கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”

This entry is part 12 of 30 in the series 15 ஜனவரி 2012

கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு சீடருக்கு அவர் வாயால் தம் கோவிலின் மூலவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலால் காளமேகத்தின் அருகில் சென்று நிற்கிறார். அங்கே தொட்டு, இங்கே தொட்டு இறுதியாக விஷயத்துக்கு வருகிறார் சீடர். காளமேகம் புன்னகையோடு ஒரு வெண்பாவைப் பாடிக் காட்டுகிறார். ஒவ்வொரு வரியிலும் பகடி மிளிர்கிறது. அதைக் கேட்டு அந்தச் சீடரின் முகம் வாட்டமடைகிறது. காளமேகம் அந்த வெண்பாவை மறுபடியும் பாடி, அதன் மறைபொருளை விளக்கிச் சொல்கிறார். இப்போது அவ்வரிகளில் பகடி தெரியவில்லை. மாறாக, ஈடுபாட்டின் ஆழம்தான் தெரிகிறது. ஒரு வெண்பாவுக்கு இப்படி ஒரு குணமா என்று மலைக்கிறார் சீடர். அந்த வெண்பாவின் வரிவடிவம் இது.
வாதக்கா லாம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
வேதப் பெருவயிறாம் பிள்ளைக்கு- ஓதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்
அடுத்த நாள் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார் காளமேகம். கருவறை தரிசனத்தை முடித்துக்கொண்டு மண்டபத்துக்குத் திரும்பிய பிறகு அவர் மனத்தில் ஒரு பகடி வெண்பா உதிக்கிறது. அருகில் தூணோரமாகச் சாய்ந்திருந்த ஒருவரிடம் அதைப் பாடிக் காட்டுகிறார்.
பெருமாளும் நல்ல பெருமாள், அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்- பெருமாள்
இருந்த இடத்தில் இராமையினால் அந்தோ
பருந்தடித்துப் போகிறதைப் பார்
மண்டபத்தில் அமர்ந்திருந்தவருக்கு சீற்றம் பொத்துக்கொண்டு வருகிறது. காளமேகம் பகடியை விலக்கி ஆழ்பொருளைச் சொல்கிறார். ஆனால் அவரால் அந்தப் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காளமேகம் வெளியேற்றப்படுகிறார். தெருவில் பிள்ளையார் ஊர்வலம் செல்கிறது. அவர் நெஞ்சில் ஊறிய பகடி மறுபடியும் வெளிப்படுகிறது.
மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ- மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை அந்தோ
எலிஇழுத்துப் போகின்ற தே.
அவ்வரியைக் காதால் கேட்டவர்கள் சினம்கொள்கிறார்கள். வேகமாக காளமேகத்தின் முன்னால் வந்து முறைக்கிறார்கள். பாட்டின் அர்த்தத்தைக் கேட்கிறார்கள். காளமேகம் நிதானமாக எடுத்துரைக்கிறார். பார்வையாளர்களுக்கு கவிஞரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்றும் தோன்றுகிறது. அமைதியாக அவரை ஏறிட்டுவிட்டு எல்லோரும் சென்றுவிடுகிறார்கள். காளமேகமும் தெய்வத்தைத்தான் பாடுகிறார். திருவாசக வரிகளும் பிரபந்த வரிகளும்கூட தெய்வத்தைத்தான் பாடுகின்றன. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு – ஒன்றில் வெளிப்படுவது பக்தி, இன்னொன்றில் வெளிப்படுவது பகடி. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை- இரண்டுமே வாழ்வின் அர்த்தமின்மையைக் கடந்து செல்லச் செய்யப்படும் முயற்சிகள். பக்தியும் பகடியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றையொன்று நிரப்பிக்கொள்பவை.
காளமேகத்தின் கவிதைமரபுக்கு நவீன காலத்திலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஞானக்கூத்தன், ரமேஷ் பிரேம் எழுதிய பல கவிதைகளை பகடிமரபில் வைத்துப் பார்க்கலாம். இளையதலைமுறையில் இன்னொரு கண்ணியாக இருக்கிறார் இசை. இசையின் மூன்றாவது தொகுதியாக வெளிவந்துள்ள ”சிவாஜி கணேசனின் முத்தங்கள்” என்னும் தொகுப்பில் பகடிக்கவிதைகளே பெரும்பாலும் உள்ளன. காதல், பசி, தற்கொலை, சித்தாந்தம், பொறாமை, அன்பு, சோர்வு என எதையும் இசை விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் தமக்கே உரிய எள்ளல் தொனியுடன் பகடிசெய்கிறார்.
நவீன வாழ்வில் ஒவ்வொரு சொல்லும் தனக்குரிய ஆழ்ந்த அர்த்தத்தை இழந்துவிட்டது. தலைவன் எவ்வளவு உயர்வான சொல். ”அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே” என்பது கம்பனின் வரி. இன்று அச்சொல்லை உச்சரிக்கவே கூச்சமாக இருக்கிறது. சொல்லும்போதே மனத்தைத் தூண்டும் ஒரு சொல் தியாகம். இன்று அதைச் சொல்லவே முடியவில்லை. அர்த்தமிழந்த சூழலால், அர்த்தமிழந்த வாழ்வால், சொற்களும் மெல்ல மெல்ல அர்த்தமிழந்துவிடுகின்றன. இந்த அர்த்தமின்மை ஒரு பாசியாகப் படிந்து எண்ணக்குளத்தை மூடிக்கொள்ளும்போது, அதை வேகமாக விலக்கியபடி எழவேண்டியிருக்கிறது. அந்த முயற்சி, இசைக்கு கவிதையாக்கமாக இருக்கிறது. ஆபத்தான ஆட்டம்தான் இது. ஆனால் தன் சொற்கள்மீது இருக்கிற தன்னம்பிக்கை, இசையை இந்த ஆட்டத்தை ஆடவைத்திருக்கிறது.
”குட்டிச்செம்பொன்” என்றொரு கவிதை. எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிற ஒரு வீட்டின் அறைக்குள் நிகழும் காட்சிதான் இந்தக் கவிதை. சண்டையிட்டுக்கொண்டே இருக்கும் அம்மா, அப்பா. அவர்களுக்கிடையே உள்ள எதுவும் புரியாத இரண்டுவயதுக் குழந்தை. அந்தச் சச்சரவுக்கு ஓய்வே இல்லை. எதுவும் புரியாத குழந்தை, ஒரு கட்டத்தில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் சண்டைமட்டும் நிற்கவே இல்லை. எதற்காக இந்த மோதல் காலம்காலமாக நிகழ்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த அர்த்தமின்மைதான் கவிதையின் மையம். ஒருவரையொருவர் அவர்கள் அறிந்துகொள்வது இந்த மோதலின் வழியாகவே. மோதல் வலுக்கவலுக்க அவர்களுடைய அறிதலின் எல்லை விரிவாகிறது. ஒருவரையொருவர் எல்லையே இல்லாதவகையில் வெறுக்கிறார்கள் என்பதே அந்த அறிதல். அந்த அறிதல் அவர்களுடைய ஆயுதங்களை இன்னும் கூராக்குகின்றன. ஒருவரையொருவர் மென்மேலும் புண்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ”அம்மா ஒரு சொல்லை பழுக்கக் காய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்துத் தேய்க்கிறார்” என்பதுவும் “அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டுவைக்கிறாள்” என்பதுவும் இசை எழுதும் வரிகள். வசையின் வடிவத்தையே அவர் சொற்கள் பகடியாக மாற்றிவிடுகிறது.
”வாராது வந்த மாணிக்கம்” என்றொரு கவிதை ராமகிருஷ்ணன் என்னும் பாத்திரத்தைப் பற்றிய கவிதை. அவரது பிறவியில் தாமதம் மிக இயல்பாகவே பொருந்திவிட்ட ஒன்றாக இருக்கிறது. தம் பெற்றோருக்கு அவர் மிகமிக தாமதமாகத்தான் பிறந்தார். அவர் தேடிச் சென்று கேட்ட வேலைகள் ஏற்கனவே பிறருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. காதல் காவியம் எழுதும் உத்வேகத்தில் காதலியையும் இழந்துவிடுகிறாள். தாமதமாகத்தான் திருமணம் நடைபெறுகிறது. தாமதமாகத்தான் குழந்தை பிறக்கிறது. நரைமுற்றி உடல் உளுத்துப் போன காலத்தில் அவருக்கு ஒரு மரணம் வரக்கூடாதா என சலிப்போடு மற்றவர்கள் எதிர்பார்த்திருக்கிற கட்டத்தில், அதுவும் உரிய நேரத்தில் வர மறுக்கிறது. வழக்கமான தாமதம் அதன் வருகையிலும் நேர்ந்துவிடுகிறது. அவருடைய பெயரைக் கேட்கிற மருத்துவரிடம் சிரிப்பும் துக்கமுமாக “லேட் ராமகிருஷ்ணன்” என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். தன்னைத்தானே அவர் செய்துகொள்ளும் பகடி, தொடர்ந்து வாழ்கிற வாழ்வின் அர்த்தமின்மையைக் கடக்கமுடியாத சலிப்பின் விளைவு.
”தற்கொலைக் கவிதையின் முலை” என்பது இத்தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. தற்கொலை வேறு. தற்கொலைக் கவிதை வேறு. தற்கொலை ஆயுதம் என்றால், தற்கொலைக் கவிதை ஆயுதத்தின் அடி தன் மேல் விழாமல் காப்பாற்றப் பிடித்துக்கொள்கிற கவசம். துரத்தி வந்த தற்கொலை எங்கு போனான் என்று தெரியாமல் குழம்புகிறது. அவன் கவிதையிடம் அடைக்கலம் தேடிப் புகுந்திருப்பது, தற்கொலைக்குத் தெரியவில்லை. தற்கொலைக்கவிதையை எந்த மனிதப்பெண்ணிடமும் வளர வாய்ப்பில்லாத ஒரு பருத்த முலைக்கு நிகரானதாகச் சுட்டிக்காட்டுகிறார் இசை. அந்த முலையில் உலகெங்கும் வாழும் பித்தன்கள் கடித்துக்கடித்துப் பாலுண்கிறார்கள். தற்கொலைக்குத் தூண்டுகிற விதமாகத்தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் கண்டடையமுடியாத அர்த்தத்தை மரணத்திலாவது கண்டடையக்கூடும் என்கிற எண்ணம் எழுவதை யாராலும் தடுக்கமுடியவில்லை. ஆனால், தற்கொலைக்குத் தேவையான துணிச்சல் யாருக்கும் இருப்பதில்லை. அதனால் அவர்கள் அனைவருமே தற்கொலைக் கவிதைகளின்பக்கம் நகர்கிறார்கள். அது ஒரு பருத்த முலையின் தோற்றமாகக் காட்சியளித்து, அவர்களை ஈர்க்கிறது. அவர்கள் அதை வருடிப் பாலருந்துகிறார்கள். அனைவரையும் காப்பாறுகிற அந்த முலை நீண்டகாலம் வாழட்டும் என்கிற எண்ணத்தில்தான் “மாமுலை போற்றுதும்” என்றொரு இறுதிவரியை எழுதிவைக்கிறார் இசை. அவரே எதிர்பார்க்காதபடி, அந்த வரியிலும் பகடியே வெடிக்கிறது. மாமழை போற்றுதும் என்னும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஒரு சொல் இது. மாமுலை மாமழையை நினைவுபடுத்தி, மாமழை சிலப்பதிகாரத்தை நினைவுபடுத்தி, சிலப்பதிகாரம் கண்ணகியை நினைவுபடுத்தி, திருகி எறிந்த ஒற்றை முலையால் மதுரையையே தீக்கிரையாக்கியதை நினைவுபடுத்தி, எஞ்சிய ஒற்றைமுலையோடு பல நாட்கள் அவள் நெடுந்தூரம் நடந்து சென்றதையும் நினைவுபடுத்துகிறது. கண்ணகியின் முலையிலிருந்து வெளிப்பட்டது கற்பென்னும் நெருப்பு. அது ஒரு காலம். தற்கொலைக்கவிதை என்னும் முலையோ இன்று பலருக்கு நல்ல பாதுகாப்பான கவசம். கவிதையின் தன்மையே மாறிவிட்டது. ஆதலால் மாமுலை போற்றுதும். அர்த்தமின்மைக்கு எதிராக இசை கட்டியெழுப்புகிற பகடிச்சித்திரம், அதைப் படிக்கிற ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு புன்னகையை தோன்றச் செய்கிறது.
”லட்சுமி டாக்கீஸ்” இசையின் வெற்றிச்சித்திரம். ஒரு திரையரங்கம் தொழிற்கூடமாக மாறியதை ஒட்டி உருவாகும் உணர்வுக்கோளங்கள் வெடிச்சிரிப்பை வழங்குகிறவகையில் இக்கவிதை அமைந்துள்ளது. ”சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்” இன்னொரு அருமையான சித்திரம். மூன்று துண்டுகளாக கவிதை கலைத்துப்போடப்பட்டிருக்கிறது. ஒரு துண்டு வெடிக்காத துப்பாக்கியை முன்வைக்கிறது. இன்னொரு துண்டு வெடிக்கிற துப்பாக்கியை முன்வைக்கிறது. கடைசித்துண்டு துப்பாக்கி சாமி என்றொருவரைப்பற்றிய பதிவாக இடம்பெற்றிருக்கிறது. அபாரமான மன எழுச்சியைக் கொடுக்கக்கூடிய பகுதி இது. அந்தத் துப்பாக்கி சாமிக்கு ஊருக்குள் நல்ல மதிப்பிருக்கிறது. இரவுகளில் அழும் குழந்தைகளுக்கு அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகளைச் செய்துகொடுக்கிறார். ரவைகளை உருக்கி, குளிகைகளையும் களிம்புகளையும் தயாரித்துக் கொடுக்கிறார். துப்பாக்கி கிட்டத்தட்ட ஒரு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. அவர் தன் பல்லாயிரம் கரங்களால் பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும், எல்லாக் குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்படுவதை நம்பி, ஒரு கேள்வியோடு ஒருவர் அவரை அணுகுகிறார். எல்லாக் கேள்விகளுக்கும் விடை சொல்கிற சாமி, இவருடைய கேள்வியைக் கேட்டும் கேளாததுபோல இருக்கிறார். அந்த சுபாவத்தைப்பற்றி அறிந்திருந்ததால், அவனும் முயற்சியைக் கைவிடாமல், அவரை நெருங்கி, அவருடைய காதில் கேள்வியை முணுமுணுக்கிறான் அவன். அவரோ ஆத்திரத்துடன் அவனை வெட்டி தோட்டத்தில் புதைக்கும்படி சத்தமிடுகிறார். நல்ல பகடி.
பகடியின் சாயல் இல்லாத ”கலைத்தன்மை மிளிரும் வீடு” கவிதை நல்ல வாசிப்பனுவத்தை வழங்கும் கவிதை. அன்பின் பெருக்கில் மிதந்துவரும் சொற்களிலிருந்து ஒரு கூரான சொல்லால் நிலத்தை அகழ்ந்து, வலுகொண்ட சொற்களால் சுவர்களை எழுப்பி, வண்ணச்சொல்லால் நிறம்பூசி, அலங்காரமான சொற்களால் கூரை வேய்ந்துவைக்கிறான் ஒருவன். நகரில் கலைத்தன்மை மிகுந்த வீடு இதுவே என பிறகு பெருமிதத்தோடு அறிவிக்கிறான். உணர்வால் நெஞ்சுக்குள்ளேயே இறைவனுக்கு கோவில் கட்டிய நாயனாரைப்போல, சொற்களால் கட்டிமுடித்த கலைவீடு.
பகடிக்கு வாழ்வில் இடமிருப்பதுபோலவே, கவிதையிலும் இடமுண்டு. பகடிக்கவிதைகள் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. ஒரு சில கணங்களேனும் விடுதலையை அளிக்கின்றன. அவற்றின் புதுமை ஒருவித பரவசத்தையும் வழங்குகிறது. புன்னகைக்க வைக்கிறது. அசைபோட வைக்கிறது. இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் இவையனைத்தும் ஒரு மூளைவிளையாட்டு அல்லவா என்கிற அகல்திரியும் மனக்கூடத்தில் ஓரமாக எரிந்துகொண்டே இருக்கிறது. அப்படியென்றால், இவற்றின் இலக்கியத்தகுதி என்ன என்பது முக்கியமான கேள்வி. இசையின் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய கவிதை, ராஜகிரீடத்தையும் வாயிற்காப்பாளனின் ஆடையையும் வேறுபடுத்திக் காட்டும் தொனியில் இடம்பெற்றுள்ளது. கிரீடமணிந்தவனும் காவலன் உடைகளை அணிந்தவனும் சிறுநேர விளையாட்டுக்காக தம் உடைமைகளை மாற்றி விளையாடலாம். தூக்கிப் போட்டுப் பிடிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்த பிறகு, கிரீடமும் ஆடையும் அதனதன் இடத்துக்குச் செல்லவேண்டியிருக்கிறது அல்லவா.
கத்திவீச்சைப் போல மொழியை மிக நேர்த்தியாகச் சுழற்றகூடியவர் இசை. இளம் கவிஞர்களில் நம்பிக்கை தரக்கூடிய ஓர் ஆளுமை. இத்தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பு முன்வைப்பதுபோல, ஓர் ஆபத்தான விளையாட்டை இக்கவிதைகளில் நிகழ்த்தியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இது ஒரு தருணம். இன்னும் அடுத்தடுத்த தருணங்களை நோக்கி, இசையின் பயணம் தொடரவேண்டும்.

(சிவாஜி கணேசனின் முத்தங்கள்- இசை. கவிதைகள். காலச்சுவடு வெளியீடு. நாகர்கோவில்.)

*
paavannan@hotmail.com

Series Navigationபழந்தமிழரின் சூழல் காப்புணர்வுமுத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *