பழமொழிகளில் ஒற்றுமை

This entry is part 15 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். நாட்டிற்கு நாடு மக்கள் வேபட்டு மனம் குறுகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முனைகின்றனர். நாட்டுக்கு நாடு மட்டுமல்லாது ஒரே நாட்டிற்குள்ளும் இத்தகைய நிலைமையே அதிகரித்துள்ளது.

நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்குள், மாவட்டத்திற்குள், வட்டம், ஊர், கிராமம், தெரு, வீடு, உறவுகள் என இவ்வேற்றுமை என்ற பகையுணர்ச்சி விரிந்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இத்தகு மனிதர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் காலங்காலமாக வாழ்வியலறங்களை எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் திருந்தவில்லை. இவர்கள் என்றாவது ஒரு நாள் மனம் திருந்துவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பால் நம்முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகவும் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்.

ஒற்றுமை

வீடோ, நாடோ அனைததிலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்துவிடும். இதனை,

‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

ஒன்றுபட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி. இதனையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இதனை வலியுறுத்துவது போன்று பாகவதத்தில் பின்வரும் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின்னர் விருந்து நடைபெற்றது. அப்போது கையினை மடக்காது விருந்துண்ண வேண்டும் என்று திருமால் நிபந்தனை விதித்தார். இதனை ஏற்காத அசுரர்கள் இது எப்படி முடியும்? கையை மடக்காது யாராலும் உண்ண முடியாது. இது வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை. இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று விருந்துண்ண முடியாது சென்றுவிட்டனர்.

ஆனால் தேவர்கள் இதனை ஏற்றுக் கொண்டனர். தேவர்கள் எதிர் எதிர் இலையில் அமர்ந்து உணவைப் பிசைந்து எடுத்துத் தங்களுக்கு எதிரில் உள்ளவர் வாயில் கையை மடக்காது ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர். இதனால் மனநிலைவுடன் விருந்தினை ருசித்து உண்டனர். தேவர்கள் இதிலும் ஒற்றுமையுடன் சிந்தித்துச் செயல்பட்டதால் வெற்றி பெற்றனர். அசுரர்கள் புரிந்து கொள்ளாது ஒற்றுமையின்றி செயல்பட்டதால் விருந்துண்ண முடியாமலேயே சென்றனர். இக்கதை ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டுள்ள கதையாகும்.

இதனைப் போன்றே பஞ்சதந்திரக் கதையும் இப்பழமொழியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

காட்டில் இரைதேடிக் கொண்டிருந்த புறாக்கள் பசியின் காரணமாக வேடன் விரித்த வலையில் கிடந்த தானியங்களை உண்பதற்காகச் சென்று அதில் சிக்கிக் கொண்டன. அதனால் என்ன செய்வது என்று புலம்பித் தவித்தன. அப்போது தூரத்தில் வேடன் வருவதையும் புறாக்கள் பார்த்து விட்டன. தங்களது வாழ்வு முடிந்துவிடும் என்று புறாக்கள் கூறி அழுதன. அப்போது அக்கூட்டத்தில் இருந்த வயது முதிர்ந்த புறா, ‘‘இதோ பாருங்கள் அழுவதை நிறுத்துங்கள். அழுதோ, புலம்பியோ ஒன்றும் நடக்காது. நாம் அனைவரும் ஒரே நேரத்தில் சேர்ந்து வலையைத் தூக்கிக் கொண்டு பறந்தால் நாம் உயிர்பிழைக்கலாம். எனது எலி நண்பன் இக்காட்டின் மறுபுறத்தில் இருக்கிறான். அவனிடம் சென்று வலையிலிருந்து நாம் விடுபடலாம். புலம்பாதீர்கள். உடனே நாம் பறந்தாக வேண்டும் என்று கூறி அனைத்துப் புறாக்களையும் பறக்குமாறு கூறி வானில் பறந்து சென்றன.

ஓடி வந்த வேடன் அப்புறாக்களைப் பிடிப்பதற்காகத் துரத்தினான். ஆனால் இயலவில்லை. வேகமாக வலையைத் தூக்கிக் கொண்டு பறந்த புறாக்கள் வயதான புறா கூறியதைப் போன்று காட்டின் மறுபுறத்தில் எலி வசிக்கும் வளையின் அருகில் இறங்கின. இறங்கிய பின், வயதான புறா தனது எலி நண்பனை அழைத்து உதவுமாறு கூறியது. வெளியில் வந்த எலி தனது நண்பனான புறாவைப் பார்த்து,

‘‘என்ன நண்பா? என்ன இது? இப்படி ஆபத்தில் சிக்கிக் கொண்டு விட்டீர்களே? இருங்கள் நான் உங்களை விடுவிக்கின்றேன்’’ என்று கூறி வலையைத் தனது பற்களால் அறுத்து அனைத்துப் புறாக்களையும் விடுவித்தது.

புறாக்கள் அனைத்தும் எிக்கு நன்றி கூறிவிட்டு வானில் மகிழ்ச்சியுடன் பறந்து சென்றன. ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அனைவரும் சிறப்பாக உயிர் வாழலாம் என்ற பழமொழியின் கருத்தினை தெளிவுறுத்துவதாக இக்கதை அமைந்துள்ளது.

குடும்ப ஒற்றுமை

அன்னை, தந்தை, மகன், மகள், மாமன், மாமி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என உறவுகள் அனைத்தும் இணைந்த ஒன்றே குடும்பம் எனப்படுகிறது. இக்குடும்பம் என்ற அமைப்பு சிறக்க அனைவரிடமும் ஒற்றுமை உணர்வு இருத்தல் வேண்டும். அங்ஙனம் ஒற்றுமையுணர்வு இருந்தால் மட்டுமே அக்குடும்பம் வளமுடன் செழித்து முன்னேறும். இல்லையெனில் அக்குடும்பம் தாழ்நிலையை அடையும்.

ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்து கொண்டு, எதுவாக இருப்பினும் விட்டுக்கொடுத்து நடந்தால் அக்குடும்பம் மகிழ்சிசயான பூங்காவாக இருக்கும். மேலும் அக்குடும்பத்தை அனைவரும் உயர்வாக மதிப்பர். இதனை உணர்ந்து குடும்பத்தில் ஒற்றுமையுணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் அறத்தை,

‘‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’’ (கூடி-சேர்ந்து)

‘‘ஒத்திருந்தா கெத்தா வாழலாம்’’

(ஒத்து-ஒற்றுமை, கெத்து-மதிப்பு)

என்ற பழமொழிகள் வலியுறுத்துகின்றன.

இன்று திருமணம் நடந்து முடிந்த மறுகணமே தனிக்குடித்தனம் போய்விடுகின்ற சூழல் சமுதாயத்தில் நிலவுகின்றது. நெடுங்காலம் ஒன்றுபட்டு விளங்கிய குடும்பம் சிலரின் தன்னலத்தால் பிரிய நேரிடுகிறது. அவ்வாறு பிரியாது ஊரார் மதிக்க ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தினை மேற்குறித்த பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.

சமுதாய ஒற்றுமை

அனைத்து மக்களின் தொகுதி சமுதாயம் எனப்படும். இக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு நாடு முன்னேறும். இல்லையெனில் எந்த நாடும் வளர்ச்சியடையாது. தனி ஒரு மனிதனால் அனைத்தையும் செய்ய இயலாது. சில செயல்களைச் செய்ய இயலுமே தவிர பல்வேறுவிதமான செயல்களைச் செய்ய இயலாது. பிறர் உதவியின்றி இவ்வுலகில் யாரும் இயங்க இயலாது. ஒருங்கிணைந்தே வாழ முடியும். இதனை,

‘‘தனி மரம் தோப்பாகாது’’

‘‘ஒரு கை தட்டினா ஓசை வராது

இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்’’

‘‘ஊரு கூடி(னா)த்தான் தேரு இழுக்க முடியும்’’

என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.

தனியாக உள்ள ஒரு மா மரத்தைப் பார்த்து மாந்தோப்பு என்று கூற மாட்டார்கள். அதுபோன்று தனியாள் ஒருவனைப் பார்த்து மக்கள் கூட்டம் சமுதாயம் என்று கூற மாட்டார்கள். ஒரு கையை மட்டும் வீசினால் ஓசை வாராது. வலது, இடது ஆகிய கைகள் இணைகின்றபோதுதான் ஓசை வரும். தனி ஒருவன் ஊரிலுள்ள பெரிய தேரினை இழுக்க முடியாது. ஊரார் அனைவரும் சேர்ந்து வந்து வடம் பிடித்து இழுத்தால் மட்டுமே தேரினைப் பாதுகாப்பாக இழுக்க இயலும். இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு ஒற்றுமையுடன் மக்கள் இணைந்து செயல்பட்டுத் தங்களையும் முன்னேற்றிக் கொண்டு நாட்டினையும் முன்னேற்ற வேண்டும் என்ற சமுதாய வாழ்வியல் அறத்தை இப்பழமொழிகள் வலியுறுத்துகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை

குறையில்லா மனிதர்கள் யாருமில்லை. எல்லோரிடமும் ஏதேனும் குறைபாடு இருந்து கொண்டே இருக்கின்றது. வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் வாழ்வில் ஒன்று சேர்ந்து யாரோடும் வாழ முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ்வதுதான் வாழ்க்கையாகும். இந்தியத் திருநாட்டில் இன்றையத் தேவையாக வேற்றுமையில் ஒற்றுமை என்பது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை,

‘‘அஞ்சுவிரலும் ஒண்ணாவா இருக்கு?’’

என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.

ஐந்து விரல்களும் ஒன்று போலிருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அதுபோன்று மக்கள் அனைவரும் ஒன்று போலிருந்தால் சமுதாய இயக்கம் என்பது இல்லாது போய்விடும். வேறுபட்ட சிந்தனை, செயல்பாடுகள் உடையவர்களாக மக்கள் இருப்பினும் அதிலும் ஒற்றுமை உடையவர்களாக மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற அறநெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

ஊர் ஒற்றுமை

ஊரில் உள்ள அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையாய் வாழ்தல் வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் அனைவருடைய வாழ்விலும் மலர்ச்சி ஏற்படும். ஊருக்குள் உள்ள மக்களிடையே இரு வேறு கட்சிகளாகப் பிளவு ஏற்பட்டால் பகைவருக்கு நன்மையாக முடியும். ஏமாற்றுக்காரர்கள் மக்களை ஏமாற்றி வேறுபாட்டினை வளர்த்துக் கொண்டே நன்மையைடைவர். இதனை உணர்ந்து பகைக்கும், பகைவருக்கும் இடம்கொடாது ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்பதை,

‘‘ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்’’

என்ற பழமொழி தெளிவுற விளக்குகிறது. இங்கு கூத்தாடி என்பது கலைஞர்களை அல்ல. மாறாக நல்லவர்கள் போன்று நடித்து மக்களை ஏமாற்றுபவர்களையே குறிக்கின்றது. கயமைத் தன்மை உடையவர்கள் நல்லவர் போன்று நடித்து ஊரில் பகைமை உணர்வை வளர்ப்பதையே இஃது குறிப்பிடுகிறது எனலாம். எது நன்மை எது தீமை என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற அரிய கருத்தை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது.

உறவினர் ஒற்றுமை

உறவினர்கள் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமாகும் என்று இன்னா நாற்பது குறிப்பிடுகின்றது. இவ்வுறவினர்கள் இருந்தும் அவர்களடன் முரண்பட்டு வாழ்வது அதைவிடத் துன்பமாகும். உறவினர்கள் எவ்விதப் பகைமை உணர்வோடு நடந்து கொண்டாலும் பகைமையைப் பாராட்டாது பெருந்தன்மையுடன் உறவினர்களை விட்டுக் கொடுக்காது ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அவர்களை ஒதுக்கி வைத்து வாழ்வது கூடாது என்பதை,

‘‘நீரடிச்சு நீர் விலகுமா?’’

என்ற பழமொழி விளக்குகிறது.

நீர் வேகமாக வந்து பாய்வதால் வாய்க்காலில் ஏற்கனவே உள்ள நீருடன் பலமுடன் மோதிக் கலக்கும். நீர் இருந்தது – கிடந்தது என்ற விலக்கு அங்கு இல்லை. தண்ணீராக ஒன்று சேர்ந்துவிடும். அதுபோல் உறவுகள் ஒருவருடன் ஒருவர் பகைத்துக் கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இருவரும் பகைமை பாராட்டாது நீரினைப் போன்று ஒருங்கிணைந்து வாழ்தல் வேண்டும் என்ற உறவு ஒற்றுமையை நமது முன்னோர்கள் இப்பழமொழி வாயிலாகத் தெளிவுறுத்தி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இயற்கை ஒன்றிணைந்து இருப்பது போல் மனிதர்களாகிய நாமும் ஒருவருடன் ஒருவர் இணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இவ்வாறு வாழ்வதால் குடும்பம், உறவு, ஊர், நாடு, உலகம் ஆகிய யாவும் மகிழ்வுடன் திகழும். களிப்பு ஆங்கு களிநடம் புரியும். ஒன்றுபட்டு வாழ்வோம். உயர்ந்து நிற்போம் வாழ்க்கை வசப்படும்.

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 31மரணம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *