முன்னணியின் பின்னணிகள் – 23

This entry is part 28 of 30 in the series 22 ஜனவரி 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
அடுத்த ஒருவார காலம் நான் ரோசியுடன் வெளியே போகவில்லை. அவள் ஓர் இரவு ஹேவர்ஷாம் வரை போய் அம்மாவைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினாள். எனக்கு லண்டனில் நிறைய வேலைகள் இருந்தன. நாம் ஹேமார்க்கெட் (புல் சந்தைப் பிரதேசம்) தியேட்டருக்குப் போய்வரலாமா என்று என்னிடம் அவள் கேட்டாள். அந்த நாடகம் படுபோடு போட்டுக் கொண்டிருந்தது. ஓசி டிக்கெட்டுகள் கிடையாது. ஆக நாங்கள் தரை டிக்கெட் எடுத்தோம். கொஞ்சம் புலால், ஒரு குவளை மது, என்று கேஃப் மோனிகோவில் வாங்கிக்கொண்டு கும்பலில் நின்றோம். அந்தக்காலத்தில் வரிசையொழுங்கு எல்லாம் கிடையாது. கதவைத் திறந்தால் ஆளுக்காள் இடம் பிடிக்க முட்டிமோதுவார்கள். ரொம்ப கசகசத்திருந்தோம். மூச்சுத் திணறலாய் இருந்தது. திக்கித் தடுமாறி எங்கள் இடத்தை அடையுமுன் கலகலத்துக் கலைந்து போயிருந்தோம்.
புனித ஜேம்ஸ் பூங்கா வழியே திரும்பினோம். அற்புதமான இராத்திரி. அங்கே கிடந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். நட்சத்திரங்களின் ஒளிக் கசிவு. ரோசியின் முகமும் கேசமும் மென்மையாக மிளிர்ந்து கொண்டிருந்தது. ரச்மிகள் சிதறும் கிரகதாரிணி! (கன்னாபின்னான்னு எழுதுகிறேனா தெரியவில்லை. அவள் தந்த கிலேசம் அப்படி, அதைச் சொல்லாமல் எப்படி.) அவள் அருகே எனக்கு இனிமையான ஓர் ஆதுரம் கிடைத்தது. இரவில் மலர்ந்த அல்லிப்பூ. வெடித்துச் சிதறும் வாசனை.
அவளை இடுப்பைப் பற்றி என்பக்கம் இழுத்தேன். என் பக்கமாக அவள் முகத்தைத் திருப்பிக் காட்டினாள். இம்முறை முத்தம் தந்தது, நான். அவளிடம் சலனமில்லை. அமைதியாய் விருப்பமாய் என் அதரங்களின் அழுத்தத்தை அவள் ஏற்றுக்கொண்டாள். மெல்லொளி படர அனுமதிக்கிற ஏரித் தண்ணீர். நேரம் நழுவியது. தெரியவேயில்லை.
”ரொம்பப் பசியா இருக்கு…” என்றாள் திடீரென்று.
”எனக்குந் தான்…” என்று சிரிக்கிறேன்.
”போயி எதாவது சிப்ஸ், மீன் கீன் கிடைக்குதான்னு பாப்பமா?”
”அதுக்கென்ன…”
அந்த வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் எனக்கு வழிகள் அத்துப்படி. சின்னப் பகுதி. பெரிய பிரமுகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமான பணங் கொழுத்த பகுதி அல்ல அது. சேரி. கடைநிலை ஆசாமிகள் புழங்கும் பகுதி. நாங்கள் பூங்காவை விட்டு வெளியே வந்தோம். விக்டோரியா தெருவைக் கடந்து போனோம். ஹாஸ்ஃபெரி வரிசையில் ஒரு கடையில் மீன் பொரித்துத் தருவார்கள்.
ரோசியை அங்கே அழைத்துப் போனேன். அகாலப் பொழுது. ஒரு நான்கு சக்கர வாகன ஓட்டிதான் வெளியே காத்திருந்தான். சிப்ஸ். மீன். ஒரு போத்தல் பீர்… சொன்னோம். யாரோ ஒரு பராரி உள்ளே வந்து ரெண்டு பென்னிக்கு உதிரியாய் என்னவோ காகிதத்தில் சுற்றி வாங்கிக்கொண்டு வெளியேறினாள். நல்ல பசியுடன் நாங்கள் சாப்பிட்டோம்.
திரும்பும் வழி, எங்கள் வின்சன்ட் சதுக்கம் தாண்டித்தான் அவள் வீடு… எங்கள் விடுதியைத் தாண்டுகையில் நான் கேட்டேன்.
”ஏ ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டுப் போறியா? என் அறைகளை நீ பார்த்ததே யில்லையே…”
”வீட்டுக்கார அம்மா இருக்காளே? வேணாம், நாளைக்கு உனக்கு எதும் பிரச்னையாயிறப் போகுது…”
”அவளா? அவ அடிச்சிப்போட்டாப்ல தூங்கிட்டிருப்பாள்.”
”கொஞ்ச நேரந்தான்…” என்றாள்.
பூட்டில் சாவியை நுழைத்தேன். க்ளிக். வழி இருட்டிக் கிடந்தது. ரோசியைக் கைத்தாங்கலாய் அழைத்துப் போனேன். என் கூடத்தில் விளக்கைப் பற்ற வைத்தேன். தன் தொப்பியைக் கழற்றி வறட்வறட்டென்று தலையைச் சொறிந்துகொண்டாள். ஒரு ஆடி தேடினாள். ஆனால் அந்த அறை கண்ணாடி வைக்க ஏற்றதாக நான் யோசித்திருக்கவில்லை. எனது புகைபோக்கிக் குழாயில் இருந்த கண்ணாடியையும் அகற்றி யிருந்தேன்
”என் படுக்கை அறைக்கு வா. அங்கே கண்ணாடி இருக்கிறது.”
கதவைத் திறந்து உள்ளேபோய் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறேன். ரோசி உள்ளே வருகிறாள். மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடிக்கிறேன். அவள் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளட்டும். நான் கண்ணாடியைப் பார்க்கிறேன். அவள் தன் கேசத்தை சரிசெய்து கொள்கிறாள். ரெண்டு மூணு பின்கள் குத்தியிருந்ததை கழற்றி வாயில் கவ்விக்கொள்கிறாள். எனது பிரஷ்களில் ஒன்றை எடுக்கிறாள். கழுத்தில் இருந்து ஒருசேர கூந்தலை வாரியொதுக்குகிறாள். திரும்பவும் அந்தப் பின்களைப் பதித்துக்… கண்ணாடியில் நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனித்திருந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். கடைசிப் பின்னையும் பதிக்கிறாள்… என்பககம் முகத்தருகே திரும்புகிறாள். எதுவும் பேசினாளில்லை. அந்த நீலக்கண்களின் சமுத்திர அமைதியுடன் என்னைத் தன் பார்வையால் வருடுகிறாள்.
மெழுகுவர்த்தியைக் கீழே வைத்தேன்… குட்டி அறையே அது. அலங்கார மேசை படுக்கையை ஒட்டியே கிடந்தது. மெல்ல கையை உயர்த்தி என் கன்னத்தைத் தட்டினாள்.
அடடா, கதாநாயகனாக ‘நான்’ என்று, தன்மை ஒருமையில் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிட்டேனே என இருக்கிறது. நட்பார்ந்த சூழலிலும், இதமான வெளிச்சத்திலும் கதை போகிறவரை சிக்கல் எதுவும் கிடையாது. நாயக பாவத்தில் ஒரு பெருந்தன்மையைக் கையாளுதல் நல்லது தான். அல்லது கழிவிரக்கத்தை ஒரு மெல்லிய நகையுடன் பரிமாறவும் செய்யலாம்…
பண்புடையாளர் செயல் அதுவே. உன்னைப் பற்றி நீயே எழுதி, அதை கண்ணீர் துளிர்க்க வாசகனை வாசிக்க வைக்கிறது அட்டகாசமான உணர்வுதான். உன்னைப் பற்றி அவனிடம் சிறு புன்னகை வந்தால் சிலாக்கியம் தான். ஆனால் ஒரு வெட்டி சுப்பனாக நடந்து கொண்டதை எழுத நேர்ந்தால் என்ன செய்வது?
சற்று முன்புதான் ஈவ்னிங் ஸ்டான்டர்டு இதழை வாசித்தேன். திரு எவிலின் வாக் அதில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அவர் சொல்கிறார் – தன்மை ஒருமையில் நாவல்கள் எழுதுவது கண்டிக்கத் தக்கது… ஆனால் ஏன் அப்படி, அதன் தாத்பரியம் என்ன அவர் விளக்கினாரில்லை. சொல்றதைச் சொல்ட்டேன், கேட்டாக் கேளு, கேக்காட்டிப் போ… என்கிற அசிரத்தையுடன் அவர் சொல்லியிருக்கவே வேண்டியது இல்லை. யூக்ளிட் தேற்றங்கள் எப்படி இருந்தன, இணை கோடுகள் பற்றி அவர் என்னவெல்லாம் ஆராய்ந்தார், கண்டுபிடித்தார்… அதைப்போல விளக்கமாய்த் துலக்கி யிருக்க வேண்டாமா?
எனக்கு அதில் மனசு ஆறவேயில்லை. நம்ம அல்ராய் கியரிடம் கூட இதுபற்றிக் கேட்டேன். மனுசன் எல்லாத்தையும் வாசிக்கிற ஆசாமி. (முன்னுரைக்கு வந்த புத்தகங்களைக் கூட படித்துவிட்டு தான் முன்னுரை தருவார்!) கியரிடம் நான் புனைவு என்கிற கலை வடிவம் பற்றி எழுதப்பட்ட சில புத்தகங்களைச் சொல்லச் சொன்னேன். அவர் சொன்ன ஒரு புத்தகம், தி கிராஃப்ட் ஆஃப் ஃபிக்ஷன் – (புனைகதையின் செய்நேர்த்தி) திரு பெர்சி லுபாக் எழுதியது. அட அந்தாள் நாவல் எழுதணும்னா ஹென்ரி ஜேம்ஸ் மாதிரி எழுது, என்கிறார். அடுத்து ஈ. எம். ஃபோர்ஸ்டரின் ஆஸ்பெக்ட் ஆஃப் தி நாவல் – நாவலின் விழுமியங்கள், வாசித்துப் பார்த்தேன். அவர் நாவல் எழுதணும்னால் என்னைப் போல எழுதுங்கடா என்கிறார்.
தி ஸ்ட்ரக்ச்சர் ஆஃப் தி நாவல் – நாவலின் கட்டமைப்பு, என ஒரு புத்தகம் எட்வின் மூர் எழுதியது. அதிலோவெனில் எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. சொல்ல வந்ததுக்கு யாருமே நியாயம் செய்தார்கள் இல்லை. அதைப்போலவேதான், சில நாவலாசிரியர்களிடம்… உதாரணமாக, திஃபோ, ஸ்டெர்ன், தாக்கரே, டிக்கன்ஸ், எமிலி ப்ரோன்ட் மற்றும் பிரௌஸ்ட்… தம் காலத்தில் பேராளுமை செய்தவர்கள் அவர்கள், எல்லாருமே இப்போது காணாமல் போய்விட்டார்கள். யார் அவர்களை எடுத்துப் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்? இவர்கள் எல்லாருமே திரு எவ்லின் வாக் சொன்ன உத்திகளைப் பயின்றவர்கள் தாம்.
நாம் வளர வளர, மனிதர்களின் சிககலான படிமங்களை, உட் குழப்பங்களை, காரணங்களுக்கு அப்பாலான மனித மனத்தில் விநோத செயல்பாடுகளை உணர்கிறோம். ஒரு நடுத்தர வயது அல்லது முதிய எழுத்தாளருக்கு இதைச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான் சிறு ஆறுதல். வெறும் கற்பனை வளாகத்து மனிதர்களைத் தாண்டி, நிஜத்துக்கு அவர்கள் காலப்போக்கிலாவது வருகிறபோது இதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் இதுவரை எழுதிக் காட்டியதில் வாழ்க்கை ஒரு சிட்டிகையும் இல்லை.
மனிதத் தன்மையை… மனிதனில் தேட வேண்டாமா? அப்போது இந்தக் குழப்ப சிந்தனைகளை, ஆத்மாவின் அலையடிப்புகளை யெல்லாம் முன் வைக்காமல் எப்படி, என்னத்தை எழுதிவிட முடியும்? மொத்த வாழ்க்கை சாராமல் எங்கியோ எப்போதோ ஏதோ நடப்பதை கதையாக்குதல் சரி அல்ல.
கோளாறு எங்கே என்றால், சில சமயம் நாவலாசிரியன் தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்டு விடுகிறான். தானே பாத்திரங்களைப் படைத்து அதுபற்றி தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்து விடுகிறான். சில சமயம் அதையும் அப்படியே கைவிட்டு விடுகிறான். அதாவது, எதைப்ப்ற்றி என்ன சொல்ல வந்தானோ, அல்லது சொல்ல வேண்டுமோ அதை முழுமையாய்ச் சொன்னானில்லை. அட அவனுக்கு தன்னைப் பத்தியே முழுசாத் தெரியாதோ என்னவோ…
வயசு ஆக ஆகத்தான் நமக்கு நாம் ஒண்ணும் பெரிய பிஸ்தா அல்ல, என்று தரைதட்ட ஆரம்பிக்கிறது. வாழ்க்கை தாண்டத் தாண்ட, இந்த நாவலாசிரியன் தன் பிற்கால நாவல்களில் தன் வாழ்க்கையை, அதன் அபத்தம் தெரிந்து, குறைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.
ஆ, இந்த ஒரே காரணத்துக்காக ‘நான்’ என்கிற தன்மை ஒருமை எனக்கு மகா சௌகர்யமாய் இருக்கிறது.
ரோசி கையையுயர்த்தி என் முகத்தை வருடினாள். அப்போது நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று எனக்கே தெரியாது… அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நான் அப்படி நடந்துகொண்டதே இல்லை… என் விக்கித்த தொண்டையில் இருந்து சட்டென ஒரு விசும்பல். நான் சங்கோஜி என்பதாலோ, அந்த என் தனிமையா என்ன காரணம் தெரியாது. (மனுசாள் இல்லை என்கிற தனிமை அல்ல அது, ஆஸ்பத்திரியில் விதவிதமான மனிதர்களை தினப்படி சந்தித்தபடி தான் இருக்கிறேன். என் மனசின் தனிமையைச் சொல்கிறேன்.) ஒருவேளை என் ஆசை அத்தனை பெரிசா? என்னவோ, நான் அழ ஆரம்பித்தேன். வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது. அடக்கிக்கொள்ள முயல்கிறேன்… முடியவில்லை. கண்கள் சட்டென நிரம்பி வழிந்தன. கன்னமெங்கும் அவை இறங்கியோடின. ஹா என அவற்றைப் பார்த்தாள் ரோசி.
”அட அன்பே, என்னாச்சி? என்ன விஷயம்டா? ச்… வேணாம் வேணாம்…”
என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவளுக்கும் அழுகை வந்தது. என் உதடுகளில் முத்தங் கொடுத்தாள். கண்களில், என் கண்ணீர் வழிந்த கன்னங்களில் முத்தங்கள் ஈந்தாள். தன் மேலாடையை விலக்கினாள். என் தலையைச் சரித்து தன் மார்பில் ஏந்திக்கொண்டாள். என் மிருதுவான முகத்தை வருடித் தந்தாள். என்னை ஒரு குழந்தைபோல இப்படி அப்படி தாலாட்டினாள் அவள்.
அவள் மார்பகங்களை முத்தமிட்டேன். அவள் கழுத்தின் வெண்மைத் தூணில் முத்தங் கொடுத்தேன். தன் உடைகளை அவள் களைந்தாள். மேல் கவுன். பாவாடை. அவளது உள்ளாடை போர்த்திய இடுப்பை அப்படியே இறுக்கமாய் என்னுடன் பிடித்திருந்தேன். அதையும் நெகிழ்த்தினாள். ஒரு கண்சிமிட்டும் நேரம் மூச்சை அடக்கி அதையும் அவிழ்த்தாள். அப்படியே என்முன் நின்றபடி சற்றே அசைந்தாள். அவளது இடுப்புப் பகுதிகளை நான் பிடித்துக்கொண்டேன். உள்ளாடை ஏற்படுத்தியிருந்த இறுக்கமான வரிகளை நான் வருடித் தந்தேன்.
”மெழுகுவர்த்தியை அணைச்சிரு…” என கிசுகிசுத்தாள்.
காலையில் என்னை அவள்தான் எழுப்பினாள். உள்நுழையும் சிறு வெளிச்சத்தில் படுக்கையும், அலங்கார மேசையும் என்று சற்றே புலப்பட ஆரம்பித்த வைகறை வேளை. என்னை வாயில் முத்தமிட்டு எழுப்பினாள் அவள். என் முகத்தில் குறுகுறுவென்று அவள் கேசம் அளைந்தது.
”நான் கிளம்பணும்…” என்றாள். ”உங்க வீட்டுக்கார அம்மாள்… அவள் என்னைப் பார்க்க வேண்டாம்.”
”இன்னும் நிறைய நேரம் இருக்கு.”
என்முன் அவள் குனிகிறாள். அந்த மார்பகங்கள் கனமாய் என் நெஞ்சுமேல் அழுந்தின. கொஞ்சநேரத்தில் மெல்ல எழுந்துகொண்டாள். நான் மெழுகுவர்த்தியை ஏற்றினேன். அவள் கண்ணாடி பார்த்து கேசத்தைச் சீராக்கிக் கொண்டாள். தனது நிர்வாண உடலை ஒருதரம் பார்த்துக் கொண்டாள். இயற்கையாகவே சிறுத்த இடுப்பு அது. நல்ல செழுமையான உடல்தான் ஆனாலும் அவள் சிக்கென ஒடிசலாய்த்தான் தெரிந்தாள். நிமிர்ந்த கிண்ணென்ற மார்பகங்கள். பளிங்குபோல் அந்த நெஞ்சகத்தில் எழும்பித் தெரிந்தன அவை. ஆ அந்த தேகமே காதல் செய்ய எனவே படைக்கப்பட்டது. மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. வெளிச்சம் மெல்ல உட்புக ஆரம்பித்த காலை. மொத்தமுமே ஒரு வெள்ளி மினுமினுப்பு கண்டிருந்தது. அதில் ஒரேயொரு மாற்று நிறம் என்றால் திமிர்ந்த அவளது ரோஜா நிற மார்புக் காம்புகள் மாத்திரமே.
நாங்கள் சப்தமில்லாமல் உடையணிந்து கொண்டோம். ஜெட்டியை அவள் திரும்ப அணிந்துகொள்ளவில்லை. அதை ஒரு செய்தித்தாளில் தனியே சுற்றிக்கொடுத்தேன். வாசல் வழியில் அடிமேலடி வைத்து நடந்தோம். நான் கதவைத் திறந்தேன். தெருவில் இறங்கினோம். குடுகுடுவென எங்களை நேரே கடந்து மாடியேறும் பூனையாய் காலை வெளிச்சம். சதுக்கம் ஆளின்றிக் கிடந்தது. கிழக்குப் பக்க சன்னல்களில் சூரியனின் தகதக ஆரம்பித்து விட்டது. அந்தக் காலை போல நானும் துடிப்பாக இருந்தேன். கைகோர்த்தபடி லிம்பஸ் தெரு முக்குவரை போனோம்.
”நாம இப்பிடியே பிரிஞ்சிக்கலாம். யாருக்கும் தெரியாது…” என்றாள் அவள்.
அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் என்னை விட்டு விலகிப் போவதையே பார்த்தபடி நின்றேன். அவள் நிதானமாய் நடந்து போனாள். எளிய கிராமத்துப் பெண்ணாய், பூமி உரசலை அனுபவித்தபடி போகிறாப் போலப் போனாள். நிமிர்ந்த நடை.
தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. நதிக்கரை வரை நான் மெல்ல நடக்கிறேன். நதியின் மேற்பரப்பில் காலை ரச்மிகள் பளபளவெனப் பொலிந்தன. நதி ஓடிவருகிற தாழ்வில் பெரும் பழுப்பு தட்டியிருந்தது. வாக்சால் பாலத்தடி வரை அந்தப் பழுப்பு இருள் நீண்டு கிடந்தது. யாரோ ரெண்டு பேர் கரையோரமாய் தோணியைச் செலுத்திப் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்குப் பசியாய் இருந்தது.
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்பயணி
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *