கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம்.
திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னைக் விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………
வெ.சா: கடவுள் ஒண்ணும் எனக்கு Extraordinary intellectual brilliance-ஓ sharp artistic sensibility-ஓ கொடுத்துவிடலை. சாதாரணமாக எனக்குப் புரிகிற விஷயங்களை, எல்லாருக்கும் புரியக்கூடிய விஷயங்களைத் தான் சொல்லி வந்திருக்கிறேன். நான் நம்புகிறேன். ஆனால் மற்றவங்க அதைச் சொல்றதில்லை.. சொல்லலைன்னா அதுக்கு காரணம், கட்சிக் கட்டுப்பாடு, ஜாதிப் பார்வை, கொள்கை, இன்னும் ஏதும் ஆசைகள். அவங்க வளர்ந்த விதம், இப்படித் தான் பார்க்கணும், இப்படித்தான் சொல்லணும்னு அப்படி ஒரு தீர்மானம் அவங்களுக்கு. , எவ்வளவு பேசினாலும், ”மக்களுக்குப் புரியாததை எதுக்குய்யா எழுதணும்,” என்கிற மாதிரியான சில கோஷ வார்த்தைகள் தயாராக அவங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் இருக்கும். , இனிமே இதுக்கு ஒரு பதிலுமே இல்லை, இருக்கமுடியாது என்கிற மாதிரி. ஆனால் அப்படி இல்லை.
திலீப்: என்னை விமரிசகனா பாக்காதீங்கன்னு சொல்றீங்க
வெ.சா. ஆமாம் அது என்னவோ போல இருக்கு.
திலீப்: அப்ப, விமர்சனம் மாதிரி விஷயங்களைப் பற்றி, சாமிநாதன், உங்க கருத்து என்ன? நீங்கள் ஒத்துக்கறேங்களோ இல்லையோ……
சுப்ரமண்யம்: இப்படி அதைப் பார்க்கலாம். எதையும் நான் எப்படி பார்க்கிறேன்.? ஏன் அப்படிப் பார்க்கிறேன். அது மற்றவங்களுக்குப் போய்ச்சேரணும் இந்த வழிலே அதைப் பார்க்கலாமே. சாமிநாதன் சொல்ற போக்கிலேயே சொல்லட்டும்.
வெ.சா: நேத்திக்குப் பேசினவங்கள்ளாம் இவர் ஏதோ பெரிசா பண்ணிருக்காரு. 50 வருஷமா உழைச்சிருக்காரு. எங்களுக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் சொல்லி ஒரு புதிய பாதையை அமைத்திருக்காருண்ணு எல்லாம் சொன்னாங்க. ஆனா இதை யாருமே செய்திருக்கக் கூடும் என்ற நினைப்புதான் எனக்கு. அப்போது பட்டது. இந்த புத்தகத்தைப் ( வாதங்களும் விவாதங்களும்) படிச்சப்போ சிலர் சில தவறான அபிப்ராயங்களையும் சொல்லியிருக்காங்கண்ணு தெரியறது. அதைப் பின்னாலே பார்க்கலாம். நான் எழுதியிருப்பது யாருமே செய்திருக்கக் கூடிய விஷயங்கள் தான். எனக்கு சில விஷயங்களில் புதுசாக exposure கிடைச்சிருக்கு. எனக்குக் கிடைத்த exposure,-, இதை தமிழில் எப்படிச் சொல்றதுன்னு தெரியலை, என்னோடு இருந்த, இருக்கும் மற்றவர்களுக்கும் கிடைச்சதுதான். இருந்தாலும் அவர்கள், தங்களைச் சுற்றி தமக்கு பழக்கமான ஒரு உலகத்தை அது குடியாத்தமோ இல்லை, பாளையங் கோட்டையோ உருவாக்கிக்கொண்டு அந்த cocoon-க்கு ள்ளேயே இதமா இருந்த ஜனங்களும் இருக்காங்க.
ஆனால் எனக்கு புதிதாக என் எதிரில் ஒன்று பட்டதென்றால், ஒரு வியப்பு, ஒரு ஆச்சரியம். இந்த வியப்பு யாருக்குமே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒன்று தான். உடனே நான் அதன் பின்னாலே போறேன். நான் அதைத் தேடிப் பெறவில்லை. அது என் முன்னாலே வந்து நின்றது. முன்னால் வந்து நின்றதில் எனக்கு ஒரு கவர்ச்சி, ஒரு ஈடுபாடும் அக்கறையும் ஏற்பட்டது. அது புதிதாக இருந்தது. இதைப் பத்தி தெரியணும், இந்த அனுபவம் எனக்குத் திரும்பத் திரும்பக் கிட்டணும் என்று நான் அதன் பின்னால் போகிறேன்.
இதைத் தேடல் என்று சொல்வது தவறு. என்னமோ தெரியலை. இதுக்கு என்ன வார்த்தை சொல்றது? என்னுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு கட்டத்திலும் இப்படி ஏதோ ஒன்று எதிர்ப்படறது. நான் அதைத் தேடிப் போகலை. நான் அதன் பின்னால் போகிறேன். அப்பவும் அந்த பாதையில் நேராகத் தான் போகிறேன் என்றில்லை. அந்த வழியில் திடீரென்று வேறொன்று எதிர்ப்படும். உடனே அதுவும் என்னை இழுத்துக்கொண்டு போகிறது. இப்படித் தான் நான் ஈடுபாடு கொண்டதெல்லாம் நேர்ந்திருக்கிறது.
எழுதத் தொடங்கினது பற்றிச் சொன்னேன். எழுதவேண்டும் என்ற ஆசையால் எழுதினவன் இல்லை. ஏதோ ஒரு பெரிய விமர்சகனாக வரணும்னு ஆசைப்பட்டு திட்டம் போட்டு செய்ய. செல்லப்பா சுதேசமித்திரன் இதழில் கிட்டத்தட்ட 40 – 50 பக்கம் நாலு வாரம் தொடர்ந்து எழுதினார். அதற்கு மேல் எழுத பத்திரிகைக் காரங்க இடம் கொடுக்கலை. உடனே அவருக்கு நாமே ஏன் ஒரு பத்திரிகை தொடங்கக் கூடாது என்று எழுத்து பத்திரிகை ஆரம்பித்தார் செல்லப்பா. இதெல்லாம் எனக்கு பின்னால் தெரிந்த விஷயங்கள். தற்செயலாக ஒரு நாள் தில்லியிலே ஒரு வாசக சாலையில் எழுத்து கிடந்தது. பார்த்தேன். அது ஒரு கார் ஷெட். யாராவது நினைச்சுப் பார்த்திருப்பாங்களா? ஒரு வாசக சாலையிலே ஆனந்த விகடன், இருக்கும் கல்கி இருக்கும். குமுதம் இருக்கும். ஆனால் எழுத்து? அந்த கார்ஷெட் வாசக சாலை இருந்த வீட்டுச் சொந்தக் காரருக்கு செல்லப்பா வத்தலக் குண்டு கால நண்பர். நண்பராச்சேன்னு செல்லப்பா அவருக்கும் ஒரு எழுத்து இதழை அனுப்பியிருக்கார். தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கல்யாணப் பத்திரிகை ஒண்ணு அனுப்பறதில்லையா? அந்த மாதிரி. இல்லாட்டா அவருக்கும் எழுத்து பத்திரிகைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. அவரும் இதுவும் ஒரு பத்திரிகைன்னு கல்கி, குமுதத்தோடு இதையும் சேத்துப் போட்டிருக்கார். அது என் கண்ணிலே பட்டது. அது எனக்குப் பிடிச்சது. நான் அதன் பின்னாலே போறேன். உடனே எழுத்துக்கு நான் சந்தா அனுப்பினேன். . அடுத்த மாதமோ என்னவோ நான் ஜம்முவுக்கு மாற்றலாகிப் போனேன். ஜம்முலே இருக்கறபோது எழுத்திலே வந்த ஒரு கதை எனக்குப் பிடிக்கலை. ரொம்ப சாதாரணஃ விஷயம். சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது போல பட்டது. நான் செல்லப்பாவுக்கு எழுதினேன். ஏன் இதையெல்லாம் போடறீங்க. ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்னு சுதேசமித்திரனில். 40 பக்கம் எழுதினவர் தன் ;பத்திரிகையில் இப்படி ஒரு கதையைப் போடறதான்னு எனக்கு எரிச்சல். செல்லப்பா அந்த கடிதத்தை பிரசுரம் செய்து என்னையும் எழுதச் சொன்னார். இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில். நான் என்ன அவரைக் கண்டித்து எழுதினால் என்னை எழுதச் சொல்வார் என்றா திட்டமிட்டு எழுதினேன்? எனக்கு எரிச்சல். அந்த எரிச்சலைச் சொன்னேன். அவர் பக்கத்திலே இருந்திருந்தால் பேசியிருக்கலாம். இல்லை. அதனால் எழுதினேன். “என்னய்யா படம். நல்லாவே இல்லய்யா? என்று படம் பார்த்து திரும்பும் போது கூட இருக்கறவர் கிட்டே சொல்றதில்லையா? அப்படியே இன்னும் சில விஷயங்கள். பின்னால் தொடர்ந்து நடந்தது. சிதம்பர ரகுநான் ஒரு சமயம் உளறிக் கொட்டியிருந்தார் மனுஷன். எனக்கு எரிச்சல். செல்லப்பாவுக்கு எழுதினே.ன். அதையும் அவர் போட்டார். சிதம்பர ரகுநாதனுக்கு படு கடுப்பு,. செல்லப்பாவைக் கேட்டாராம். “இதிலே என்ன இருக்குன்னு போட்டிங்க”ன்னு. “சரி இதுவும் வரட்டும்னு தான் போட்டேன்”னு சொன்னாராம். செல்லப்பா. மறுபடியும் அவருக்கு கடுப்பு. செல்லப்பா எனக்குச் சொன்னார்.. சரி, எரிச்சல் படற விஷயமானாலும் நமக்கு இங்கே வரவேற்பு இருக்குன்னு தெரிஞ்சது.
திலீப்: சாமிநாதன் தன் முதல் புத்தகத்தை (பாலையும் வாழையும்) சிதம்பர ரகுநாதனுக்குத் தான் dedicate பண்ணியிருக்கிறார்.
வெ.சா: ரகுநாதனோட சாந்தி பத்திரிகையில் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது, என் மனசிலே இருக்கிறதை யெல்லாம் இந்த ஆள் எழுதுகிறாரே, இதையெல்லாம் வெளிலே தைரியமா சொல்லலாம் போல இருக்கிறதே என்று என்னை எண்ண வைத்த முதல் ஆள் அவர். அதை நான் சொல்லித் தான் ஆக வேண்டும். அது 1950 களின் ஆரம்பத்தில் பின்னால் தான் அவர் கெட்டுப் போனது. கெட்டுப் போனால் அதையும் உடனே சொல்ல வேண்டியது தானே. காரசாரமாக கிண்டல் பன்ணி எழுதினேன். செல்லப்பாவும் அதையும் போட்டுட்டார். அதுக்காக நான் க்ரிட்டிக் ஆயிட்டேன்னு அர்த்தமா?
திலீப்: நவீன தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் உங்களுடைய role –ஐ எப்படி பார்க்கிறீங்க? க்ரிட்டிக் இல்லேன்னு சொல்றீங்க. இவ்வளவு பண்ணிட்டீங்க. நீங்க க்ரிட்டிக் ஆயிட்டிங்க சாமிநாதன். There is no going back now.
வெ.சா. There is no going back -னா I don’t disown anything ஆனால் லேபில் ஒண்ணும் ஒட்டாதீங்க.
திலீப்: நான் இப்ப சொல்றேன். நாம 3000 வருஷம் பாரம்பரியம் உள்ள ஒரு மொழிலே எழுதிட்டு இருக்கோம். அதிலே நாம் இப்போ எந்த நிலையிலே இருக்கோம்னு ஒரு சின்ன sense கிடைச்சா சுவாரஸ்யமாக இருக்குமேன்னு அந்த அர்த்தத்திலே கேக்கறேன்.. க.நா.சு. இருகார் செல்லப்பா இருக்கார் அதுக்கு அப்புறம் நீங்க….
வெ.சா. க.நா.சு. தன்னை க்ரிட்டிக்குன்னு சொல்லவே இல்லையே இதையெல்லாம் பேசவேண்டியிருக்கு. வேறு யாரும் பேசலையே. ஆகையினாலே நான் பேசறேன் அப்படீன்னுதானே அவர் சொன்னார்.
திலீப்: அதுக்குத் தான் மெனக்கெட்டிருக்கீங்களே. எல்லாத்தையும் படிச்சு…
வெ.சா. சொல்ல வேண்டியது இருக்கு. விஷயம் இருந்தது. நான் பேசணும்னு இருந்தது எனக்கு ஒருத்தர் இடம் கொடுக்கறாரே, சரிதான்னு நினைச்சேன். இப்ப சுப்பிரமணியம் இங்க எனக்கு இடம் கொடுக்கலேன்னா நான் இங்கே வந்து உடகார்ந்து கொண்டிருப்பேனா. எனக்கு இடம் கொடுங்கய்யான்னு நான் கேட்கலே, இல்லையா? அவர் வந்து சொல்றார் எழுதுங்கன்னு. நான் யார் வீட்டுக் கதவையாவது தட்டினேனா? எனக்கு நேர்ந்தது அப்படி.. நேர்ந்தது என்றால், சொல்றதுக்கு இடம் கொடுக்கறார்யா, பின் ஏன் சொல்லக்கூடாது.? இல்லையா? சொல்றதுக்கு விஷய
ம் இருக்கு. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை. நீங்கள் இடம் கொடுக்கலைன்னா, பக்கத்திலே இருக்கிற நம் நண்பர்களோடு பேசிக்கொள்றோம். பேசறதுக்கு பதிலா எனக்கு ஒரு மேடை கொடுக்கறீங்க. அவ்வளவு தானே.
ஒருத்தர் என்னைக் கேட்டார். நான் திரும்பத் திரும்ப சொன்னேன். அது அவருக்கு புரியவே மாட்டேன்கிறது. “அதைப் பத்தி ஏன் எழுதலை, இதைப் பத்தி ஏன் எழுதலேன்னு. நான் ஏன் எழுதணும்? நான் அதைப் பாக்கலைய்யா. அது ஒரு காரணம். நான் பார்த்ததா நீங்களா நினைச்சுக்கறீங்க. நான் பார்த்திருந்தாலும் நான் ஏன் அதைப் பத்தி எழுதி்ய்ய்யே ஆகணும்? ஆயிரம் புஸ்தகம் இருக்கு. நீ ஏன் அதைப் படிக்கலே? ஏன அதைப் பத்தி எழுதலேன்னெல்லாம் என்னைக் கேட்க முடியாது. நான் என்ன S.H.O வா? எங்கே என்ன கொலை, குத்து நடந்ததுன்னு F.I.R எழுதியாகணும் பின்னே போய் புலன் விசாரணை செஞ்சாகணும்னு. என்னை யாராவது இந்த வேலைக்கு நியமனம் பண்ணியிருக்காங்களா? “இல்லைங்க, ‘இல்லைங்க”ன்னு சொல்லிட்டே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றார் அவர். It was a horror. அந்த பயங்கரத்தை என்னால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? “நீ ஏன் அந்த நாடகத்தைப் பத்தி எழுதலை”ன்னு திரும்பத் திரும்ப கேக்கறார். ஒன்று, நான் அந்த நாடகத்தைப் பார்க்கவில்லை.. பார்த்ததாக நினைத்துக்கொண்டது உங்க தப்பு. நான் அதைப் பார்த்திருந்தாலும் கூட அதைப் பற்றி எழுதுவதும், எழுதாது இருப்பதும் என் சுதந்திரம். என் உரிமை அதுபற்றி எழுதுவேனா, இல்லை எழுதாமல் இருப்பேனா என்பது. நான் அதை அலட்சியம் பண்ணலாம். அதையும் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. நான் தவிர்த்திருக்க விரும்பியிருக்கலாம். ஆனால் அந்த நாடகத்தின் பொறுப்பாளர் வேண்டுமானால் என்னைக் கேட்கலாம். ஏன்யா எழுதலைன்னு. அப்போ நான் வாயைத் திறக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை.. அடுத்தாற்போல் அதை எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் அதைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டேன். அவரே என்னை எழுதச்சொல்லிக் கேட்டிருந்தால் நான் எழுதியிருப்பேனா? எழுதியிருக்கலாம். எழுதாமல் விட்டிருக்கலாம். நான் என்ன காரணத்தால் எழுதவில்லை என்[பதைச் சொல்லி அதை விட்டிருப்பேன். நான் எழுதாமலே இருக்கலாம். இதில் எல்லா சாத்தியங்களும் இருக்கு. நீங்கள் இப்படித்தான் செயல்படணும், இருக்கணும் என்று என்னை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது .இல்லையா?
ராஜேந்திரன் நிச்சயமாக முடியாது.
வெ.சா. இதெல்லாம் என் சுதந்திரம். நான் எனக்குள் தீர்மானித்துக்
கொண்டுல்ள சுதர்மம். இதெல்லாம் பத்தி பேசணும். ரொம்ப ஆச்சரியமான விஷயம். தில்லி ரவீந்திர பவன் புல்வெளியிலே 1966 லேன்னு நினைக்கிறேன், நடேசத் தம்பிரானும், கண்ணப்ப தம்பிரானும் ஒரு மணி நேரம் ஆடின தெருக்கூத்துப் பார்த்தேன். அதற்கு முன்னாலே நான் தெருக்கூத்து பார்த்ததே கிடையாது. அப்போதான் பார்த்தேன். It was earth shaking. என்ன தியேட்டர் அது! இது மாதிரி ஒண்ணை இதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. அதைப் பத்தி எனக்கு ஒன்றுமே தெரியாது. அந்தப் புல்வெளியிலே எழுப்பின ஒரு சின்ன மேடையிலே இந்த இரண்டு பேரும் மஹாபாரதத்தையே நம் முன்னாலே கொண்டு வந்து காட்டின காரியம். இதைப் பத்தி எழுதணும்னு தோணித்து. தில்லிலே ஏகப்பட்டது நடக்கறது. தக்ஷிண் பாரத நாடக சபான்னு ஒண்ணு கிட்டத் தட்ட 15 வருஷமா நாடகம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனால் ஒரு தடவை கூட நான் போனது கிடையாது. ஒரு தடவை போனபோது ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு. அதைப் பத்தியெல்லாம் எழுதலை. ஆனால் இதைப்பத்தி எழுதணும். இது தியேட்டர்.
மணி மாதவ சாக்கியார் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். இடையில் வேஷ்டி. மேலே ஒரு துண்டு. அவ்வளவு தான். பேசிக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை விளக்க அங்கே உட்கார்ந்த படியே perform பண்ண ஆரம்[பித்து விட்டார். அப்போ அவருடைய முக பாவங்களையும் முத்திரைகளையும் நேத்ராபிநயத்தையும் பார்க்க, கண் முன் தெய்வத்தையே பார்ப்பது போல இருந்தது. வேஷம் இல்லை. வெற்று உடம்போடு அபிநயம் மாத்திரம். தான் அது தியேட்டர். சுமார் 20 பேர் நாங்க இருந்திருப்போம். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரெனெ நடந்தது இது. இப்போ, ‘தெய்வத்தைத் பாத்தியான்னு எவனாவது கேட்டா, கஷ்டம் தான். அது ஒரு moment of trance. கூடியாட்ட அபிநயத்தின் போது. அது தெருக்கூத்தும் போது தான், இல்லை கணியான் ஆட்டத்தின் போது தான் வரும் என்கிறது தப்பு. எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும். எத்தகைய ஈடுபாடு, எத்தகைய ஆழன் என்பதைப் பொறுத்தது அது.
அதைப் பத்திக் கூட நான் எழுதியிருக்கிறேன். ஜானகி ராமன் எழுதற போது சில இடங்களில் பார்க்கலாம். திடீரென் எங்கோ தாவுவார். ஒரு இடத்திலிருந்து, ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவார். It is a quantum jump. அது நிகழும்னு கூட நாம் எதிர்பார்க்கமுடியாது. ஒரு மணிநேரம் நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பத்தி நாம் எழுதுகிறோம். ஒரு சம்பவம், ஒரு பாத்திரம், நம்மையறியாதே ஒரு தாவல் இருக்கும். உண்டா இல்லையா? நாம் நினைத்துப் பார்க்காத, திட்டமிடாத ஒரு விஷயம் இருக்கும். That is art.. அந்த trans. என்பது எல்லா இடங்களிலும் இருக்கும். அது உங்களுடைய அனுபவத்தையும் ஈடுபாட்டையும் பொருத்தது. அதனால், ”இதைப்பத்தி நினைக்கலே, சும்மா கதை படிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருந்தேன்”னு சொல்றான் என்றால் அவனுக்கு ஈடுபாடு இல்லைன்னு அர்த்தம். ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் போகமுடியாதுன்னு அர்த்தம். அவனுக்கு சில விஷயங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஏறல்லைன்னு அர்த்தம். அதற்காக, எனக்கு இதெல்லாம் ஏறணும்னு கடவுள் வரப் பிரசாதம் எனக்கு கிடைச்சிருக்கா என்ன?, ”நீ க்ரிட்டிக்கா அவதாரம் எடுத்து உலகத்துக்கு ஞான ஒளி வீசுன்னு?” கடவுள் என்னை அனுப்பிச்சிருக்காரா என்ன?
நான் ஒழுங்கா தமிழ் படிச்சது கிடையாது. இங்கிலீஷ் ஒழுங்கா தெரியாது. தப்பு நிறைய வரும். எனக்கு சங்கீதம் தெரியாது. நாடகம் தெரியாது. நாட்டியம் தெரியாது. எதையும் நான் முறையா படிச்சது கிடையாது.எதோட இலக்கணமும் தெரியாது
எனக்கு என்னதான் தெரியும்.பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளியா? கணக்கு வழக்கு பார்க்க? என்ன ஸ்வாமி? It is my freedom to talk. Freedom- ன்னு சொன்னவுடனே என்னமோ யாரோ என்னை suppress பண்றாங்கன்னு அர்த்தம் இல்லை. சில விஷயங்களைப் பேசணும்னு தோன்றது. குழந்தையைப் பாத்தா நம் முகம் மலர்றது. நாம் சிரிக்கிறோம். அதைப் பார்த்தா என்னமோ விவரிக்கமுடியாத ஆனந்தம் வருது. அதற்கு ஈடு ஒன்றுமே கிடையாது. அந்த ஆனந்தத்தைப் பத்தி சொல்றோம். குழந்தை சிரித்தால் அதைப் பத்தி என்ன நாம் எழுதணும்னு இருக்கா என்ன? இயல்பான விஷயம். This is how we live. That is also part of living. இப்படித்தான் நாம் வாழ்கிறோம். இதெல்லாம் தான் நம் வாழ்க்கை இல்லையா? குழந்தை சிரித்தால் நம் மனசு குளிர்ந்து போகிறது இல்லையா? சந்தோஷமா இருக்கு இல்லையா? சிரிக்கணும்னு நீங்க ப்ளான் பண்ணி சிரிக்கிறது இல்லையே? அது போலத்தான் எழுத்தும். அது போலத் தான் பேச்சும். நாம் பேசுவது, எழுதுவது, எல்லாமே, அது ஏதோ நமக்கு ஒரு வேலை கொடுத்துட்டாங்க, அந்த கொடுத்த வேலையைச் செய்யறோம்னு அர்த்தமில்லை.”ஏன்யா நீ க்ரிட்டிக், ஏன்யா அதைப் பத்தி எழுதலைன்னா அது அபத்தமா இருக்கு. It is vulgar. Downright vulagar. Vulgar – ன்னு சொல்றயான்னா, vulgar – ஆக படறது, சொல்றேன். எப்படி vulgar. னு சொல்கிறேன்னு எப்படி நான் உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்? But I feel it is vulgar. If you don’t feel it then we are not in the same state of mind., we don’t have the same perception. நான் பாக்கறதை நீ பாக்கலை. நீ பார்க்கவும் முடியாது. ….நான் எங்கேயோ போய்விட்டேன் போலிருக்கே….
திலீப்: சரியாத்தான் போறீங்க. .
ராஜேந்திரன்: நல்லாத்தான் போயிட்டிருக்கு. அழகா போயிட்டிருக்கு.
திலீப்: தமிழ் நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் இருக்கிற ஒரு தொடர்பை, நீங்கள் தெருக்கூத்திலிருந்து நாடகம் inspire ஆகணும்ங்கற சிந்தனையை உருவாக்கின மாதிரி . இலங்கையில் அது மாதிரி, தெருக்கூத்து தான் தமிழர்களுடைய ஆதாரமான தியேட்டர் என்று இலங்கையில் நமக்கு முன்னேயே உணர்ந்தார்களா இல்லை நீங்க வந்து இதைப் பத்தி சொல்ல ஆரம்பித்த பிறகு தானா? அது மாதிரி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வெ.சா அப்படி இல்லை. அங்கே இலங்கையிலே வடமோடி, தென்மொடின்னு எல்லாம் பல வடிவங்கள் இருக்கு. வடமோடி என்றால் வடக்கே புழங்குகிற ஒண்ணு, தென் மோடின்னா, தெற்கே புழங்குகிற ஒண்ணுங்கற அர்த்தம் இல்லே. ஒரு வடிவத்துக்கு பேர் வடமோடி. அது தெற்கேயும் இருக்கலாம். தென்மோடி அது வடக்கேயும் இருக்கலாம். எனக்கு இலங்கை தெரியாது. நான் போனதில்லை. அந்த நாடகங்களை நான் பார்த்ததும் இல்லை. மௌனகுரு முதல்லே அவருடைய புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் படித்து பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் படித்து ஒரு நாடகத்தின் வடிவத்தையும் அது கொடுக்கக் கூடிய அனுபவத்தையும் ரசனையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ விவரங்கள் தெரியலாம். பின்னாலே மௌனகுரு இரண்டு மூன்று (காஸெட்டுகளை) குறுந்தகடுகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார்.
அப்புறம் அவர் இங்கே வீட்டுக்கே வந்திருந்தார். ரொம்ப அருமையாக பழகுகிறவர். அவரே என் முன்னாலே வீட்டிலே ஆடியும் காண்பித்தார். எனக்கு மிகவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அதாவது பாரம்பரிய வடிவம் என்னவோ அதைத் திரும்பச் செய்கிறார். அவர் அந்த வடிவத்தை உயிர்ப்பிக்கிறார் என்பதைத் தவிர அவரது பங்களிப்பு என்று எதுவும் அவர் அதில் சேர்க்கவில்லை என்/று தான் எனக்குப் பட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மனதுக்கு. அதைப் பற்றி நான் எதுவும் எழுத வில்லை. இரண்டு மூன்று தடவைகள் அவர் என்னைச் சென்னையில் சந்தித்து இருக்கிறார். கடிதங்களும் எழுதியிருக்கிறார். காஸெட்ஸ் அனுப்பியிருக்கிறார். நல்ல மனிதர். பண்புள்ள மனிதர். அவரைப் புண்படுத்த எனக்கு மனதில்லை. என்னுடைய உரிமை, சுதந்திரம் இல்லையா? நான் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் ஒன்று. அவர் என்னை எழுதுஎன்றும் சொன்னதில்லை. ஏன் எழுதலைன்னு கேட்டதும் இல்லை. அந்த நண்பரை சந்தோஷப்படுத்தத்தான் நானும் விரும்பியிருப்பேன். ஆனால், நான் என்ன மனதில் நினைக்கிறேனோ அதற்கு எதிராக என்னால் எழுத முடியாது.
ராஜேந்திரன்: எதிராக எழுத வேண்டாம். ஆனால் புண்படுவார் என்று நினைத்துக்கொண்டு எழுதாமல் விட்டது சரியாய் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் அப்படி ஒரு சலுகையா?
வெ.சா. இல்லை. சலுகை ஒன்றுமில்லை. நான் இன்னொரு இடத்தில் கூடச் சொன்னேன். எழுத விரும்பவில்லை. அதற்குக் காரணம், அதை நீங்கள் கேள்வி எழுப்பலாம். என்னால் அதற்குப் பதில் சொல்ல முடியாது. நான் எழுத மாட்டேன். ஏதோ ஒரு மரியாதைன்னு சொல்லுங்க. சுயதர்மம்னும் சொல்லுங்க. ஆனால் ஒருவேளை அவர் ஒரு வீம்பு பிடிச்ச மனுஷனா இருந்திருந்தா, தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக தலைவீங்கி உலா வருகிற மனுஷனா இருந்தா, ஒரு வேளை எழுதியிருப்பேன். அப்படி இல்லை. அப்படி ஒண்ணும் பெரிய force ஆகிவிட்டோம்னு நினைக்கிற மனிதரும் இல்லை. அப்படியான தோற்றத்தையும் உருவாக்கவில்லை. ராஜநடை போடு உலா வருகிறவர் இல்லை. சாதாரணமாக இருந்தார். பின் எதற்காக அவரைப் போட்டு சாடவேண்டும்.?
ராஜேந்திரன் .அப்படியென்றால், கலை இலக்கிய வளர்ச்சிக்கு இது தடையாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால், என்ன வென்றாலும் பரவாயில்லை, எழுதிடலாம் என்று நினைப் பீர்கள் இல்லையா?
வெ.சா. அவர் தனக்கு ஒரு பிம்பம் தானே உருவாக்கிக்கொண்டு ஒரு மிதப்பு இருந்தால் அதைத் தாக்கலாம்.
ராஜேந்திரன்: யாரும் ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்வதை நீங்கள் விரும்பவில்லை.
வெ.சா. அந்த பிம்பம் தவறானதாக இருந்தால். ஆனால் அப்படி இல்லை. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே/ அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே. அதைப் பார்த்து நாம் வளர்ந்தால், நம்மைப் பார்த்து அது வளர்ந்தால், இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளலில் ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய வடிவம், உருவானால் அது நல்லது தானே. அதில்லாது, ஒரு கெடுதல் விளைவைக் கொணர்தலாக இருந்தாலும்,…. ஏன், அகிலனைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக் கோம். அகிலனைப் போல இப்போ எத்தனையோ சோட்டா அகிலன்கள் இருக்காங்க. அவங்களைப் பற்றி யாரும் ஏதும் எழுதுவதில்லை. அவர்கlளை அலட்சியம் செய்து விடுகிறோம். யாரோ இரண்டு பேர் சேர்ந்து எழுதுகிறார்களாம். சுப்ரஜாவோ சுபாவோ. எழுதிவிட்டுப் போகட்டுமே. அவர்களையெல்லாம் போட்டு யாராவது சம்மட்டியால் அடித்துக்கொண்டிருப்பார்களா?
சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா
குரல் ரஜனி காந்த்?
வெ. சா. ரஜனிகாந்த் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை….
குரல் கமலஹாஸன்?
வெ.சா. இல்லை.. டி. ராஜேந்திரன் பையன், சிம்பு என்னும் சிலம்பரசன். ரஜனி காந்த் மாதிரி ஸ்டைல் எல்லாம் செய்யற ஆள் சிவாஜி கணேசன் மாதிரி தன்னை நினைத்துக்கொள்வது வேறே. என்னமோ உலகத்துப் பெண்கள் எல்லாம்… சரி சந்தோஷமாக இருக்கட்டும். அதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனால் சிவாஜி கணேசன் மாதிரி ஒரு பெரும் பிம்பமாக உருவானால் அப்போது எழுத வேண்டி வரும்.
சரி. எழுதி என்ன ஆகப் போகிறது? என்ன செய்துவிடுவாய்? அதைத் தடுத்து விடுவாயா? என்று கேட்டால், இந்த கேள்வி நியாயமான கேள்விதான்., ஒன்றும் செய்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் எதுவும் சாதித்து விட முடியும் என்று எண்ணி எழுதுவதில்லை. இது சரியில்லை, இது எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் எழுத வேண்டும், எழுதுகிறேன், என்பது தான் பதில். இந்த எழுத்து எதையும் சாதித்து விடும் என்பதனால் அல்ல. இது வரைக்கும் எது எழுதியும், எவ்வளவு எழுதியும் ஒன்றுமே சாதிக்க முடிய வில்லை. முடிந்ததில்லை. நான் சொல்கிறேன். என்றால், நான்கு பேர் கேக்கறாங்க. சென்னையில் நாலுபேர். தில்லியில் இரண்டு பேர். மதுரையில், நாகர் கோயிலில், டோரண்டோவில், யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு. இப்படி இன்னும் ஒன்றிரண்டு ஊர்களில் இன்னும் நாலைஞ்சு தேறலாம். இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
திலீப்.: தியேட்டரைப் பத்தி கடைசியா ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். தெருக்கூத்தின் தாக்கம் தமிழ் தியேட்டருக்கு வரவேண்டும் என்று முத்துசாமியை inspire பண்ணினீங்கன்னு அவரே எழுதியிருக்கார். அதில் அவர்களுடைய performance எவ்வளவு தூரம் வெற்றிகரமாக வந்திருக்குன்னு நீங்க கருதுகிறீங்க..
வெ.சா: ஒன்று அந்த தெருக்கூத்து, அந்த பாரம்பரிய வடிவம் எனக்கு பிடித்திருந்தது. அதை நாம் அடையாளம் காண வேண்டும். அதை நம்ம தியேட்டர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். கதகளி மாதிரி அது நம் பாரம்பரிய சொத்து என்ற உணர்வு நமக்கு வரவேண்டும் கதகளியை அவங்க பிரபலம் ஆக்கிய மாதிரி நாம் இதைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். எங்கிருந்தோ ஒரு சுரேஷ் அவஸ்தி (அந்நாளைய சங்கீத் நாடக் அகாடமி பொறுப்பாளர்) யாரோ இரண்டு பேரை எனக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் பத்தி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வெறும் மேடையில் மகாபாரத யுத்தத்தையே நமக்கு முன்னாலே கொண்டு வந்து காண்பிச்சுடறாங்க. அந்த உணர்வை நமக்கு ஏற்படுத்திடறாங்க. இரண்டே இரண்டு பேர். பீட்டர் ப்ரூக் சொன்ன மாதிரி, I need only an empty space and a man standing there on it to create theatre. ஒரு Empty space அப்புறம் அங்கே நிக்க ஒருத்தன் போதும். அது மாதிரி இந்த இரண்டு பேர் பண்ணினது தியேட்டர் என்று சொன்னேன். எழுதினேன். சரி. அதை முத்துசாமி படித்திருக்கிறார். அது வரைக்கும் அது சரி. அதுக்கப்புறம் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்தை சென்னையிலே பாத்திருக்கார். அவர் ஒரு பெரிய கலைஞர் என்று தெரிகிறது. அது தியேட்டர் அதுவும் சரி. ஆனால் அதை இப்போ இங்கே இன்றைய நாடகம்னு கொண்டுவரணும்னு எங்கே சொல்லியிருக்கேன்? அப்படி நான் சொல்லவே இல்லையே.
திலீப்: இப்போ ஆறுமுகத்தை ஏன் நாம படிக்க வச்சோம்? நீங்க யோசிச்சு பாருங்க. ஆறுமுகம் இப்போ இந்த புத்தகத்திலே (வாதங்கள் விவாதங்கள்) கட்டுரை எழுதியிருக்கார். ஆறுமுகத்தை சங்கரப் பிள்ளையிடம் அனுப்பினோம். ராமானுஜத்தின் கீழே அவர் படிக்க வேண்டும் அவர் கூத்து பரம்பரையிலே வந்தவர் நவீன நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே ஒரு தொடர்ச்சி ஏற்படவேண்டும். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளைத் தான் நாம் தேர்ந்தெடுக்கணும்னு நினைச்சோம். இது மாதிரியான நடவடிக்கையினாலே, இப்ப வந்து இப்போ இருக்கக்கூடிய theatre performance -லே இந்த fusion (இணைப்பு) ஏதாவது நடந்திருக்கிறது என்று யோசித்திருக் கிறீர்களா?
வெ.சா இது Fusion –ஆகவே இல்லையே? இப்போ ஆறுமுகம் ஒரு தியேட்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். அங்கு போய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அங்கே என்ன படித்தார் என்று எனக்குத் தெரியாது. சங்கரப் பிள்ளையை பற்றி எனக்கு ஒண்ணும் அதிகமான அபிப்ராயம் கிடையாது. அங்கு ஒரு நாடகப் பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு போய் படித்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால் ஆறுமுகம் பண்ணும் நாடகத்துக்கும் இந்த பாரம்பரிய கூத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. அது எப்படி அதிலேயிருந்து இதைக் கொண்டு வந்து…… இதில் fusion எங்கிருந்து வந்தது?
திலீப்: இல்லை. இதிலிருந்து தான் நாம் inspire ஆகணும்னு ஒரு நிலைமை இருக்கா?
வெ..சா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.
திலீப்” உங்களுடைய கட்டுரையைப் படித்துவிட்டு அவர் சொல்கிறார் முத்துசாமி என்ன நினைக்கிறார் என்றால், நம்முடைய பாரம்பரிய கலை தெருக்கூத்து…….
வெ.சா. நான் எங்கு சொல்லியிருக்கிறேன்.? நாம் அதிலிருந்து inspiration பெறவேண்டும் என்று? அப்படி அவர் சொன்னால்….? நான் சொல்லவில்லை.
திலீப்: நீங்கள் நேரிடையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு உங்கள் புத்தகத்தைப் படித்து அவர் புரிந்து கொள்கிறார்.
வெ.சா: இது கஷ்டமய்யா.
திலீப்: இப்ப நீங்க தெருக்கூத்தைப் போய் பார் என்று அவருக்கு சொல்றீங்க.
வெ.சா. நான் தெருக்கூத்தைப் போய் பார் என்று சொல்ல வில்லை. நான் பார்த்த தெருக்கூத்தைப் பற்றி எழுதினேன்
திலீப்: அது தான். அவர் படிச்சுட்டு அதைப் பார்க்கப் போறார். அவர் என்ன சொல்றாருன்னா, இது தான் முக்கியமானது என்கிறார்.
வெ.சா. அப்படிச் சொல்வது அவருடைய உரிமை,, தீர்மானம். அவருடைய தியேட்டர் அது. அதற்கு நான் பொறுப்பு அல்ல.
திலீப்: சரி. பார்வையாளராக நீங்க சொல்லுங்க. அவர் சொன்னது reflect ஆகியிருக்கா?.
வெ.சா: Reflect ஆகியிருக்காங்கறது இல்லை. ஆறுமுகம் அங்கு போய் படித்து விட்டு வந்திருக்கார். ஆனால் அவர் செய்கிற தியேட்டர் அது இல்லை. ஆனால் முத்துசாமி போய் பார்த்துவிட்டு வந்திருக்கார். அதைக் காப்பி பண்ணனும்னு நினைக்கிறார்.. அது தியேட்டரே இல்லை. அது தெருக்கூத்தும் இல்லை. இது ஒரு வகையான கோணங்கி ஆட்டம். காக்காவலிப்பு வந்தவன் கையைக் காலை உதறுகிற மாதிரி உதறாங்க. அதை நான் தியேட்டராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அதிகம் சொல்லக்கூடியது, அவர் தான் பார்த்த தெருக்கூத்திலிருந்து ஒரு புது தியேட்டரை உருவாக்கும் முயற்சி என்று வேணுமானால் சொல்லலாம். ஆனால் நான் அதைப் பார்க்கிற போது எனக்கு convincing ஆக இருக்கணும். நான் அங்கிருந்து எடுத்தேன். இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்லி பயனில்லை. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும். இந்த மொழி புதுசா இருக்கு, இது ஏதோ சொல்ல வருது, என்னன்னு நான் புரிந்து கொள்ளணும்னு அது எனக்கு அதன் மேடை பாஷையில் உணர்த்தணும். மேடையில் இருக்கிறவனுடைய அசைவுகள், அவன் பேசுகிறது எனக்கு இது ஒரு மொழி என்று convince செய்வதாக இருக்கணும். அந்த மாதிரி ஒரு புது மொழியை அவர்கள் உண்டாக்கியிருக்கணும். அவ்வாறு செய்யவில்லை. சும்மா தக்கா தையான்னு குதிக்கிறாங்க. எனக்கு வேடிக்கையாக இருக்கு. எதுக்கு இதெல்லாம் செய்யறாங்கன்னு.. நீங்கள் கதகளி பார்த்திருக்கிறீர்கள். அந்த அபிநயமும் முத்திரை களும் நமக்கு பழக்கமே இல்லை. இருந்தாலும் அங்கே போய் உட்கார்ந்தால் அது நம்மைக் கவர்கிறதில்லையா? இதுக்கு என்ன அர்த்தம்?, இது எதற்காக என்று நாம் அதில் கவரப்பட்டி ருக்கும்போதே நம்மைக் கேட்டுக்கொள்கிறோம். எனக்கு இங்கே இவங்க பண்ற கூத்திலே அந்த மாதிரி உணர்வே இல்லை. எரிச்சல் வந்து உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் தான் தோன்றது.
திலீப்: சரி, ராஜேந்திரன், நீங்கள் வந்து சிற்பங்கள் இன்னும் மற்றதைப் பற்றிக் கேளுங்கள். இந்த நாடகத்தைப் பற்றி இரண்டு கேள்வி. எதற்காக என்றால், நாடகம், தெருக்கூத்து இத்தோடு எல்லாம் , ஆரம்ப காலத்திலிருந்தே இவருடைய உந்துதலில் நிறைய விஷயங்களைச் செய்தார்கள். மற்றபடி பழசப் பற்றி ஏதாவது கேட்கணுமானால் கேளுங்கள்;
வெ. சா. பழசுன்னா எனக்கு எதுவுமே தெரியாது. நான் புலவன் இல்லை.
திலீப்: சாமிநாதன் ஒரு குறிப்பிட்ட எக்கச்சக்கமான விஷயங்களைப் பற்றி சொல்லி இருப்பதினாலே………….
வெ..சா: அதனாலே இந்த ஆளைப் போட்டு நல்லா வாட்டுங்க.
திலீப்: இல்லை சாமிநாதன்…..
வெ.சா: நான் தான் சொல்லீட்டேனே. எனக்கு எது எதெல்லாம் என் கண் முன்னாலே வந்ததோ, அது எனக்குப் பிடித்திருந்தது என்றால், அதை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தைப் வைத்து சொல்றேன். Not that I know the grammar of it. Or that I have studied them all and I have explained how and why of my writings.. என்னுடைய அனுபவத்தைச் சொல்லி வந்திருக்கிறேன். அப்படித்தான் எல்லாமே எழுதியிருக்கிறேன். அது யாருமே செய்யக்கூடியது தான் என்றும் சொல்லியிருக்கிறேன்.
திலீப்: செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்யவில்லை. அப்படித்தானே சொல்கிறீர்கள். (தொடரும்)
கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம்.

- ஜென் ஒரு புரிதல் – 27
- வெறுமன்
- ஞானோதயம்
- ஓர் இறக்கை காகம்
- சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்
- நானும் எஸ்.ராவும்
- பாசம் பொல்லாதது
- அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்
- தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘
- “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”
- பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு
- கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”
- முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு
- நான் குருடனான கதை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9
- ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
- பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்
- தமிழகக் கல்வி நிலை பற்றி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5
- ரம்யம்/உன்மத்தம்
- அன்று கண்ட பொங்கல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6
- பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
- 3 இசை விமர்சனம்
- பொங்கல் வருகுது
- ஷங்கரின் ‘ நண்பன் ‘
- மெர்சியின் ஞாபகங்கள்
- அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி