பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘

This entry is part 8 of 31 in the series 19 பிப்ரவரி 2012

சச்சின் என்று ஏற்கனவே ஒரு படம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதுவே தலைப்பாக ஆகியிருக்கக் கூடும். அதில் ஒரு நியாயமும் கூட இருந்திருக்கும். ஆம். சச்சின் பத்தாம் கிளாஸ் டிராப் அவுட். ஆனால் கிரிக்கெட்டில் கிளாஸ் அபார்ட்!
நமது கல்வி முறையை விமர்சனம் செய்யும் படம். ஆனால் இது ‘ நண்பன் ‘ போல ஹை கிளாஸ் இல்லை. லோயர் மிடில் கிளாஸ். ஒரு மராத்தி படத்தின் தழுவல். மராத்தி நாடகங்களும், படங்களும், ‘ கிளாஸ் ‘ என்று நமக்கு ஏற்கனவே தெரியும். அதனால் நம்பிப் போனேன்.
பத்திர பதிவு அலுவலக குமாஸ்தாவான சுப்பு என்கிற சுப்பிரமணியனின் ஒரே ஆசை, தம் மகன் கார்த்திக்கை ( ஆகாஷ் ) பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று. அப்பன் ஆசை தாசில் பண்ண, பிள்ளை ஆசை டாஸில் வின் பண்ண.. அதாங்க கிரிக்கெட். எல்லாம் சரி. ஆனால் இந்தக் காலத்தில், லீக் ஆடுபவர்களுக்கே, ஸ்பான்ஸரும் ஸ்காலர்ஷிப்பும் கிடைக்கிற போது, நல்ல விளையாட்டு வீரர்களை பள்ளிகளே கொண்டாடும் போது, எங்கிருக்கிறதய்யா இந்தப் பள்ளி, கணக்குப் பாடத்தில் வீக் என்று பெயில் ஆக்கும் பள்ளி. அப்படியே சரியாக படிக்கவில்லை என்றாலும், தன் மாணவனையே பிரைவேட்டாக எழுதச் சொல்லி, தேர்ச்சி பெற்று விட்டால், எங்கள் பள்ளி மாணவன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் பள்ளிகளை நான் அறிவேன்.
மாணவர் தற்கொலையில், பல செய்திகளில், பெற்றோர் கெடுபிடிதான் காரணமாக இருக்கிறது. இந்தப் படத்தில் அம்மாதிரி எதுவும் காணோம். அப்பா பிள்ளைக்கு புது ஸ்போர்ட்ஸ் ஷ¥ வாங்கித் தருகிறார். தினமும் டிவியில் மேட்ச் பார்க்க அனுமதிக் கிறார். பிள்ளைகளை வெளியில் கூட்டிப் போகிறார். இதையெல்லாம் காண்பித்து விட்டு, ஒரு ஐந்து நிமிடக் கோபம், பையனை அடித்து கோமாவில் தள்ளிவிடுவதாகக் காட்டுவது, கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது.
‘ மொழி ‘யின் வெற்றிக்குப் பின்னால் நல்ல திரைக்கதையும், நல்ல நகைச்சுவை வசனங்களும், ஜோதிகாவின் சிறந்த நடிப்பும் இருந்தன. பயணமும் அப்படித்தான். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு பாத்திரங்களைக் காட்டி, நல்ல நகைச்சுவையை தெளித்தால், அது சக்ஸஸ் பார்முலா என்று யாரோ பிராஜுக்கு தப்பாக சொல்லி விட்டார்கள்.
இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இளையராஜா. பல இடங்களில் அனாவசிய இசை கிடையாது. டூயட் கிடையாது. சோலோ பாடல்களில் ஒரு லில்ட். ராஜா ராஜாதான். அதுவும் கார்த்திக் தலையில் அடிப்பட்டு, கோமாவில் இருக்கும் ஆஸ்பத்திரிக் காட்சியில் நிசப்தம் தான். மவுனமும் ஒரு இசைதான் என்று ராஜா ஏற்கனவே சொல்லியதாக ஞாபகம். உண்மை.
படத்தில் பிரகாஷ்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டுகிறார். உணர்ச்சி வசப்படும்போது, தெளிவில்லாமல் கத்தி கூச்சலிடுகிறார். (நீயா நானா டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது ) ஏற்கனவே மொழித் தகராறு, இதில் குழறிக் கத்தினால் என்ன புரியும்? எஸ்.வி.சேகர் டிவி நாடகம் மாதிரி, 17 x 8 வாய்ப்பாட்டைக் கேட்டே, கொன்று விடுகிறார்கள்.
பெரிய ஆறுதல், விலைமாதாக வரும் மராத்தி நடிகை ராதிகா அப்தே. நடிக்கவேயில்லை. அவ்வளவு இயல்பு. பாலுமகேந்திராவின் ‘வீடு ‘ போல, ஓரிரு லொகேஷன்களைச் சுற்றி வருவதால், படத்தில் பிரமிப்பு ஏதுமில்லை. வேதம் கண்ணனின் ‘ எல் கே ஜீ ஆசை ‘ நாடகத்தில் ஏற்கனவே துவைச்சு போட்ட வசனங்களை, மீண்டும் வெள்ளாவி வைத்து வெளுத்திருக்கிறார்கள். புதிதாக ஏதுமில்லை.
ஆனாலும் டூயட் மூவிசை பாராட்டவேண்டும். குறைந்த பட்ஜெட்டில், ஆபாசமில்லாத படங்களைத் தர, அவர்கள் மெனக்கெடுவதற்கு. அதனால் ஒரு பானி பூரி சாப்பிடுகிற காசில் டோனி பாருங்களேன். அதேபோல் தான் இருக்கும். காற்றடைத்த சின்ன பூரி, ஓட்டை போட்டு, கொஞ்சம் காரம், கொஞ்சம் இனிப்பு நீர் மிதக்க, உள்ளே தள்ளும்போது, நீர் சட்டையில் தெறிக்காமலிருக்க முகம் காட்டும் அஷ்டக்கோணல். எல்லாம் உண்டு இப்படத்தில்.
படத்தில் சிரித்த இடங்கள் உண்டு. ஆனால் ஸேம் எஸ் வி எஸ் மாதிரி, வெளியே வந்தால் மறந்து போகிறது. காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் சாம்ஸ், மணிப்பர்ஸ் வாயைத் திறந்தால், சில்லரையாகக் கொட்டுகிறது. ஆனால் எல்லாம் செல்லாக் காசு. முத்திரையாக ஒரு இடம் சொல்லலாம். ‘ நீ முட்டாளா ‘ என்று கார்த்திக்கை அவனது சகோதரி கேட்கும் இடம். டோனியைப் பற்றியும் கிரிக்கெட்டின் அத்தனை விவரங்களையும் விடாமல் ஒப்பித்துவிட்டு அவன் சொல்லும், ‘ நான் முட்டாளில்லை.. கணக்குதான் எனக்கு வரலை.. ‘
0
கொசுறு
டோனி படத்தை பூந்தமல்லி சுந்தர் பாலஸில் பார்த்தேன். ஞாயிறு மாலைக்காட்சிக்கு ஐநூறு சொச்ச இருக்கைகளில் நூறு பேர் இருந்திருப்பார்கள். வரலாறு வகுப்பில் நுழைந்து, பிரகாஷ்ராஜ், டீச்சரை பெஞ்சின் மேல் நிற்கச் சொல்லும் காட்சியில், கொஞ்சம் பேர் கைத்தட்டினார்கள். நம் கல்வியின் தரம் அப்படியிருக்கிறது.
போரூர் வர ஷேர் ஆட்டோ பத்துரூபாய். சொகுசு பதினொன்றோ பதிமூன்றோ? பத்து பேர் கணக்கு என்பதால், அன்பின் மிகுதியால், தன் பக்கத்திலேயே உட்காரச் சொல்லி விட்டார் ஆட்டோ ஓட்டுனர். கர்ணன் படம் போல், வைட் ஆங்கிளில் பார்த்துக் கொண்டே, ஊர் வந்து சேருவதற்குள் பல சிக்சர் அடித்தது என் இதயம்.

Series Navigationசேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘மயிலு இசை விமர்சனம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *