தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘

This entry is part 9 of 30 in the series 15 ஜனவரி 2012

எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா? பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஊகம் சரிதான். ஆனால் படம் ஏதோ பரவாயில்லை என்று ஆக்குவதற்கு இரண்டு விசயங்கள் பயன்பட்டிருக்கின்றன.
ஒன்று, விதார்த். பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரு சோம்பேறி இளைஞனைக் கண் முன் கொண்டு வருகிறார். நடனம் ஆட தெரிகிறது கஷ்டமில்லாத அசைவுகளில், நகைச்சுவை வருகிறது, சண்டை போடவும் தெரிகிறது. போதாதா கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்க.
இரண்டாவது, படம் நெடுக்க மெலிதான நகைச்சுவை காட்சிகள், வசனங்கள். பல இடங்களில் புன்னகை, சில இடங்களில் சிரிப்பு என்று காட்சிகள் ஓடுகின்றன. யாரும் பிரபல முகங்கள் இல்லை. கதாநாயகி அழகியும் இல்லை. ஆனாலும் கதையோடு பொருந்தும், சராசரி பெண் வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். அடுத்தடுத்த படங்களில் அவருக்கு தங்கை வேடம் கியாரண்டி.
கிராமத்துப் படம் என்பதால் ஒரு மெலடி இல்லை. எல்லாம் குத்துப்பாட்டுதான். டூயட் கூட அந்த பாணியில்.
குருவி என்கிற குமார் எப்படி திருடனாகி, திருந்தியபின்னும் வில்லனால் கோயில் நகைகள் களவு போனதற்கு குற்றம் சாட்டப்பட்டு, வில்லனைப் போட்டுத் தள்ளி ஜெயில் வாசம் அனுபவித்து மீள்கிறான் என்பது கதை. பிரதான வில்லனைத் தவிர அனைத்துப் பாத்திரங்களும் நல்லவர்கள். படம் முழுவதும் சளசளவென்று பேசும் கதாநாயகன் கிளைமேக்ஸ¤க்குப் பின் கடைசி வரையில், ஒரு அரை மணி நேரம், படத்தில் பேசாதிருப்பது புது கற்பனை. அவனிடம், ஊர் விசயங்களைச் சொல்லிக் கொண்டே போவது போல் படம் முடிவது கவிதை.
குறைந்த பட்ஜெட் படம். ஒரு வாரம் தாக்குப்பிடித்தால், அடுத்த படம் விதார்த்துக்கு உண்டு. அவர் இன்னொரு ஜெய்சங்கர் ஆகிவிடாமல் இருந்தால் சரி.
0

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்“உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *