மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11

This entry is part 24 of 42 in the series 29 ஜனவரி 2012

நடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி செலுத்தவேண்டுமாம்
13 தீட்சதர் வீடெங்கும் இருட்டுடன், தீயில் உருகிய வெண்ணெயின் வாடை. காற்று வீசுகிறபோதெல்லாம் வாசல் மரங்கள் சோர்ந்து அசைந்தன. தெருத் திண்ணைகளிரண்டிலும் பொது தீட்சதர்கள் உத்தரீயத்தை உடலில் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். சிலர் சுவரிலும், சிலர் தூண்களிலுமாக சாய்ந்திருந்தனர். சிலர் சம்மணம் போட்டும், வேறு சிலர் முழங்கால்களை தரையிற் பக்கவாட்டில் மடித்துமிருந்தனர். அர்த்தஜாம பூஜையிலிருக்கும் தீட்சதர்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் வந்தால் கூட்டத்தை ஆரம்பித்து விடலாமென சபேச தீட்சதர் தீர்மானித்திருந்தார், அதை இரண்டொருவரிடம் சொல்லியுமிருந்தார். பெரிய திண்ணையின் தூபக்காலில் எண்ணை தளும்பும் அகண்டம். அதில் வண்ணான் கொடுத்திருந்த திரி சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. வெப்பத்தை முன்னிட்டு அகண்டத்திலிர்ந்து தள்ளி அமர்ந்திருந்த தீட்சதர் முகங்கள் தீபச்சுடரில் பளபளத்தன.

ஆண்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதைக் கேட்பதற்கென்றே ஒரு சில பெண்களும் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் நிலைவாசலுக்கு மறுபக்கம் ஆண்கள் கண்களிற் பட்டுவிடக்கூடாதென்பதுபோல இருட்டில் புதைந்திருந்தனர். அவர்களில் நடுத்தரவயது பெண்மணிகளும், சுப்புபாட்டியும் புடவைத் தலைப்பை இழுத்து தோளில் விட்டிருந்தனர். அவ்வப்போது அமர்த்தலாக முனுமுனுப்பதும் நடந்தேறியது. இதுபோன்ற நேரங்களில் பார்வதிக்கு செல்வாக்கு முளைத்துவிடும். ஏதோ அவள்தான் தீட்சதரை நடத்துவள்போல அவர்களுக்கு நினைப்பு. “ஏண்டி பார்வதி! பெரியவர் மனதிலே என்ன இருக்குண்ணு உனக்கும் ஏதாச்சும் தெரியமோ? தெரிந்தால் சொல்லேண்டி”, என்ற சுப்பு பாட்டியை அலட்சியம் செய்தாள். பிறகு கிடைத்திருக்கும் இப்புதிய பெருமையை விட்டுக்கொடுப்பானேன் என நினைத்தவள்போல “அவர் எடுத்திருக்கும் தீர்மானத்தை எவரிடத்தும் மூச்சுவிடக்கூடாதென்று உத்தரவு”, என்றாள். சுப்பு பாட்டிக்குச் சொன்ன பதில்போல தெரிந்தாலும், வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் சேர்த்து சொல்லப்பட்டதுதான். இத்தனை அமர்க்களத்திற்குமிடையிலும் மூன்று வீடு தள்ளி குடியிருக்கும் அண்ணி வராதது, எரிச்சலை ஊட்டியது. கர்வம் பிடித்தவளென பொருமினாள்.

அர்த்தஜாம பூசைமுடித்து ஏகாம்பர தீட்சதரும், தில்லைநாதனும், வெளிச்சுவர் படலை திறந்துகொண்டு உள்ளே வந்திருந்தார்கள்.

– என்ன முடிந்ததா?. பாதுகையை பள்ளி அறையில் கொண்டுபோய் சேர்த்துவிட்டுத்தானே புறப்பட்டு வந்தீர்கள்”.

– வழக்கம்போல சாங்கியங்கள் அனைத்தையும் குறையின்றி நிறைவேற்றிவிட்டுத்தான் மாமா..

– நல்லது. இடம்பார்த்து எங்காவது இரண்டு பேரும் அமருங்கள்.

இருவரும் உட்கார்ந்தார்களா என்று பார்த்தார். அவர்கள் உட்கார்ந்ததும், நடைகூடத்தை எட்டிப்பார்த்தார். அங்கே முனுமுனுத்துக்கொண்டிருந்த பெண்கள் புரிந்துகொண்டு அமைதியானார்கள்.

தொண்டையை கமறிகொண்டு பேச ஆரம்பித்தார்.

– இங்கே எதற்காக உங்களை அழைத்தேன் தெரியுமா?

– தெரியாமலென்ன அதுதான் கடந்த நான்கைந்து நாட்களாக தில்லையில், கோவில், வீதி, ஊரணிக்குளம், வயல்வெளியென்று எங்கும் பேச்சாக இருக்கிறதே. இதில் இரகசியம் என்ன.

– ஆமாம். தென்னாட்டில் மாலிக்காப்பூர் இழைத்த அநீதிகளுக்கு விஜயநகர மன்னர்களால் விமோசனம் பிறந்ததென்றும் நினைத்தோம். விரிஞ்சிபுரத்தில் கம்பண்ண உடையார் முன் அம்பாள் தோன்றி தெய்வீக வாளொன்றைகொடுத்து தென்னாட்டைக் காக்கசொன்னதை ஏதோ வைணவத்தைக் காப்பாற்றவென நினைத்துக்கொண்டார்கள். நான்கு நூற்றாண்டுகள் வைணவத்தின் நிழல்படாமலிருந்த தில்லை அம்பலத்தில் இரண்டாம் குலோத்துங்கன் அகற்றிய கோவிந்தராஜரைக் காலம்கடந்து குரு மகாச்சாரியார் பேச்சைக்கேட்டு தாத்தாச்சாரியாரும் அச்சுத மகாராயருமாக மகாவிஷ்ணு சன்னதியைக்கட்டியெழுப்பி சிலையை வைணவ ஆகமத்தின் ஒரு பிரிவான வைகாசன சூத்திரப்படி பிரதிஷ்ட்டை செய்வதென்று தீர்மானித்தார்கள். மற்றுமொரு நூறாண்டுகள் கழித்து ஸ்ரீ ரங்கராயனென்பவன் மகாமண்டபத்தையும் கோவில் விமானத்தையும் கட்டிமுடித்ததோடு நடராஜருக்குச் சொந்தமான ஐந்துகிராம மான்யங்களையும் கோவிந்தராஜருக்கென்று எழுதிவைத்தான். அப்போதே நம் முன்னோர்கள் அதை தடுத்திருக்கவேண்டும். தவறினார்கள். வேலூர் அப்பய்ய தீட்சதரை வாதத்தில் வென்ற கர்வம் தாத்தாச்சாரிக்கு. இப்போது கிருஷ்ணப்ப நாயக்கரும் தன் காலத்தில் ஏதாவது செய்தாகவேண்டுமென்று துடிக்கிறார். நடராஜர் சன்னதியில் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அண்மையில் பெய்த மழையில் மேற்கு கோபுர கலசம் சேதமடைந்திருக்கிறது. யாழியும் ஒன்றிரண்டு பொம்மைகளும் உடைந்து விழுந்திருக்கின்றன. நம்முடைய எதிர்ப்பையும் மீறி கொள்ளிட சோழகனை திருச்சிற்றம்பலத்தின் போஷகராக கிருஷ்ணபுர நாயக்கர் அறிவித்திருக்கிறார். நடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி செலுத்தவேண்டுமாம். நம்முடைய குறைகளை அப்பய்ய தீட்சதரும் வேலூர் லிங்கம்ம நாயக்கர் மூலமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார், கிருஷ்ணப்ப நாயக்கர் கேட்பதாக இல்லை. ஆக நாம் ஏதேனும் செய்தாலொழிய விமோசனமில்லை. இது நன்கு யோசித்து செய்த முடிவுதான். பேசிமுடித்த களைப்பில் பெரிய தீட்சதெரென்ற நடேச தீட்சதர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். வந்திருந்த தீட்சதர்களின் மன நிலையை நாடி பிடித்துணரும் சூட்சமம் அதிலிருந்தது. இதுவரையில்லாத நிசப்தம் குடிகொண்டது.

அருகில் செம்பிலிருந்த தண்ணீரை குவளையில் சாய்த்து குடித்தார். களுக் களுக்கென்று தொண்டையில் தண்ணீர் இறங்கியது. தேங்கியிருந்த மௌனத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

– நான் சொல்வது உங்களில் சிலருக்கு அதிர்ச்சியைக்கொடுக்கலாம். ஆனல் விஜய நகர மன்னர்களால் நமக்கு ஏற்படும் அவமானத்திலிருந்து மீள எனக்கு வேறு வழிகள் தெரியவில்லை. பல முறை யோசித்தே இம்முடிவுக்கு வந்தேன். நீங்கள் அனைவரும் இவ்விடயத்தில் எனக்கு பூரண ஆதரவைத் தரவேண்டும்.

– சொல்லுங்கள் மாமா. தயக்கம்வேண்டாம். நீங்கள் எதைச்சொல்லி நாங்கள் மறுத்திருக்கிறோம். – வலதுகோடியிலிருந்து ஈஸ்வர தீட்சதரின் குரல்.

– அந்த தைரியத்தில்தான் இந்த முடிவினை எடுத்தேன்.

மீண்டும் அங்கே அமைதி. மூச்சைவிடக்கூட தீட்சதர்கள் யோசிப்பதுபோலிருந்தது. நடையிலிருந்த பெண்களும் விபரீதமாக ஏதோ அறிவிக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்தோ என்னவோ கவலையுடன் காதைக் கூர்தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

– இன்னும் மூன்று நாட்களில் விஷ்ணுகோவில் திருப்பணியை ஆரம்பிக்கவென்று கிருஷ்ணப்ப நாயக்கர் இங்கு வருகிறார். நாம் அதைத் நடவாமல் தடுத்து நிறுத்தவேண்டும். மீறினால் கோபுரத்தில் ஏறி தரையில் குதித்து நமது உயிரை மாய்த்துக்கொள்ளவும் தயாரென்று எச்சரிக்க வேண்டும்.

– நாயக்கர் நம் எச்சரிக்கையை மதிக்கவில்லையெனில்? – குரல்வந்த திசைபக்கம் சபேச தீட்சதர் திரும்பினார்- குரல் ஈஸ்வர தீட்சதருடையதென்று அவருக்கு விளங்காமலில்லை.

தீட்சதருக்கு கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு மிகவும் நிதானமாக வார்த்தைகளை உச்சரித்தார். நாம் ஒவ்வொருவராக உயிரை விடத்தான் வேண்டும். உயிர்ப்பலியைகண்டாவது அவர்களுடைய திட்டங்களை நிறுத்துகிறார்களா என்று பார்ப்போமே. வீட்டிற்கு ஒருவரை எதிர்பார்க்கிறேன். இந்த எனது தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பர்கள் உண்டா? – திண்ணையின் இருபக்கங்களிலும் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்துக்கேட்டார்.

– எனக்கு மாற்று கருத்து இருக்கிறது.

குரலுக்குடையவன் ஜெகதீசன் எனபதை உடனே தீட்சதர் விளங்கிக்கொண்டார். அமைதியாக இருந்தார். நடையிலிருந்து பார்வதி தனது தம்பியை கண்டிப்பதுபோல முனுமுனுத்தாள்.

– ம் சொல்?

– எனக்கென்னவோ இது சரியான முடிவு அல்ல. தீர ஆலோசித்து எடுத்திருக்கவேண்டும். பலர் உயிர் சார்ந்த விஷயம். இப்படி திடீரென்று அறிவித்தால் எப்படி?

– நமது இன்னுயிரை நாயக்கருக்கோ, கோவிந்தராஜருக்கோ அளிக்கவில்லை பரமபதத்திற்கு தண்டனிடுகிறோம். பரமபதம் என்பது எல்லாவற்றினும் உயர்ந்த கதியாய், காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் தோன்றாது அனுபவித்து அறிவது, சிவசாயுஜ்ஜியத்தை அடையும் வழி. ஒருவகையான யோகமார்க்கம். நமது சரீரத்தைப்பற்றிய கவலையின்றி உள்ளடங்கி, நடராஜருக்காக உயிரைவிடுகிறோம். ஆன்மா முக்தி இன்பத்தை அனுபவித்து சிவனோடு அத்வைத நிலையில் நின்று சிவானந்தத்தில் திளைக்கிறது.

– அடியேனை மன்னிக்கவேண்டும். இதை உங்கள் எம்பெருமானே விரும்பமாட்டார். நீங்கள் எடுத்த இம்முடிவை கூத்தபிரான் மேலுள்ள பக்தியால் எடுத்திருந்தால் உங்கள் கருத்தை வரவேற்கலாம். கிருஷ்ணப்ப நாயக்கர் மேலுள்ளகோபமும் வைணைவத்தின்மேலுள்ள எரிச்சலும் இதுபோன்றதொரு முடிவை எடுக்க உங்களைத் தூண்டியிருக்கிறது. பிற தீட்சதர்களை காட்டிலும் தாங்கள் பெரியவரென்ற அகங்காரம் எடுத்த முடிவு. அசுரர்களுக்குரியது. இது மகா பாபம். நல்லவர்களை அறக்கருணையாலும் அசுரர்களை மறக்கருணையாலும் இறைவன் ஆட்கொள்வானென்று சொல்வார்கள். வேண்டுமானால் இதனை இறைவனின் மறக்கருணையால் கிடைக்கும் முக்தியென்று சொல்லுங்கள். இத்தனைகாலம் நமக்காக வாழ்ந்தவன் இன்று பாவியாவதா என இரக்கப்பட்டு வேண்டுமானால் நமக்கு முக்தி தரலாம்.

– ஆக முக்திபெறலாமென்பதை ஒத்துக்கொள்கிறாய். இது என்முடிவு. இனி பின்வாங்கும் எண்ணமில்லை. விருப்பமிருப்பவர்கள் ஏற்கலாம். மற்றவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் காலிலும் கொள்ளிட பாளையத்துக்காரன் காலிலும் விழுந்துகிடக்கலாம். நாளைக்கு வேறொரு வைணவன், நடராஜர் கோவிலே பெருமாளுக்குச் சொந்தமென்று வரலாம். அதனாலென்ன நாமத்தைத் தரித்து துளசி தீர்த்தம் பருகி பஞ்ச சம்ஸ்காரத்தில் நம்பிக்கைவத்து வயிற்றைக் கழுவலாமென நினைப்பவர்கள் வீட்டிலிருங்கள். தில்லை அந்தணர்களுக்கு எனதொருவன் உயிர் மூலம் விமோசனம் கிடைக்குமெனில் நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
உத்தரீயத்தை உதறி தோளில் போட்டவர் ஆவேசத்துடன் எழுந்துகொண்டார். தீட்சதர்களும் அவரது முகத்தில் தெரிந்த இறுக்கத்தை உணர்ந்து ஒவ்வொருவராக சொல்லிக்கொள்ளாம் புறப்பட்டு சென்றனர். பெண்கள் பின் கட்டுவழியாக வெளியேறினார்கள். ஜெகதீசன் இருட்டைபார்த்து, நாளைக்குப் பார்க்கலாம் அக்கா என்றான்.

Series Navigation“எழுத்தாளர் விபரத் திரட்டு”காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *