உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்

This entry is part 16 of 30 in the series 22 ஜனவரி 2012

நண்பர் இந்திரனும் நானும் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “நான் சந்தித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை நூல் வடிவத்தில் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது நாகி உங்களால் ஒரு முன்னுரையைத் எழுதித் தர முடியுமா? எனக் கேட்டிருந்தார். மூத்த படைப்பாளிகளில் ஒருவர் முன்னுரை கேட்பது அசாதரண நிகழ்வே. ஆனால் எழுத்தாள நண்பரின் பண்பை அறிந்தவர்களுக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. எனது சொந்த அனுபவங்கள் அவரை படைப்பாளியாக மட்டுமல்ல பழகுவதற்கு இனியவர், பண்பாளர் என்றே உணர்த்தியிருக்கின்றன.

இக்கட்டுரைகள் தொடராக தீராநதியில் வந்தபோது, இதழ் தபாலில் வந்து சேர்ந்ததும் வாசிக்கிற முதல் கட்டுரை, நண்பர் இந்திரனுடையது. அதற்கான காரணங்கள் இரண்டு: முதலாவது எல்லோரையும்போல நெருக்கமான நண்பர் ஒருவரின் எழுத்தென்றால் வாசிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக மின் அஞ்சலிலோ தொலைபேசியிலோ பிடித்திருந்தால் பாராட்டுவதென்பதை பழக்கத்தில் கொண்டிருந்தது. இரண்டாவது கட்டுரைகள் ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியதென்பதால் கூடுதலாக கவனம் எடுத்து வாசிப்பேன். நண்பர் இந்திரனுக்கு பல முகங்கள் உண்டென்பது ஊரறிந்த உண்மை: கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர் அனைத்துக்கும் மேலாக ஓர் கலை விமர்சகர். இறுதியாகச் சொல்லப்பட்ட அடைமொழிக்கு பழிநேர்ந்து விடக்கூடாதென்பதுபோல அவரது உரையாடல்கள் அமையும் என்கிறபொழுது படைப்பு சார்ந்த தளங்களில் அம்மனிதரின் அக்கறைகுறித்து நாம் சொல்ல என்ன இருக்கிறது.

இத்தொகுப்பில் ஒன்பது ஐரோப்பிய எழுத்தாளர்களை நண்பர் அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் ஒரே ஒரு பெண்மணியைத் தவிர்த்து மற்றவர்களை இக்கட்டுரைகள் ஊடாகத்தான் அறியவந்தேன். எழுத்தாளர்களைத் தேடிச்சென்று சந்திப்பதை ஓரு பிரார்த்தனைபோல நிறைவேற்றுகிறார் ஆசிரியர். “ஒவ்வொரு புதிய எழுத்தாளனையும், ஓவியனையும், சிற்பியையும் சந்தித்து கலந்து பழகத் தொடங்குகிறபோது அது சில நொடிகளாக இருந்தாலும் சில ஆண்டுகளாக இருந்தாலும், தொல் பழங்கால குகை ஓவியங்கள் நிறைந்த குகை ஒன்றுக்குள் நுழையப்போவதற்கு முன்னால் அடையும் மனக்கிளற்சியை நான் அடைவது வழக்கம்…… ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் வகையில் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது” என்பது ‘சாஷா ஸ்டானிசிக்’ பற்றிய கட்டுரையில் நண்பர் தரும் ஒப்புதல். தேடுதல் சந்திப்பு என்ற நிகழ்வில் தேவை, அன்பு, மரியாதை நிமித்தம் என்கிற மைல் கற்கள் இருக்கின்றன. தேடுதலின் முடிவில் சந்திப்பு என்று வருகிறபோது இங்கே இரண்டு மூலவர்கள் பொதுப்புள்ளி ஒன்றில் சந்திக்கிறார்கள். இந்திரனின் தேடுதல் பயன்பாடு பாம்பின் இரைதேடுதலை ஒத்ததல்ல, தனது அலகிற்குக் கிடைத்ததைக் குஞ்சுகளுக்கும் ஊட்டி தானும் உண்டு மகிழும் தாய்பறவையின் பகிர்ந்துண்ணும் பண்பினை ஒத்தது. அவரது சந்திப்பும் அதன் விளைச்சலும் அத்தைகய பயன்பாட்டினை தமிழ் படைப்புலகிற்கு இக்கட்டுரைகள் மூலம் தந்திருக்கின்றன.

கட்டுரை ஆசிரியரோடு நாமும் எழுத்தாளர்களுக்கு முகமன் கூறுகிறோம், கை குலுக்குகிறோம், தேனீர் அருந்துகிறோம், உரையாடுகிறோம், எழுத்துலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறோம், விடைபெறுகிறோம். ஒரு ஓவியக் கலைஞனுக்கே உரிய கண்களுடன் எழுத்தாளர்களை மிகத் துல்லியமாக அவதானிக்கிறார். ” நீண்டு புரளும் தங்க நிற சுருள் கேசம் அதை என்றைரக்கும் சீப்புவைத்து வாரியதற்கான அறிகுறிகளே இல்லை -அடர்த்தியற்ற புருவம் – கண்களில் எதிராளியிடம் ஏதோ தேடுவதுபோன்ற தீட்சண்யம்” என அலெக்ஸ் காபூஸ் எழுத்தாளள் பற்றி அவர் தீட்டும் சித்திரம் கண்முன்னே நிற்கிறது. “உருண்டு திரண்டமுகம் காதுகளை மறைத்து அருவிபோல விரித்து விடப்பட்ட தங்க நிறக்கூந்தல். பாலாடைக் கட்டிப் பற்கள் தெரியும் குழந்தை சிரிப்பு, கொஞ்சம் கண்டிப்பைக் காட்டும் மூக்குக் கண்ணாடி”, என எலைன் நி க்யூலினன் என்ற பெண் கவிஞரைப் பற்றிய ஓவியமும் இளப்பமானதல்ல. ஒவ்வொரு எழுத்தாளரின் உருவத்தின் ஊடாக அவர்கள் இலக்கிய வெளிக்குள் காலெடுத்து வைக்கிறார். முதற்பார்வையை அவர்களின் வடிவை அவதானிக்க ஒதுக்கியிருந்தபோதிலும், அடுத்தடுத்த அவதானிப்புகள் சந்தித்த எழுத்தாளர்களின் படைப்புலகம் சார்ந்ததாக இருக்கின்றன. அவற்றுள் குறட்பாபோல அப்படைப்பாளிகளின் எழுத்தைக்குறித்து நண்பரின் சுருக்கமான அறிமுகமும் அடங்கும்.

“நகைச்சுவைதான் அவரது நாவலிலும் காணக்கிடைப்பதை உணரலாம்”- (அலெக்ஸ் காபூஸ்)

“தற்கால இரக்க மயமான நாகரீக உலகில் துரித மாற்றங்களுக்கு உட்பட்டுவரும் சமூக மதிப்பீடுகளின் வெளிச்சத்தில் ஒவ்வொரு தனிமனித ஆணுக்காவும் பெண்ணுக்காகவும் வாதாடுகின்றன இவரது எழுத்துக்கள்” (எவ்லின் கோன்லன்)

“தனக்குள்ளேயே தன்னை புதைத்துக் கொள்கிற சவால்கள் நிறைந்த ஒரு வசன நடையை அவர் தேர்ந்தெடுத்து இருந்தார்.பிறகுதான் தெரிய வந்தது பேன்விலின் கதைகள் ரொமாண்டிக்கான நவீனத்துவ புராணிகங்கள் என்று. (ஜான் பேன்வில்)

“கவிதைகளையும் பிற கலைத்துரைகளையும் ஒரு மகரந்த சேர்க்கைக்கு ஆட்படுத்த்தவேண்டும் என்று முயற்சி செய்கிறார்”(கால்ம் எம் ஸ்கல்லி)

சந்திப்புகள் அனைத்துமே திட்டமிடப்பட்ட சந்திப்புகள் இல்லையென்கிறபோதும், சினேகபாவத்துடனான சொற்களைகொண்டு அவர்கள் தொழில் இரகசியங்களைக்கூட நண்பர் கறந்திருக்கிறார்:

“கோடை எனக்குப் பிடிக்காது. கோடையில் நான் வெளியில் போகாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பேன். அப்போது சுமார் மூன்று மாத காலத்தில் எனது கிரைம் நாவல் ஒன்றை எனது கம்ப்யூட்டரில் நான் ஆற்றொழுக்காக எழுதி முடிப்பேன். கதை சொல்ல வேண்டும் எனும் குழந்தைத் தனமான ஒரு ஆசை இங்கே நிறைவேறுகிறது..ஆனால் எனது இலக்கிய ரீதியான நாவல்களை கம்ப்யூட்டரில் என்னால் எழுத முடியாது.எனது மை நிரப்பிய பேனாவின் மூலமாக மட்டுமே நான் இவற்றை எழுதுகிறேன்.ஒவ்வொரு எழுத்தையும் எண்ணி எண்ணி எழுதுகிறேன். இதனை எழுதி முடிக்க கால வரையரை இல்லை. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் என்னால் எழுத முடியாது.” (ஜான் பேன்வில்)

“நான் எனது கதைகளை இன்னமும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுகிறேன் ஒரு பகுதியை எழுதி முடித்த பிறகு அதன் ஒரு கமாவைக்கூட நான் மாற்ற மாட்டேன்” (எவ்லின் கோன்லன்)

“எனது கவிதையில் நான் என்னையே பார்த்து நகைத்துக் கொள்கிறேன்.தன்னைத்தானே ஒரு சுய பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்வதின் மூலமாக ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது.”(மிண்டர்ட் வாரே)

ஐரோப்பிய எழுத்தாளர்களைப்பற்றி பேசுகிறபோதும் இந்திரனிடம் தமிழ் இலக்கியத்தைக் குறித்த பெருமிதமும் அதன் வளர்ச்சிக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்ற இயல்பான ஆதங்கமும் அவ்வப்போது இயல்பாக வெளிப்படுகின்றன.

“தமிழர்கள் தங்களின் உன்னதமான சங்க இலக்கியங்களை மட்டுமல்லாது பக்தி இலக்கியங்களையும் சிறந்த ஆங்கில மொழி பெயர்ப்புகளாகக் கொண்டு வந்திருக்க வேண்டும் எனும் ஆதங்கம் காபிரியல் ரோசென்ஸ்டாக்கைச் சந்தித்தபோது என்னை போட்டு வதைத்தது. நான் அவரிடம் தமிழின் பக்தி இலக்கியம் பற்றிய ஒரு பெரிய சொற்பொழிவே செய்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.” (காபிரியல் ரோசென்ஸ்டாக்: நியோ-பக்தி பாடும் அய்ரிஷ் கவிஞர்)

“தமிழ் நாட்டின் பெண் கவிஞர்கள் இன்று ஒரு அங்கீகாரத்தைத் தமிழ்ச் சூழலில் பெற்று விட்ட்டார்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து உலகின் சிறந்த பெண்கவிஞர்களின் கவிதைகளை குறைந்த பட்சம் ஆங்கிலத்தின் மூலமாகவாவது தமிழில் மொழி பெயர்த்து ஒரு உலகப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றைத் தமிழில் கொண்டு வந்தால் அவர்களது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு அது வழி செய்யாதா? (கால்ம்.எம்.ஸ்கல்லி: கதை சொல்லும் தற்காலக் கவிதை )

இறுதியாக சுவிஸ் எழுத்தாளர் அலெக்ஸ் காபூஸ¤டன் இந்திரன் நடத்தும் உரையாடல் எனது கவனத்தை பெரிதும் ஈர்த்தது, அதை இங்கே குறிப்பிடாமல் முடிக்க முடியாது.

– இந்திரன் நீங்கள் புனைகதை எழுதுவீர்களா?

– அது நெரிசல் மிகுந்த பஸ் அதில் ஏறி பயணம் செய்ய எனக்கு விருப்பமில்லை

இது நண்பர் தரும் பதில். ஆனாலும் கடல் நாவலை படித்துமுடித்ததும் அந்நாவல் களமான வெக்ஸ்போர்ட் எனும் கடலோர நகருக்கு நேரில் செல்லும் இந்திரன்

“பேன்விலின் சொந்த ஊரின் தோட்டம், துரவு, உயர்ந்த வெள்ளை நிற காற்றாலைகள், புல் மேயும் ஆரோக்கிய ஆடுகள், மாடுகள்,கடலோரத்து கிளிஞ்சல் வீடுகள், மிகவும் அமைதியான அந்நியோன்னியமான மதுவிடுதிகள், அதில் எனக்குப் பரிமாறப்பட்ட நண்டு கட்லட் என்று “கட.ல்” நாவலின் கதைக்களம் உயிர்த்துடிப்புடன் என் முன் விரிந்தது ….” மீண்டும் ஓர் உயிரோட்டமான காட்சியைத் தீட்டும்போது, இவர் புனைகதையென்ற நெரிசல் மிகுந்த பஸ்ஸில் பயணித்து அவதிப்படுவதிலும் தேர்ந்தவர் என்பதை புரிந்துகொள்கிறோம்.

நாகரத்தினம் கிருஷ்ணா
12-10-2011,Strasbourg

————————–
தோட்டத்து மேசையில் பறவைகள்
-இன்றைய ஐரோப்பிய புது எழுத்து
நூலாசிரியர்: இந்திரன்
சந்தியா பதிப்பகம்
57, 53rd Avenue
சென்னை -600 083
—————————-

Series Navigationமூன்று நாய்கள்சந்திரலேகா அல்லது நடனம்..
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *