எப்படி இருக்கும்?

This entry is part 28 of 29 in the series 25 டிசம்பர் 2011

அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை. கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது.

இந்த விழாவில் இன்னொரு சிறப்பு. அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார். அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார்.

நடிகை மேடைக்கு வந்ததும் ஜனங்களின் கண்களெல்லாம் அவளை மொய்க்க ஆரம்பித்தன. ஆனால், அவளுடைய கண்களோ மேடையில் இருந்த ஷா அவர்களின்மேல் நிலைபெற்று நின்றுவிட்டன.

அமைதியான உருவம்! பரட்டைத் தலை! ஒழுங்கற்ற தாடி! முகமெல்லாம் வயோதிகத்தின் ரேகைகள்! இல்லை.. இல்லை.. அறிவு முதிர்ச்சியின் அடையாளங்கள்! அவரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இன்று தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.

நடிகையைப்பற்றி இப்போது சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளது அழகிய கவர்ச்சிப் படங்களைப் போடாத செய்தித்தாள்களே இல்லை. கருப்பு வெள்ளைப் படத்திலேயே அவள் உருவம் அதியற்புதமாக இருக்கும். வண்ணப்படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

கழுத்தை ஒட்டினாற் போல் ‘பாப்’ செய்து விடப்பட்ட இயற்கையான கிரே கலர் கூந்தல்! பளப்பளப்பான சிறிய நெற்றி! கூர்மையான புருவங்கள்! நீலநிறம் பாய்ந்த பூனைக் கண்கள்! அளவான – ஆனால் அழகான மூக்கு! ரம்மியமான ரோஸ் கன்னங்கள்! இரத்தச் சிவப்பில் மென்பஞ்சு அதரங்கள்! லில்லிப் பற்கள்! சங்குக் கழுத்து! தெங்கின் கவர்ச்சி! வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல்கள்! கைப்பிடியில் அடங்கும் “மெய்யோ” எனும் இடை! ஐந்தரை அடி உயரத்திற்கு அழகுருவம் கொடுக்கும் வாழைத்தண்டுக் கால்கள்! வளர்த்துவானேன்! அகில உலகிலுமுள்ள இளைஞர் பட்டாளமே இவளுக்கு விசிறிகள்!

இந்த நடிகையைக் பேட்டி காணும்போது நிருபர்கள் தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள்.

“எப்போது திருமணம்?” – இது தான் அந்தக் கேள்வி.

உடனே அவள் தன் உதவியாளரிடம் ஒரு கடிதக் கத்தையைக் கொண்டு வந்து போடச் சொல்லுவாள்.

“பார்த்தீர்களா! இவையெல்லாம் இன்று எனக்கு வந்த கடிதங்கள்! ஆயிரத்துக்குத் மேலிருக்கும்! எல்லாரும் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்! நான் யாரைச் செய்து கொள்ளுவது?” என்று ஓர் எதிர்க் கேள்வி போடுவாள்.

“யாரைத் திருமணம் செய்வது?” என்ற பிரச்சினை அப்புறம் இருக்கட்டும். உங்களுக்காக எத்தனையோ குபேரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! ‘எப்போது திருமணம்?’ என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!” என்று நிருபர்கள் மடக்குவார்கள்.

“எப்போது? யாரை?” என்ற இரண்டையும் ஒன்றாக்குங்கள்! என் எண்ணம்போல் எப்போது மாப்பிள்ளை கிடைக்கிறாரோ, அப்போதே திருமணந்தான்! ‘எண்ணம் போல் என்றால் என்ன?’ என்று என்னை விளக்கம் கேட்காதீர்கள்! அது பரம ரகசியம்!” என்று மடங்காமல் பதில் சொல்லுவாள் அவள்.

மேலும் துளைக்க முடியாத நிருபர்கள், “உங்களைத் திருமணம் செய்து கொள்ளுகிறவர் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க வேண்டும்” என்பார்கள்.

உடனே அவள், “அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்!” என்பாள். இதைக் கேட்ட நிருபர்கள், “பார்த்தீர்களா! உங்களை அறியாமலே உங்கள் எண்ணத்தைச் சொல்லிவிட்டீர்கள்! நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்!” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

இப்படிப் பேட்டிகளில் உருவகமான அத்தகைய அறிவாளியைத் தான் அன்று அந்த நடிகை மேடையில் சந்தித்துக் கொண்டாள். ஷா அவர்களை அவள் தலைமை உரையையும் மிகக் கவனத்தோடு கேட்டு வெகுவாக ரசித்தாள்.

ஷா அவர்கள் பேசும் போது, “ஒரு படத்தின் வெற்றி பல அம்சங்களைப் பொறுத்திருக்கிறது. கதாசிரியன் எந்த நோக்குடன் பாத்திரங்களைப் படைக்கிறானோ – அந்நோக்கு நிறைவு செய்யப்பட வேண்டும்” என்பது அதில் முக்கியமான அம்சமாகும். “வாய் பேசுவதைவிட கதாநாயகியின் வனப்பான உடல் தான் அதிகம் பேச வேண்டும்” என்று இக்கதையின் நாயகியைக் கற்பனை செய்தேன். அதை இந்தக் கதாநாயகி சிறப்புற நிறைவேற்றி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல. இதோ – இங்கே அமர்ந்திருக்கும் அவர் வாய் பேசாமலே வனப்புமிக்க உடலால் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்!” என்றதுமே கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதன்பின் அவள் எழுந்து நின்றாள். அவ்வளவுதான் கையொலி கொட்டகையைப் பிளந்தது. ஷா அவர்கள் பேசிய பின்புதான் கை தட்டினார்கள். ஆனால் அவள் .. எழுந்து நின்றதுமே கை தட்டுகிறார்கள். ஷா அவர்கள் சொன்னது உண்மைதான். அவள் அழகுருவம் பேசிவிட்டது.

பிரகாசமான புன்னகை ஒன்றை வீசிய அவள் ‘நன்றி’ என்ற அளவோடு பேச்சை முடித்துக் கொண்டாள். மறுபடியும் ரசிகர்கள் கைதட்டல்.

பிறகு பட அதிபர் நன்றி கூற ஆரம்பித்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஷா அவர்களிடம் நடிகை பேச்சுக் கொடுத்தாள்.

“நான் உங்களைக் காதலிக்கிறேன்!” என்றாள் அவள்.

“அப்படியா?” என்றார் அவர்.

“ஆமாம்! ஓர் அறிவாளியைக் கணவராக அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!” – இது அவள்.

“எப்படி உனக்கு அந்த விருப்பம் வந்தது?” – இது அவர்.

“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்?” – அவள் குழைந்தாள்.

“அற்புதமாகத் தான் இருக்கும்! ஆனால் உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் சேர்ந்து குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதைக் கேட்ட நடிகை ‘களுக்’ என்று சிரித்து விட்டாள்!

Series Navigationஅரங்காடல்சூபி கவிதை மொழி
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *