“உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”

This entry is part 10 of 30 in the series 15 ஜனவரி 2012

எழுத்தாளர் திரு சு. வேணுகோபால் அவர்களுக்கு இந்த வருடத்திய பாரதிய பாஷா பரிஷத் விருது அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒருவருக்கு, அவரது தகுதியான புத்தகத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளது. எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகக் கூடிய இனிய நண்பர் அவர். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் என் சிறுகதைகளின் மீது, அக்கறை எடுத்துக் கொண்டு எப்படியான கருத்தோட்டம் மிகுமானால் அது இன்னும் தலைநிமிரும் என்பதாக விவரித்து அவர் எழுதிய நீண்ட கடிதம் அவர் மீதான மரியாதையை உயர்த்தியது. வெவ்வேறு கால கட்டங்களில் அவரவர் இலக்கிய ருசிக்கும், வாசிப்புத் திறனுக்கும் தகுந்தாற்போல் அவரவரே உந்தப்பட்டு. இந்த எழுத்துக் களத்திற்குள் வந்திருக்கிறார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் நேரடியாக அறியாத நிலையில், அவரவர் அனுபவங்களின் தாக்கங்களில், தோன்றும் படைப்பினை வடித்து, அதில் அந்தப் படைப்பின்பாற்பட்ட பயனை உணர்ந்து, தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அது ஒரு ஆத்ம திருப்தியான விஷயமாக இருந்து இயக்கி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட படைப்பிற்கான பாராட்டும், விமர்சனங்களும் எதிர்கொள்ளும்போது, அதற்காக மகிழ்ந்தும், இன்னும் முயன்றும், யத்தனிக்கையில், அதனினும் சிறந்தவற்றைக் காண நேரும்போது வாய்விட்டு, மனம் விட்டு அதைப் பாராட்டினால்தான் நெஞ்சம் நிறைகிறது. அப்படியிருப்பதுதான் மனதுக்குத் திருப்தியையும் தருகிறது. ஒரு படைப்பாளியின் குணம் அதுவாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இங்கே அப்படி இருக்கிறதா என்பது கேள்வி.
எழுத்தை மட்டுமே மனதிற்கொண்டு படைப்பாளியை நேரிடையாக அறியாமல் (அதற்கான அவசியம் அப்படி என்ன இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது) அந்த எழுத்தின்பாற்பட்டு ஈர்க்கப்பட்டு அவர் எந்த ஜாதி, என்ன மதம், படித்தவரா, படிக்காதவரா என்பதையெல்லாம் நோக்காமல் அந்த எழுத்துக்கு நெருங்கிய வாசகனாக இருப்பதில்தான் நிறைவு. அந்தப் படைப்பும், அதன் கருத்துக்களும், வடிவமும், உள்ளடக்கமும், அதன் ஆழமும் வீச்சும்தான் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அப்படியானதொரு ஈர்ப்பு உண்டென்றால் அது சு.வேணுகோபால் அவர்களால் எழுதப்பட்ட வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு உண்டு. அதைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதே மதிப்பு மிக்க விஷயமாகத்தான் தோன்றுகிறது. தரமான எழுத்தைப் படிக்கும்போது வாசகனுக்கு மனதுக்குள் ஒரு கர்வம் வருகிறது. நல்ல எழுத்தை அடையாளம் கண்டுகொள்பவன் நான் என்கிற பெருமை மிளிர்கிறது.
அந்த முகத்தில் ஏதோ ஒரு சோகம் நிழலாடிக் கொண்டிருப்பதாகத்தான் இதுவரை எனக்குத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே அவருடனான நட்பு மனதுக்குப் பிடித்தமானதாக உள்ளது. ஒரு பேராசிரியருக்கே உள்ள ஆழமும், நுட்பமும், கூர்மையும் அவரது பேச்சில் பெருகி ஓடுவதை ஒவ்வொரு முறையும் அவரை, சந்திக்க நேர்கையில் என்னால் உணர முடிகிறது. எடுத்துக்கொண்ட பொருளுக்கு அவர் மெனக்கிடும் விதமும், அதற்கான அவரது உழைப்பும், எதையும் முடிந்த அளவு சரியாகச் செய்து விடுவது என் பணி அதற்கு மேல் உங்கள் பாடு என்று அவர் தன் கடமையை இனிதே முடிப்பது நம்மை அவரிடம் மானசீகமாக நெருங்க வைக்கிறது. அவரின்பாலான அந்தக் கண்ணோட்டத்தோடுதான் இந்த வெண்ணிலை சிறுகதைத் தொகுதியையும் படிக்க நேர்ந்தது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு சிறுகதையைப் பற்றிச் சொல்வதன் மூலம் இந்தத் தொகுதி எத்தனை தரம் வாய்ந்த படைப்புக்களை உள்ளடக்கமாகக் கொண்டது என்பதை வாசகர்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். இனிமேல்தான் உணர்ந்து கொள்வது என்பது இல்லை. ஏற்கனவே பல்லாயிரம் பேர் இதனைப் படித்து முடித்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. இது என்னால்தான் தாமதமாகப் படிக்கப்படுகிறதோ என்று நினைத்துக் கொள்ளும்போது மனம் வெட்கமுறுகிறது.
புத்தகங்களை வாங்கி வாங்கிக் குவித்து விடுகிறோம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதேனும் ஒன்றையோ சிலவற்றையோ படித்துவிட்டுத்தான் வைக்கிறோம். அந்த ஒன்றின் ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு திரும்பத் திரும்ப அந்தப் புத்தகத்தை எடுக்கும்போது அந்தக் குறிப்பிட்ட படைப்பையே மீளவும் படித்து ரசிக்கிறோம். அதற்கு மேல் நகரமாட்டேன் என்கிறது என்றால் அது அந்தப் படைப்பாளிக்கான பெருமை அல்லவா? இப்படியே தொட்டுத் தொட்டு எல்லாப் புத்தகங்களும் நிலுவையில்தான் நிற்கின்றன. ஒரே சமயத்தில் நாலைந்து புத்தகங்களைப் படிப்பதன் பலனும், பலமும் இதுதான். பலவீனமும் இதுதான். படித்து முடிக்காத புத்தகத்தை படித்துவிட்டேன் என்று எப்படிச் சொல்வது? படித்து முடித்த ஒன்றிலிருந்து மற்றவை இன்னும் என்னென்னவெல்லாம் உயர்வைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டு நிற்குமோ? அதையெல்லாம் விட்டுவிட்டு படித்த ஒன்றை மட்டும் உச்சிக்கு உயர்த்தி இதுதான் பெஸ்ட் என்பது சரியாகுமா? ஓ! படிச்சாச்சே…! என்று வெற்றுப் பெருமை பேசுவதில் என்ன பொருள்? பொய் சொல்வது என்ன தரம்? ஒரு நல்ல வாசகனுக்கு அது அழகா? நல்ல எழுத்தைத் தேடத் தெரிந்த ஒருவனுக்கு நல்ல பொய் ஒன்றையும் சொல்ல முடியுமா? அது அந்தப் படைப்பாளிக்குச் செய்யும் துரோகமல்லவா? முதலில் தன் மனதுக்கு ஒருவன் உண்மையாக இருக்க வேண்டாமா?
நிரூபணம் என்ற ஒரு சிறுகதையைத்தான் எடுத்த எடுப்பில் படிக்க நேர்ந்தது. கதைக்கான மொழிநடை சொல்லவரும் விஷயத்துக்கான இறுக்கத்தை எப்படிக் கொடுத்து, கதையைத் தூக்கி நிறுத்துகிறது என்பதை இச்சிறுகதையைப் படிக்கும்போதே உணர நேர்ந்தது. சம்பவங்கள் நாம் அறிந்ததுதான். நிகழ்வுகளும் தெரிந்ததுதான். ஆனால் அதனூடாக இழையோடும் சோகம்? அந்த சோகத்தால் ஏற்படும் இறுக்கம்? அந்த இறுக்கத்தால் படிக்கும் வாசகன் மனதில் ஏறும் பாரம்? இதுதானே ஒரு படைப்பாளிக்கு வெற்றியாக இருக்க முடியும்?
கதை என்ன, அதைச் சொல்லுய்யா…? என்று கேட்பவர்களுக்கு வணிக இதழ்கள் ஏற்கனவே நிறையத் தந்து அவர்களைத் தக்கபடி பழக்கி வைத்திருக்கின்றனதான். ஆனால் ஆத்மார்த்தமாகத் தேடும் விஷயங்கள், சொல்ல முற்படுகையில் அதற்கான இறுக்கத்தோடு வார்த்தை வார்த்தையாகக் கவனமாகக் கோர்க்கப்பட்டு சரமாக முன் வைக்கப்படும்போது, கதைக்கான கருவும், அதையொட்டிய அவல வாழ்வின் நிதர்சனப் போராட்டமும், நம் மனதை எப்படியெல்லாம் பிழிந்து எடுத்து விடுகின்றது.
தான் கண்ட இந்த வாழ்க்கையின் பல அனுபவங்களில் எந்தவொரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு இந்தக் கதையைச் சொல்லப் போகிறோம் என்று படைப்பாளி யோசிக்கும்போதே அவன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அவனைப் புழுங்க வைத்த நிகழ்வைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று முனையும்போது முழுக்க முழுக்க அந்தப் படைப்பினுள்ளே மூழ்கிப் பயணிக்கிறான். அந்தப் பாத்திரங்கள் துன்புறும்போது அவனும் துன்புறுகிறான். அவை அழும்போது அவனும் அழுகிறான். சிறுமை கண்டு பொங்கும்போது அவனும் பொங்கிப் புழுங்கி வெகுண்டெழுந்து வலிமையான வார்த்தைகளால் குறிப்பிட்ட ஒரு பாத்திரத்திற்குத் தகுந்த வடிவினை இந்த சமூகத்தின்பாற்பட்ட தீர்க்கமான பார்வையாக முன் வைக்கிறான். அதன் மூலம் தன் மனதை .அதுநாள்வரை அரித்துக்கொண்டிருந்த பிரச்னைக்கு வடிகாலைத் தேடிக் கொள்கிறான். சொல்ல வந்த விஷயத்தையும், அதற்கான தீர்வையும் தக்கதொரு முடிவின் மூலமாக முன் வைக்கும் போது படைப்பாளியின் மனம் ஆசுவாசமடைகிறது.. அவன் மன பாரம் குறைகிறது. மிகவும் சுதந்திரமாகத் தன்னை அந்தக் கணத்தில் உணர்கிறான்.
சனிக்கிழமைகளில் ஒரு மணிவரை பள்ளிக்கூடம் வைத்துத் துரத்தி விடுகிறார்கள். குழந்தைகளுக்கு அந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. ஆனால் எபிக்கு மட்டும் பயம்.
என்ன, கள்ளக் கொறவனாட்டம் வர்ற? என்ன தப்பு செஞ்சே? அம்மா கிறிஸ்டியின் கவனம். கணிதம், சமூகவியல் பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்து காணப்படுகிறது. கவனமாப் படி, கவனமாப் படி என்று எப்டி அடிச்சிக்கிறேன் என்று முதுகில் வைக்கிறாள்.
மூச்சு விட்டயானா கொன்னு போடுவேன்…ஜீஸஸ் முன்னாடி மண்டி போடு…
டிபன் பாக்ஸில் காலையில் வைத்த இட்லிகள் அப்படியே இருக்கின்றன. எபி சிலுவை முன் மண்டியிட்டபடி அம்மாவைப் பார்க்கிறான். இந்த இடத்தில் ஒரு தாயின் வேண்டுதலைத்தான் பாருங்களேன்.
ஜீஸஸ், எனது மகனை உமது மகனாக ஏற்றுக் காத்தருளும். வரும் தேர்வுக் காலங்களிலாவது நீர் அவன் அருகிருந்து தெளிந்த சிந்தனையைத் தந்தருள வேண்டும். அவனுக்கு நல்ல மனன புத்தியையும் எப்போதும் மறக்காதபடிக்குமான ஞாபக சக்தியையும் காணிக்கையாகத் தந்தருளும் ஆண்டவரே! எல்லாம் வல்ல பரம பிதாவே! உமது திருநாமத்தின் பெயரால் ஜெபிக்கிறேன். ஆமென்..“
இந்த இடத்தைப் படிக்கும்போது கண்களில் நீர் சுரக்கிறது நமக்கு. கல்விக்கான அவசியத்தின்பாற்பட்டு ஒரு ஏழ்மைக் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களும், ஏக்கங்களும் எவ்வாறிருக்கும் என்று நம் மனம் உணர்கிறது. வாழ்க்கையில் இதற்கான போராட்டங்களை எதிர்கொண்டவர்களால்தான் இதன் தாக்கத்தை அப்படியே உணர முடியும். வறுமையும், இல்லாமையும், அனுபவித்து உணர வேண்டிய மேன்மைகள்.
ஆனால் இதிலெல்லாம் அக்கறை இல்லாத குடும்பத் தலைவன். அதை நினைத்து வேதனையில் நீந்தும் மனைவி.
அவர்கள் அறியாமல் பாவங்களைச் செய்கிறார்கள். மன்னிக்கிறவர்களே பாக்கியவான்கள். திருமறை வாசகம் நம் நெஞ்சை வருடுகிறது.
இனிப்புத் தோசை தவிர வேறு ஏதும் பிடிக்காத குழந்தை எபி. திரும்பிக் கொண்டுவந்த இட்லியை அவன் வாயிலேயே விண்டு விண்டு திணிக்கிறாள் தாய். இந்த வாழ்க்கைக்கான போராட்டம் என்னென்ன வடிவிலெல்லாம் விரிகிறது.
வெளியே கிரிக்கெட் ஆடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் எபி. அவர்களோடு ஆட வேண்டும் என்கிற ஆசையில் அருகில் வரும் பந்தை எடுத்துப் போடுகிறான். இடையில் சேர்க்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.
ஏக்கத்தோடு பார்க்கும் குழந்தை. அங்கே என்ன வேடிக்கை, வந்து படி என்று சத்தமிடும் தாய்.
எதுக்குடா எங்க பந்தை எடுத்துப் போட்ட? என்று அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டும் ஒரு பையன். அவனின் சுடுசொல் நெஞ்சில் கனலாய் எரிகிறது எபிக்கு. வீட்டுக்குள் வந்து தேவன் முன் அமர்ந்து பைபிளை எடுக்கிறான். வேதாகமத்தைப் பிரிக்கிறான். படிக்கிறான். எதுவும் பிடிபடவில்லை. அப்படியே சாய்கிறான். ஜீஸஸ், என் மனதைச் சங்கடப்படுத்திய திருச்செல்வனுக்கு சரியான தண்டனை கொடு என் தங்கமான ஜீஸஸ்….
அம்மா சொன்ன கதைகளோடு பயணிக்கிறான் எபி. அப்பொழுது அம்மாவிடம் கேட்ட கேள்வி அது.
ஜீஸஸ் நம்ம வீட்டுக்கும் வருவாராம்மா…?
குடித்து விட்டு வந்து போதையில் கிடக்கிறான் கிறிஸ்டியின் கணவன். இஷ்டத்துக்கு உளறுகிறான். என் காசில குடிக்கிறேன். நீ யார் கேட்குறதுக்கு என்கிறான். என்ன மார்க் எடுத்திருக்கான் என்று பையனைப் போட்டு அடிக்கிறான். கொதிக்கிறாள் கிறிஸ்டி. படி படி என்று அவனை அடிக்கடி அடிப்பதும், காதைத் திருகுவதும், முதுகில் சாத்துவதுமாக இருக்கும் தாய், பொறுப்பில்லாத கணவன் அதைச் செய்யும்போது இனி என் குழந்தையைத் தொட்டீன்னா தெரியும்? என்று எச்சரிக்கிறாள்.
ஒழுங்காப் படிப்பியா? இல்ல ஒன் அப்பனைப் போல ரவுடியா இருக்கப் போறியா? என்று வயிற்றெரிச்சலில் பையனை அப்போதும் மொத்துகிறாள். வேதனையில் கதறுகிறாள். அன்று ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குப் போகணும் என்கிற அவசரத்தில் கிண்டி வைத்திருந்த தக்காளி சாதத்தை அவன் வாயில் தின்னு தின்னு என்று திணிக்கிறாள்.
கிளம்புகையில் உண்டியலில் போட என்று பத்து ரூபாயை அவன் சட்டைப் பையில் வைக்கிறாள். அடிகளையும், திட்டுகளையும் வாங்கியபடி எபி அம்மா பின்னால் ஓடுகிறான். செல்லும் வழியில் அவன் ஏற்கனவே படித்து, தற்போது மூடப்பட்டுள்ள பள்ளி வருகிறது.
நல்ல ஸ்கூலுதானம்மா இது. இங்க படிச்சா நா ஃபஸ்ட் ராங்க் வாங்குவேன்லம்மா…என்னைய அடிக்க மாட்டேல்லம்மா….முத்தந்தானம்மா கொடுப்பே…. –மழலையாய் கெஞ்சுகிறான் தாயிடம்.
ஆமாண்டா எஞ்செல்லம் என்று தாயும் அவனின் அழகுப் பேச்சில் கரைகிறாள்.
எதிர் சுவரில் சாக்கடை மேட்டில் ஒரு பிச்சைக்காரன். கை ஏந்தியவாறே. இடுப்பிற்குக் கீழ் ஆடையின்றி, உறுப்புக்கள் விகாரமாகத் தெரிய, அழுக்கேறி வற்றிப்போய்க் கிடக்கிறான். அவனையே குனிந்து நின்றமேனிக்கு அப்படியே பார்த்துக் கொண்யடிருக்கிறான் எபி. இந்தத் தாத்தாவுக்கு யாரேனும் உதவி செய்வார்களா? என்று அவன் மனம் எண்ணுகிறது. தூரத்திலேயே பலரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
அந்தத் தாத்தாவப் பார்த்தா பாவமா இருக்கும்மா… என்கிறான் அம்மாவிடம்.
அட, எழவெடுத்தவனே பேசாம வா…என்கிறாள் தாய். தேவாலயத்தில் குழுப்பாடல் கேட்கிறது. உள்ளே நுழைந்து கண்மூடி மண்டியிட்டு ஜெபிப்பதில் ஈடுபடுகிறாள். எபி ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரன் இருக்குமிடத்தை அடைகிறான். நின்று வேதனையோடு பார்க்கிறான். அவன் மனதை என்னவோ செய்கிறது காணும் காட்சி. கடைக்கு ஓடி பிஸ்கட் வாங்குகிறான். திரும்பி வந்து அதை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்கிறான்.
பிச்சைக்காரன் Jesus Christ never fails to feed his followers…என்கிறான் ஆங்கிலத்தில்.. He lives with children என்று அவன் வாய் முனகுகிறது. எபிக்குப் புரியவில்லை. அம்மா ஜெபத்தை முடித்துத் தேடினால்? என்று திரும்புகையில் கோயில் உண்டியலில் காசு போட்டாயிற்று என்று சொல்லிவிடலாமா என்ற யோசனை வருகிறது எபிக்கு. கதை முடிகிறது இங்கே.
சாதாரணமான கருக்கள் கூட சொல்லக் கூடிய விதத்தினால் மேம்படுகிறது என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.
குழந்தையின் கல்வியிலும், அவனது வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தாய், இதுபற்றிய எந்தக் கவலைகளும் இல்லாத தகப்பன், கண்ணை இமை காப்பது போல கண்ணும் கருத்துமாக அவனின் கல்வியில் கவனமாக இருந்து, அதற்காக எந்தக் கஷ்டத்தையும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கும் தாயுள்ளம், வாழ்க்கைப் போராட்டத்தை இறைவனின் துணையோடும், ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தன் மகனுக்குத் தன் செயல்களினால் உணர்த்தும் அவளின் தியாக உணர்வு, தூய்மையான இறை வழிபாட்டின் மூலமாக ஒன்றைச் சாத்தியமாக்கலாம் என்று உணர்த்தும் தன்மை, ஒரு குழந்தையின் மூலமாக இரக்க சுபாவத்தையும், கருணையையும், மனித நேயத்தையும் வலியுறுத்தியிருக்கும் காட்சி முறை. இப்படியான பல கூறுகளில் இந்தச் சிறுகதை எனக்குப் பிடித்ததாக அமைகிறது. படித்து முடித்து வெகு நேரத்திற்கு மனது சரியாகவே இல்லை. எதையெதையோ நினைத்துப் பிசைந்து கொண்டிருந்த்து. வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் கிளறி விட்டு விட்டது இந்தக் கதை. மனிதன் இந்த மாதிரித் தூய்மையான எழுத்தினால் மேம்படுகிறான். தன் நெஞ்சின் ஈரப் பகுதியை உணர்கிறான். இலக்கியம் மனிதனை மேன்மைப் படுத்துகிறது. அவனின் சளசளப்பைப் போக்கி அமைதிப் படுத்துகிறது. அவனை இந்த உலகத்திற்கு ஒரு சிறந்த விவேகியாக்குகிறது.
வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு இந்த ஒரு கதையே சான்று அதன் அருமை சொல்ல. United Writers வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியின் அனைத்துக் கதைகளும் வாசகர்கள் படித்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான படைப்புக்கள்.
——————————–

Series Navigationதமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *