ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்

This entry is part 2 of 31 in the series 19 பிப்ரவரி 2012

1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்?

2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன?

3.ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிக்கும் இல்லாத அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு?

4.பெரும்பாலான ஆண்கள் ‘தி.மு’ வில் நண்பர்களாலும் ‘தி.பி’ யில் மனைவியாலும் நொந்து நூலாவது ஏன்?

5.ஒவ்வொரு வருடமும் ஸரஸ்வதி பூஜை அன்று ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சுமைப் புத்தகத்தைத் தூசி தட்டும் வாசகனுக்கும் , முதுகுச்சுமை மடிக்கணினியில் இணையத்தில் கொரித்து வாசிக்கும் வாசகனுக்கும் இடைப்பட்ட கோடு எது?

6.சென்னைப் போக்குவரத்து நெரிசலில் உழுது ஓரியாடி – ஒரு வழியாக இடத்தைக் கண்டுபிடித்து – திருமண வரவேற்பில் மொய்யுடன் வரிசையில் நிற்பவன் கீழே புழுக்கத்திலும்- விளம்பர நோட்டீஸ் போல அழைப்பிதழை வினியோகித்தவன் – மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதியில்- நமுட்டுச் சிரிப்புடன் – மேடை மேலேயும் இரு துருவங்களாய் நிற்கக் காரணம் என்ன?

7.தொழிற் சங்கத்தில் ஒருவர் தலைவராகவோ, செயற்குழு உறுப்பினராகவோ ஆவதையும் அல்லது சாதாரண உறுப்பினராய் சந்தா கட்டுவதையும் தீர்மானிப்பது எது?

8.நிறைய உழைத்து எழுதிய கட்டுரைக்கு பின்னூட்டத்தில் குட்டு அல்லது எதுவுமே இல்லை, ஆனால் நாட்டு நடப்பு பற்றி உடனடியான எதிர் வினையான எழுத்துக்குப் பாராட்டு (பல சமயம்) கிடைப்பது எதனால்?

9.விருது பெற்ற மறு கணம் அவருக்குப் பாராட்டு, அவரைச் சுற்றியும், அவரது தலையைச் சுற்றியும் ஒளிவட்டம் ஓங்கி வீச அதில் கண் கூசும் (அனேகமாக இப்பிறவியில்) விருது பெற வாய்ப்பில்லாத (ஆனால் மனதுள் அங்கலாய்க்கிற) சாதாரண எழுத்தாளருக்கு ஆறுதலாக (விருது பெற்றவரைப் பற்றி )என்ன கூறலாம் ?

10.மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு புதுக்கவிதை எழுதி, விமர்சகரால் துவைக்கப்பட்ட, அல்லது நிராகரிக்கப்பட்ட கவிஞனுக்கும் சினிமாவில் பாட்டெழுதி கை நிறையக் காசும் கைத் தட்டலும் பெற்ற மேதாவிக்கும் நடுவே நிற்பது எது?

11.கல்லூரித் தோழர்களில் 99 பேர் அன்றாடம் தனியார் துறையில் செத்துப் பிழைக்க, அரசாங்க வேலையில் வாழ்வாங்கு வாழும் அந்த ஒருவனின் தனித்துவம் என்ன?

12.பஸ்ஸில் நண்பனுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிய ஒருவன், சில்லறைக்காக இரவெல்லாம் விழித்திருக்க – நிம்மதியாய் குறட்டை விட்டுத் தூங்கும் நண்பனைப் பற்றி என்ன சொல்ல?

13.மெயில், ஃபேஸ் புக், ட்விட்டர், எஸ் எம் எஸ் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி, சட்டைப் பையில் மின்னணு தேளாய்க் கொட்ட, விழி பிதுங்கும் மகனுக்கு, தபால் கார்டு காலத்து அறிவுரைகளை வாரி வழங்கும் தந்தையின் வசதிக்குப் பெயர் என்ன?

14.இரு சகோதரிகளுள் மூத்தவள் தனிக் குடித்தனம் போக, இளையவள் கூட்டுக் குடும்பத்தில் ஓடாய்த் தேய, அவளை மூத்தவள் போன் போட்டு சீண்டும் போது இளையவள் மனதில் என்ன தோன்றும்?

15.மனைவி பிறந்த நாள், மண நாள், பிப்ரவரி 14 எதுவாயிருந்தாலும் , வழக்கம் போல ஆபீஸ் போய் விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போகும் மாவீரர்களைப் பார்த்து மனதிற்குள் பொருமும் மற்ற ஆண்கள் நினைப்பது என்ன?

16.இரவெல்லாம் பயணம் செய்து, ஏகப் பட்ட இடத்தில் மூட்டை சுமந்து, மனைவி குழந்தைகளுடன் மணிக்கணக்கில் காற்றோட்டமில்லாத வரிசையில் நின்று, இறுதியில் கருவறையில் உள்ள சாமியைக் கும்பிடும் போது, சாமியின் புன்னகையைப் பற்றி குடும்பத் தலைவன் மனதில் பளிச்சிடுவது?

17.தன் வீட்டில் மின்வெட்டுப் புழுக்கத்தில் திணறும் போது சென்னைவாசி போன் பேசி “பவர் கட்? வாட் ஈஸ் தட்?” என்னும் போது மனதுள் தோன்றும் உடனடி எதிர்வினை என்ன?

18. பகல் ரயிலில் ஏறியவுடன், மனைவி பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கும் முன், கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளும், கணவனைப் பார்த்து, நிராயுதபாணியாக சகபயணியான மனைவி பேசுவதைக் கேட்பது போல் நடிப்பவன் மனதுக்குள் முணுமுணுப்பது என்ன?

19.கட்சிக்குள் உரிய முக்கியத்துவமும் கிடைக்காமல், கட்சியை விட்டு வெளியேறவும் முடியாமல், வட்டம், மாவட்டம் எல்லாம் தலைவரின் தவ வாரிசுகளைப் பார்த்து நினைப்பது என்ன?

20.மூத்த எழுத்தாளர் ஒருவர், நாலு பேர் நடுவே சிறைப் பட்டு, காற்றில்லாத மேடையில் புழுங்கும் புத்தக வெளியீட்டு விழாவில் – பின் வரிசை ஒன்றின் ஓரத்தில் அமர்ந்து – கொஞ்சம் தாள முடியாவிட்டாலும் – அரங்கை விட்டு வெளியேறும் (பெயர், முகம் இன்னும் பெரிய அளவில் வெளிவராத) சிறிய எழுத்தாளரின் அன்றைய சுதந்திரத்துக்கு மறு பெயர் என்ன?

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்-

கொடுப்பினை.

Series Navigationபசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்நினைவுகளின் சுவட்டில் – 86
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *