எருதுப் புண்

This entry is part 28 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ந பிரபாகரன்

“உன்னைப் பத்தி அந்த சோடாப்புட்டி கணேசன் என்ன சொன்னான் தெரியுமாடி” என்று பாகியாவின் வலது தோளைத் தட்டி கேட்டாள் வசந்தி.

“என்ன சொன்னானாம்?” என்று வேண்டா வேறுப்பாக கேட்டாள் பாக்கியா.

“அவன் நெனச்சா உனக்கு ஹோட்டல்ல ரூம் போட முடியும்னு அவன் பிரெண்ட்கிட்ட அளந்துகிட்டு இருந்தான்”

பாக்கியாவுக்கு கண்கள் மறைக்க ஒரு நீர்ப் படலம் எழுந்தது உதடு துடி, துடித்தது . அவன் சட்டையை பிடித்து, தலை கலைய, முகத்தில் நான்கு அரை விட்டால் என்ன என்று தோன்றியது. ஆனாலும் உடல் தளர்ந்து கன்னத்தில் கண்ணீர்க் கோடு விழ அவள் வசந்தியை பார்த்தாள்.

அவள் கன்னத்தை வசந்தி துடைத்தாள். “இப்ப அழுது என்னம்மா செய்யறது. பொம்பளைங்க நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்”

“என்னத்த ஜாக்கிரதைங்கற? ஆனாலும், அவன் இப்படிப் பட்டவனா இருப்பான்னு என்னால கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியல”

“ஆமாம் சில சமயம் கற்பனை கூட உண்மையை விட பயங்கரமானதாய் இருக்கத்தான் செய்யும்”

பதில் பேசாது பாக்கியா தலை குனிந்தாள்

“வீணாக எதையும் கற்பனை பண்ணிகிட்டு வருத்தப்படாத பாக்கியா. நீயோ கல்யானமாணவ. நாலு வயசுல ஒரு குழந்தையும், கண் நெறஞ்ச புருஷனுமா குடும்பம் நடத்தறவ. ஒரு அவப் பெயருக்கு ஆளாயிட்டோமேன்னு நீ வேதனைப்பட்டாலும், இப்போ நெனச்சாக் கூட உன்னால இதிலிருந்து தபபிக்க முடியும்”

“பாஸ்டர்ட். நானும் அதையேதாண்டி கேட்கறேன். ஒரு கல்யாணமான பொம்பளையைப் பத்தி நாலு பேர் முன்னால நாக்குல நரம்பில்லாம பழி போடறானே. இவனுக்கு ஒரு பொண்டாட்டி, புள்ள குட்டின்னு இருக்கே. அதை எல்லாம் நினைக்கரானா ?

வசந்தி, “ஆனா ஒன்னு சொல்றேன். இந்த ஒரே விஷயத்தினால ஆம்பளைங்க எல்லோரும் சுத்த மோசம், நம்பத் தகாதவங்கங்கர முடிவுக்கு வந்திட்டயானா உன் குடும்ப வாழ்கையே நரகமாயிடும். உனக்கு இப்ப தேவை அமைதி. எங்க தவறு நடந்து போச்சுன்னு மெதுவா யோசிச்சு பாஉ. நான் வரேன்” என்று விடை பெற்றாள் வசந்தி.

பாக்கியா மேஜையின் மீது தலை கவிழ்த்து வேதனையுடன் யோசித்தாள்.

அப்படி என்ன தவறு செய்தேன்? அந்நிய ஆடவனுடன் திருமணத்துக்கு பின்னும் ஒரு அவசரத்துக்காக மோட்டார் சைக்கிளில் பயணிப்பதுதான் தவறா? அவளுக்கு கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதில் திருப்தியும் இருந்தது. பல்லவனில் ஏறி கண்டவர்களின் சரசத்திலும், இடியையும், நெரிசலையும், தாங்கி கொள்ள முடியாத மனம், கணேசனின் தோளில் கை வைத்து பயணம் செய்வதை ஏற்றுக் கொண்டது.

அவையெல்லாம் அவளுக்கு தவறான பார்வையை உருவாக்கி விட கூடும் என்றே தோன்றவில்லை. அடிக்கடி அவன் கணவன் ருத்ர மூர்த்தி சொல்வதுதான் ஞாபகத்துக்கு வரும் ” நிறைய பாவம் நம் எண்ணத்தில்தான் உள்ளது. செய்கைகளில் அல்ல” என்று.

யாரோ அருகில் வரும் சப்தம் கேட்டது. கூடவே, நிழல் மறைத்த
அருகாமையும், மேஜையின் மீது ‘டொக், ”டொக்’ என்ற ஒலி எழுப்ப, பாக்கியா நிமிர்ந்தாள்.

“என்ன பாக்கியா? வீட்ல ரொம்பவும் வேலையோ? பகல்ல தூங்கறையே?” கணேசன் பளீரென்று சிரித்தான்.

பாக்கியாவுக்கு கோபமாக இருந்தது. அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் உடல் மேல் கம்பளிப் பூச்சி ஊர்வது போன்ற அருவருப்பை உண்டாக்கியது.

“என்ன உம்முன்னு இருக்க. ‘மூட் அவுட்டா” . சரி அதை விடு. சாயந்தரம் பைக்ல போக முடியாது. பைக் ரிப்பேர்.” என்று விரலில் சாவிக் கொத்தை சுழற்றியவாறு சொன்னான் கணேசன்.

“ரொம்ப தாங்க்ஸ்.” என்றாள் பாக்கியா.

“அட இவ்வளவு நாளா பைக்ல வந்தப்ப எல்லாம் தாங்க்ஸ் கிடையாது. பைக்ல இன்னைக்கு சவாரி கிடையாதுன்னு சொன்ன உடனே தாங்க்ஸ் சொல்றியே. உண்மையிலேயே நீ ரொம்ப மூட் அவுட் போல. சரி அதனால என்ன. பரவாயில்ல சாயந்தரம் நீ பஸ்ல வேணா போக வேண்டாம், ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டோல போயிடலாம் ”

பாக்கியா சுட்டெரிப்பது போல கோபக் கண்களுடன் அவனை நோக்கினாள்.

கணேசன் சமாளித்துக் கொண்டே, “என்ன நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு இப்படி விழிச்சிட்டு நிக்கற” ஹே உனக்கு என்ன ஆச்சு?” என்றான்.

சலிப்புடன் “” எனக்கு தலை வலிக்குது” என்றாள் பாக்கியா.

கணேசன் அவள் பேச்சை உடனே மிக முக்கியமான விஷயம் போல எடுத்துக் கொண்டான். தான் போய் ஒரு தலைவலி மாத்திரை வாங்கி வருவதாகச் சொல்லி சென்றான்.

பாக்கியா, மீண்டும் மேஜையில் தலை கவிழ்த்து தன் பொங்கும் கோபத்தை போக்க நினைத்து மனதுக்குள் போறுமிக் கொண்டிருந்தாள்.

“எவ்வளவு அழுத்தமானவன்? வார்த்தைகளில் வாஞ்சை காட்டியே மனசுக்குள் உடலைத் தீண்டும் அயோக்கியன். அவன் சட்டைக் காலரை பிடித்து இழுத்து நாலு அரை விட வேண்டும் என்ற எனது கோபம் எங்கே போனது?” என்று யோசித்தாள்.

வசந்தி மீண்டும் பாக்கியவிடம் வந்தாள். “என்ன பாக்கியா உனக்கு ரொம்ப தலைவலியாமே. செச்ஷனே அல்லோகோலப்படுது”

“நீ என்ன சொல்லற?”

“உன்கிட்ட என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? இப்பதான் என் முன்னாடி கண்ணைக் கசக்கிட்டு நின்ன. கணேசனைப் பாத்தவுடன் பேசியாச்சு. தலைவலின்னு சொன்னியாமே. என்ன கரிசனம் பாரு. அவன் பக்கத்து
செக்க்ஷன் எல்லாம் போய் எல்லார்க்கிட்டையும் பாக்கியாவுக்கு தலைவலியாம் எதாவது மாத்திரை இருக்கானு விசாரிச்சிட்டு இருக்கான். ஹூம், கடைசியில என் மேலதான் உனக்கு தப்பபிப்ராயம் வந்திடும் போல”

பாக்கியா, “என்னடி இது கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமே எல்லார்க்கிட்டையும் போய் இப்படி….” உதடு கடித்தாள்

“எனக்கென்னவோ, அவன் குடுத்த சமிக்ங்ஜை எல்லாத்தையும் நீ தெரிஞ்சோ, தெரியாமலோ புரிஞ்சதாவே காட்டிக்கலைன்னு தோணுது. அவன் எல்லாத்தையும் தனக்கு சாதகமா திருச்சுக்கிட்டு இருக்கான். கூடிய சீக்கிரம் இதுக்கெல்லாம் நீ ஒரு முடிவு செஞ்சே தீரனும். இல்லாம போயிட்டா உன் குடும்ப வாழ்கையே ஒரு கேள்விக் குறியா நின்னு போயிடும்”

” ஐயோ இப்ப என்னடி செய்யறது?”

“வர்றான் பாரு. ஹலோ, கணேசன் வாங்க. நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் அப்பறம் வரேன் ” கணேசனைப் பார்த்து விட்டு எழுந்தாள் வசந்தி.

“அட நீங்க உட்காருங்க” என்றான் கணேசன்.

“ஆமாம். வசந்தி நீயும் இரு இங்கே”

கணேசன், “பாக்கியா தலைவலின்னு சொன்னியே. அதுதான் மாத்திரை வாங்கி வந்திருக்கேன்” என்றான்.

பாக்கியா குரலை உயர்த்திச் சொன்னாள். “நீங்க யாரு எனக்கு வாங்கிட்டு வரதுக்கு? உங்களை என்ன நான் வாங்கிட்டு வரச் சொல்லி கேட்டேனா?”

செக்க்ஷனில் எல்லோரும் அவளைக் கவனிக்கிறார்கள் என்று சைகை காட்டும் எண்ணத்தில் பாக்கியாவின் உள்ளங்கையை கிள்ளினாள் வசந்தி.

“சும்மா இரு வசந்தி. உங்ககிட்ட நான் எதுவும் வாங்கிட்டு வரச் சொல்லி கேட்கல. அப்படியிருக்கும்போது ஒவ்வொரு டேபிள்ளையும் போய் பாக்கியா இதைக் கேட்டா, அதைக் கேட்டான்னு சொல்லிட்டு இருக்கறது நல்லாயில்ல. இப்படியெல்லாம் இருப்பதா இருந்தா நீங்க என்னை பார்க்க இந்த டேபிள்ளுக்கு வர வேண்டாம்”.

கணேசன் முகம் சிறுத்து அவமானமாய் உணர்ந்தான். நாலு பேர் முன்னாடி இப்படி சூடாக பேசி விட்டாளே என்பதை விட, அவளாலும், இப்படி ‘நறுக்கு’ என்று நாலு வார்த்தை பேச முடிகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. சினிமா கதாநாயகன் போல முகத்தில் சோகத்தை அப்பிக் கொண்டு தலைவலி மாத்திரையை அவள் மேஜையில் வைத்து விட்டு தளர்வாய் அவன் மேஜையை நோக்கி சென்றான்.

“நாந்தான் வேண்டாம்னு சொன்னேன்ல. தூக்கி எறி இந்த சனியன” என்று மாத்திரையையும் அவன் திசை நோக்கி விட்டெறிந்தாள் பாக்கியா.

“எனக்கு மனசு சரியில்ல வசந்தி. குழந்தைகளை சாயந்தரம் எங்கயாவது வெளியே கூட்டிட்டு போனா கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும்னு தோணுது. லீவ் லெட்டர் எழுதி தரேன் நீ குடுத்து விடு.” என்று சொல்லி ஒரு லீவ் லெட்டர் எழுதி அவளிடம் பாக்கியா கொடுத்தாள்.

அடுத்த நாள் நேற்றைய நிகழ்ச்சிகள் எல்லாமும் மறந்தவளாய் வந்தாள் பாக்கியா. கணேசன் கூட அவன் ‘சீட்’ல் இல்லை.

“நீ போனப்பறம் என்னாச்சு தெரியுமா?” என்று கேட்டவாறு வந்தாள் வசந்தி.

“நம்ம ரங்கநாதன் சார் கணேசனைக் கூப்பிட்டு ஒரு அரை மணி நேரம் அட்வைஸ் செஞ்சாரு. ஆனா அவன் திருந்த மாட்டான் போலிருக்கு. நேத்தைக்கு சாயந்தரம் பஸ் ஸ்டாண்ட்ல சொல்லிட்டு இருக்கான். ” பாக்கியாவுக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டு. அதனாலதான், வீட்ல பொண்டாட்டி உரிமையா சொல்லற அளவுக்கு ஆபீசுல பாக்கியாவும் சொன்னாள்’ .- எப்டியிருக்கான் பாரு ”

“அப்படியா, சரி, அவன் அப்படியேதான் இருப்பான். அனால், இந்த பக்கம் வந்திடுவானா பாக்கலாம்னா. என்று சிரித்தாள் பாக்கியா.

“நானும் இப்படியேதான் இருப்பேன்னு சொல்றியா என்ன?” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அகன்றாள் வசந்தி.

Series Navigation“வரும்….ஆனா வராது…””மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.
author

ந பிரபாகரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ERUTHU PUNN by PRBAKARAN is a neatly written short story based on the gossip at workplace.The story, though looks straightforward is a bit complicated and raises a few doubts on the character on Bakiya. She likes travelling with Ganesan on the motor bike insead of the tussle and hassle in the Pallanvan bus.
    This gives rise to rumours about her closeness with Ganesh.She seems to be furiated when Vasanthi tells her about the hotel room rumour. But when Ganesan comes to her she could not show her anger. Instead she tells him about headache. The concerned Ganesan immediately goes around the office for the pills. When he returns with the pills, she is again furious and throws the pills away in front of everybody. Ganesan is thus insulted and disgraced by Bakiya. But on the next day the story ends with Bakiya missing Ganesan as his seat is empty. The question arises about the married Bakiya travelling with Ganesh with her hand on his shoulder. Is this acceptable in our society? Of couse her husband Ruthra Moorthy seems not to be bothered about it when he says that a lot of sin is there only in our thoughts and not in acts.
    Though Bakiya seems outwardly to be angry with Ganasan, she seems to like his company. These are controversies in the story which the reader is made to contemplate. Enjoyable short story on human behaviour written with modernity! Congratulations!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *