இவள் பாரதி கவிதைகள்

This entry is part 7 of 40 in the series 12 பிப்ரவரி 2012

இவள் பாரதி

நகராத காய்களைப் போலவே
நகரும் காய்களும்
நகர்த்துபவரின்
கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன..

நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார்.
நகர்ந்த நகராத காய்களின்
அசைவுகளுக்கேற்ப..

சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும்
முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது
அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை..

தன் பக்க காய்களே
தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில்
ஆட்டம் முடியுமுன்
எதிராளி அறியாமல் கலைத்து
முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ
அத்துடன் முடிக்கவோ
துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று…
=============

நிலத்தில் விழவும்
நீரில் விழவும்
நிழல் மறுக்கிறது..

காற்றில் பரவவும்
உடலெங்கும் விரவவும்
சுவாசம் திணறுகிறது

ஆயுதம் ஏந்தவும்
அமைதி கொள்ளவும்
சுதந்திரம் தடுக்கிறது

மாற்றுரு கொள்ளவும்
மறுபடி வெல்லவும்
மனம் வலுக்கிறது..

பெரும்போர் நிகழ்த்தவும்
பேரழிவு செய்யவும்
இறந்த காலத்தின் அடியிலிருந்து
எலும்பொன்று உயிர்க்கிறது..
=============

துரோக நினைவுகள்
கிழித்தெறிந்த இரவினை
தைக்கத்துடிக்கும்
விடியற்காலை பனியாய்
படர்கிறது
எதிர்கால கனவுகள்..
=============

காலையில்
சிறைபடுத்தும் நோக்கோடு
நெருங்கிய கைகளுக்கு
அகப்படாமல்
தோட்டத்தில் போக்குக்காட்டிய
வண்ணத்துப்பூச்சியை
அலுவலகலம் செல்லும்வழியில்
மீண்டும் காண நேரிட்டது
எதிர்நின்ற வாகனத்தின் கண்ணாடியில் மோதி
முன் சென்ற வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கிய போது..
அதன் இளமஞ்சள் நிற வண்ணம்
அந்த நெடுஞ்சாலை முழுக்க பரவ
கண்மண் தெரியாத
சாரமாரியான வாகனங்களின்
பறத்தலுக்குஇடையில் உற்றுபார்த்தன
மூன்று கண்கள் மட்டும்..
எனது இரண்டு கண்களும்
வண்ணத்துபூச்சியின் மீதமிருந்த ஒரு கண்ணும்..
===========

Series Navigation‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!நினைவுகளின் சுவட்டில் – (85)
author

இவள் பாரதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *