அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 34 of 45 in the series 4 மார்ச் 2012

கணினியில் தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது 12-வது ஆண்டு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடியது. துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவைக் காண 1400 பேர் திரண்டிருந்தனர்

உறுப்பினர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு மிகச்சரியாக ஆறுமணிக்குத் துவங்கிய விழாவில் பிரசித்தம் மற்றும் ’மதர்ஸ் ப்ரீஸ் குழுவினரின் கண்கவர் நடனங்கள் பார்வையாளர்களை சுண்டியிழுத்தன. அதிலும் குறிப்பாக துபாய் சர்க்கஸ் என்ற பெயரில் ’மதர்ஸ் ப்ரீஸ்’ குழுவினர் நடத்திய சாகசங்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்த நிகழ்வில் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா பார்வையாளர்கள் பங்கேற்கும் வண்ணம் நடத்திய ’வெற்றிக்கொடி கட்டு’ நிகழ்ச்சியில் பலரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். விழாவிற்குப் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களையும் போட்டியாளர்களாக மாற்றிய இந்நிகழ்ச்சியும் பார்வையாளர்களுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது.

எல்லா வருடங்களையும் போலவே இம்முறையும் ‘கணினியில் தமிழ்’ நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களுக்கு கணினியில் தமிழின் செயல்பாடுகள் குறித்த காணொளி மூலம் அமைப்பின் ஆலோசகர் ஆசிப் மீரான் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைப்பின் தலைவர் காமராஜன் அனைவரையும் வரவேற்றதோடு அமைப்பின் நிகழ்வுகளைப் பட்டியலிட்டார். தொடர்ந்து அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் கடந்த ஆண்டில் அமீரகத் தமிழ் மன்ற செயல்பாடுகள் எவ்வாறிருந்தன என்பதைக் குறித்த செயலர் உரையை நிகழ்த்தினார். அடுத்ததாகப் பேச வந்த ஈடிஏ பவர் ப்ரொஜெக்ட் பிரிவின் முதன்மை நிர்வாக இயக்குனரான திரு.அன்வர் பாஷா அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார்.

கடந்த 11 ஆண்டுகளைப் போலவே அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இம்முறையும் ஆன்டு விழா மலர் வெளியிடப்பட்டது. அமீரகத் தமிழர்களின் முகவரி என்றழைக்கப்படும் ஈடிஏ-ஸ்டார் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சையது எம் சலாஹூதீன் அவர்கள் வெளியிட இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலரை வெளியிட்டுப் பேசிய சலாஹூதீன் அவர்கள் ‘அமீரகத்தில் இலக்கிய தரத்தோடு நல்ல படைப்பாளிகளை அறிமுகம் செய்து வைத்து ஆண்டு தோறும் மலர் வெளியிட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடு வளரவேண்டுமெனவும், கணினி மூலமாகத் தமிழைப் பரப்பும் பணி தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில் தமிழகத்தை விட அமீரகத்தில் தமிழ் கோலோச்சுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். தமிழர்களின் விருந்தோம்பலும், அன்பும் எங்கே சென்றாலும் உடன் தொடர்வதை நேரடியாகக் காண முடிவதாகவும் குறிப்பிட்ட அவர் தனது அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேச வந்த பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் தனது உரையில் அமீரகத் தமிழ் மன்றம் தமிழுக்காக செய்து வரும் இந்தப் பணிகள் தொடர வாழ்த்தினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களையும் தமிழ் என்ற ஒற்றைச் சொல் இணைத்து விடுவதாலேயே நாம் இங்கே கூடியிருக்கிறோம் என்றார் அவர். அவரது பேச்சிற்குப் பின்னர் நடனமாடியவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சென்னையிலிருந்து வந்திருந்த கிரியின் நகைச்சுவை கலந்த பலகுரல் நிகழ்ச்சி அடுத்த 30 நிமிடங்கள் பார்வையாளர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது. பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பலரது குரல்களில் பேசிப் பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றார் கிரி.

தொடர்ந்து பேச வந்த நடிகை ரோகிணி தாம் தனது துறை சார்ந்த படப்பிடிப்புக்காக வந்தபோதும் நட்பு சார்ந்து அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாவில் கலந்து கொள்வதைப் பெருமையாக உணர்வதாகச் சொன்னார். எதிர்பாராமல் வருவதுதான் நட்புக்குக் கிடைக்கும் மரியாதை என்று அவர் சொன்னதைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ஆண்டு விழா உரைகளைத் தொடர்ந்து புரவலர்களுக்குப் பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களுக்கு அமீரகத் தமிழ்மன்றத்தின் சார்பில் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பி.எச்.அப்துல் ஹமீது அவர்களின் “பாட்டுக்குப் பாட்டு” நிகழ்ச்சி பார்வையாளர்களின் பெரும் வரவேற்போடு அரங்கேறியது.நிகழ்ச்சியில் அதிகப்பாடல்களைப் பாடியதற்கான தங்க நாணயத்தை பெனாசிர் ஃபாத்திமாவும், சிறந்த குரல் வளத்திற்கான தங்க நாணயத்தை கலைச்செல்வனும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடந்த அதிர்ஷ்ட பரிசு குலுக்கலில் பார்வையாளர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. விழாவை ஆசிப் மீரான் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜன், ஜெஸிலா ரியாஸ், ஃபாரூக் அலியார், இரமணி, நஜ்முதீன், அகமது முகைதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
—————————-

குறிப்பு: படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

1. அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா மலரை ஈடிஏ-ஸ்டார் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சையது எம் சலாஹூதீன் அவர்கள் வெளியிட இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது, அமீரகத் தமிழ் மன்ற நிர்வாகிகளுடன்
2. மதர்ஸ் ப்ரீஸ் நடன குழுவினரின் ’அவரார்’ நடனம்
3. ‘ப்ரசித்தம்’ குழுவினரின் வரவேற்பு நடனம்
4. மதர்ஸ் ப்ரீஸ் குழுவினரின் ’துபாய் சர்கஸ்’
5. சிறப்பு விருந்தினர் ஈடிஏ-ஸ்டார் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சையது எம் சலாஹூதீன் அவர்களுக்கு அமீரகத் தமிழ் மன்றத்தின் நினைவுப் பரிசை இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது வழக்கினர்
6. நடிகை ரோகிணியின் சொற்பொழிவு
7. சின்னத்திரை ஐஸ்வர்யாவுக்கு நினைவுப் பரிசு

Series Navigationநீ, நான், நேசம்முன்னணியின் பின்னணிகள் – 30
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *