவில்லை. எப்படியிருந்தாலும், அண்டை தேசத்து அரசன், ஆரவாரமான விருந்தளிக்க வேண்டியது கடமை. ஆகவே, மந்திரியாரே.. கோட்டை வாசல் சென்று, மன்னவரை வரவேற்று, நமது விருந்தினர் மாளிகையில் அமர்த்தி வையுங்கள். நான் வருவதாய் தகவல் சொல்லுங்கள்.”

”அலுவல்.. ? “

”இதும் அலுவல் தானே அமைச்சரே..! நமது அண்டை தேசத்தாரை வைத்துக் கொண்டு நாட்டின் உள்விவகாரங்கள் பேசுதல் சரியாகுமோ..?”

”ச்… தங்கள் சித்தம் மன்னா..!”

கோட்டை வாசலில் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தாமல், நுழைவுவரி அதுஇதுஎன துன்பம் செய்திடாமல், காவலர்கள் அனைவரும் பணிந்து வணங்கி சூகூ மன்னரை,அரண்மணை வாயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

வாசலில் பூரணகும்ப மரியாதையுடன், அந்தணர்கள் வேதம்முழங்கிட, அம்மச்சியாபுரத்து அமைச்சர், நேரில் வந்து வரவேற்றார்.

அல்லியூர் அரசருக்கு வழக்கம் போல குழப்பம் மேலிட்டது. கோட்டை வாசலிலேயே பெரிதாய் ஒரு சண்டையினைச் சந்திக்க நேரிடும் என எண்ணி உள்ளம் பதைக்க புரவிமேல் காற்றடைத்த பலூனைப்போல சுருண்டு அமர்ந்திருந்தார்.

எத்தனை படைபலத்தோடு வந்தாலும், சிப்பாய்களை மட்டும் ஏவிவிட்டு மோதலை கண்காணிப்பதும், அவர்களுக்கு வீரம் ஊட்டும் விதமாய் வரகவிகளை வைத்துப் பாடல் பல பாடச்செய்வதும் அவ்வப்போது உற்சாகபானங்கள் கொடுத்து உரமாய் போரிடச் செய்வதும், சூழ்நிலையினை மனதில் கொண்டு வெண்கொடி ஏந்தி வீரர்களை மீட்பதுமான ராஜதந்திர வித்தைகளை கையாண்டு, பல செருகளங்களில் மீண்டுவந்துள்ளார்.

இன்றைக்குத்தான் இந்த மட்டி மந்திரியின் விபரீத புத்தியின் காரணமாய் நேரடியாய் வாளெடுக்க வேண்டிவரும் போலிருக்கிறது. அடிக்கடி கை இடுப்பைத் தடவிக்கொண்டது. ஆனாலும் அறிவு, அவசரப்பட வேண்டாம் என அமைதிப்படுத்தியது.

அரண்மணைக்குள் நுழைந்ததும் அரசர், மந்திரியார், சேவகர்கள் என்று தனித்தனியே அவரவருக்கான மரியாதைகளுடன் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உரிய கவனத்தோடு உபசாரம் நடந்தது.

அரசர் சூ கூ ஆடைகள் களையப்பட்டு அம்மச்சியாபுரத்து அந்தப்புர அழகிகளால் வாசனை திரவிய – தைல நீராட்டல். உடனேயே பாதி உறக்கச்சடவில் அறுசுவை விருந்து. இப்படி தடபுடலாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் அதே போதில், மந்திரிப் பிரதானியார் மனமோகனார், அரசவையின் அலுவல் குழுவில் தாம் வந்ததன் நோக்கத்தினை தமக்கே உரிய பாணியில் எடுத்துரைத்து விளக்கிக் கொண்டிருந்தார்.

“என்ன ஒற்றைப் புலியினை உமது அரசர்தான் அம்பெய்து கொன்றாரா…?” – அம்மச்சியாபுர மந்திரியார் அதிர்ச்சியுடன் கேட்க,

”அதுமட்டுமல்ல அமைச்சரே, இன்னொரு அதிசயமும் கேளீர்” என்று, அம்புபாய்ந்த புலி ‘மா’ எனக் கத்தியதையும் சேர்த்தே சொன்னார்.

”ம்..மா.. என்றல்லவா அலறியிருக்கும்..!” _ என்று திருத்திச் சொன்ன மறுநிமிடம் அம்மச்சி யாபுரத்து அவையின் செயல்பாடுகளில் சட்டென மாறுதல் நிகழ்ந்தன.

உணவுக் கூடத்திலிருந்த அல்லியூர் அரசர் சூ கூ உடனடியாய் பாதாளச் சிறைக்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அம்மச்சியாபுரத்து அரசர், அங்கேயே வந்து அவர்மீதான குற்றப் பத்திரிககை யினை வாசித்தார்.

”அதிதியாய் வந்த அல்லியூர் அரசப் பெருமகனாரே, தங்களை தனீக் காராக்கிரஹத்தில் அமர்த்தியமைக்காக அம்மச்சியாபுரத்துமக்களின் சார்பாக ஆழ்ந்த வருந்தத்தினை முதலில் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

காரணம் -1 ஒற்றைப்புலி என நினைத்து எங்களது அரண்மணை கோமாதாவை தாங்க்ள் அம்பெய்து கொன்றுள்ளீர்.

காரணம் -2 கள்ளர் வினை காரணமாய் எங்களது கோமாதாவின் மேல் போர்த்தியிருந்த புலித்தோலை நாசப்படுத்தியுள்ளீர்.

காரணம் -3 எல்லை மீறல் சர்வதேச குற்றம். அதனை அல்லியூர்க் காவலராகிய தாங்களே மேற்கொண்டது.

குற்றப்பத்திரிக்கையின் நீளம் நீண்டுகொண்டே செல்லச்செல்ல அல்லியூர் அரசரின் உடம்பிலுல்ல நீர்ச்சுரப்பிகள் அத்தனையும் ஒரே நேரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தன. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் ஒரே நீரொழுக்கல்.

சிறைக்கூடத்திலிருந்து வந்த வினோதமான ஒலி கேட்டு, பாதாளச் சிறையின் காவலன், தன் மகாரஜாவிடம் ஓடோடிவந்து மண்டியிட்டு, “மன்னவரின் மலர்ப் பாததிற்கு ஒரு சிறு விண்ணப்பம்..” என முறையிட்டான்.

”அரச கட்டளை – தீர்ப்பாக வெளியாகிக் கொண்டிருக்கிற வேளையில் இடைமறிப்பது குற்றவாளியைத் தப்புவிப்பதற் கொப்பாகும். ஆகவே நீயும் தண்டணைக்கு உரியவனாகிறாய். அறிவாயா சேவகனே..!” – விழி சிவக்கக் கூறினார் அரசர்.

”அறிவேன் அரசபெருமானே.., அவசரமாய் ஒரு தகவல். தாங்கள் குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் துவங்கிய நொடிப் பொழுதிலிருந்து அல்லியூர் அரசரவர்கள் அழத்துவங்கி விட்டார். இதுவரை முடிக்கவில்லை.” – என்றான்.

“என்ன அர்சர் அழுகிறாரா..!” – பக்கத்திலிருந்த ஆள் அம்பு, சேனை, படை, பட்டாளங்கள் எல்லாமும் வியப்பில் ஆழ்ந்தன.

“அய்யோ… அல்லியூர் ராசா அழுகிணி ராசாவா..?. அழுகிணிராசா…!”

இப்படித்தான் சூ கூ சுகுமாறரின் திருநாமாம் திவ்யமாய் திக்கெட்டும் பல்கிப் பரவலாயின..

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’எங்கே இறைமை ?
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *