1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை
வைத்தாஸே, ரெண்டு வாரம் இடைவெளி விட்டு இதை உனக்கு எழுதறேன். எழுதாட்ட என்ன? சதா உன் நினைப்பு தான்.
பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து, நல்ல நல்ல கலாசாலைகளிலே படிச்சு புத்தியோடு சர்க்கார் உத்யோகத்தில் உட்காரணும். அதுகள் கல்யாணமும் கழிந்து குடும்பத்தோடு கூடி இருக்கணும். எல்லாத்தையும் பார்த்து அனுபவிச்சபடி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அப்பன்காரன் ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் படிச்சு ஒப்பேத்திண்டு கிடக்கணும். அந்த வயசாயிடுத்து எனக்கு. ஆனா, நான் லண்டன் பட்டணத்துலே பிச்சை எடுத்தபடி இருக்கேன். ஒத்தைக் கை வெள்ளைக்காரனோடு கூட்டு வச்சு, கோழி முட்டை விக்கக் கிளம்பியிருக்கேன்.
உன்னை நாலெழுத்து படிக்க வைக்க, இதே லண்டனுக்கு அனுப்பி சகல விஷய ஞானமும் அடையப் பெற்ற புத்திமானாக்க என்னாலே முடியலே. குடிச்சு, குட்டிகள் பின்னாடி வாடை பிடிச்சுப் போய் அழிஞ்சுடாதேடா வைத்தாஸே. தெரிஞ்ச விவசாயத்தை, சர்க்கரை பண்ற தொழிலை கிரமமாப் பார்த்து க்ஷேமமா இருடா குழந்தே. கருப்போ, வெள்ளையோ, தமிழச்சி, தெலுங்கச்சியோ, நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. அவளுக்குப் புருஷன் இருக்கான்னா வேண்டாம், விட்டுத் தொலை. வேறே பொண்ணு கிடைக்காமலா போயிடுவா இந்த லோகத்திலே?
ரெண்டு வாரமா கூட்டு வியாபாரத்திலே படு மும்முரம். பிச்சை எடுக்கப் போற நேரத்தைக் கூடக் குறைச்சு, தினமும்னு இல்லாமல் வாரத்துக்கு மூணு நாள் மட்டும் ஆக்கிட்டேன். அதுவும் இல்லாம இருக்கலாம் தான். ஆனா, பழக்கம் விட்டுப் போனா, அப்புறம் புதுசா ஆரம்பிக்கும்போது நெளிவு சுளிவு, லாகவம் எல்லாம் திரும்பக் கைவராது.
ஜேம்ஸோடு கூட கோவண்ட் கார்டனுக்குப் போகிற போதே அங்கே எப்படி யார் கிட்டே என்ன மாதிரி பேரம் பேசி காய்கறியும், பழமும், முட்டையும் மத்ததும் வாங்கணும்னு புரிஞ்சது. எங்கே இருந்தா என்ன, மேல் தோல் என்ன நிறமா இருந்தா என்ன? மனுஷன் எங்கேயும் ஒண்ணுதான். அவனை உசந்தவனாகச் சொன்னா மயங்கறது, வாசாலகமா பேசினா அதிக யோஜனையில்லாம சொன்னதுக்கு உடன்படறது, அங்கங்கே கெட்ட வார்த்தை பிரயோகங்கள், மதுபானக் கடைக்குக் கூட்டிப் போறதா வாக்குதத்தம் கொடுக்கற தந்திரம். இதெல்லாம் பண்டம் கொள்முதல் பண்ண, அதுவும் பணத்தை முழுசாகக் கொடுக்காமல் பாதிக்கு மேல் நிலுவை வைச்சுட்டு வாங்கிப் போக ரொம்ப உதவி.
கொள்முதல் பண்ற கேரட்டோ, ஆப்பிள் பழமோ கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் முகத்தைத் திருப்பிண்டு அடுத்த கடைக்குப் போயிட்டா இவன் விரோதியாகிடுவான். சாமர்த்தியம் எதுலே இருக்குன்னா, அவனையே விட்டு அடுத்த கடையிலே வாங்கி நமக்குத் தர வைக்கறதுலேதான். இந்த மொத்த வியாபாரிகள் எல்லாம் பங்காளிகள், பந்துக்கள். வியாபாரத்தை நாம மாத்தினாத்தான் பிடிக்காது. அவங்களுக்குள்ளே அது சகஜமா நடக்கும். வடக்கிலே இருந்து மெட்றாஸ் வந்து சௌகார்பேட்டையிலே ஜாகை ஏற்படுத்தி, அடகு பிடிக்கிற வியாபாரம் செய்யற சேட்டுகள்லே இருந்து, கோவண்ட் கார்டன்லே கருவாடு விக்கறவன் வரைக்கும் இதான் உலகத்தோட நியதி.
கோவண்ட் கார்டன்லே ஏது கருவாடுன்னு கேக்கறியா? பேஷாக் கிடைக்குமே. இங்கே கிப்பர்னு சொல்றா. நீள நீளமா மீனை காடித் தண்ணியும் உப்பும் தேச்சு முழுக்காட்டி சுக்கா காய வச்சு காலங்கார்த்தாலே ஆகாரமா இங்கே இருக்கற பிரஹஸ்பதிகள் ரசிச்சுப் சாப்பிடுற வழக்கமாம். அதுவும் கென்சிங்டன் டெரஸ் ஹவுஸ் லட்சாதிபதி பிரபுக்கள் ரொட்டியைக் கொடுக்காட்டாலும் பரவாயில்லே, எங்கேடா கிப்பர்னு ஜேம்ஸ் போய் நின்னதுமே வாசலுக்கு வந்துடுவாங்களாம்.
சாரட் வண்டியை ஒத்தைக் கையாலேயே வெகு அழகா ஓட்டிப் போனான் ஜேம்ஸ். பின்னாடி மூட்டை முடிச்சோடு பொதி மாதிரி நானும் காலை மடிச்சு வண்டிக்குள்ளே உட்கார்ந்திருந்தேன்.
கொஞ்சம் பொறுத்துக்கோ. காலை நீட்டி நிக்கறதுக்கு இடம் வந்துடும். இப்படி உட்கார்றதுன்னு நரக வேதனை. இல்லேன்னா நீ வண்டியோட ஓடி வரணும். அது இன்னும் கொடுமை.
பஞ்சமா பாதகம் புரிந்த குற்ற போதத்தோடு சொன்னான் ஜேம்ஸ்.
பாவம், அவனுக்கு என் பூர்வோத்ரம் ஒண்ணும் தெரியாதே. நம்ம பக்கத்திலே, சரி, வைத்தாஸே உனக்கும் அது எல்லாம் அனுபவப்பட வாய்க்கலே, பரத கண்டத்திலே முக்கிய்மா மதராஸ் பட்டணம் சுற்று வட்டாரத்திலேயும், தெற்கு திசையிலே ராமேசுவரம், தனுஷ்கோடி போற வரைக்கும் வண்டிக்குள்ளே காலை மடிச்சு சம்மணம் கொட்டி உக்காந்துண்டு போறதுதான் வழக்கம். இதுலே ஊறின எனக்கு கருவாட்டு மூட்டையோட மூட்டையா மூச்சைப் பிடிச்சுண்டு போறதிலே என்ன சங்கடம் இருக்கப் போறது?
வண்டி நானாவித வாடையையும் கிளப்பிண்டு முன்னாடி போன மணியமா இருக்கு. இதிலே நல்லதா ரோஜாப்பூ வாடையும் சேர்த்தி. ஒரு கூடை நிறைய ரோஜாப்பூ கொத்தா எடுத்து சாட்டின் ரிப்பனை வச்சுக் கட்டி நாலைஞ்சு செண்டு, அப்புறமா, ரோஜாவும் மஞ்சள் அரளியும் கலந்து பிரிமணை மாதிரி பெரிய சைசுலே கட்டின நாலைஞ்சு வடம்.
என்னத்துக்குடா ஜேம்ஸே இதெல்லாம்? இந்த மகா பட்டணத்து சீமாட்டிகளைப் பார்த்தா ஒண்ணும் தலையிலே புஷ்பாலங்காரத்தோட உலாத்தற மாதிரி தெரியலியேன்னு கேட்டேன். ஓய் ரெட்டி, இதெல்லாம் தலையிலே தூக்கி வச்சுக்க அவங்க என்ன உன் அட்டைக்கரி ஆப்பிரிக்கா ஊர்ப் பொண்ணுங்க மாதிரி பொறந்த மேனிக்கே திரியற வர்க்கமா என்னன்னு கேட்டான் ஜேம்ஸ்.
அட குரங்கே, ஆப்பிரிக்காவுலேயும் பூ வைச்சுக்கறது ஸ்திரி வழக்கம் இல்லேடான்னேன். இந்தியாவுலே வச்சுப்பாளாம். அதுவும் தெற்கு பக்கம் சகஜமாம். எங்க தாத்தா ஆப்பிரிக்காவுக்கு அங்கே இருந்து வந்ததாலே எனக்கு இதெல்லாம் கதாரூபத்துலே சொல்லியிருக்கார்னு நிறைய பொய்யை விளம்பி அடிச்சு விட்டேன்.
என்ன பண்ணச் சொல்றே? ஓட்டை வாய் நமக்கு. நான் ஆப்பிரிக்கா இல்லே, மெட்ராஸ்லே இருந்து வந்தேன்னு ஆரம்பிச்சா, கென்சிங்க்டன் போய்ச் சேர்றதுக்குள்ளே திருக்கழுக்குன்றத்துக்கு இதேபடிக்கு ஒரு வண்டியிலே போய் ரெட்டியக் கன்யகை மேலே காமத்தோட அவ எச்சில் உண்ட வரைக்கும் சொல்லி முடிச்சுடுவேன். அப்புறம் காராகிருஹ பிரவேசம் தான். ஒத்தைக் கையனுக்கு என்னத்துக்கு என் பழைய கதையும் மத்ததும் சொல்லு. உனக்கே நான் சொல்லலே
ஒரு வழியா ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு கென்சிங்க்டன் வந்து சேர்ந்தோம். அதுக்கு முந்தி நைட்ஸ்பிரிட்ஜ்லே வண்டியை சித்தப்போல நிறுத்தினான் ஜேம்ஸ்.
இறங்குய்யா ரெட்டின்னு என்னையும் இறங்கச் சொன்னான். இடம், ஜாகை, மனுஷா ஒரு எழவும் புரியலை. அந்த பூவடத்தை எல்லாம் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கறீரான்னு கேட்டான். எதுக்குடா வெள்ளைப் பன்னின்னு விசாரித்தேன்.
ராணியம்மா விடிகாலையிலே ரொட்டி சாப்பிட நீயும் என்னோட வந்து தீனிமேஜைக்கு முன்னாடி உட்காரேன்னு கூப்பிட்டனுப்பின மாதிரி இருபது முப்பது பேர் ரொம்ப தோரணையா உடுத்தி, கழுத்துப் பட்டியும் அதுவுமா திரிஞ்சிண்டிருந்தாங்க. ஒண்ணரை ஆள் மட்டத்துக்கு வெகு உசரமா நாலு வெள்ளைக் குதிரைகள் வீட்டு வாசல்லே தேமேன்னு புல்லை மேஞ்சுண்டு லத்தி போட்டபடி நின்னதுகள். மூசு மூசுன்னு அழுதுட்டு, வெல்வெட் கைக்குட்டையிலே மூக்கைச் சிந்தியபடிக்கு வெள்ளைக்காரி தடிச்சிகள் நிறையப் பேர் இலக்கே இல்லாம சுத்தி சுத்தி வந்துண்டிருந்தாள்கள். கருப்பு அங்கியும் தலையிலே முழ நீளத்துக்கு தொப்பியுமா சர்ச் விகாரி எல்லாரும் ஒழிஞ்சு போங்கடான்னு அலுப்போடு ஒரு ஓரமா நின்ன படிக்கு இடுப்பைக் குனிஞ்சு குனிஞ்சு அடிக்கடி பார்த்துண்டு இருந்தார். அதது அததுக்கான இடத்துலே தானே இருக்கப் போறது இவர் எதுக்கு அவஸ்தைப் பட்டு பரிசோதிச்சுக்கணும்னு பட்டது. அவர் பார்வை செயின்லே கோர்த்து இடுப்பிலே கட்டின கடியாரத்துலே மணி பார்க்கவாம்.
ஜேம்ஸே ரீத்து எல்லாம் கொண்டு வந்தாச்சா?
கோவில் பிரசங்கியார்னு தோணின ஒருத்தர் ஜேம்ஸை விசாரிக்க, ஓ ஆச்சேன்னு நம்ம பயல் குஷியோடு சொன்னான். நான் அவனோட உள்ளே நுழைஞ்ச போதுதான் அங்கே வச்சிருந்த சவப் பெட்டியைப் பார்த்தேன்.
வரிசையா ஏத்தின மெழுகு வர்த்தியும், நீள விரிச்ச வெள்ளைத் துணியும் நடுவிலே பெட்டியும், பொணக் களையை குறையாம அப்பினது. சமாதிக்குன்னே தயார் செஞ்சு விக்கற சாவு வாடை அடிக்கற வாசனை திரவிய தைலக்குப்பி மேஜை மேலே திறந்து கிடந்தது. தலையிலே கருப்புத் துண்டும் நீலத் துண்டும் கட்டி முடியை மறைச்சபடி நிக்கற பெண்டுகள் பாடுறது ஒப்பாரியா, ஸ்தோத்திரமான்னு கண்டுபிடிக்க முடியலே. கோஷ்டி கானத்திலே அந்த இடமே கலகலப்பா இருந்தது. பெட்டியிலே நீட்டி நிமிர்ந்து ஒரு வயசனைப் படுக்க வச்சிருந்தா. பிஷப்பாம். மூக்குக் கண்ணாடியையும் மாட்டி கிடத்தியிருந்தா. எதுக்கோ.
எல்லா பூவட்டையும் அடுக்கி வச்சுட்டு வெளியே வந்தேன். பொணத்துக்கு பூவைத் தலையிலேயா சூட்டி விட முடியும்? எங்க ஊர்னா, ஜோரா மாலை மரியாதையோட மயானத்துக்கு அனுப்பி இருப்பா. அதுவும் கோவில் குருக்கள் வகையறான்னா கோவில் மடைப்பள்ளியிலே இருந்தே எருமுட்டையிலே அக்னி எடுத்து வந்து சுடுகாட்டுலே எரிக்க அதுலே இருந்து கொளுத்திக்கற வழக்கம். இங்கே அதெல்லாம் என்ன கண்றாவிக்காக மனசுலே நினைப்பா வந்து பிடுங்கணும் போ.
ஆளுக்கு ஒரு புஷ்ப சக்கரத்தை பிஷப் காலடியிலே வச்சு ஞாபகமா அதிலே அவங்க அவங்க பெயரையும் கட்டைப் பேனாவாலே ஒரு காகிதத்துலே எழுதி வச்சதைப் பார்த்தேன். குழிக்குள்ளே இறக்கினதும் சாவகாசமா அந்த புண்ணியாத்மா பெட்டிக்குள்ளே நீட்டி நிமிர்ந்து உக்கார்ந்து யார்யார் புஷ்ப சக்கரம் சாத்தினான்னு பட்டியல் போட்டு அவா நித்திய ஜீவிதத்துக்காக மன்னாடுமா என்னன்னு தெரியலை. ஆனா ஒண்ணு தெரிஞ்சது. நாலஞ்சு ரோஜாப்பூ, பீக்காட்டுலே பறிச்ச மஞ்சப் பூ, ஊதாப்பூ இப்படி கலந்து கட்டியா கட்ட வச்சு நம்ம ஜேம்ஸ் தடியன் கோவண்ட் கார்டன்லே வாங்கின பூவட்டம் ஒண்ணொண்ணும் முப்பது பென்ஸ், எல்லாத்தையும் சேர்த்து மதிப்பு போட்டாலும் ஒரு பவுண்டு ஒண்ணரை பவுண்டு தான் வரும். அவனோ, இங்கே இதையெல்லாம் வித்த வகையிலே கிட்டத்தட்ட இருபது பவுண்டு பார்த்திருப்பான். முழுத் திருடன்.
பிஷப் இப்படி சட்டுனு போவார்னு தெரியாமப் போச்சு. அவர் இருக்கறபோதே கல்யாணம் நடத்திக்க மனுப் போட்டிருந்தேன். கல்யாணப் பிரசங்கம் செய்யறதிலேயும், ஞாயித்துக்கிழமை பாவமன்னிப்பு பிரசங்கத்திலேயும் அவரை அடிச்சுக்க இங்கே லண்டன் தொடங்கி ஸ்காட்லாந்துலே எடின்பரோ, கிளாஸ்கோ வரைக்கும் ஒரு கொம்பனும் உண்டா என்ன?
யாரோ வயசன் வாசல்லே நின்னு போய்ச் சேர்ந்த ஆத்மாவோட பிரதாபங்களை எடுத்து விட்டுண்டு இருக்கான். கேட்டபடி நிறையப் பேர் அடுத்த முறை தேத்தண்ணி எப்படா வரும்னு அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி நிக்கறாங்க. நான் மனசுலே பூக் கணக்கு போட்டபடி, இந்த வட்டத்தை கோவண்ட் கார்டன்லே போய் வாங்காமே நாமளே பொட்டக்காட்டுலே அலைஞ்சு பறிச்சுண்டு வந்து வட்டமாவோ சதுரமாவோ இந்தப் புடுங்கிகள் கேட்டபடிக்கு ஆக்கிக் கொடுத்தா காசு கலகலன்னு கொட்டுமேன்னு மனசுலே கணக்கு போட்டபடிக்கு நின்னேன்.
டவர் பிரிட்ஜ் சர்ச் பூஜா வஸ்துக்கள் கொள்ளை போன அதிர்ச்சியிலே தான் பிஷப் இவ்வளவு சீக்கிரம் மரிச்சது. அந்த சர்ச் அவருக்கு குழந்தையா இருந்தபோதிலிருந்து பழக்கம். அம்மா அப்பாவோடு ஞாயித்துக்கிழமை பிரசங்கம் கேட்க வந்து மண்டி போட்டபடிக்கு தொரதொரன்னு மூத்திரம் போன காலத்துலே இருந்து அவருக்கு உசிரு. சின்ன வயசுலே கத்தோலிக்கரா இருந்து நினைவு தெரிஞ்ச காலத்துலே புராட்டஸ்டண்டா மாறினாலும் அந்தக் கோவில் மேலே அபிமானம் மாறாம இருந்தாராம். தொடச்சு வச்ச மாதிரி பூஜா பாத்திரங்களை எல்லாம் எவனோ தேவிடியாளுக்குப் பொறந்தவன் எடுத்துண்டு போய்ட்டானாம் முந்தின ராத்திரி.
சதா ஓரமா ஒதுங்கி மரத்தடியிலே ஒண்ணுக்குப் போய்ட்டு வந்துட்டு இருந்த இன்னொரு வயசன் சொன்னான்.
சவப்பெட்டிக்குள்ளே அற்ப சங்கைக்கான சவுகரியம் எல்லாம் இருக்கோன்னு கேட்க நினைச்சேன். நமக்கெதுக்கு ஊர்வம்பு? நாராயணா நாராயணா நாரைக் கொண்டாடான்னா இந்தான்னு வாழை நாரு. உன் பொண்டாட்டிக்குத் தாலி கட்ட பூவைக் கொண்டாடான்னா இந்தாடான்னு ஜவந்திப் பூவுன்னு எடுத்து நீட்டணும். எம் பொண்டாட்டிக்குத் தான் அவன் தாலி கட்டணுமாங்கற கேள்வியை காசை வாங்கி ஜேபியிலே போட்டுண்ட பிற்பாடு கேட்கலாம். என்ன சொல்றே?
சரி போகலாம்னான் ஜேம்ஸ். அவன் முகத்திலே முழுத் திருப்தி. தினசரி இப்படி சர்ச் காரியஸ்தர்கள் யாராவது கர்த்தரில் துயில் கொள்ளக் கிளம்பினா, அதான், மூச்சு விட மறந்து போனா, ஊர்க்காட்டு பூவுக்கெல்லாம் கொண்டாட்டம். ஜேம்ஸ் கையிலே காசு புழக்கமும் அதிகமா இருக்கக் கூடும். அடுத்த ஞாயித்துக் கிழமை பிரார்த்தனையிலே புதுசா வந்த பிஷப்போ விகாரியோ பொட்டுனு போகணும்னு வேண்டிக்கச் சொன்னா சரின்னு சொல்லிடுவான் அவன்.
ஜேம்ஸே தெரியுமா, நம்ம டவர் பிரிட்ஜ் சர்ச்லே இருக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரம் தங்கப் பாத்திரம் எல்லாத்தையும் எவனோ அள்ளிண்டு போய்ட்டானாம்.
வண்டி கிளம்பி கென்சிங்டன் பக்கமா ஓட ஆரம்பிச்ச போது நான் சொன்னேன். தகவல் தான். பிரியம், துக்கம், ஏமாற்றம், ஆனந்தம், சோகம்னு வேறே பகிர்ந்துக்க ஏதும் இல்லாட்ட நாம பகிர்ந்து கொள்ள நாலு புகையிலை சுத்தின சிகரெட், ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமாகாத தகவல் இதெல்லாம் தான் இருக்கு.
இதுக்குத்தானே ராத்திரியோட ராத்திரியா கண் முழிச்சு உக்கார்ந்து நியூஸ் பேப்பர் அடிச்சு காலையிலே பத்து பென்சுக்கு விக்க அனுப்பறான் பேப்பர்காரன்? பூவட்டம் பண்ணி துக்கத்தை காசாக்கற மாதிரி அதுவும் திரிசமனான வியாபாரம் இல்லாம என்ன? இதெல்லாம் பண்றதுக்கு, விக்டோரியா டெர்மினல் வாசல்லே தொப்பியை கவுத்தி வச்சு உக்காந்து, துரைகளே துரைசானிகளே, ஏழைக் கருப்பனுக்கு ஒரு பென்ஸ் தானம் பண்ணிட்டு ரெடியா சொர்க்கத்துக்குப் போங்கோ. ராத்திரி சம்போகம் பண்ணிட்டு குளிக்காம புறப்பட்டிருந்தாலும் பரவாயில்லேன்னு கூவியழைச்சுக் காசு தண்டறது நேரான தொழில் இல்லையோ?
ஜேம்ஸ் சிரிச்சான். ஓய் ரெட்டி, தங்கப் பாத்திரம்னா சொன்னீர்? சர்ச்சிலே ஏதுய்யா தங்கமும் மண்ணும்? அழுக்கு வெள்ளிதான் அத்தனையும்.
அவன் வண்டியை நிறுத்தின இடம் ராஜ வம்சம் தலைமுறை தலைமுறையா இருக்கப்பட்ட, கன கம்பீரமான கட்டிடங்கள் உயர்ந்து நிக்கற பிரதேசம். இங்கே எல்லாம் யாரும் சாக மாட்டாங்க. பூ வட்டம் தேவையில்லாத இடம். காசு இருந்தா சாவு எதுக்கு வந்து தலையை நுழைக்கப் போறது?
ரெட்டி, முட்டை அடைச்ச பெட்டியை எடும். காய்கறி தனியா எடுத்து மரக் குடுக்கையிலே போட்டு வச்சிருக்கேனே அதையும் சேர்த்து ஜாக்கிரதையா தூக்கிண்டு என் பின்னாடியே வாரும்.
ஒத்தக்கையன் படியேற அந்த மலையாளச்சி துரைசானி வாசல்லே நிக்கறா.
(தொடரும்)
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
- அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
- நினைவுகளின் சுவட்டில் – (87)
- பேரதிசயம்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
- அப்பாவின் சட்டை
- புலம்பெயர்வு
- சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
- மானம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
- குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
- பேஸ்புக் பயன்பாடுகள் – 3
- பட்டறிவு – 2
- பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 29
- பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
- விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
- s. பாலனின் ‘ உடும்பன் ‘
- பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
- வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- வரலாற்றை இழந்துவரும் சென்னை
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
- இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
- கவிதை
- கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
- ஆலமும் போதிக்கும்….!
- மீண்ட சொர்க்கம்
- அதையும் தாண்டிப் புனிதமானது…
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
- இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
- “தா க ம்”
- விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
- அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
- மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
- உயிர்த்தலைப் பாடுவேன்!